பெண்கள் வெளியில் செல்லும் போது பேண வேண்டிய ஒழுங்குமுறைகள்
பெண்கள் வெளியில் செல்லும் போது பேண வேண்டிய ஒழுங்குமுறைகள்
குடும்ப வாழ்க்கையில் பெண்களை நிர்வாகம் செய்யும் ஆண்கள், அவர்களை சிறை வாழ்க்கையைப் போன்று நடத்தாமல் சில சுதந்திரங்களைக் கொடுத்துத் தான் நிர்வகிக்க வேண்டும். அதே நேரத்தில் பெண்கள் அந்த சுதந்திரத்தை மார்க்கம் அனுமதித்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர மார்க்கத்தின் எல்லையை மீறக் கூடாது. இந்த விஷயத்தில் வரம்பு மீறினால் சுவனத்தின் வாடை கூடக் கிடைக்காது என்பதை நினைத்து, இறைவனைப் பயந்து பெண்கள் நடந்து கொள்ள வேண்டும்.
நறுமணம் பூசிக் கொண்டு இரவில் செல்லத் தடை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நறுமணப் புகையைப் பயன்படுத்திய எந்தப் பெண்ணும் கடைசித் தொழுகையான இஷாத் தொழுகையில் நம்முடன் கலந்துகொள்ள வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
தனது நறுமணத்தைப் பிறர் நுகர வேண்டும் என்பதற்காக எவள் நறுமணம் பூசி மக்களிடையே செல்கிறாளோ அவள் விபச்சாரியாவாள் (தவறான நடத்தையுடையவளாவாள்) என்று நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி)
அதே நேரத்தில் எந்தவிதமான நறுமணமாக இருந்தாலும் கணவரிடத்தில் வீட்டிற்குள் இருக்கிற போது போட்டுக் கொள்வதில் தவறில்லை.
ஆடை அணிவதில் ஒழுக்கம்
பெண்கள் தாறுமாறாக, அரைகுறையாக ஆடையணிவதுதான் குடும்பத்தில் இல்லறக் குறைவுக்குக் காரணம் என்பதைப் புரியவேண்டும். நாட்டில் நடக்கிற பலவிதமான பாலியல் வன்முறைகளுக்கும் காரணம் பெண்களின் தவறான ஆடையணியும் முறைதான் என்பதை இஸ்லாமியப் பெண்கள் புரிந்து கொண்டு வெளியில் செல்லும் போது மார்க்கம் அனுமதித்த ஆடையணிந்து செல்ல வேண்டும்.
தாம்பத்திய ஈடுபாடு ஆண்களிடத்தில் குறைந்துள்ளது. நமது அப்பன் பாட்டன் காலத்தில் இருந்த ஈடுபாடு இன்றுள்ள ஆண்களிடம் இல்லை. அதனால்தான் செய்தித் தாள்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஆண்மை குறைவுக்கு வகைவகையான மருந்து விளம்பரங்கள். இந்த அளவு ஆண்மை குறைவு இருப்பதினால் தான் இது சம்பந்தமான வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.
இன்றைய சூழ்நிலையில் நன்றாகச் சாப்பிட்டு நல்ல வகையில் உழைப்பில் ஈடுபட்டாலும் மனைவிமார்களின் மீதுள்ள ஈர்ப்பு குறைவதற்குக் காரணம் என்ன? மனைவியின் மீது இச்சை உணர்வு வராமல் இருப்பதற்குக் காரணம் என்ன? மனைவியுடன் சரியாக இல்லறத்தில் ஈடுபடமுடியவில்லை என ஆண்மை குறைவுக்காக மருத்துவர்களைத் தேடிச் செல்வது ஏன்? என்று ஆய்வு செய்ததில் வெளியான முடிவு என்ன தெரியுமா?
பலவிதமான மாடல் ஆடைகளுடன் அரைகுறை ஆடை அணிந்து செல்கிற பெண்களைப் பார்க்கிற ஆண்களுக்கு இதுபோன்ற இல்லறக் குறைபாடுகள் ஏற்படுவதாகக் கண்டறிந்துள்ளனர். தங்களது மனைவிமார்களை விடவும் அவை ஈர்க்கத் தக்கதாக இருக்கிறது. பிறரின் நிலையை தனது மனைவியுடன் ஒப்பிட்டு மனைவியைக் குறைவாக மதிப்பிடுகிறான். அதுதான் இல்லறக் கோளாறுக்குக் காரணம் என்பதை நிரூபித்துள்ளார்கள்.
