மனைவி, மகன், தாய், சகோதரன் இருந்தால்

முக்கிய குறிப்புகள்: வாரிசுரிமைச் சட்டங்கள்

தாய், தந்தைக்கு தனித்தனியாக  6ல்1

இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தரப்பட வேண்டும்.

அவருக்கு(இறந்தவருக்கு)ச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. அல்குர்ஆன் (4: 11)

 

மனைவிக்கு 8ல்1

இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் மனைவிமார்களுக்கு எட்டில் ஒரு பாகம் தரப்பட வேண்டும்.

உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் உங்கள் மனைவியர்களுக்கு உண்டு. அல்குர்ஆன் (4: 12)

 

மகனுக்கு மீதம் உள்ளது

மீதமுள்ளதை மகன் எடுத்துக் கொள்வார். ஒன்றிற்கு மேற்பட்ட மகன்கள் இருந்தால், அவர்களுக்கிடையே அது பங்கிடப்படும்.

 

சகோதரனுக்கு எதுவும் இல்லை

இறந்தவருக்கு மகனோ, தந்தையோ இருந்தால், இறந்தவரின் சகோதரருக்கு எதுவும் கிடைக்காது. 

 

அதாவது இப்படி

மனைவிக்கு:      3/24    (1/8)
தாய்க்கு:              4/24    (1/6)
மகனுக்கு:           17/24   (மீதமுள்ளது)
சகோதரனுக்கு: 0/24   

 

ஆதாரங்கள்.

உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்கு போன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்; பெண்மக்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு, இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால், ஒரே பெண்ணாக இருந்தால் அவளுக்கு(ச் சொத்தில்) பாதி கிடைக்கும். இறந்தவருக்குப் பிள்ளை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவருடைய) பெற்றோர் ஒவ்வொரு வருக்கும் உண்டு.

ஆனால், இறந்தவருக்குப் பிள்ளை இல்லாதிருந்து பெற்றோர் மட்டுமே வாரிசாக இருந்தால் அவருடைய தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு) உரிய தாகும். அப்போது இறந்தவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவருடைய தாய்க்கு ஆறில் ஒரு பாகம்தான் (மீதி தந்தைக்குச்) சேரும். (இவ்வாறு பிரித்துக் கொடுப்பது) அவர் செய்துள்ள மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்.

உங்களுடைய பெற்றோர் மற்றும் மக்கள் ஆகியோரில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமானவர்கள் என்று நீங்கள் அறியமாட்டீர்கள்; (ஆகையால்,) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளை(யான இந்தப் பாகப் பிரிவினைச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

மேலும், உங்கள் மனைவியர் விட்டுச் சென்ற(சொத்)தில் அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு; அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து உங்களுக்குக் கால் பாகம்தான். (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்.

தவிர உங்களுக்குப் பிள்ளை இல்லாதி ருப்பின், நீங்கள் விட்டுச் சென்ற(சொத்)தில் நான்கில் ஒரு பாகம் உங்கள் மனைவியருக்குக் கிடைக்கும். உங்களுக்குப் பிள்ளை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்ற(சொத்)தில் எட்டில் ஒரு பாகம் உங்கள் மனைவியருக்குக் கிடைக்கும். (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாசனத்தையும் கடனையும் நிறை வேற்றிய பின்னரேதான்.

(தந்தை, பாட்டன் போன்ற மூல வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற கிளை வாரிசுகளோ) யாரும் இல்லாத ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ -இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால்-அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு; ஆனால், இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தைச் சமமாகப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். (இதுவும்) அவர்களின் மரண சாசனமும் கடனும் நிறைவேற்றப்பட்ட பின்னர்தான்; ஆயினும் (மரண சாசனத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது; (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும். அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையவனாகவும் இருக்கின்றான் (4:11, 12)