வலை தளங்களின் வலை விரிப்புகள்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

வலை தளங்களின் வலை விரிப்புகள்

வழுக்கி விழும் வாலிபப் பெண்கள்

(கடந்த மே 27-2017 அன்று ஆங்கில இந்து நாளேட்டில் Predators on the prowl on social networking site) ‘சமூக வலைத்தளங்களில் இரை தேடி அலைகின்ற காமுக மிருகங்கள்’ என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியானது. அந்தச் செய்தி ஆந்திரா மாநிலத்தில் நடக்கின்ற நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டியது. பருவ வயதுப் பெண்களை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு இது ஓர் எச்சரிக்கை மணி என்பதால் இதை வாசகர்களின் கவனத்திற்கு சமர்ப்பிக்கின்றோம்.)

சமூக வலைதளங்களில் சாதகங்கள், சாதனைகள்  நிறைந்து  இருப்பது போலவே அதில் பாதகங்களும் படுசாபக்கேடுகளும் நிறைந்திருக்கின்றன. அதற்கு ஓர் எடுத்துக்காட்டு தான் அண்மையில் விஜயவாடாவில் நடந்த ஒரு கோர, கொடூர சம்பவம்.

ஒரு பதினாறு வயதுப் பெண் ஆன்லைன் மூலம் ஒரு பையனிடம் நட்பு கொள்கின்றாள். அது காதலாக மலர்கின்றது. காதல் காமத்தில் விடிகின்றது. அதுவரைக்கும் உரையாடலாக இருந்த தொடர்பு  உடலுறவாக மாறியது. இதன் பின்னர் மூன்றாவது நண்பனுடன் ஓர் உல்லாசப் பயணம் ஏற்பாடுகின்றது.

மதுவுடன் சேர்த்து  சகல, சரச, சல்லாப விளையாட்டுகள் நடந்து முடிந்து திரும்புகையில் வரும் பாதையில்  பாதியிலேயே போதையுடன்  அவள் கீழே இறக்கி விடப்படுகின்றாள். புத்தி சுவாதீனத்துடன் உள்ள பெண்களையே கொத்திக் கபளீகரம் செய்து, கற்பழித்து, காமப் பசியைத் தணித்துக் கொள்ள அல்லும் பகலும் ஆலாய் பறந்து  அலையாய் அலைந்து  திரிகின்ற காமக் கயவர்கள் நிறைந்த இந்த  நாட்டில்  இளம் பெண் ஒருத்தி தன்னிலை  மறந்து வெறும் சடலமாக சாலையில் தனியாக வந்து மாட்டும் போது விட்டு வைப்பார்களா?

நான்கு கயவர்கள் அவளைக் கவர்ந்து சென்று ஒரு தனி வீட்டில் வைத்து மாறி மாறிக் கற்பழித்து, தங்கள் காமத்தின் கோரப் பசியை, கொடூரப் பசியைத் தணித்திருக்கின்றார்கள். தாகந்தீர பருகியிருக்கின்றார்கள். கடைசியில் காவல் துறை அபிஷேக், ஸ்ரீகாந்த், சுனீல், பவன் என்ற அந்த காம மிருகங்களை கைது செய்துள்ளது. கூடவே அந்த இளம்பெண்ணை இந்த கதிக்கு ஆளா­­க்கிய பாய் ஃபிரண்டும் கைது செய்யப்பட்டுள்ளான்.  கைது செய்யப்பட்டு என்ன பயன்?  பிணையில் வெளியே வந்து மீண்டும் இதை விட பன்மடங்கு வீரியமாக விளையாடுவார்கள் இந்த வல்லூறுகள். இது தான் இந்த நாட்டின் தலைவிதி.

ஒரு காமுகன் ஒரு பெண்ணை விபச்சாரத்திற்கு அழைக்கின்றான். அப்பெண் அவனது  அழைப்புக்குக் காது கொடுக்க மறுத்தது தான் தாமதம்! உடனே அவளது படம் விபச்சாரி என்ற பட்டத்துடன் வலைத்தளங்களில் வலம் வர ஆரம்பித்து விட்டது, வலைத்தளங்களில் தொடர்கின்ற பழிவாங்கும் படலத்திற்கும் வரம்பில்லாத பிளாக்மெயில் அராஜக ராஜ்ஜியத்திற்கும் இது ஓர் அப்பட்டமான எடுத்துக் காட்டு.

