இந்த இறையச்சம்  ஈது வரையா? இறுதி வரையா?

பயான் குறிப்புகள்: சந்தர்ப்ப உரைகள்

இந்த இறையச்சம்  ஈது வரையா? இறுதி வரையா?

ரமளான் மாதத் தலைப்பிறையைப்  பார்த்தது முதல் பள்ளிவாசல்கள் நிறைமாத கர்ப்பிணிகளாகவே ஆகி விட்டன. ஆண்டு முழுமைக்கும் பள்ளியின் முதல் வரிசையில் அலங்கரித்தவர், ரமளானில் கடைசி வரிசைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றார். அந்த அளவுக்கு ஐங்கால ஜமாஅத் தொழுகைகளில் ஜன சமுத்திரம் திரண்டது என்று சொன்னால் அது மிகையல்ல!

சின்னஞ்சிறுவர்கள், இளைய தலைமுறையினர், நடுத்தர வயதினர், முதியவர்கள் என வாழ்க்கையின் அனைத்துப் பருவத்தினரும் பள்ளிவாசலுக்குப் படையெடுத்து வந்தனர். பெண்கள் அனுமதிக்கப் பட்ட பள்ளிகளில் அவர்களும் பெருக்கெடுத்து பொங்கி வழிந்தனர். இரவு நேரத் தொழுகைகளுக்கு இருபாலர்களும் பள்ளியில் வந்து குழுமுவதைப் பார்க்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில்  மூன்று நாட்கள் தொழுது விட்டு, ‘இவர்களின் இந்த ஆர்வம் இரவுத் தொழுகையைக் கடமையாக்கி விடுமோ?’ என்று அஞ்சியதும் அதன் காரணமாக மூன்று நாட்களுடன் நிறுத்திக் கொண்டதும் சரியான முடிவு என்பது நிரூபணமாகின்றது.

முன்னேரத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் அலைமோதுகின்றனர் என்றால் பின்னேரத்தில் நள்ளிரவில் தொழுகை துவங்கும் போதும் அதே அலைமோதலையும் ஆர்வமேலீட்டையும் அபாரமாகக் காண முடிகின்றது.

மற்ற நாட்களில் எத்தனையோ பேர்களுக்கு ஃபஜ்ர் தொழுகையே படுதாளம் போட்டுக் கொண்டிருக்கின்றது. அவர்களெல்லாம் நள்ளிரவில் தங்கள் விழிகளில் வழிகின்ற உறக்கத்தைக் கலைத்து விழித்தெழுந்து இந்த இரவுத் தொழுகைகளை எப்படி உயிராக்க முடிந்தது என்று எண்ணும் போது அது நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. இது தொழுகை என்ற வணக்கத்தில் ஏற்பட்ட மாற்றமும் மறுமலர்ச்சியுமாகும்.

ஜகாத் எனும் கடமையை எடுத்துக் கொண்டால்  அது ரமளான் மாதத்தில் மட்டும் நிறைவேற்றக் கூடிய கடமை அல்ல. வாணிபம், விவசாயம் என்று வருமானத்தைப் பொறுத்து பல்வேறு கால கட்டங்களில் நிறைவேற்றக் கூடிய கடமையாகும். இருப்பினும் ரமளான் மாதத்தில் ஜகாத்தை வழங்கும் மக்களைப் பார்க்கின்றோம்.

இது கடமையான வணக்கமென்றால் உபரியான தர்மங்கள் மக்களிடம் அணை உடைத்த வெள்ளமாய்  பொங்கிப் பிரவாகிப்பதைப் பார்க்க முடிகின்றது. செல்வந்தர்கள் தங்கள் வளத்திற்கும் வசதிக்கும் ஏற்ப வாரி வழங்குவதையும் ஏழைபாழைகள், அன்றாடங்காய்ச்சிகள், பாட்டாளி வர்க்கத்தினர் தங்கள் சக்திக்கு ஏற்ப வழங்குவதையும் நாம் பார்க்க முடிந்தது. இதெல்லாம் எப்படி சாத்தியமானது?  மக்களிடம் எப்படி இந்த மாற்றம் வந்தது? அதற்கு ஒற்றைப் பதில் ரமளான் தான்.

