சக்தி பெறாதவர் மீது ஹஜ் கடமையா?
சக்தி பெறாதவர் மீது ஹஜ் கடமையா?
ஹஜ் செய்வதைப் பற்றி, அல்லாஹ் கூறும் போது,
“அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை.
(திருக்கு(அல்குர்ஆன்: 3:97) ➚.)
வயது முதிர்ந்து. உடல் பலவீனமடைந்தவருக்கு ஹஜ் கடமையா என்பதை நுணுக்கமாக அறிந்து கொள்ள வேண்டும்.
ஒருவர் இளமையில் பொருள் வசதி இல்லாமல் இருக்கிறார். தள்ளாத வயதில் அவருக்குப் பொருள் வசதி கிடைக்கிறது என்றால் இவருக்கு ஹஜ் கடமையாகாது. காரணம் உடல் வலிமை அவருக்கு இல்லை.
ஒருவர் இளமையில் பொருள் வசதியுடன் இருக்கிறார். உடல் வலிமையுடனும் இருக்கிறார். இவர் தள்ளாத வயது வரை ஹஜ் செய்யவில்லை என்றால் இவர் மீதான ஹஜ் கடமை நீங்காது. தற்போது அவருக்கு உடல் வலு இல்லாவிட்டாலும் உடல் வலுவும், பொருள் வசதியும் இருக்கும் போது அவர் ஹஜ் கடமையை நிறைவேற்றாத குற்றம் அவர் மீது உண்டு.
அவரது பிள்ளைகள் அவருக்காக ஹஜ்ஜை நிறைவேற்றினால் அவரது கடமை நீங்கி விடும். அவருக்குப் பிள்ளைகள் இல்லாவிட்டால் அல்லது அவருக்காக ஹஜ் செய்ய பிள்ளைகளுக்கு வசதி இல்லாவிட்டால் அல்லது வசதி இருந்தும் தந்தைக்காக ஹஜ் செய்யாவிட்டால் ஹஜ் செய்யாத குற்றம் அவர் மீது இருக்கும் ஆனாலும் இந்தக் குற்றத்துக்காக அல்லாஹ்விடம் அவர் மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிப்பவன்.
கீழ்க்காணும் ஆதாரங்களைப் பார்க்கவும்
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
ஃபள்ல் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்தபோது கஸ்அம்’ எனும் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபள்ல் அப்பெண்ணைப் பார்க்க, அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்) ஃபள்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் எனது வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா?’ எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஆம்!’ என்றார்கள். இது கடைசி ஹஜ்ஜின்போது நிகழ்ந்தது.
புரைதா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, “நான் என் தாயாருக்கு ஓர் அடிமைப் பெண்ணைத் தானமாக வழங்கியிருந்தேன். என் தாயார் இறந்துவிட்டார். (இப்போது அந்த அடிமைப் பெண் எனக்கே கிடைத்துவிட்டார். இந்நிலையில் தானத்திற்குரிய நற்பலன் எனக்கு உண்டா?)” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(தானம் செய்ததற்குரிய) நற்பலன் உனக்கு உறுதியாகிவிட்டது. வாரிசுரிமை, அவ்வடிமைப் பெண்ணை உனக்கே மீட்டுத் தந்துவிட்டது” என்று சொன்னார்கள். “என் தாயார் மீது ஒரு மாத நோன்பு (கடமையாகி) இருந்தது.
அவர் சார்பாக நான் நோன்பு நோற்கலாமா?” என்று அப்பெண்மணி கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் சார்பாக நீ நோன்பு நோற்றுக் கொள்” என்றார்கள். “என் தாயார் (இதுவரை) அறவே ஹஜ் செய்யவில்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?” என்று அப்பெண்மணி கேட்டதற்கு, “அவருக்காக நீ ஹஜ் செய்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : முஸ்லிம்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “(அல்லாஹ்வின் தூதரே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறை வேற்றாமல்) இறந்துவிட்டார்” என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய்?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (நான்தான் நிறைவேற்றுவேன்)” என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்” என்றார்கள்.
தந்தைக்காக பிள்ளைகள் ஹஜ் செய்வதை கடனுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்பிட்டுக் காட்டுகிறார்கள். எனவே பெற்றோருக்கு ஹஜ் கடமையாக இல்லாவிட்டால் அவர்களுக்காக பிள்ளைகள் ஹஜ் செய்ய எந்த ஆதாரமும் இல்லை.