விசாகப்பட்டணத்தைச் சார்ந்த ஓர் 26 வயது பெண் யூடியூபில் தன் மேனியில் ஆடை இல்லாமல் நிர்வாணமாக தனது படம் உலா வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றாள். தனக்கும் தான் கல்யாணம் முடிக்கப் போகும் கணவனுக்கும் மத்தியில் பரிமாறப்பட்ட சாதாரண படங்கள் எப்படி நிர்வாணக் கோலத்தில் தனக்குத் தெரியாமல் இப்படிக் காற்றலையில் காற்றாட விடப்படுகின்றது? என்று கதி கலங்கி நிற்கின்றாள். கண்ணீர் வடிக்கின்றாள்.

காமுகனாகிய ஒருவனது கள்ள அழைப்புக்கும் காம வலை விரிப்புக்கும் வளைந்து கொடுக்காததால் அவன்  பிளாக் மெயில் போர் தொடுத்திருக்கின்றான். இன்னும் கால அவகாசம் இருக்கின்றது, இல்லையேல் மற்ற வலைத்தளங்களிலும் உன் ஆடையில்லாத அப்பட்ட மேனி  அப்படியே  மேடையேறும் என்று அவனது அராஜக மிரட்டல் தொடர்கின்றது. அவள் காவல் துறையில் புகார் செய்கின்றாள்.

இருவரும் தங்களுக்கு மத்தியில் தங்கள் மொபைல்களில்  பரிமாறிய இந்தப் படங்கள் மூன்றாம் நபரால் ஹேக் செய்யப்பட்டு அந்தப் பெண்மணி ஆடை அவிழ்க்கப்பட்டுள்ளாள் என்று காவல் துறை அதன் மர்ம முடிச்சை அவிழ்த்தது. வலைத்தளத்தின் வக்கிரம புத்தியுள்ளவர்களின் அக்கிரமச் செயலுக்கு இது மற்றொரு எடுத்துக் காட்டாகும். வலைத்தளத்தில் இப்படிப்பட்ட கள்ளக் கலை வண்ண, கைங்கரிய விளையாட்டுகளெல்லாம் சர்வ சாதாரணம் என்பது அப்போது தான் அந்த பெண்ணுக்குப் புரிய வருகின்றது.

கர்ப்பிணியான கன்னிப்பெண்

அங்கோல் என்ற ஊரில் 15 வயது பருவ வயதுப் பெண் ஓரு வீடியோ கிராஃபருடன் நட்பு கொள்கின்றாள். நட்பு சமுதாய அரங்கில் நேருக்கு நேர் நேர்முகமாகப் பார்த்து ஏற்படவில்லை. சமூக வலைத்தளங்களில் மூலமாகத் தான் நட்புக் கொள்கின்றாள். சமூக வலைத்தள நட்பு என்ற பரிசு எப்படி அவளுக்குக் கிடைக்கின்றது? அவளது தந்தை அவளது பிறந்த நாள் பரிசாக அவளுக்கு அளித்த ஸ்மார்ட் ஃபோன் மூலமாகத் தான் கிடைக்கின்றது. இறுதியில், வீடியோக்காரனுடன் வீட்டை விட்டு ஓடுகின்றாள். அவன் அவளை உலவுப்படு என்ற ஊருக்கு அவளை ஓட்டிச் சென்று  ஒரு தொலைதூர வீட்டில் அடைத்து வைத்து  பல்வேறு கோணங்களில்  ஆபாசமான நிலைகளில் படமெடுத்து பதிவு செய்கின்றான்.

செய்தி கசிந்து சைல்ட்லைன் இந்தியா ஃபவுண்டேஷனுக்கு வருகின்றது. அது தலையிட்டு அவளை கன்னிப் பெண்ணாக அல்ல! கர்ப்பிணிப் பெண்ணாக மீட்டெடுக்கின்றது.  சமூக வலைத்தள நட்பு, சகவாசம் ஒரு பருவ வயதுப் பெண்ணை சவக்குழியில் கொண்டு போய் தள்ளி விட்டிருக்கின்றது என்பதற்கு இது பிரிதொரு உதாரணமாகும்

முகத்தைக் காட்டாத மெக்கானிக்

வீடியோக்காரனை அடுத்து ஆட்டோமொபைல் மெக்கானிக் வருகின்றான். இவனுடைய சமாச்சாரம் என்ன? முன்னால் ஒரு போதுமே முகம் பார்த்திராத, முன்பின் தெரியாத இவனை சிறாலா என்ற ஊரைச் சார்ந்த ஒரு பதின்ம வயது இன்ஜினியரிங் படிக்கும் மாணவி காதலிக்கின்றாள். காதல் மலர்ந்தது எப்படி?

