பழிவாங்காத பண்பாளர்

பயான் குறிப்புகள்: அறிவியல் உண்மைகள்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

நபிகளாரின் பரிசுத்தமான வாழ்க்கையைப் பார்த்து அன்றைய கால மக்கள் இஸ்லாத்தின் பக்கம் கவரப்பட்டார்கள். இன்றளவும் பலர், நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தும் கேட்டும் இஸ்லாத்தை நோக்கி ஈர்க்கப்பட்டு வருகிறார்கள். காரணம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நற்பண்புகளின் உறைவிடமாக திகழ்ந்தார்கள்; ஒழுக்க சீலராக விளங்கினார்கள்.

சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை, மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தூதரின் குணநலன்கள் இருந்தன. இது குறித்து குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் பல செய்திகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் ஒரு முக்கியமான செய்தியைப் இந்த உரையில் காண்போம். 

எவரையும் பழிவாங்காத இறைத்தூதர்
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ:
«مَا انْتَقَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِنَفْسِهِ فِي شَيْءٍ يُؤْتَى إِلَيْهِ حَتَّى يُنْتَهَكَ مِنْ حُرُمَاتِ اللَّهِ، فَيَنْتَقِمَ لِلَّهِ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்கிழைக்கப்பட்ட (கொடுமைகள், துன்பங்கள்) எதற்காகவும் தமக்கென ஒருபோதும் எவரையும் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ங்கள் சீர்குலைக்கப்பட்டு, (அதற்காக) அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று இருந்தால் தவிர!

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி),
நூல்: (புகாரி: 6853) , 6126, 3560

குடிமக்களுக்குப் பாதுகாப்பை, அமைதியை அளிக்கும் வகையில் ஆட்சியாளர் எனும் அடிப்படையில் அல்லாஹ் அருளிய குற்றவியல் சட்டங்களை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் செயல்படுத்தினார்கள்; நீதியை நிலைநாட்டினார்கள். அதேசமயம், தமது தனிப்பட்ட விவகாரத்திற்காக எவரையும் எப்போதும் பழிவாங்கியதே இல்லை. தமக்குப் பிறரால் பெரும் துன்பங்கள் நேர்ந்த போதிலும் பெருந்தன்மையாக நடந்து கொண்டார்கள்.

இன்று மக்களிடம் அரிதிலும் அரிதாகி வரும் பண்புகளுள் இதுவும் ஒன்று. அற்பத்திலும் அற்பமான விஷயங்களைக் கூட மனதில் வைத்துக் கொண்டு பழிவாங்கத் துடிக்கிறார்கள். அதற்கான தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதனால் மார்க்கம் தடுத்த பல்வேறு பண்புகள் அவர்களிடம் நுழைந்து விடுகிறது. இத்தகைய நபர்களுக்கு நபிகளாரிடம் பாடம் இருக்கிறது.

வரம்பு மீறிய தாயிஃப் நகர மக்களை மன்னித்து விட்ட  நபிகளார்
 أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَدَّثَتْهُ
أَنَّهَا قَالَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: هَلْ أَتَى عَلَيْكَ يَوْمٌ كَانَ أَشَدَّ مِنْ يَوْمِ أُحُدٍ، قَالَ: ” لَقَدْ لَقِيتُ مِنْ قَوْمِكِ مَا لَقِيتُ، وَكَانَ أَشَدَّ مَا لَقِيتُ مِنْهُمْ يَوْمَ العَقَبَةِ، إِذْ عَرَضْتُ نَفْسِي عَلَى ابْنِ عَبْدِ يَالِيلَ بْنِ عَبْدِ كُلاَلٍ، فَلَمْ يُجِبْنِي إِلَى مَا أَرَدْتُ، فَانْطَلَقْتُ وَأَنَا مَهْمُومٌ عَلَى وَجْهِي، فَلَمْ أَسْتَفِقْ إِلَّا وَأَنَا بِقَرْنِ الثَّعَالِبِ فَرَفَعْتُ رَأْسِي، فَإِذَا أَنَا بِسَحَابَةٍ قَدْ أَظَلَّتْنِي، فَنَظَرْتُ فَإِذَا فِيهَا جِبْرِيلُ، فَنَادَانِي فَقَالَ: إِنَّ اللَّهَ قَدْ سَمِعَ قَوْلَ قَوْمِكَ لَكَ، وَمَا رَدُّوا عَلَيْكَ، وَقَدْ بَعَثَ إِلَيْكَ مَلَكَ الجِبَالِ لِتَأْمُرَهُ بِمَا شِئْتَ فِيهِمْ، فَنَادَانِي مَلَكُ الجِبَالِ فَسَلَّمَ عَلَيَّ، ثُمَّ قَالَ: يَا مُحَمَّدُ، فَقَالَ، ذَلِكَ فِيمَا شِئْتَ، إِنْ شِئْتَ أَنْ أُطْبِقَ عَلَيْهِمُ الأَخْشَبَيْنِ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: بَلْ أَرْجُو أَنْ يُخْرِجَ اللَّهُ مِنْ أَصْلاَبِهِمْ مَنْ يَعْبُدُ اللَّهَ وَحْدَهُ، لاَ يُشْرِكُ بِهِ شَيْئًا

(ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், “(தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் காலகட்டத்தை விடக் கொடுமையான காலகட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா?’’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்துவிட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது “அகபா (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பமேயாகும்.

ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். “கர்னுஸ் ஸஆலிப்’ என்னுமிடத்தை நான் அடையும்வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை.

அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, “உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்’’ என்று கூறினார்கள்.

உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு சலாம் சொல்லி, பிறகு, “முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலுமுள்ள) இந்த இரு மலைகளையும் அவர்கள் மீது நான் புரட்டிப்போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)’’  என்று கூறினார்.

உடனே, “(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)’’ என்று சொன்னேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: (புகாரி: 3231) 

சத்தியத்தைச் சொன்ன நபியிடம் தாயிஃப் நகர மக்கள் வரம்பு மீறினார்கள். கடுமையான துன்பங்களைக் கட்டவிழ்த்து விட்டார்கள். தூதரையே இழிவுபடுத்திய குற்றத்திற்காக அவர்களைத் தண்டிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் நபிகளார் மறுத்து விடுகிறார்கள்.

இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது. நபியை நேசிப்பதாகச் சொல்லும் பித்அத்வாதிகள், தங்களிடமுள்ள நபிவழிக்கு முரணான காரியங்களைப் பற்றி எவரேனும் பேசினால் கொதிக்கிறார்கள். தங்களிடம் ஏமாறாத வண்ணம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தவ்ஹீத் சகோதரர்களுக்கு எதிராகப் பிரச்சனைகளைக் கிளப்பி விடுகிறார்கள். இனியாவது இவர்கள் இத்தகைய பழிதீர்க்கும் குணத்தை விட்டொழித்து, மார்க்கப்படி தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

 

தம் மீது ஆவேசம் கொண்ட நபருக்கு

உரிமை வழங்கிய பண்பாளர்

 

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ رَجُلًا تَقَاضَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَغْلَظَ لَهُ فَهَمَّ بِهِ أَصْحَابُهُ، فَقَالَ: «دَعُوهُ، فَإِنَّ لِصَاحِبِ الحَقِّ مَقَالًا، وَاشْتَرُوا لَهُ بَعِيرًا فَأَعْطُوهُ إِيَّاهُ» وَقَالُوا: لاَ نَجِدُ إِلَّا أَفْضَلَ مِنْ سِنِّهِ، قَالَ: «اشْتَرُوهُ، فَأَعْطُوهُ إِيَّاهُ، فَإِنَّ خَيْرَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً»

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். ஆகவே, நபித்தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள்.  அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, “(அவரைத் தண்டிக்க வேண்டாம்;) விட்டு விடுங்கள். ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகப் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடமே கொடுத்து விடுங்கள்’’  என்று கூறினார்கள்.

