இதுதான் மத்ஹப் சட்டங்கள்!
இதுதான் மத்ஹப் சட்டங்கள்!
இமாம்களின் பெயரால் கற்பனைக் கதைகள்
மத்ஹபு ஆதரவாளர்கள், மக்களிடம் மத்ஹபு வெறியை ஊட்டி சிந்தனையை மழுங்கச் செய்ய ஒரு வழிமுறையைக் கையாள்கின்றனர். அதாவது மத்ஹபு இமாம்கள் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும், அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள் என்றும், நபிகள் நாயகத்துக்குச் சமமானவர்கள் என்றும், நபிகள் நாயகத்தை விட மேலானவர்கள் என்றும் கட்டுக்கதைகளைப் புகுத்துவார்கள்.
ஆலிம் படிப்பு படிக்கச் சென்றவருக்கு சிறு வயதில் இப்படி பக்தி ஊட்டப்பட்டு பின்னர் அது வெறியாக மாற்றப்பட்டு விடுகிறது. இதன் காரணமாகத்தான் மத்ஹபில் உள்ள அபத்தங்கள் மக்களுக்குப் புரியும் அளவுக்கு ஆலிம்களுக்குப் புரியவில்லை. இமாம்களின் கருத்தில் தவறே வராது என்று மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.
திருக்குர்ஆனுக்கும், ஹதீஸ்களுக்கும் முரணான மத்ஹப் சட்டங்கள் குறித்து யாரும் கேள்வி எழுப்பக் கூடாது என்பதற்காக மத்ஹப் இமாம்களை அல்லாஹ்வின் தூதருக்குச் சமமாகவும், அல்லாஹ்வின் தூதருக்கு மேலானவாரகவும் ஆக்கியுள்ள கொடுமையைப் பாருங்க்கள்:
كيف وقد صلى الفجر بوضوء العشاء أربعين سنة، وحج خمسا وخمسين حجة، ورأى ربه في المنام مائة مرة؟ ولها قصة مشهورة. وفي حجته الاخيرة استأذن حجبة الكعبة بالدخول ليلا، فقام بين العمودين على رجله اليمنى ووضع اليسرى على ظهرها حتى ختم نصف القرآن، ثم ركع وسجد، ثم قام على رجله اليسرى ووضع اليمنى على ظهرها حتى ختم القرآن، فلما سلم بكى وناجى ربه وقال: إلهي ما عبدك هذا العبد الضعيف حق عبادتك، لكن عرفك حق معرفتك فهب نقصان خدمته لكمال معرفته، فهتف هاتف من جانب البيت: يا أبا حنيفة قد عرفتنا حق المعرفة وخدمتنا فأحسنت الخدمة، قد غفرنا لك ولمن اتبعك ممن كان على مذهبك الى يوم القيامة- – الدر المختار
அபூஹனீபா அவர்கள் நாற்பது ஆண்டுகளாக (அதாவது பதினைந்தாயிரம் நாட்களாக) இஷாவுக்குச் செய்த உளூவின் மூலம் பஜ்ரு தொழுகை தொழுதுள்ளார்கள். ஐம்பத்தி ஐந்து தடவை ஹஜ் செய்திருக்கின்றார்கள். தமது இறைவனை நூறு தடவை கனவில் பார்த்திருக்கிறார்கள்.
அபூஹனீபா அவர்கள் தமது கடைசி ஹஜ்ஜின் போது ஒரு இரவு கஅபாவின் காவலாளியிடம் கஅபாவிற்குள் நுழைய அனுமதி கேட்டார்கள். அவரும் அனுமதி கொடுத்தார். உள்ளே நுழைந்து – இரண்டு தூண்களுக்கிடையில் இடது காலை வலது காலின் மீது வைத்துக் கொண்டு, வலது காலில் நின்றார்கள். இப்படியே பாதி குர்ஆனை ஓதி முடித்தார்கள். பின்னர் ருகூவு செய்து, ஸஜ்தா செய்தார்கள். பின்னர் வலது காலை இடது காலின் மீது வைத்துக் கொண்டு இடது காலில் நின்றார்கள். மீதி இருந்த பாதி குர்ஆனையும் ஓதி முடித்தார்கள். ஸலாம் கொடுத்ததும் தம் இறைவனிடம் பின்வருமாறு உரையாடினார்.
என் இறைவா! உனது பலவீனமான இந்த அடியான் உன்னை வணங்க வேண்டிய விதத்தில் வணங்கவில்லை. ஆயினும் உன்னை அறிய வேண்டிய விதத்தில் அறிந்துள்ளேன். எனவே எனது முழுமையான அறிவின் காரணமாக என் பணியில் ஏற்படும் குறைகளைப் பொறுத்துக் கொள் என்று அபூஹனீபா கூறினார்.
உடனே கஅபாவின் மூலையிலிருந்து, “அபூஹனீபாவே! நம்மை அறிய வேண்டிய விதத்தில் அறிந்து விட்டீர். அழகிய முறையில் பணியும் செய்து விட்டீர். எனவே உம்மையும், கியாம நாள் வரை உம்மைப் பின்பற்றுவோரையும் நான் மன்னித்து விட்டேன்’’ என்று ஓர் அசரீரி கேட்டது.
நூல் : ஹனபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்
இஷாவுக்குச் செய்த உளூவைக் கொண்டு பதினைந்தாயிரம் நாட்கள் பஜ்ரு தொழுகை தொழுதார்கள் என்றால் என்ன பொருள்?