பல்வேறு அலுவல்கள் நம் அனைவரையும் ஆழ்கடல் அலைகளாக அலைக்கழிக்கும் இந்த நவீன யுகத்தில் அல்குர்ஆனை, அன்றாடம் எடுத்து ஓதுவதற்கு அவகாசமோ, அதற்கான வாய்ப்புகளோ கிடைப்பதில்லை. ஆனால் ரமளான் மாதத்தில் இரவு நேரத் தொழுகைகளில் அதிகமான அளவு குர்ஆனைச்  செவியுற்றது போக அவர்கள் அதை ஓதுவதற்கும், அதற்கான நேரத்தை ஒதுக்குவதற்கும் எப்படி முடிந்தது? அதற்குரிய விடை ரமளான் மாதம் என்பது தான்!

இன்னிசை தான் மக்களை ஈர்க்கும் ஈர்ப்பு விசை என்று அதிகமானோரால் கருதப்படுகின்றது. அதனால் முஸ்லிமல்லாதவர்கள் தங்கள் மார்க்கத்திலும் இசையைப் புகுத்தி அதை ஒரு வணக்கமாக்கி அதில் பரவசமடைகின்றனர். ஆனால் இஸ்லாமோ இசையையும், வாத்தியக் கருவிகளையும் தன் பக்கம் அண்டவிடாமல், அணுக விடாமல் தடுத்து வைத்திருக்கின்றது. அத்துடன் தொழுகை போன்ற வழிபாடுகளில் வாத்தியக் கருவிகள் துணையில்லாமல் ஓங்கி ஒலிக்கின்ற குர்ஆன் ஓங்காரமாக மக்கள் காதுகளில் ரீங்காரமிடுகின்றது.

ஒரு தடவை கேட்ட இசையை  நாம் திரும்பத் திரும்பக் கேட்க முடிவதில்லை. அதனால் அது புதிய இசை, பழைய இசை என இரு வகைகளாகவும், இரு கூறுகளாகவும் பிரிக்கப்படுகின்றது. ஆனால் குர்ஆன் ஒரே இசை தான்!  அதுதான் புவி ஈர்ப்பு விசையாகத் திகழ்ந்து மக்களை ரமளான் மாதம் உள்ளூர்களில் அந்தந்த பள்ளிகளை நோக்கியும் உலக அளவில் மக்காவை நோக்கியும் அழைக்கின்றது.

மொத்தத்தில், இந்தக் குர்ஆன் தான் ரமளான் மாதத்தில் கொடிகட்டிப் பறக்கின்றது. வாத்திய இசைப் பாடல்கள் எதற்குமில்லாமல் இப்படி ஒரு கூட்டம் ஒவ்வொரு பள்ளியிலும், மக்காவிலும் கூடுகின்றது என்றால் அது இந்தக் குர்ஆனுக்காகத் தான். இது ரமளான் மாதத்தில் குர்ஆன் ஓதுதல் என்ற வணக்கம் கோலோச்சுவதற்குரிய ஓர் எடுத்துக் காட்டாகும்.

அடுத்து ரமளான் மாதத்தில் மிளிர்கின்ற வணக்கம் உம்ரா என்ற வணக்கமாகும். ஹஜ் மாதங்களில் மக்கா திக்குமுக்காடுவதும், திணறுவதும் நமக்குத் தெரியும். ஆனால் ரமளான் மாதத்தில் மக்கா திக்குமுக்காடுவதும், திணறுவதும் ஏன்? காரணம் ரமளான் தான்.

இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் தம் ஹஜ்ஜை முடித்துத் திரும்பிய போது உம்முஸினான் அல் அன்ஸாரியா என்ற பெண்மணியிடம், ‘நீ ஹஜ்ஜுக்கு வர என்ன தடை?’ என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, ‘என் கணவரே காரணம்; அவருக்கு தண்ணீர் இறைக்கும் இரண்டு ஒட்டகங்கள் இருந்தன. ஒன்றில் ஏறி அவர் ஹஜ்ஜுக்குச் சென்றார்; மற்றொன்று எங்களுக்குரிய நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது; (இதுவே காரணம்)’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘ரமலானில் செய்யப்படும் ஓர் உம்ரா என்னோடு ஹஜ் செய்வதற்கு நிகராகும்’ என்றார்கள்.

நூல்: (புகாரி: 1863) 

ரமளான் மாதத்தில் இலட்சக்கணக்கான செலவில் நெடிய பயணம் மேற்கொண்டு உம்ரா என்ற வணக்கத்தை நிறைவேற்றுவதை நாம் பார்க்க முடிகின்றது, இவை எல்லாம் ரமளான் மாதத்தில் ஏற்பட்ட இறையச்சத்தின் வெளிப்பாடும் விளைவுமாகும்.

வணக்க வழிபாடுகள் மட்டுமல்லாமல், உறவுகளை ஆதரித்தல், சகோதரத்துவ வாஞ்சையுடன் நடத்தல், மனித நேயம் காத்தல் போன்ற இறையச்சத்தின் வெளிப்பாடுகள் நீண்டு கொண்டே செல்கின்றன. இவை அனைத்தும் நன்மையின் பக்கம் என்றால் தீமையின் பக்கத்தைக் கவனிக்கின்ற போது அங்கும் ரமளான் மாதம் பெரும் சாதனை படைத்திருக்கின்றது.

செயின் ஸ்மோக்கர் என்ற சங்கிலித் தொடர் புகைப் பழக்கமுள்ளவரை ஒரு மணி நேரம் கூட புகையின் பக்கம் நெருங்க முடியாத அளவுக்கு இந்த நோன்பு தடுத்து நிறுத்தி விடுகின்றது. அவரால் நோன்பு அல்லாத காலத்தில் ஒரு மணி நேரம் கூட புகைக்காமல் இருக்க முடியாது. அப்படிப்பட்ட தொடர் புகை வண்டியைக் கூட ஒரு பதினான்கு அல்லது பதினைந்து மணி நேரம் புகையின் பக்கம் நெருங்காமல் தடுக்கின்றது என்றால் உண்மையில், அது நபி (ஸல்) அவர்களின் சொல்லை உண்மை என்பதை நிரூபிக்கின்றது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன, ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்’ என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நூல்: (புகாரி: 1899) 

இவ்வளவு நேரம் உன்னால் எப்படிப் புகைக்காமல் இருக்க முடிந்தது? எப்படி சாத்தியமானது? அதிகாலை முதல் அந்தி நேரம் வரை இறைவன் தடுத்திருக்கின்றான் என்ற இறையச்சம் தான். இதே  இறைவன் தான் நோன்பு துறந்த பிறகும் இதைத் தடுத்திருக்கின்றான். இதை ஏன் நோன்பு துறந்த பிறகு நீ செய்கின்றாய்? என்று புகைப்பவனைச் சிந்திக்க வைக்கின்றது. சுருக்கமாகச் சொல்லப் போனால்  இறைவன் அனுமதியளித்த அதாவது ஹலாலான உணவு, நீர் ஆகியவற்றை நோன்பு நோற்கும் போது ஒரு நோன்பாளி தவிர்த்து விடும் போது, தடுக்கப்பட்டதை நோன்பிற்குப் பிறகும் செய்யக் கூடாது என்று உணர்த்துவது தான் நோன்பின் நோக்கமாகும்.

நோன்பின் பயனால் இப்படிப் புகைப் பழக்கத்தை விட்டவர்கள் இருக்கின்றார்கள். சினிமா சமூகத்தில் அனைவரையும் குறிப்பாக இளைஞர்களை ஆட்கொண்டிருக்கின்ற ஒரு சமூகத் தீமையாகும். இந்த திரைப்படத் தீமையிலிருந்து ரமளானை முன்னிட்டு  விலகியவர்கள் பலர் இருக்கின்றார்கள்.