நபித்தோழர்கள், “அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம் தான் எங்களிடம் இருக்கின்றது’’ என்று கூறினார்கள்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: (புகாரி: 2390) 

மற்றவர் முன் தம் கண்ணியத்தைப் பாழ்படுத்தும் வகையில் கடுமையாக பேசிய நபரை நபிகளார் மன்னித்தார்கள். தம்மீது நேசம் கொண்ட நபித்தோழர்கள் ஆவேசம் அடைந்த நேரத்தில், அவர்களை அமைதிப்படுத்தினார்கள். இதுபோன்று இன்னொரு சந்தர்ப்பத்தில், மற்றவர் முன்னிலையில் தமது நேர்மையை சந்தேகிக்கும் வகையில் முறைதவறி பேசிய ஆளையும் நபிகளார் தண்டிக்காது விட்டார்கள்.

 

முறைதவறி பேசியவரை முறையோடு

அனுகிய மாநபி

 

عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
بَعَثَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ، إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذُهَيْبَةٍ فَقَسَمَهَا بَيْنَ الأَرْبَعَةِ الأَقْرَعِ بْنِ حَابِسٍ الحَنْظَلِيِّ، ثُمَّ المُجَاشِعِيِّ، وَعُيَيْنَةَ بْنِ بَدْرٍ الفَزَارِيِّ، وَزَيْدٍ الطَّائِيِّ، ثُمَّ أَحَدِ بَنِي نَبْهَانَ، وَعَلْقَمَةَ بْنِ عُلاَثَةَ العَامِرِيِّ، ثُمَّ أَحَدِ بَنِي كِلاَبٍ، فَغَضِبَتْ قُرَيْشٌ، وَالأَنْصَارُ، قَالُوا: يُعْطِي صَنَادِيدَ أَهْلِ نَجْدٍ وَيَدَعُنَا، قَالَ: «إِنَّمَا أَتَأَلَّفُهُمْ». فَأَقْبَلَ رَجُلٌ غَائِرُ العَيْنَيْنِ، مُشْرِفُ الوَجْنَتَيْنِ، نَاتِئُ الجَبِينِ، كَثُّ اللِّحْيَةِ مَحْلُوقٌ، فَقَالَ: اتَّقِ اللَّهَ يَا مُحَمَّدُ، فَقَالَ: «مَنْ يُطِعِ اللَّهَ إِذَا عَصَيْتُ؟ أَيَأْمَنُنِي اللَّهُ عَلَى أَهْلِ الأَرْضِ فَلاَ تَأْمَنُونِي» فَسَأَلَهُ رَجُلٌ قَتْلَهُ، – أَحْسِبُهُ خَالِدَ بْنَ الوَلِيدِ – فَمَنَعَهُ، فَلَمَّا وَلَّى قَالَ: ” إِنَّ مِنْ ضِئْضِئِ هَذَا، أَوْ: فِي عَقِبِ هَذَا قَوْمًا يَقْرَءُونَ القُرْآنَ لاَ يُجَاوِزُ حَنَاجِرَهُمْ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ مُرُوقَ السَّهْمِ مِنَ الرَّمِيَّةِ، يَقْتُلُونَ أَهْلَ الإِسْلاَمِ وَيَدَعُونَ أَهْلَ الأَوْثَانِ، لَئِنْ أَنَا أَدْرَكْتُهُمْ لَأَقْتُلَنَّهُمْ قَتْلَ عَادٍ

அலீ (ரலி) அவர்கள் (யமனிலிருந்து)  நபி (ஸல்) அவர்களிடம் சிறிய தங்கக் கட்டி ஒன்றை அனுப்பி வைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் அக்ரஉ பின் ஹாபிஸ் அல்ஹன்ழலீ அல்முஜாஷியீ (ரலி), உயைனா பின் பத்ர் அல் ஃபஸாரீ (ரலி), பனூ நப்ஹான் குலத்தவரில் ஒருவரான ஸைத் அத் தாயீ (ரலி) மற்றும் பனூ கிலாப் குலத்தாரில் ஒருவரான அல்கமா பின் உலாஸா அல் ஆமிரி (ரலி) ஆகிய நால்வரிடையே பங்கிட்டு விட்டார்கள்.