15 ஆயிரம் இரவுகள் அவர் உறங்கவில்லை! மலஜலம் கழிக்கவில்லை! காற்றுப் பிரியவில்லை! மனைவியுடன் குடும்பம் நடத்தவில்லை! என்பதுதான் இதன் பொருள். இப்படி எந்த மனிதராலும் நடக்க முடியுமா? இவ்வாறு நடக்க மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?
ஒற்றைக் காலில் நின்று வணங்க மார்க்கத்தில் அனுமதியிருக்கிறதா? ஒரு இரவில் முழுக் குர்ஆனையும் முறைப்படி ஓத முடியுமா? அல்லாஹ்வை அறிய வேண்டிய விதத்தில் அறிந்து விட்டேன் என்று அல்லாஹ்விடம் ஒருவர் கூறலாமா? நபிமார்கள் அல்லாத மனிதர்களிடம் அல்லாஹ் இவ்வாறு உரையாடுவானா? அபூஹனீபாவை மட்டுமின்றி கியாம நாள் வரை அவரைப் பின்பற்றக் கூடியவர்களையும் மன்னித்து விட்டதாக அல்லாஹ் கூறியிருக்க முடியுமா?
மத்ஹபின் மேல் வெறி ஏற்றுவதற்காக இப்படியெல்லாம் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடலாமா?
அபூஹனீபா பற்றி அவிழ்த்து விட்ட மற்றொரு கட்டுக்கதையைப் பாருங்கள்!
وعنه عليه الصلاة والسلام إن سائر الانبياء يفتخرون بي، وأنا أفتخر بأبي حنيفة، من أحبه فقد أحبني، ومن أبغضه فقد أبغضني – الدر المختار
எல்லா நபிமார்களும் என் மூலம் பெருமையடைகின்றனர். ஆனால் நானோ அபூஹனீபாவின் மூலம் பெருமையடைகின்றேன். யார் அவரை நேசிக்கிறாரோ அவரை நானும் நேசிக்கிறேன். யார் அவரை வெறுக்கிறாரோ அவரை நானும் வெறுக்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
நூல் : துர்ருல் முக்தார்
அபூஹனீபா மூலம்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பெருமை என்றால் நபி (ஸல்) அவர்களை விட அபூஹனீபா சிறந்தவரா? உயர்ந்தவரா?
இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கூறியதாகத் திட்டமிட்டு இட்டுக்கட்டிக் கூறக்கூடிய இந்த நூலை எப்படி நம்ப முடியும்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படிக் கூறியிருந்தால் அது இடம் பெற்ற ஹதீஸ் நூல் எது? அதன் அறிவிப்பாளர்கள் யார்? அவர்களின் தரம் என்ன?
இந்தக் கேள்விகளுக்கு மட்டுமின்றி நபி (ஸல்) அவர்களை விட அபூஹனீபா உயர்ந்தவரா? என்ற கேள்விக்கும் மத்ஹப் உலமாக்களால் பதில் சொல்ல முடியாது.
மேலும் அதே நூல் கூறுவதைப் பாருங்கள்!
وعنه عليه الصلاة والسلام إن آدم افتخر بي وأنا أفتخر برجل من أمتي اسمه نعمان وكنيته أبو حنيفة، هو سراج امتي – الدر المختار
என்னை வைத்து ஆதம் பெருமை அடைந்தார். நான் என் சமுதாயத்தில் தோன்றக் கூடிய நுஃமான் எனும் அபூஹனீபாவை வைத்து நான் பெருமை அடைகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: துர்ருல் முக்தார்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அகிலத்தின் அருட்கொடை என்பதால் அவர்களை வைத்து ஆதமுக்குப் பெருமை என்று கூறுவதை ஏற்க முடிகிறது. ஆனால் நபிகள் நாயகத்துக்குப் பெருமை அபூ ஹனீபாவை வைத்துத் தான் என்று சொன்னால் அபூ ஹனீபா நபிகள் நாயகத்தை விட மேலானவர் என்பதாகும். இப்படி ஒரு நச்சுக்கருத்தைச் சொன்னவன் முஸ்லிமாக இருப்பானா? யூதக் கைக்கூலியாக இருப்பானா?
நபிகள் நாயகத்தை விட அபூஹனீபா பெரியவர் என்ற கருத்தை விதைத்து விட்டால் ஹதீஸ்களை விட அபூஹனீபாவின் கருத்துக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பது தான் இந்தக் கட்டுக் கதையின் நோக்கம்.
இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக புளுகி வைத்துள்ள ஹனபி மத்ஹப் வெறியர்கள் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையுடன் எடுத்துக் காட்டத் தயாரா?
மேலும் புளுகியுள்ளதைக் காணுங்கள்!
لو كان في أمتي موسى وعيسى مثل أبي حنيفة لما تهودوا ولما تنصروا – الدر المختار
மூஸா நபி, ஈஸா நபி ஆகியோரின் சமுதாயங்களில் அபூஹனீபா போன்றவர் இருந்திருந்தால் அவர்கள் யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ ஆகியிருக்க மாட்டார்கள்.