எனவே பெண்கள் அரைகுறையாகவும், இறுக்கமாகவும் ஆடையணிந்து வெளியிடங்களில் செல்வது ஆணைப் பாதிக்கின்ற பிரச்சனை மட்டுமின்றி, குடும்பத்தில் ஒழுக்கமாக வாழ்கிற குடும்பப் பெண்களையும் பாதிக்கும் பிரச்சனை என்பதை இச்சமூகம் உணரவேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் ஆண்களோ, பெண்களோ நுகர்வோர் கலாச்சாரத்தினை நோக்கிப் பயணிப்பதாக மனோதத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நுகர்வோர் கலாச்சாரம் என்றால், நாம் பயன்படுத்துகிற செல்போனை விட வேறு ஒன்று நம் கண்களுக்கு சிறப்பானதாகத் தெரிந்தால் அதை அடைய வேண்டும் என்கிற மனோநிலையில் இருப்பது. அதுபோன்று குடும்ப வாழ்க்கைக்கும் பிறருடன் தன்னையும் தன் மனைவியையும் ஒப்பிட்டு பார்க்கும் மனோ நிலையே நுகர்வோர் கலாச்சாரம்.
இது குடும்ப உறவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இல்லறக் கடமையையே இல்லாமல் ஆக்கிவிடும் என்பதைப் புரிந்து கொண்டு பெண்கள் வெளியில் மார்க்கம் அனுமதித்த ஆடைகளுடன் செல்ல வேண்டும். அதே போன்று தற்கால சினிமாக்களில் அந்தரங்கக் காட்சிகளையும் உடலைக் காசுக்காக விற்கின்ற பெண்களையும் பார்க்கின்ற ஆணுக்கு தனது மனைவியின் மீது எப்படி ஈர்ப்பு ஏற்படும்?
இதற்காக எந்த மருத்துவமும் தேவையில்லை. சினிமாக்கள் பார்ப்பதையும், அந்நியப் பெண்களை அரைகுறை ஆடையுடன் பார்ப்பதையும் நிறுத்தினாலே போதும். ஓர் ஆண் யானை பலத்தை அடைவான். மனைவியிடத்தில் தேவையான அளவுக்கு ஈர்க்கப்படுவான். இதைத் தவிர வேறெந்த மருத்துவமும் இத்தகைய ஆண்களுக்குத் தேவையில்லை.
இதில் முக்கியமான செய்தி பிறருடன் தனது மனைவியை ஒப்பிடுவது தான். ஏனெனில் நம் உடலில் எல்லாவற்றையும் இயக்குவது மூளைதான். மூளை தான் இச்சை உணர்வையும் தூண்ட வேண்டும். அதேபோன்று ஆண்களிடம் சரியான இல்லற சுகம் கிடைக்கவில்லையெனில் ஒரு பெண் தவறான வழிக்கு செல்வதற்கும் பெண்களின் ஆடைக் குறைப்பு காரணமாக அமைந்துவிடுகிறது.
இதில் இன்னொன்றையும் நாம் சுட்டிக் காட்டுவது கடமையாகும். சினிமாக்களில் காட்டப்படுகிற பாடல் காட்சிகளும் மற்றவைகளுமே ஏறக்குறைய நீலப்படங்களாகத்தான் இருக்கின்றன. இதில் அதற்கென்றே தயாரிக்கப்படுகிற ஆபாச வீடியோக்களைப் பார்க்கின்ற ஆண் முற்றிலும் மனைவியுடன் இல்லறத்தில் தோல்வியைத் தழுவுகிறான். கண்ணைக் கொண்டு மட்டுமே இன்பம் அனுபவிக்க முடியுமே தவிர, உடலைக் கொண்டு ஒன்றையும் செய்யவே முடியாது. இப்படியெல்லாம் பார்ப்பது நல்லது என்று நினைப்பது அறியாமையாகும்.
அதேபோன்று பெண்களின் அரைகுறை ஆடைகள் தான் ஆண்கள் ஈவ் டீசிங் எனப்படும் பாலியல் தொந்தரவு போன்ற பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைகிறது. இந்தச் செயல் ஆண்களையும் குடும்பப் பெண்களையும் பாதிக்கிறது. எனவே பெண்கள் தன்னளவில் ஆடையைச் சரியாக பேணிக் கொண்டால், மற்றவர்களையும் பேணச் சொன்னால் தன் வாழ்க்கையும் பிறரது வாழ்க்கையும் பாதுகாப்பைப் பெறும் என்பதை உணரவேண்டும். அப்படியான சூழ்நிலை நம் சமூகத்தில் உருவானால் இயற்கையான, உண்மையான குடும்பவியல் கோலோச்சும். அப்போதுதான் வளமான சமூகம் உருவாகும்.
இவை தவிர, ஆண்கள் தங்களது பார்வைகளைப் பேணிக் கொள்வது நமது தாம்பத்தியத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக இருக்கும். அல்லாஹ் இதனைத் திருமறையில் இரு பாலருக்கும் எச்சரிக்கையாகவே சொல்கிறான்.
(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன்: 24:30) ➚.)
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்.
(அல்குர்ஆன்: 24:31) ➚.)