அல்லாஹ்வின் பண்புகளை  நாம் மறுக்கிறோமா?

பயான் குறிப்புகள்: கொள்கை

அல்லாஹ்வின் பண்புகளை  நாம் மறுக்கிறோமா?

அனைத்தையும் படைத்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அல்லாஹ்வின் குறிப்பிட்ட சில பண்புகளை நாம் மறுப்பதாக சமூக வலைத்தளங்களில் கள்ள ஸலஃபிக் கூட்டத்தினரால்  நமது கொள்கை பற்றி தவறான விமர்சனம் செய்யப்படுகிறது.

அல்லாஹ் அர்ஷிலிருந்து இறங்குகிறானா?

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

இரவின் மூன்றில் இறுதி  ஒரு பங்கு இருக்கும் போது  பாக்கியம் பெற்ற உயர்ந்துவிட்ட  நமது இறைவன் உலக வானத்திற்கு வந்து என்னை அழைப்பவர் யார்? அவருக்கு நான் பதிலளிப்பேன். என்னிடத்தில் (எதையாவது) கேட்பவர் யார்? அவருக்கு (அதனை) வழங்குவேன். என்னிடத்தின் மன்னிப்புத் தேடுபவர் யார்? அவரை மன்னிப்பேன். என்று இறைவன் கூறுவதாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புகாரீ: 1145, 6321, 7494)

இந்தக் கருத்துள்ள செய்தி முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத் இன்னும் பிற நூற்களிலும் ஆதாரப்பூர்வமான செய்தியாகப் பதிவிடப்பட்டுள்ளது. இந்தச் செய்தியில் அல்லாஹ் இறங்குகிறான் என்பதற்கு நேரடிப் பொருள் கொடுக்காமல் அல்லாஹ்வின் அருள் இறங்குகிறது என்று நாம் விளக்கம் அளிக்கின்றோம்.

இதை அடிப்படையாகக் கொண்டு தான் கள்ள ஸலபுக் கூட்டம் நம்மை விமர்சிக்கின்றார்கள். அல்லாஹ் இறங்கி வருகிறான் என்பதற்கு நேரடிப் பொருள் தான் கொடுக்க வேண்டும். மாற்று விளக்கம் அளிக்கக் கூடாது  என்று இந்த யூத ஸலஃபி கூட்டம் கூறுகின்றனர்.

நம்மைப் பொறுத்தவரை அல்லாஹ்வைப் பற்றி பேசுகிற அனைத்து சான்றுகளுக்கும் நேரடிப் பொருள் தான் கொடுக்க வேண்டும். எங்கே நேரடிப் பொருள் கொடுப்பது மற்ற சான்றுகளுடன் பொருந்திப் போகாமல் முரண்படுகிறதோ அங்கே மாற்று விளக்கம் அளிக்கலாம் என்பது தான் நமது நிலைப்பாடு.

அல்லாஹ் இறங்கி வருகின்றான் என்பதை நேரடிப் பொருளில் எடுத்துக் கொண்டால் அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்று வரக்கூடிய குர்ஆன் வசனங்களுடனும் அது தொடர்பான ஆதாரப்பூர்வமான நபிமொழிகளுடனும் அந்தப் பொருள் பொருந்திப் போகாமல் முரண்பாடு ஏற்படுகிறது.

உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். அவனே காரியங்களை நிர்வகிக்கிறான்.

(அல்(அல்குர்ஆன்: 10:3).)

அல்லாஹ் அர்ஷில் அமர்ந்திருந்தான் என்ற கருத்தில் (7:54 13:2 20:5 25:59 32:4 57:4) ஆகிய வசனங்களிலும் ஏராளமான நபிமொழிகளிலும் இடம்பெற்றிருக்கிறது.

அல்லாஹ் இறங்கி வருகிறான் எனும் புகாரி செய்தியை நேரடிப் பொருளில் புரிந்து கொண்டால் அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் எனும் கருத்துடைய இவையனைத்தையும் மறுக்கும் நிலை ஏற்படும்.

எனவே அல்லாஹ்வின் இறங்குதல் என்பதற்கு வேறு பொருள் கொடுக்கிறோம். அதாவது அல்லாஹ் இறங்குகிறான் என்றால் அவனே இறங்குவதில்லை. அவனது அருள் இறங்குகிறது.  அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்ற சான்றுகள் இருப்பதாலேயே இந்த நபிமொழிக்கு மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது என்று கூறுகிறோம்.