நூல் : துர்ருல் முக்தார்
அபூஹனீபா என்பவர் இந்த உம்மத்தில் பிறந்த்தால் தான் இந்த உம்மத் வழிகெடாமல் இருக்கிறது என்றால் இது எவ்வளவு பெரிய திமிர்பிடித்த வாதம்? அபூபக்ர், உமர் மற்றும் அனைத்து நபித்தோழர்களை விடவும் இவர் மேலானவரா? இவரது மத்ஹபைப் பின்பற்றும் மக்களில் அதிகமானவர்கள் சமாதி வழிபாட்டில் ஈடுபட்டு யூத கிறித்தவர் வழியில் போய்க்கொண்டு இருக்கிறார்களே? தன் மத்ஹபில் உள்ளவர்களையே ஷிர்கில் விழாமல் காப்பாற்ற இவரால் முடியவில்லையே?
இது இட்டுக்கட்டப்பட்ட பச்சைப் பொய் அல்லவா? அபூ ஹனீபா என்பவர் இந்த உம்மத்தில் பிறந்திருந்தும் ஷியாக்கள், காரிஜியாக்கள், முஃதஸிலாக்கள், மத்ஹபுவாதிகள் சமாதி வழிபாடு செய்வோர், பித்அத்வாதிகள் ஆகியோர் உருவானது எப்படி?
மேலும் எல்லை மீறி புகழ்வதைக் கேளுங்கள்!
وقد جعل الله الحكم لأصحابه وأتباعه من زمنه إلى هذه الأيام، إلى أن يحكم بمذهبه عيسى – عليه السلام – الدر المختار
அபூஹனீபாவின் சகாக்களுக்கும், அவரைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ் ஞானத்தை வழங்கி விட்டான்.(அல்லது அதிகாரத்தை வழங்கி விட்டான்) இறுதியில் இவரது மத்ஹபின்படியே ஈஸா நபி தீர்ப்பு வழங்குவார்கள்.
நூல் : துர்ருல் முக்தார்
ஈஸா நபி ஹனபி மத்ஹபைப் பின்பற்றுவார்கள் என்று கூறியவர் யார்? ஈஸா நபிக்குக் கூட குர்ஆன் ஹதீஸை ஆய்வு செய்து முடிவு செய்ய முடியாதா? அவர்களை விட அபூஹனீபா சிறந்தவரா? நபிமார்களை அவமானப்படுத்திவிட்டு இவரது புகழைப் பரப்ப வேண்டும் என்று வெறிபிடித்து அலைவது தான் ஷரீஅத்தைப் பாதுகாக்கும் இலட்சணமா?
தனது மத்ஹப் இமாமைப் போற்றுவதாக எண்ணி மற்ற இமாம்களை எந்த அளவுக்கு கேவலப்படுத்தி உள்ளனர் என்று பாருங்கள்!
فلعنة ربنا أعداد رمل … على من رد قول أبي حنيفه – الدر المختار
அபூஹனீபாவின் கருத்தை மறுக்கக் கூடியவர்களுக்கு மணல்களின் எண்ணிக்கை அளவுக்கு நமது இறைவனின் சாபம் (லஃனத்) உண்டாகட்டும்.
நூல் : துர்ருல் முக்தார்
அபூஹனீபாவின் கருத்தை மூன்று இமாம்கள் மறுத்துள்ளனரே! அபூஹனீபாவின் மாணவர்களான அபூ யூசுப், முஹம்மது போன்றவர்கள் பலமுறை மறுத்திருக்கிறார்களே! அவர்கள் எல்லாம் சாபத்துக்கு உரியவர்களா?
அது போல் அமைந்த ஒரு கட்டுக்கதையைப் பாருங்கள்!
وَالْحَاصِلُ أَنَّ أَبَا حَنِيفَةَ النُّعْمَانَ مِنْ أَعْظَمِ مُعْجِزَاتِ الْمُصْطَفَى بَعْدَ الْقُرْآنِ ( الدر المختار ج: 1ص: 56)
சுருங்கச் சொல்வதென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புதங்களில் குர்ஆனுக்கு அடுத்த மகத்தான அற்புதம் அபூஹனீஃபா தான்.
(நூல்: துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 52)
ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாக அரபிக் கல்லூரிகளில் போதிக்கப்படும் துர்ருல் முக்தாரில் இந்தத் தத்துவம் இடம் பெற்றுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புதங்களில் திருக்குர்ஆன் மகத்தானது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கடுத்த அற்புதம் அபூஹனீஃபா தான் என்றால் அதன் பொருள் என்ன?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்க்காத, அவர்களின் காலத்தில் பிறந்திராத அபூஹனீஃபாவை, நபியவர்களின் அற்புதம் என்றால் அது எவ்வளவு பெரிய அபத்தம்? குர்ஆனில் எந்தத் தவறும் இல்லாதது போன்று, அபூஹனீஃபாவின் தீர்ப்புகளிலும் தவறே இருக்காது என்று இதன் மூலம் நச்சுக்கருத்து ஊட்டப்படுகிறது. நபித்தோழர்களை விட, நான்கு கலீபாக்களை விட இவர் சிறந்தவரா?
நபியவர்கள் தமது நபித்துவத்தை நிரூபிக்க குர்ஆனைச் சமர்ப்பித்தார்கள். அது போல் அபூஹனீஃபாவையும் சமர்ப்பித்து தமது நுபுவ்வத்தை நபியவர்கள் நிரூபித்தார்களா? எனவே இமாம்கள் மீது பக்தி வெறியூட்டுவதற்காக இவ்வாறு உளறியுள்ளனர் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி அறிந்து கொள்ளலாம்.