இதுவெல்லாம் புறத் தீமையென்றால் நபி (ஸல்) அவர்கள் சொன்னது போன்று இந்த நோன்பு ஒரு நோன்பாளியிடத்தில் அகத்தூய்மையையும் ஏற்படுத்தி விடுகின்றது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!’

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: (புகாரி: 1903) 

இப்படி  ஒரு பக்கம் நன்மைகளைச் செய்வதற்கும் மறுபக்கம் தீமைகளை விடுவதற்கும் பல்வேறு பரிமாணங்களில் இறையச்சம் இந்த ரமளான் மாதத்தில் துணை நின்றது.

வேதனைக்குரிய விஷயம் என்னவெனில், இந்த இறையச்சம் ஈது அன்று பறந்து போய் விடுகின்றது பெருநாள் அன்று கடமையான தொழுகைகள் காற்று வாங்கத் துவங்கி பள்ளிகள் வெறிச்சோடி விடுகின்றன. ஈது தொழுகை முடிந்தவுடன்  திரைப்படத்தைக் காண ஆண்களும் பெண்களும் படையெடுக்க ஆரம்பித்து விடுகின்றனர். ஒரு காலத்தில் இது அதிகமாக இருந்தது. இப்போது குறைந்து விட்டாலும் திரைப்படத்திற்கு போகாதவர்கள் இல்லை என்று சொல்வதற்கில்லை.

நோன்புக் காலத்தில் அரும்பி ததும்பி வழிந்த நல்லமல்கள், நற்பண்பாடுகள் எல்லாம் தொலைந்து போய் விடுகின்றன. ரமளான் காலத்தில் திரையிடப்பட்ட டிவி பெட்டிகள் மீண்டும் திறந்து விடப்படுகின்றன. எத்தனையோ குடும்பங்களை சீரியல்கள் சீரழித்து சின்னாபின்னாமாக்கிக் கொண்டிருக்கின்றன.

இவர்களிடம் இறையச்சம் என்பது ஈது தினத்தின் காலைத் தொழுகையுடன் விடை பெற்று விடுகின்றது. ரமளான் மாதம் வந்தும் புகைப்பழக்கத்தை நிறுத்தாதவர்கள் உள்ளனர். அத்தகையவர்கள் பின்வரும் நபிமொழியின் எச்சரிக்கைக்கும் இறை சாபத்திற்கும் உள்ளானவர்கள். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரின் மீது ஏறினார்கள். ‘ஆமீன் ஆமீன் ஆமீன்’ என்று கூறினார்கள். ‘‘ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?’’ என்று அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘‘ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘எந்தவொரு அடியான் ரமலானை அடைந்தும் அவனது பாவம் மன்னிக்கப்படவில்லையோ அவனது மூக்கு மண்ணைக் கவ்வட்டும்’ என்று கூறினார்கள். அதற்கு நான் ஆமீன் என்று கூறினேன்.

பிறகு, ‘எந்த அடியானிடத்தில் என்னைப் பற்றிச் சொல்லப்படும் போது அவன் என் மீது ஸலாம் கூறவில்லையோ அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்’ என்று கூறினார்கள். அதற்கு ஆமீன் என்று கூறினேன். ‘எந்த அடியான் தனது தாய் தந்தையையோ அல்லது இருவரில் ஒருவரையோ பெற்றிருந்தும் சொர்க்கம் செல்லவில்லையோ அவனது மூக்கு மண்ணைக் கவ்வட்டும்’ என்று கூறினார்கள். அதற்கு நான் ஆமீன் என்று கூறினேன்’’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: பைஹகீ-8504 (8767) 

இந்த ஹதீஸின் எச்சரிக்கையின் படி ரமளானில் ஏற்பட்ட இந்த இறையச்சம் ஈது வரை தொடராமல் இறுதி மூச்சு வரை தொடரட்டுமாக!

3:102 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்!

(அல்குர்ஆன்: 3:102).)