இந்த வாதத்தை நாம் குறிப்பிடும் போது இந்த கள்ள ஸலஃபிக் கூட்டம் சில தவறான வாதங்களை வைக்கின்றனர்.

அவை…

அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்றால் அர்ஷில் இருக்கின்றான் என்றும், அல்லாஹ் இறங்கி வருகிறான் என்றால் அல்லாஹ் இறங்கி வருகிறான் என்றும் நேரடியாகப்  பொருள் கொள்ள வேண்டும்.

மாற்றுப் பொருள் வைப்பது அல்லாஹ்வுக்கு இறங்குதல் என்ற பண்பிருப்பதை மறுப்பதாக அமையும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன போது நபித் தோழர்கள் இறங்குதல் என்பதை முரணாக விளங்கிக் கொண்டு ஏன் நபி (ஸல்) அவர்களிடம் இது குறித்துக் கேட்கவில்லை?

அல்லாஹ்வின் அனைத்து  பண்புகளை நேரடிப் பொருள் தான் கொள்ள வேண்டும் என்ற விதி இருக்கும் போது மாற்று பொருள் கொடுப்பதற்கு ஆதாரம் என்ன? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

நமது பதில்கள்

முதல் அடிப்படையாக இவ்வாறான வாதங்களுக்கு, அல்லாஹ்வின் தன்மைகளையும் மொழி வழக்கையும் குர்ஆன் ஆதராபூர்வமான நபி மொழியின் அடிப்படையில் சரியாக விளங்காததே இதற்கு காரணம்

அல்லாஹ்வின் அனைத்துப்  பண்புகளையும் நேரடியாகத் தான் விளங்க வேண்டும் என்ற விதி இருக்கிறது என்ற வாதத்தை எடுத்து வைக்கின்றனர்.

எங்கே மற்ற சான்றுகளுடன் பொருந்திப் போகவில்லையோ அங்கே மாற்றுப் பொருள் கொடுப்பதில் தவறில்லை. இன்னும் அத்தகைய இடங்களில் மாற்றுப் பொருள் கொடுப்பது தான் சரியான வழிமுறையும் கூட. திருக்குர்ஆன், நபிமொழிகளில் அவ்வாறு நேரடிப் பொருள் கொடுக்க முடியாத பல இடங்களில் அனைவராலும் மாற்றுப் பொருள்தான் கொடுக்கப்படுகின்றது.

நாம் அல்லாஹ் இறங்குகிறான் என்பதற்கு மாற்றுப் பொருள் கொடுத்ததும் ‘ஆ! இது அல்லாஹ்வின் பண்பை மறுக்கும் செயல்’ என தாம் தூம் என்று வானத்திற்கும், பூமிக்குமாய் துள்ளிக் குதிக்கும் கள்ள ஸலபிக் கூட்டம் வசதியாக அதை மறைத்து விடுகிறார்கள்.

கள்ள ஸலபுக் கூட்டம் முதல் கொண்டு அனைவராலும் மாற்று விளக்கம் அளிக்கப்படுகின்ற ஆதாரங்களைக் காண்போம்.

பிடரி நரம்பை விட நெருக்கத்தில் உள்ள அல்லாஹ்

அல்லாஹ் தனக்கும் மனினுக்கும் உள்ள நெருக்கத்தை பற்றி குறிப்பிடும் போது,

நாம் அவனுக்கு பிடரி நரம்பை விட மிக நெருக்கமாக இருக்கிறோம்.

(அல்குர்ஆன்: 50:16).)

என்று கூறுகிறான்.

ஒவ்வொருக்கும் பிடரி நரம்பை விட அல்லாஹ் நெருக்கம் என்றால் ஒவ்வொவருக்கும் ஒரு அல்லாஹ் என்றாகிவிடும். அனைத்தையும் நேரடிப் பொருளில் தான் விளங்க வேண்டும் என்ற வாதத்தின்படி இதையும் பொருள் செய்வார்களா? அல்லது இது அல்லாஹ்வுக்கும் மனிதனுக்கும் உள்ள நெருக்கத்தைப் பற்றி குறிப்பிடப்படுகிறது. நேரடி பொருளில் பயன்படுத்தவில்லை   என்பதை அல்லாஹ்வே இந்த அத்தியாயத்தின் அடுத்த வசனங்களில்  விளக்குகிறான் என்பார்களா?

வலப்புறத்திலும் இடப்புறத்திலும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடத்தில் கண்கானிக்கும் பதிவாளர் இல்லாமல் இருப்பதில்லை.