மத்ஹப் நூல்களில் குர்ஆன் ஹதீஸுக்கு முரணாகவும், ஆதாரமற்றதாகவும் தொழுகையைக் கேலிக்கூத்தாக்கும் வகையிலும் பல சட்டங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
கஅபா இடம் பெயர்ந்தால்…
الْكَعْبَةُ إذَا رُفِعَتْ عَنْ مَكَانِهَا لِزِيَارَةِ أَصْحَابِ الْكَرَامَةِ فَفِي تِلْكَ الْحَالَةِ جَازَتْ الصَّلَاةُ إلَى أَرْضِهَا . (رد المحتار – (ج 3 / ص 341)
கராமத் உடையவர்களைச் சந்திப்பதற்காக கஃபா ஆலயம் இடம் பெயர்ந்து விட்டால் அது அமைந்திருந்த இடத்தை நோக்கித் தொழலாம்.
(துர்ருல் முக்தார் பாகம் : 1 பக்கம் : 402)
கஃபா ஆலயம் எவரையும் சந்திப்பதற்காக இடம் பெயருமா? பெயரும் என்றால் நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காக அது மதீனாவிற்குச் சென்றிருக்குமே? நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக் செய்ய வந்தபோது ஊரின் எல்லையில் அவர்களை வரவேற்கச் சென்றிருக்குமே.? இதைப் பற்றிய அறிவு கூட இதை எழுதியவருக்கு இல்லை.
கஃபாவை புனிதமான ஆலயத்தை மக்களுக்காக நிலையானதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான்.
(அல்குர்ஆன்: 5:97) ➚.)
மக்களுக்காக மக்கள் அங்கே சென்று தவாப் செய்வதற்காக கஃபாவை நிலையானதாக ஆக்கியிருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். கஃபா எங்கேயும் நகர்ந்து செல்லாது என்பதையும், அதைச் சந்திக்கச் செல்லூம் மக்களை ஏமாற்றாது என்பதையும் திட்டவட்டமாக இந்த வசனம் கூறுகிறது.
குர்ஆனுக்கு முரணாகவும் அறிவுக்குப் பொருத்தமற்ற வகையிலும் இந்த நூலாசிரியர் கற்பனை செய்து அதிசயமான சட்டத்தை மக்களுக்கு வழங்குகிறார். அதற்கும மாநபி வழிக்கும் சம்பந்தம் உண்டா என்பதை மத்ஹபு அபிமானிகள் சிந்திக்கட்டும்.
நாய் சோப்பு
لَوْ وَقَعَ إنْسَانٌ أَوْ كَلْبٌ فِي قِدْرِ الصَّابُونِ فَصَارَ صَابُونًا يَكُونُ طَاهِرًا لِتَبَدُّلِ الْحَقِيقَةِ . ا هـ . (رد المحتار – (2 / 465)
மனிதன் அல்லது ஒரு நாய் சோப்பு பாத்திரத்தில் விழுந்து சோப்பாக மாறிவிட்டால் அது தூய்மையானதாகும். (மனிதன் மற்றும் நாயின்) தன்மை மாறிவிட்டதின் காரணத்தினால்…
(ரத்துல் முஹ்தார் பாகம் : 2 பக்கம் : 465)
பிறையை சுட்டிக் காட்டக்கூடாது
إذَا رَأَوْا الْهِلَالَ يُكْرَهُ أَنْ يُشِيرُوا إلَيْهِ لِأَنَّهُ مِنْ عَمَلِ الْجَاهِلِيَّةِ (الدر المختار – (2 / 433)
பிறையைப் பார்த்தால் அதன் பக்கம் சுட்டிக் காட்டுவது வெறுக்கத்தக்கதாகும். ஏனென்றால் இது அறியாமைக்கால பழக்கவழக்கங்களில் உள்ளதாகும்.
(துர்ருல் முஹ்தார் பாகம் : 2 பக்கம் : 433)
குழாயை ஆறாக மாற்றும் அதிசய சட்டம்
ஹனபி மத்ஹப் சட்டப்படி ஒரு தடவை உளூச் செய்த தண்ணீரில் மீண்டும் உளூச் செய்யக் கூடாது. குளம் குட்டை போன்ற ஓடாத தண்ணீராக இருந்தால் அது பத்து முழம் ஆளமும், பத்து முழம் அகலமும் கொண்டதாக இருந்தால் அதில் கைகளை விட்டு உளூச் செய்யலாம். ஒருவர் உளூ செய்த பின் அதே தண்ணீரில் கைகளை விட்டு மற்றவர்கள் உளூச் செய்யலாம். மேற்கண்ட அளவை விட குறைவாக இருந்தால் அதில் கைகளை விட்ட உடன் அது பயன்படுத்திய தண்ணீராகி விடும். அதில் கைகளை விட்டவரும் உளூச் செய்ய முடியாது. மற்றவரும் உளூச் செய்ய முடியாது.
ஆனால் ஒடும் தண்ணீராக இருந்தால் அதில் கைகளை விட்டு உளூ செய்யலாம். அதில் அசுத்தமான பொருள் மிதந்தாலும் அது சுத்தமான தண்ணீராகும். இப்படி ஹனபி மத்ஹப் சட்டம் கூறுகிறது. இது ஆதாரமற்ற சட்டம் என்றாலும் இதில் பெரிய அளவில் கிறுக்குத் தனம் இல்லாததால் இதை விட்டு விடலாம்.