அதனால் குறைஷிகளும் அன்சாரிகளும் கோபமடைந்து, “நஜ்து வாசிகளின் தலைவர்களுக்குக் கொடுக்கின்றார்; நம்மை விட்டு விடுகின்றாரே’’ என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவர்கள் (இப்போது தான் இஸ்லாத்தை தழுவியிருப்பதால்) அவர்களுடைய உள்ளங்களை (முழுமையாக) இணக்கமாக்குவதற்காக (அவர்களுடன் நேசம் பாராட்டும் விதத்தில்) தான் கொடுத்தேன்’’ என்று கூறினார்கள்.

அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் தடித்திருந்த, நெற்றியோரங்கள் உயர்ந்திருந்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த மனிதர் ஒருவர் முன் வந்து, “முஹம்மதே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்’’ என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் “நானே (அல்லாஹ்விற்கு) மாறு செய்தால் வேறெவர்தான் அவனுக்குக் கீழ்ப்படிவார்? பூமியில் வசிப்பவர்கள் விஷயத்தில் அல்லாஹ் என் மீது நம்பிக்கை வைத்திருக்க, நீங்கள் என் மீது நம்பிக்கை வைக்க மாட்டீர்களா?’’ என்று கேட்டார்கள்.

அப்போது வேறொரு மனிதர் இப்படி (குறை) சொன்னவரைக் கொல்வதற்கு அனுமதி கேட்டார்…. அனுமதி கேட்ட அவர் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தாம் என்று நினைக்கின்றேன்- அவரை நபி (ஸல்) அவர்கள் (இதைச் சொன்னவரைக் கொல்ல வேண்டாமென்று) தடுத்து விட்டார்கள். (குறை சொன்ன) அந்த ஆள் திரும்பிச் சென்ற போது நபி (ஸல்) அவர்கள், “இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து…. அல்லது இவரின் பின்னே – ஒரு சமுதாயத்தினர் தோன்றுவர்.

அவர்கள் எத்தகையவர்களாயிருப்பார்கள் என்றால், அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக் குழிகளை தாண்டிச் செல்லாது. அவர்கள்  வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிருந்து (அதன் மீது எய்தப்பட்ட) அம்பு வெளியேறி விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள்;  இஸ்லாமியர்களைக் கொல்வார்கள்; சிலைவணக்கம் புரிபவர்களை விட்டுவிடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் “ஆத்’ கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போல அவர்களை நான் நிச்சயம் அழித்து விடுவேன்.’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி),
நூல்: (புகாரி: 3344) 

இவ்வாறு பிறரால் தொல்லைகள், இடையூறுகள் வரும் வேளையில், தம்மிடம் உண்மையும் உரிமையும் இருந்த போதிலும் நபியவர்கள் பொறுமையாக இருந்தார்கள். ஆனால், இன்று இருக்கும் மக்கள் வித்தியாசமாக இருக்கிறார்கள்.

சிலர் தங்கள் வீட்டு வரதட்சனை திருமணத்திற்கு வராத உறவினர்களைப் பகைத்துப் பழிதூற்றுகிறார்கள். இதுபோன்ற நபிவழிக்கு முரணான திருமணத்தை ஜமாஅத் நடத்தி வைக்காவிட்டால் நிர்வாகத்திற்கும் நிர்வாகிக்கும் எதிராக அடுக்கடுக்கான அவதூறுகளை பரப்புகிறார்கள்.

இந்தக் காலத்தில் எவரையாவது பிடிக்காமல் பழிவாங்க முடிவெடுத்து விட்டால், அவர் செய்த நற்செயல்கள், அறப்பணிகள் என்று எதுவாயினும் அவற்றைத் தடுக்க முனைகிறார்கள்; முட்டுக்கட்டை போடுகிறார்கள். இவர்கள் நபியைப் பார்த்து படிப்பனை பெற்றுக் கொள்ள முனவர வேண்டும்.

இந்த மனம் யாருக்காவது வருமா?

இஸ்லாத்திற்கு எதிராக மட்டுமல்ல, தமது மனைவி மீது அவதூறு பரப்பி குடும்பத்திற்குள் குழப்பம் விளைவிக்க நினைத்த முனாஃபிகுகளின் தலைவனுக்கும் நபிகளார் நலம் நாடினார்கள். அவன் இறந்தபோது அவனுக்காக ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். இந்த மனம் யாருக்காவது வருமா? (இச்சம்பவதை அடுத்து இத்தகைய ஆட்களுக்கு தொழுவிக்கக் கூடாது என்று சட்டம் இறங்கியது.)

 عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ أُبَيٍّ لَمَّا تُوُفِّيَ، جَاءَ ابْنُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَعْطِنِي قَمِيصَكَ أُكَفِّنْهُ فِيهِ، وَصَلِّ عَلَيْهِ، وَاسْتَغْفِرْ لَهُ، فَأَعْطَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَمِيصَهُ، فَقَالَ: «آذِنِّي أُصَلِّي عَلَيْهِ»، فَآذَنَهُ، فَلَمَّا أَرَادَ أَنْ يُصَلِّيَ عَلَيْهِ جَذَبَهُ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: أَلَيْسَ اللَّهُ نَهَاكَ أَنْ تُصَلِّيَ عَلَى المُنَافِقِينَ؟

فَقَالَ:  أَنَا بَيْنَ خِيَرَتَيْنِ، قَالَ: {اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لاَ تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً، فَلَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ} [التوبة: 80]  فَصَلَّى عَلَيْهِ، فَنَزَلَتْ: {وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا، وَلاَ تَقُمْ عَلَى قَبْرِهِ} [التوبة: 84]

(நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை இறந்துவிட்டான். அப்போது அவனது (முஸ்லிமான) மகன், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் சட்டையைத் தாருங்கள்; அவரை அதில் பிரேத உடை (கஃபன்) அணிவிக்க வேண்டும்; மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது, அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்க வேண்டும் என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, “(ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் ஜனாஸாத் தொழுவிப்பேன்’’ என்றார்கள்.

பிறகு அறிவிக்கப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடியபோது, உமர் (ரலி), நபி (ஸல்) அவர்களை இழுத்து, நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக் கூடாது என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா?’’ எனக் கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(ஜனாஸாத் தொழுவது, தொழாமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது’’ எனக் கூறிவிட்டு, “நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமமே! நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கப் போவதே இல்லை’’ என்ற (அல்குர்ஆன்: 9:80) ஆவது இறைவசனத்தை ஓதிக்காட்டிவிட்டு ஜனாஸாத் தொழுதார்கள். உடனே ““அ(ந்நய)வ(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் (ஜனாஸாத்) தொழவேண்டாம்‘’ எனும் (அல்குர்ஆன்: 9:84) ஆவது இறைவசனம் அருளப்பெற்றது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: (புகாரி: 1269) 

தண்டிக்காமல் மன்னித்து விடப்பட்ட கிராமவாசி

இன்னும் சொல்வதாயின், சிலர் நபிகளாரின் உயிருக்கே ஊறு செய்ய நினைத்தார்கள்.  அப்போது தூதர் ஒரு கட்டளை இட்டிருந்தால் போதும் அவர்களின் கதை முடிக்கப்பட்டு இருக்கும். ஆனால், அல்லாஹ்வின் தூதரோ அவர்களைத் தண்டிக்காமல் மன்னித்து விட்டார்கள்.

أَنَّهُ غَزَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَلَ نَجْدٍ، فَلَمَّا قَفَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَفَلَ مَعَهُ، فَأَدْرَكَتْهُمُ القَائِلَةُ فِي وَادٍ كَثِيرِ العِضَاهِ، فَنَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَفَرَّقَ النَّاسُ يَسْتَظِلُّونَ بِالشَّجَرِ…

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்து நாட்டை நோக்கி ஒரு புனிதப் போருக்காகச் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பிய போது அவர்களுடன் நானும் திரும்பினேன். அப்போது முள்மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் நாங்கள் வந்து கொண்டிருந்தபோது மதிய ஓய்வு கொள்ளும் நேரம் வந்துவிட்டது. உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மரங்களின் நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய் விட்டனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு (கருவேல) மரத்தின் கீழே தங்கினார்கள். தமது வாளை மரத்தில் மாட்டித் தொங்கவிட்டார்கள். நாங்கள் சற்று நேரம் உறங்கினோம். அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். (நாங்கள் கண் விழித்துப் பார்த்தால்) அப்போது அவர்களுக்கு அருகே ஒரு கிராமவாசி இருந்தார். நபி (ஸல்) அவர்கள், “இவர் நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது (நான் மரத்தில் தொங்கவிட்டிருந்த எனது) வாளை எனக்கெதிராக உருவிக் கொண்டார்.