(அல்குர்ஆன்: 50:17), 18.)

பிடரி நரம்பை விட நெருக்கம் என்பதற்கு வானவர்களின் மூலமான கண்காணிப்பே என்று அருமையான விளக்கத்தை அல்லாஹ் தருகிறான். இதை கள்ள ஸலபுக் கூட்டம் மறுப்பார்களா? நேரடிப் பொருள் தான் கொடுக்க வேண்டும் என வாதிப்பார்களா?

அல்லாஹ் கட்டிடங்களுக்கு கீழே செல்கிறானா?

அவர்களுக்கு முன்சென்றோரும்  சூழச்சி செய்தனர். அல்லாஹ் அவர்களின் கட்டிடங்களில் அடிப்புறத்தில் வந்தான். மேலேயிருந்த முகடு  அவர்கள் மீது விழுந்தது. அவர்கள் உணராத விதத்தில் அவர்களிடத்தில் வேதனை வந்தது.

(அல்குர்ஆன்: 16:26).)

நேரடிப் பொருளில் தான் விளங்க வேண்டும் என்றால் கட்டிடங்களில் கீழ்ப்பகுதியில் அல்லாஹ் சென்று தரைமட்டமாக்கினான் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். மனிதன் தான் கட்டிடங்களைத் தகர்ப்பதற்கு இவ்வாறு சிரமப்பட வேண்டும். அல்லாஹ் தீயவர்களை அழிப்பதற்கு இவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆகு என்றால் ஆகி விடும் என்பது தான் அகிலங்களின் அதிபதியின் பண்பாகும்.

மேற்கண்ட வசனத்திற்கு நேரடி விளக்கம் கொடுத்தால் அல்லாஹ்வின் பல பண்புகள் செயல்களை மறுத்தவர்களாகி விடுவோம். எனவே பூகம்பம் ஏற்படுமாறு அல்லாஹ் இட்ட கட்டளை என்று தான் பொருள் கொள்ள முடியும். அல்லாஹ் விளக்கம் கூறிய வசனங்களை எவ்வாறு விளங்கிக் கொள்கிறோமோ அதைப் போலத் தான் இந்த வசனத்தை விளங்குவது முறையாகும்.

நாங்கள் எங்கும் நேரடிப் பொருள் தான் செய்வோம் எனக் கூறி அல்லாஹ் கட்டிடங்களுக்கு அடியில் நேரடியாக வந்து அசைத்து விட்டு சென்றான் என்று இந்த கூட்டம் வாதிப்பார்கள் போலும்.

அல்லாஹ் அழிப்பதற்கு இறங்கி வருவானா?

மேகக் கூட்டங்களில் அல்லாஹ்வும் வானவர்களும் வந்து முடிக்கப்பட வேண்டும் என்பதைத் தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா?

(அல்குர்ஆன்: 2:210).)

பூமியை அதன் ஓரங்களில் குறைப்பதற்காக  பூமிக்கு நாம் வருவதை அவர்கள் பார்க்கவில்லையா?

(அல்(அல்குர்ஆன்: 13:41).)

அல்லாஹ் தீயவர்களை அழிப்பதற்கு நேரடியாகவோ, மேகக் கூட்டங்களிலோ வர வேண்டும் என்ற அவசியமில்லை.

அது ஒரு பெரும் சப்தமாகவே இருந்தது. உடனே அவர்கள் சாம்பலானார்கள்

(அல்குர்ஆன்: 36:29).)

எனவே அல்லாஹ் மேகக்கூட்டங்களில் வருவதென்றால் பெரும் மேகத்தில் அல்லாஹ்வின் வேதனை இடியாலும், பெரும் மழையாலும் பேரழிவு ஏற்படுத்தும் என்று பொருள் கொண்டால் தான் சரியாக பொருள் கொள்ள முடியும்.

அது போல பூமியின் ஓரத்தைக் குறைப்பதற்கு அல்லாஹ் வருகின்றான் என்பதையும் அல்லாஹ்வின் வேதனை என்று பொருள் கொண்டால் தான் அல்லாஹ்வின் மற்ற எந்த பண்புகளையும் பாதிக்காது.

நபித்தோழர்கள் அல்லாஹ்வின் கையின் மீது வைத்து பைஅத் செய்தார்களா?

உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதிமொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது.

(அல்குர்ஆன்: 48:10).)