ஆனால் ஓடும் தண்ணீர் என்று ஹனபி இமாம்கள் கூறியதை மத்ஹபு சட்டப் புத்தகம் எழுதியவர்கள் எப்படி புரிந்து கொண்டு துணைச் சட்டம் எழுதியுள்ளார்கள் என்பதைப் பார்க்கும் போது இவர்களுக்கு நிகரான அறிவீனர்கள் உலகில் இருக்க முடியாது என்று அறிந்து கொள்ளலாம்.
அந்தத் துணைச் சட்டம் இதுதான்:
أو صب رفيقه الماء في طرف ميزاب وتوضأ فيه وعند طرفه الآخر إناء يجتمع فيه الماء جاز توضؤه به ثانيا وثم وثم – الدر المختار
ஒருவன் உளூச் செய்வதற்காக இன்னொருவன் தண்ணீர் ஊற்றுகிறான். அவன் உளூச் செய்த தண்ணீர் ஒரு குழாயின் ஒரு முனையில் ஓடுகிறது. அதன் மறுமுனையில் ஒரு பாத்திரம் வைக்கப்பட்டு அதில் அந்தத் தண்ணீர் சேர்கிறது. அந்தத் தண்ணீரில் மீண்டும் மீண்டும் மீண்டும் உளூச் செய்யலாம்.
துர்ருல் முஹ்தார் பாகம் : 1 பக்கம் : 204
இப்போது ஓடும் தண்ணீர் என்ற தகுதி வந்து விட்டதாம். குழாய் வழியாக இல்லாமல் நேரடியாக அந்தத் தண்ணீர் பாத்திரத்தில் பிடிக்கப்பட்டால் அதில் மீண்டும் உளூச் செய்ய முடியாது. குழாய் வழியாக ஓடி ஒடும் தண்ணீராக ஆகிவிட்டால் எத்தனை தடவையும் உளூச் செய்யலாமாம்.
ஆறு போன்ற ஓடும் நதிகளில் அதிக அளவில் தண்ணீர் ஒடுவதால் அதில் ஊளுச் செய்யலாம் என்று அந்த மத்ஹப் அறிஞர்கள் கூறியதைக் கூட சரியாக விளங்காத அறிவிலிகள் தான் மத்ஹப் சட்ட நூல்களை எழுதி உள்ளனர். இதைப் படித்து அறியாமையைப் பெருக்கிக் கொண்டவர்கள் தான் அறிஞர்களாக கருதப்படுகிறார்கள்.
பைத்தியமாக்கும் பல் குச்சி
உளூச் செய்யும் போது பல் துலக்குவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகம் வலியுறுத்தியுள்ளனர்.
எப்படி பல் துலக்குவது என்பதற்கு குறிப்பிட்ட வழிமுறை எதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை.
ஆனால் ஹனபி மத்ஹப் நூலில் பல்துலக்குவதற்கான சட்டம் பின்வருமாறு எழுதப்ப்பட்டுள்ளது.
وَيَسْتَاكُ عَرْضًا لَا طُولًا ، وَلَا مُضْطَجِعًا ؛ فَإِنَّهُ يُورِثُ كِبَرَ الطِّحَالِ ، وَلَا يَقْبِضُهُ ؛ فَإِنَّهُ يُورِثُ الْبَاسُورَ ، وَلَا يَمُصُّهُ ؛ فَإِنَّهُ يُورِثُ الْعَمَى ، ثُمَّ يَغْسِلُهُ ، وَإِلَّا فَيَسْتَاكُ الشَّيْطَانُ بِهِ ، وَلَا يُزَادُ عَلَى الشِّبْرِ ، وَإِلَّا فَالشَّيْطَانُ يَرْكَبُ عَلَيْهِ ، وَلَا يَضَعُهُ بَلْ يَنْصِبُهُ ، وَإِلَّا فَخَطَرُ الْجُنُونِ قُهُسْتَانِيٌّ . ( الدر المختار – (1 / 124)
பல் துலக்கும் குச்சியை அகல வாட்டத்தில் வைத்து பல் துலக்க வேண்டும். நீள வாட்டத்திலும், படுக்கை வாட்டத்திலும் வைத்து பல் துலக்கக் கூடாது. ஏனெனில் இது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடும். அதை முழுக் கையால் பற்றிப் பிடிக்கக் கூடாது. ஏனெனில் அது மூல நோயை உருவாக்கி விடும். அதை வாயில் வைத்து சப்பக் கூடாது. ஏனெனில் அது பார்வையைக் குருடாக்கி விடும். அதைக் கழுவி விட வேண்டும். கழுவவில்லை என்றால் அதை வைத்து ஷைத்தான் பல் துலக்குவான். அதை ஒரு ஜான் அளவில் தான் வைத்திருக்க வேண்டும். அதை விட நீளமாக வைத்திருந்தால் ஷைத்தான் அதில் சவாரி செய்வான். அதைக் கீழே கிடத்தி விடாது நாட்டி வைக்க வேண்டும். இல்லையேல் பைத்தியம் பிடித்து விடும்.
நூல்: துர்ருல் முக்தார், பாகம் 1, பக்கம் 124
இந்த அற்புதமான கண்டுபிடிப்புகளுக்கு என்ன ஆதாரம்?
வாயில் வந்ததையெல்லாம் எழுதி வைத்து விட்டு, மார்க்கச் சட்டங்கள் என்று கூறும் இந்த மத்ஹபு நூல்களை ஆதரிப்பவர்கள் உண்மையில் சுய நினைவோடு தான் ஆதரிக்கிறார்களா?