அரசியை மண முடிக்க விரும்புவர்கள் சில சாகசங்களை நிகழ்த்த வேண்டும். அடங்காத குதிரையை அடக்க வேண்டும் அல்லது ஒற்றைக்கு ஒற்றையாக வாள் சண்டையில் ஜெயிக்க வேண்டும் இப்படி சாதனைகளை நிகழ்த்தி அல்லது சாகசகங்கள் செய்து அரசியைத் திருமணம் முடிக்க வேண்டும்.  ஆட்டோமொபைல்காரனுக்கு கல்யாணம் முடிக்க அவசியமெல்லாம் இல்லை.

காதல் மட்டும் தான் அவனுக்குத் தேவைப்பட்டது. இந்த இளவரசியின் காதலை  அடைவதற்கு எந்த சாகசமும் செய்ய வேண்டிய அவசியமும் இல்லாமல் போனது. அவன்  ஒரு ராங்க் கால் மட்டும் செய்தான். அவ்வளவு தான் அதிலிருந்து அவள் அவனது வலையில் விழுகின்றாள். ஸ்மார்ட் ஃபோனில் எஸ்.எம்.எஸ்கள் பறக்கின்றன.

காணாமல் போன கள்ளக் காதலன்

இறுதியாக அவளும் அனைத்து நகை நட்டுகளுடன் வீட்டுக்கு தெரியாமல் இறக்கை கட்டிப் பறந்து விடுகின்றாள். இந்த ஆன்லைன் காதல் ஒரு வித்தியாசமான விநோதமான காதல். காரணம் காதல் கதாநாயகனுக்குப் படமில்லை. அதனால் அவள் தன் ஆன்லைன் காதலனின் பாத்திரத்தை தன் காதில் ரீங்காரமிட்ட அவனது குரல் ஓசையை மட்டும் அடையாளமாகக் கொண்டு தேடி அலைகின்றாள், அலைகின்றாள். அவளது அத்தனை நகைகளும் தொலைகின்ற வரையில் தேடி அலைகின்றாள்.

ஆன்லைன் காதலன் தனது அடையாளத்தைக் கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக ஃபோனை அடிக்கடி மாற்றி மாற்றி ஏமாற்றி விட்டான் என்பது இந்தக் கழிசடைக்குப் பின்னால் தான்  தெரிய வருகின்றது. இவை எல்லாம் காவல் துறையின் கவனத்திற்கு வந்தவை. வராதவற்றின் எண்ணிக்கையை வரையறுத்துச் சொல்ல முடியாது என்று காவல் துறை சொல்கின்றது.

அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் சமூக வலைத்தளங்களால் சர்வ சாதாரணமாக ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, பள்ளிக் கல்லூரி மாணவிகள் தான் இதில் கவிழ்ந்து விழுந்து கல்லூரி வாழ்க்கையை மட்டுமல்ல! கற்பு நெறி வாழ்க்கையையும் சேர்த்தே இழந்து நாசமாகி விடுகின்றனர் என்று காவல்துறை தெரிவிக்கின்றது.

காவல்துறையில் இது போன்ற வழக்குகள் குவிந்த வண்ணமிருக்கின்றன. அத்துடன் குற்றவாளிகள் பெண்களை ஏமாற்றுவதற்குப் புதுப்புது வழிமுறைகளைக் கையாளுகின்றனர். காவல்துறை இதுபோன்ற ஏமாற்று வழிகளையும் ஏமாற்றுப் பேர்வழிகளையும் தொடர்ந்து மக்களுக்கு எச்சரித்த வண்ணமாகத் தான் இருக்கின்றது. சமூக வலைத்தளங்களினால் விளைகின்ற விபரீதங்களையும் விளைவுகளையும் காவல்துறை விலாவாரியாக விளக்குகின்றது.

சமூக வலைத்தளங்களில் இப்படி ஏமாற்றப்படுகின்ற பெண்கள் பற்றிய சாபக்கேடுகளை ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டுகின்ற விதம் இளைஞர்களைச் சீர்திருத்தும் விதத்தில் இல்லை. மாறாக, அந்த இளைஞர்களை எதிர்மறையாக இந்தப் பாதாளத்தில் அதிக வேகத்தில் தள்ளி விடுவதாகவே உள்ளது என்று சமூக ஆர்வலரான ஒரு வழக்கறிஞர் ஆதங்கப்படுவது  நாம் கவனத்தில் கொள்ள  வேண்டிய விஷயமாகும்.