தீய சபைகளைப் புறக்கணிப்போம்
தீய சபைகளைப் புறக்கணிப்போம்
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.
(அல்குர்ஆன்: 4:140) ➚.)
ஷைத்தான் என்பவன் மனிதனுக்கு மிகவும் மோசமான, கெட்ட எதிரியாவான். தீய எண்ணங்களைத் தூண்டி, தனக்கு அடிமையாக்கி நரகவாசியாக மனிதனை மாற்றுவதில் ஆவல் கொண்டவன்.
அவனிடமிருந்து, அவனுடைய ஊசலாட்டத்திலிருந்து பாதுகாப்புப் பெற வேண்டுமானால் இறைவன் தன் திருமறையில் அருளியவாறு தீய சபைகளைப் புறக்கணித்து, நல்ல சபைகளில் ஐக்கியமாக வேண்டும். அல்லாஹ்வை நினைவு கூரும் சபையே நல்ல சபைகள் ஆகும். ஒவ்வொரு ஊரிலும் குறிப்பாகப் பெண்கள் இதுபோன்ற மஜ்லிஸ்களை நடத்தி தீமைகளின் வீரியத்தைக் குறைக்க வேண்டும்.
அல்லாஹ்வின் வல்லமைகளையும், சொர்க்கத்தின் பேரின்பத்தையும் நரகத்தின் பயங்கரத்தையும், கப்ரின் வேதனைகளையும், ஷைத்தானின் திட்டங்களையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
ஒரு பெண் நற்செயல்கள் செய்திடவோ, நல்ல மஜ்லிஸ்களில் கலந்து கொள்ளவோ நேரத்தைச் செலவிட எண்ணும் போது, வீணான பொழுதுபோக்கில் நேரத்தைச் செலவிடும் மற்றொரு பெண் அவளை எளிதில் தடுத்து விட முடிகின்றது. ஏனெனில் ஷைத்தான் தீய விஷயங்களை அழகாக்கிக் காட்டுவதில் திறமை உள்ளவன்.
ஷைத்தான் தீய எண்ணங்களை உருவாக்கினாலும் அதைச் செயல்படுத்தாத வரை அல்லாஹ் நம்மைத் தண்டிப்பதில்லை.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை அவர்கள் அதன் படி செயல்படாத வரை அல்லது அதை (வெளிப்படுத்திப்) பேசாத வரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நரகத்தில் அதிகமான எண்ணிக்கையில் பெண்களைக் கண்டதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதற்குக் காரணம், ஷைத்தானின் தூண்டுதலுக்கு ஆளாகி, அவனுடைய கட்டுப்பாட்டில் அதிகம் சரணடைவது பெண்கள் தான்.
புறம் பேசி அலைபவர்கள், அவதூறு பேசித் திரிபவர்கள், சினிமா செய்தி ஆர்வலர்கள், பேராசையின் தூண்டுதல் ஏற்படுத்துபவர்கள், வீணான கவலைகளைப் பெரிதுபடுத்தி பொறுமையைத் தோற்கடிப்பவர்கள், ஷிர்க் மற்றும் பித்அத்தான காரியங்களை பிரம்மாண்டமாகச் செய்து, அதை அழகான முறையில் நியாயப்படுத்துபவர்கள் இப்படிப்பட்ட ஷைத்தானின் தாக்குதலுக்கு ஆளான பெண்களின் தொடர்புகளை விலக்கிக் கொண்டு, அல்லாஹ்வை அஞ்சி நற்செயல்கள் செய்து, சோதனைகளைப் பொறுத்துக் கொண்டு சொர்க்கத்தை எதிர்பார்க்கும் ஸாலிஹானவர்களுடன் இணங்கி நடக்க வேண்டும். நமது ஈமான் துருப்பிடித்து விடாமல் பாதுகாக்க இதுவே சிறந்த வழியாகும.
உலகெங்கிலும் நமது இறுதித் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் நடைமுறைகளையும் பார்த்து, தெளிவடைந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஏராளம். அதுபோன்று நாமும் தீய விஷயங்களுக்குத் துணை போகாமல் இறையச்சம் நிறைந்த நல்லோர்களுடன் இருந்தால் அதைக் கண்டு நம்மைச் சுற்றியுள்ள தீயவர்கள் கூட மாறி விட வாய்ப்புண்டு.
மறுமையில் வலது புறத்தாருடன் நாம் சேர்வதற்குக் கடுமையான முயற்சிகள் தேவைப்படுகின்றது.
நமது நண்பர்களுக்கு மன சஞ்சலம் ஏற்பட்டு விடுமோ, உறவுகள் விலகி விடுமோ, செல்வந்தர்களின் நேசம் குறைந்து விடுமோ, கொடுக்கல் வாங்கலைத் தவிர்த்து விடுவார்களோ என்றெல்லாம் எண்ணி மனோ இச்சைக்குக் கட்டுப்படுபவர்கள், தவறான நேசத்தை உடையவர்கள் மறுமையில் ஏற்படப் போகும் விளைவுகளைச் சிந்தித்து திருந்திக் கொள்ள வேண்டும்.
ஒருவர், இன்னொருவருக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை அஞ்சுங்கள்! (அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெறப்படாது. எவருக்கும் எந்தப் பரிந்துரையும் பயன்படாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன்: 2:123) ➚.)
மறுமையைப் பற்றி இறைவன் தன் திருமறையில் எச்சரிக்கும் போது, அந்த நாளில் எந்த உறவுகளும், யாருக்கும் பயன் தரமாட்டார்கள்; சிபாரிசுகள் எடுபடாது; இவ்வுலகில் குற்றம் செய்து உறவு கொண்டாடி குதூகலம் கொண்டவர்கள் மறுமையில் ஒருவருக்கொருவர் ஏசிக் கொள்வார்கள் என்றெல்லாம் அல்லாஹ் எச்சரிக்கின்றான். இத்தகையவர்கள் எந்தப் பலனும் அற்று நரகத்தின் கூட்டாளிகளாக நிற்கதியற்று நிற்பார்கள். இதனைத் தினமும் நம் சிந்தனையில் கொண்டு செயல்பட்டால் இம்மை வாழ்வு வளம் பெறும். அல்லாஹ்வின் நேசமும் கிடைக்கப் பெறும்.
குறைவான நாட்களே உடைய இந்த அற்ப உலகில் நல்லவர்களாக நடக்கும் போது அல்லது ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லும் போது சில சோதனைகளும் பிரச்சனைகளும் ஏற்படும். சிலர் நம்மை இழிவுபடுத்தவும் செய்வார்கள். இதை எதிர்கொள்ள அஞ்சினால், மறுமையில் உலகம் தோன்றியது முதல் அழிக்கப்படும் வரையுள்ள அனைத்து மக்களின் முன் இழிவுபட நேரிடும்.
இதை உணர்வுப்பூர்வமாக ஏற்றுக் கொண்டால் நிச்சயமாக நாம் தீயோர்களின் சபைகளைத் தவிர்த்து, நல்லோர் சபை தேடி நம் தீனுக்கு உரம் போடலாம் இன்ஷா அல்லாஹ்!