இந்தச் சட்டங்களுக்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை இந்த நூலே ஒப்புக் கொள்கிறது. அதனால் நபிமொழியைக் காரணம் காட்டாமல் அது ஏற்படுத்தும் விளைவுகளைக் காரணம் காட்டுகிறது.
நீள வாக்கில் பல்துலக்கினால் கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்று எப்படி அறிந்து கொண்டார்கள்? அன்றைக்கே கல்லீரலை எக்ஸ்ரே எடுத்து அல்லது ஸ்கேன் எடுத்து வீங்கி இருப்பதைக் கண்டு பிடித்தார்களா? நிஜமாகவே ஒருவனுக்கு கல்லீரல் வீங்கி இருந்தால் அன்றைய மருத்துவ அறிவைக் கொண்டு கண்டு பிடிக்க முடியாது. அவ்வாறிருக்க இந்த அறிவீனர்கள் அதை எப்படிக் கண்டு பிடித்தார்கள்?
இன்று இது போல் ஒருவரை பல் துலக்க வைப்போம். ஒருவாரம் கழித்து ஸ்கேன் போட்டுப் பார்த்து கல்லீரல் வீங்கி இருப்பதை நிரூபிக்கத் தயாரா? அப்படி இல்லாவிட்டால் மக்களை மூடர்களாக்கிய இந்த நூலைத் தீயிட்டுப் பொசுக்கத் தயாரா?
முழுக்கையால் பிடித்தால் தான் போதிய அழுத்தம் கிடைக்கும். இரு விரல்களால் பிடித்தால் பல் துலக்குவதற்குத் தேவையான அழுத்தம் கிடைக்காது என்று கூறியிருந்தாலாவது ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இவ்வாறு செய்தால் மூல நோய் ஏற்படும் என்று எந்த விஞ்ஞானி கண்டுபிடித்தார்? மேலே சொன்னவாறு இதையும் நிரூபித்துக் காட்டத் தயாரா?
ஒரு ஜானுக்கு மேல் இருந்தால் அதில் ஷைத்தான் சவாரி செய்வான் என்று எழுதியுள்ளனர். இதை விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்க முடியாது. வஹீ மூலம் தான் கண்டுபிடிக்க முடியும். அதாவது அல்லாஹ்வோ அவனது தூதரோ சொன்னால் தான் இதை அறிய முடியும். அப்படி எந்த ஆதாரமும் இல்லை. எனவே இட்டுக்கட்டி சொல்லி உள்ளனர். இவர்களின் தலையில் ஷைத்தான் ஏறி உட்கார்ந்து கொண்டு இப்படி எழுத வைத்துள்ளான் என்று தெரிகிறது.
பல் குச்சியை நாட்டி வைக்காவிட்டால் பைத்தியம் பிடிக்கும் என்று எழுதி வைத்துள்ளனர். பைத்தியம் எதனால் ஏற்படுகிறது என்று பல காரணங்களை விஞ்ஞாகள் கண்டறிந்துள்ளனர். அதில் பல் குச்சியை படுக்க வைப்பது இடம் பெறவில்லை. அப்படியானால் இப்படி உண்மைக்கு மாறானதை எழுதியவர்களுக்குத் தான் பைத்தியம் இருந்துள்ளது என்று தெரிகிறது.
சந்தேகம் தீர்க்கும் காமெடிச் சட்டம்
الشك في غسل الوضوء : ولو علم أنه لم يغسل عضوا وشك في تعيينه غسل رجله اليسرى لأنه آخر العمل (الدر المختار
ஒருவர் உளூச் செய்யும்போது ஏதோ ஓர் உறுப்பைக் கழுவவில்லை. எந்த உறுப்பு என்று தெரியவில்லை. அப்படியானால் (இடது காலாகத் தான் அது இருக்க வேண்டும். எனவே) இடது காலைக் கழுவ வேண்டும். ஏனெனில் அதுதான் கடைசிச் செயல்.
துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 51
இப்படி ஒரு அற்புதச் சட்டத்தை எழுதி தங்களின் அறியாமையை அவர்களே வெளிப்படுத்துகிறார்கள்.
உளூ செய்து முடித்த பின் ஏதோ ஒரு உறுப்பைக் கழுவவில்லை என்று யாருக்கும் சந்தேகம் வராது. கையக் கழுவினோமா என்று சந்தேகம் வரும். அல்லது காலைக் கழுவினோமா என்று சந்தேகம் வரும். ஏதோ ஒன்றைக் கழுவவில்லை என்று எவருக்கும் சந்தேகம் வராது. எந்த உறுப்பைக் கழுவியது குறித்து சந்தேகம் வருகிறதோ அந்த உறுப்பைக் கழுவவில்லை என்று முடிவு செய்து அதை மீண்டும் கழுவ வேண்டும் என்று முடிவு செய்வதற்குத் தான் ஆதாரங்கள் உள்ளன.
ஏதோ ஒரு உறுப்பைக் கழுவவில்லை என்று சந்தேகம் வந்தால் இறுதியாக கழுவ வேண்டிய இடது காலாகத் தான் இருக்கும் என்று முடிவு எடுக்க எந்த வசனம் ஆதாரம்? எந்த ஹதீஸ் ஆதாரம்? இடது கால் கடைசியாக கழுவுவதால் அதைத் தான் கழுவ்வில்லை என்று முடிவு செய்ய எந்த லாஜிக்கும் இல்லை. கடைசியில் கழுவியது தான் ஒருவனுக்கு மற்றதை விட நன்றாக நினைவிலிருக்கும்.