இதற்கு நேரடிப் பொருள் கொடுப்பதாக இருந்தால் அல்லாஹ் அர்ஷிலிருந்து கை நீட்டி பைஅத் செய்தான் என்று தான் பொருள் கொள்ள முடியும். இப்படித்தான் கள்ள ஸலபிகள் விளங்குவார்கள் போலும்.

நபித்தோழர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை இருக்கிறதென்றால் அல்லாஹ்வின் தூதரின் கைகளைப் பிடித்து உறுதிமொழி செய்தது  அல்லாஹ்விடத்தில் செய்த உறுதிமொழியை போன்றது. உறுதிமொழிக்கு மாற்றமாக நடக்காமல் கடைப்பிடிக்க வேண்டும் என்ற முக்கியத்துவத்திற்காக தான் அல்லாஹ் கூறுகிறான். என்று தான் விளங்க முடியும்.

அனைவருடனும் அல்லாஹ் இருக்கிறான்

அல்லாஹ் பொறுமாயாளர்களுடன் இருக்கிறான்

(அல்குர்ஆன்: 2:153, 2:249, 8:46).)

அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கிறான்

(அல்குர்ஆன்: 2:194, 9:36, 9:123).)

அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்களுடன் இருக்கிறான்

(அல்குர்ஆன்: 8:19).)

நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான்

(அல்குர்ஆன்: 57:4).)

இந்த வசனங்களுக்கு எல்லாம் நேரடிப் பொருள் கொடுத்தால் மனிதன் தான் கடவுள் ஒவ்வொரு மனிதரிடத்திலும் அல்லாஹ் இருக்கிறான் வழிகெட்ட ஆபத்தான பொருள் வந்து விடும். மனிதர்கள் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் இருக்கிறான் என்றால் அவனது கண்காணிப்பு உள்ளது என்பது இவ்வசனங்களின் பொருள் என்பதை யாரும் விளங்கலாம். அப்படித்தான் கள்ள ஸலபுகள் முதல் கொண்டு அனைவரும் பொருள் செய்கின்றனர்.

இப்படி நிறைய வசனங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

அல்லாஹ்வுக்கு உதவி தேவையா?

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான்.

(அல்குர்ஆன்: 47:7).)

தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவி செய்கிறான்.

அல்லாஹ் நம்மிடத்தில் கடன் கேட்கிறானா?

அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார்? அதை அவருக்குப் பன்மடங்காக (இறைவன்) பெருக்குவான். அல்லாஹ் குறைவாகவும் வழங்குகிறான். தாராளமாகவும் வழங்குகிறான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

(அல்குர்ஆன்: 2:245).)

இதே கருத்தில் 5:12 57:11  57:18 64:17 73:20 ஆகிய வசனங்கள் வருகிறது.

அல்லாஹ் தன் நேசரின் கண்ணாக, கையாக, காலாக மாறினானா?

அல்லாஹ் கூறுவதாக (ஹதீஸ் குத்ஸீ) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

எனது நேசருக்கு எதிராக எவன் செயல்படுகிறானோ அவனுக்கெதிராக நான் யுத்தத்தை அறிவிக்கிறேன். எனது அடியான் மீது கடமையாக்கியவை (வணக்க வழிபாடு)களை விட எனக்கு விருப்பமான உபரியான (வணக்க வழிபாடு)களை வைத்து என்னை அவன் தொடர்ந்து நெருங்கிக் கொண்டே இருக்கும் போது இறுதியாக அவனை நான் நேசிக்கிறேன். நான் அவனை நேசிக்கும் போது அவன் கேட்கின்ற காதாக, அவன் பார்க்கின்ற பார்வையாக, அவன் பிடிக்கின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிறேன்.

என்னிடத்தில் (எதையாவது) கேட்டால் உறுதியாக நான் அவனுக்கு வழங்குவேன். என்னிடத்தில் பாதுகாப்பு தேடினால் உறுதியாக நான் அவனைப் பாதுகாப்பேன். இறை நம்பிக்கையாளரின் உயிரைக் கைப்பற்றுவதற்குத் தயங்குவதை விட வேறெதையும் செய்வதற்கும் நான் தயங்கமாட்டேன். அவன் மரணத்தை வெறுக்கிறான். அவனுக்கு நான் அதன் தீங்கை வெறுக்கிறேன்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலீ)

(புகாரீ: 6502)

இந்தச் செய்தியில் அல்லாஹ் தனக்கு விருப்பமான அடியார்களின் கண்ணாக, காதாக, கையாக, காலாக இருப்பதாகக் கூறுகிறான். அனைத்திற்கும் நேரடிப் பொருள் தான் என்ற கள்ள ஸலபுகளின் அர்த்தப்படி நேரடிப் பொருள் கொண்டால் அல்லாஹ்வின் நேசருக்கு  அல்லாஹ்வே கண்ணாக, காதாக, கையாக, காலாக மாறிவிட்டான் என்ற மிக இழிவான பொருள் கொண்டு அல்லாஹ்வை படைப்பினங்களுக்கு ஒப்பாக்குகின்ற இணைவைப்பில் தள்ளிவிடும்.