நான் கண் விழித்துப் பார்த்தபோது இவரது கையில் உறையிலிருந்து உருவிய (எனது) வாள் இருந்தது. இவர், “என்னிடமிருந்து உன்னை யார் காப்பாற்றுவார்?’ என்று கேட்டார். நான் “அல்லாஹ்’ என்று (மூன்றுமுறை) கூறினேன்’’ என்று சொன்னார்கள். அந்தக் கிராமவாசி (அங்கே) அமர்ந்திருந்தும்கூட, அவரை நபியவர்கள் தண்டிக்கவில்லை.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: (புகாரி: 2910) , (2913) (4137) (4139)

நஞ்சூட்டியவருக்கும் நன்மை செய்த மாமனிதர்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ يَهُودِيَّةً أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ مَسْمُومَةٍ، فَأَكَلَ مِنْهَا، فَجِيءَ بِهَا فَقِيلَ: أَلاَ نَقْتُلُهَا، قَالَ: «لاَ»، فَمَا زِلْتُ أَعْرِفُهَا فِي لَهَوَاتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். “அவளைக் கொன்று விடுவோமா?’’ என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், “வேண்டாம்‘’ என்று கூறிவிட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: (புகாரி: 2617) 

இவ்வாறு, நபியவர்கள் பழிவாங்காத பண்பாளராக இருந்தார்கள் என்பதற்குச் சான்றாக பல சம்பவங்கள் உள்ளன. இப்பண்பு சத்தியத்தை எதிர்க்கும் மக்களைக் கூட அதற்குரிய ஆதரவாளர்களாக, நேசர்களாக, பாதுகாவலர்களாக ஆக்கியது. ஆனால், இன்று இந்தக் குணம் இல்லாமல் போனதின் விளைவாக சமூகத்தில் எண்ணற்ற விறிசல்கள் ஏற்படுகின்றன.

இன்றெல்லாம் தம்மீது குற்றத்தை வைத்துக் கொண்டு அதற்கு ஒத்துபோக, துணைபுரிய மறுப்பவர்களுக்கு துன்பம் தருவது வாடிக்கையாகி விட்டது. நினைத்த நபரைப் பழிவாங்க முடியாத பட்சத்தில் அவருடன் நெருங்கிப் பழகுபவர்களுக்கு துன்பம் இழைக்கும் கொடுமையும் நடக்கிறது. இதன் உச்சக்கட்டமாக, தங்களது குரோத சிந்தனையை குழந்தைகளிடமும் விதைத்து தலைமுறை தலைமுறையாக பழிவாங்கும் படலமும் தொடர்கிறது.

ஊழியர்கள், உறவினர்கள், நண்பர்கள், தெருவாசிகள், குடும்ப உறுப்பினர்கள் என்று பலரும் கலந்து இருக்கும் இடங்களில் அவர்களுக்கு மத்தியில் வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு பழிவாங்கும் குணம் முக்கிய காரணமாக இருப்பதைப் பார்க்கிறோம்.

ஆகவே நம்பிக்கை கொண்ட மக்கள் இத்தககைய மோசமான குணத்தில் விழுந்துவிடாமல் தங்களைத் தற்காத்துக் கொள்வது அவசியம். தங்களது வாழ்வில் வணக்க வழிபாடுகள் உட்பட எல்லா விசயங்களிலும் நபிகளாரை முன்மாதிரியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும், நபிகளாரின் பரிசுத்தமான வாழ்வை, நற்குணங்களை மக்களிடம் சென்று சேர்ப்பதுடன், அவ்வாறு அழகிய முறையில் வாழும்போது அதுவே மிகப்பெரும் அழைப்புப் பணியாக அமையும். இந்த நல்ல புரிதலை அனைவருக்கும் தந்து அல்லாஹ் அருள்புரிவானாக! ஈருலகிலும் வெற்றியை அளிப்பானாக!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.