ஒருவன் முதலில் செய்ய வேண்டிய காரியத்தையும் மறக்கலாம். நடுவில் செய்ய வேண்டிய காரியத்தையும் மறக்கலாம். கடைசியில் செய்யவேண்டிய காரியத்தையும் மறக்கலாம். இதுதான் யதார்த்தமானது.
உளூச் செய்யும் போது இடது காலைக் கழுவாது விட்டிருந்தால் சட்டென்று நினைவுக்கு வந்து விடும். மேலும் கழுவப்பட்ட காலுக்கும், கழுவப்படாத காலுக்கும் வித்தியாசம் இருக்கும். அதை வைத்து கால் கழுவப்பட்டதையும் கழுவப்படாததையும் கண்டுபிடிக்க முடியும்.
வலது கால் சுத்தமானதாகவும், இடது கால் அழுக்காகவும் இருந்தால் இடது கால் கழுவப்படவில்லை என்று கண்டுபிடிக்கலாம். ஏனெனில் ஒப்பிட்டுப் பார்க்க இரண்டு கால்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளன.
இரண்டு கால்களும் ஒரே மாதிரியாக சுத்தமானவையாக இருந்தாலும் இடது காலைத்தான் கழுவ்வில்லை என்று முடிவு செய்து அதைக் கழுவ வேண்டும்; அது நன்றாகக் கழுவப்பட்டிருந்தாலும் அது கழுவப்படவில்லை என்று கிறுக்குத் தனமாக நாம் கருதிக் கொள்ள வேண்டுமாம்.
இவர்கள் கூறுவது போல் ஏதோ ஓர் உறுப்பு கழுவப்படவில்லை என்று சந்தேகம் வருவதாகவே வைத்துக் கொள்வோம். எந்த உறுப்பு என்று நினைவுக்குக் கொண்டு வர முடியாவில்லை அனைத்து உறுப்புகளிலும் சந்தேகம் இருந்து கொண்டு உள்ளது. எனவே மீண்டும் ஒருமுறை முழுமையாக உளூச் செய்து கொள்ள வேண்டும் என்பதுதானே பொருத்தமாக இருக்கும்.
இவ்வாறு முடிவு செய்வதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.
1300 – وحدثنى محمد بن أحمد بن أبى خلف حدثنا موسى بن داود حدثنا سليمان بن بلال عن زيد بن أسلم عن عطاء بن يسار عن أبى سعيد الخدرى قال قال رسول الله -صلى الله عليه وسلم- « إذا شك أحدكم فى صلاته فلم يدر كم صلى ثلاثا أم أربعا فليطرح الشك وليبن على ما استيقن ثم يسجد سجدتين قبل أن يسلم فإن كان صلى خمسا شفعن له صلاته وإن كان صلى إتماما لأربع كانتا ترغيما للشيطان
ஒருவர் தொழுத ரக்அத்களின் எண்ணிக்கை மூன்றா, நான்கா என்ற சந்தேகம் வந்தால் சந்தேகத்தை (அதாவது நான்கு என்பதை) எறிந்து விட்டு உறுதியானதை (அதாவது மூன்று என்பதை) எடுத்துக் கொள்ளட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : முஸ்லிம்
இங்கே நான்காவதைத் தொழுதோமா இல்லையா என்று சந்தேகம் ஏற்படுகிறது. சந்தேகத்துக்குரியதைச் செய்யவில்லை என்று முடிவு செய்யுமாறு இந்த நபிமொழி வழிகாட்டுகிறது. நான்காவது ரக்அத் தொழுதோமா என்று சந்தேகம் வந்தால் அதைத் தொழவில்லை என்று தான் முடிவு செய்ய வேண்டும்.
இதே அடிப்படையில் ஒவ்வொரு உறுப்பும் கழுவப்பட்டதா இல்லையா என்று சந்தேகத்திற்குரியதாகி விடுவதால் எதையும் கழுவவில்லை என்ற முடிவுக்கு வந்து மீண்டும் உளூச் செய்வது தான் சரி. இது வலிமையான சந்தேகத்தின் போது கடைப்பிடிக்க வேண்டியதாகும்.
ஏதேனும் உறுப்பு கழுவப்படாமல் விடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலிமையில்லாததாக இருந்தால் அதைக் கண்டு கொள்ள வேண்டியதில்லை.
இவ்வாறு முடிவு செய்வதற்கு ஒரு நபிவழியை நாம் ஆதாரமாகக் கொள்ளலாம்.
137 – حدثنا علي، قال: حدثنا سفيان، قال: حدثنا الزهري، عن سعيد بن المسيب، ح وعن عباد بن تميم، عن عمه، أنه شكا إلى رسول الله صلى الله عليه وسلم الرجل الذي يخيل إليه أنه يجد الشيء في الصلاة؟ فقال: «لا ينفتل – أو لا ينصرف – حتى يسمع صوتا أو يجد ريحاயு صحيح البخاري
ஒருவர் தொழுகையில் இருக்கும் போது காற்றுப் பிரிந்தது போல் சந்தேகம் ஏற்பட்டால் நாற்றம் அல்லது சப்தம் கேட்காத வரை தொழுகையை முறிக்க வேண்டாம் என்பது நபிமொழி.