இதற்கு நேரடிப் பொருள் செய்து தான் அவ்லியாக்கள், வலிமார்கள் என்ற பெயரில் மக்களை தரீக்காவாதிகள் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இதை கள்ள ஸலபுக் கூட்டம் ஆதரிக்கின்றதா?

அல்லாஹ் அடியானுக்காக ஓடி வருகிறானா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயர்ந்த அல்லாஹ் கூறுகிறான்: எனது அடியான் என்னை நினைக்கும் இடத்தில்  நான் அவனுடன் இருக்கிறேன். என்னை அவனது மனதிற்குள் அவன் நினைத்தால் நானும் அவனை என் மனதிற்குள் நினைப்பேன். அவன் ஒரு கூட்டத்தில் என்னைப் பற்றி கூறினால் நானும் அதை விடச் சிறந்த கூட்டத்தில் அவனைப் பற்றிக் கூறுவேன். அவன் என்னை ஒரு ஜான் அளவு நெருங்கினால் ஒரு முழம் அளவு அவனை நெருங்குவேன். அவன் என்னை ஒரு முழம்  நெருங்கினால்  அவனை நான் நான்கு முழம் நெருங்குவேன். என்னிடத்தில் அவன் நடந்து வந்தால் அவனிடத்தில் ஓடி வருவேன்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலீ)

(புகாரீ: 5195)

மூஸா நபியுடன் அல்லாஹ்

மூஸா (அலை) அவர்களும் அவர்களது கூட்டத்தினரும் தங்களுக்கு முன்பாகக் கடலும் பின்பாக ஃபிர்அவ்னும் அவனது படையும் அழிப்பதற்காக வரும் போது மூஸா (அலை) அவர்கள் சொன்னதை அல்லாஹ் கூறுகிறான்.

“அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழிகாட்டுவான்’’ என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன்: 26:62).)

இதற்கு எப்படி அல்லாஹ் மூஸா நபியுடன் இருந்ததாக நேரடியாகப் பொருள் கொள்ள முடியாதோ அதுபோலத்தான் அல்லாஹ் இறங்கி வருகிறான் எனும் புகாரி செய்தியில் நேரடிப் பொருள் கொடுத்தால் அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்பதற்கு முரணாகப் போய் அந்த வசனத்தையே அர்த்தமற்றதாக ஆக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

ஏனெனில் இந்த ஹதீஸில், இரவின் மூன்றில் இறுதி ஒரு பங்கு இருக்கும் போது என்று சொல்லப்படுகிறது. இரவின் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது அல்லாஹ் இறங்குறான் என்றால் ஒவ்வொரு வினாடியும் அவன் இறங்கிக் கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் பூமி உருண்டையாகவும் சுழலக்கூடியதாகவும் உள்ளதால் இறைவன் இறங்குவதாகக் கூறப்படும் நேரம் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து கொண்டு இருக்கும். அல்லாஹ் எல்லா நேரமும் முதல் வானத்திலேயே இருப்பான் என்ற கருத்து கிடைக்கும். அர்ஷில் அவன் சிறிது நேரம் கூட இருக்க மாட்டான் என்ற கருத்து வரும்.

அதனாலேயே அல்லாஹ்வின் அருள் இறங்கி வருகிறது என்று மாற்றுப் பொருள் கொடுக்கிறோம்.

கள்ள ஸலபுகள் கூறுவதைப் போல மாற்றுப் பொருள் கொடுப்பது இறைவனின் பண்பை மறுக்கும் செயல் என்றால் மேலே நாம் குறிப்பிட்ட அனைத்து சான்றுகளிலும் இவர்கள் முதற்கொண்டு அனைவருமே மாற்று அர்த்தம் தானே கொடுக்கிறார்கள்? அப்படி என்றால் அவர்கள் அனைவரும் இறைவனின் பண்பை மறுத்தவர்களா? என்பதை கள்ள ஸலபுகள் விளக்க வேண்டும்.