நூற்கள் :(புகாரி: 137), முஸ்லிம்
திட்டவட்டமில்லாத சந்தேகங்களுக்கு மதிப்பளிக்கத் தேவையில்லை என்பதை இந்த நபிமொழிகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஆக ஹதீஸ்களின் அடிப்படையில் இவ்வாறு முடிவு செய்வதை விடுத்து முட்டாள்தனமாக முடிவு செய்துள்ளனர்.
இரு விரல்களால் பல் துலக்குதல்
திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பற்றிய ஞானம் மத்ஹபு அறிஞர்களுக்கு அறவே இல்லை என்றாலும் பொது அறிவாவது இருக்க வேண்டும் அல்லவா? இவர்கள் இயற்றிய சட்டங்களைப் பார்த்தால் மன நோயாளிகளின் உளறலைப் போல் அமைந்துள்ளதை நாம் காணலாம். அது போல் அமைந்த ஒரு சட்டத்தைப் பாருங்கள்!
والأفضل أن يستاك بالسبابتين، يبدأ بالسبابة اليسرى ثم باليمنى، – الدر المختار
இடது ஆட்காட்டி விரல், வலது ஆட்காட்டி விரல் ஆகிய இரு ஆட்காட்டி விரல்களைக் கொண்டு பல்துலக்குவது சிறந்ததாகும். முதலில் இடதுகை ஆட்காட்டி விரலாலும், பின்னர் வலதுகை ஆட்காட்டி விரலாலும் பல் துலக்க வேண்டும்.
நூல் : துர்ருல் முக்தார்
பல் துலக்குதல் போன்ற காரியங்கள் வலது கையால் செய்ய வேண்டும் என்பது நபிவழியாகும்.
168 – حدثنا حفص بن عمر، قال: حدثنا شعبة، قال: أخبرني أشعث بن سليم، قال: سمعت أبي، عن مسروق، عن عائشة، قالت: كان النبي صلى الله عليه وسلم «يعجبه التيمن، في تنعله، وترجله، وطهوره، وفي شأنه كله – صحيح البخاري
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் செருப்பு அணிந்துகொள்ளும் போதும், தலைவாரிக் கொள்ளும் போதும், சுத்தம் செய்யும் போதும் தம் அனைத்துக் காரியங்களிலும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பி வந்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
மத்ஹபு உலமாக்களுக்கு இது போன்ற நபிமொழிகள் கூட தெரியவில்லை. நாகரீகமுள்ள எந்த மனிதனாவது இடது கை விரல்களை வாய்க்குள் நுழைப்பானா? வாய்க்குள் நுழைத்து பல்லைத் தேய்ப்பானா? இரு ஆட்காட்டி விரல்களால் ஒருவன் பல்துலக்கினால் அவனை கிறுக்கனாகத்தானே மக்கள் கருதுவார்கள்? உங்களைக் கிறுக்கர்களாக ஆக்கும் இந்த மத்ஹபுகள் உங்களுக்குத் தேவையா?
இந்த அறிவீனர்கள் வகுத்துத் தந்த சட்டங்களை நாகரீகமுள்ள மக்கள் பின்பற்றலாமா? சிந்தித்துப் பாருங்கள்.
தொழுது கொண்டே வியாபாரம்
தொழுகை என்பது அல்லாஹ்விடம் மனிதன் ஏற்படுத்திக் கொள்ளும் உறவாகும். தொழுகையை எந்த அளவுக்கு மத்ஹபுகள் கேலிக் கூத்தாக்குகின்றன என்று பாருங்கள்!
فلو باع في صلاته بالإشارة انعقد البيع ولا تبطل صلاته وبه يلغز ويقال لنا إنسان يبيع ويشتري في صلاته عامدا عالما ولا تبطل صلاته – إعانة الطالبين ج: 4 ص: 16
ஒருவர் தொழுது கொண்டு இருக்கும் போது சைகை மூலம் விற்பனைச் செய்தால் அந்த வியாபாரம் செல்லும். தொழுகை பாழாகாது. தொழும்போது அறிந்த நிலையில் வேண்டுமென்றே ஒருவன் விற்கிறான்; வாங்குகிறான். அவனது தொழுகை முறியாது என்று இதைத் தான் விடுகதையாகச் சொல்கின்றனர்.
நூல் : ஷாபி மத்ஹபின்
சட்ட நூலாகிய இஆனா
ஒருவன் தொழும் போது இன்னொருவன் வந்து உங்கள் வீட்டை எனக்கு விற்கிறீர்களா என்று கேட்கிறான். தொழுபவன் சைகையால் தலையை அசைத்து ஆம் என்கிறான். எவ்வளவு என்று அவன் கேட்கிறான். எட்டு விரலைக் காட்டி எட்டு ரூபாய் என்கிறான். இப்படிச் செய்தால் தொழுகை செல்லுமாம். வியாபாரமும் செல்லுமாம்.
அல்லாஹ்வின் அச்சம் கடுகளவு இருப்பவன் கூட இதை ஏற்பானா? மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் அல்லாஹ்வின் வணக்கத்தைப் பாழாக்கும் இந்தப் பாவிகள் மார்க்க அறிஞர்களா? உங்கள் மறுமை வாழ்க்கையைப் பாழாக்கும் மத்ஹபுகள் தேவைதானா? சிந்தித்துப் பாருங்கள்!