அகீதா விஷயங்கள் ஆய்வுக்கு அப்பாற்பட்டதா?

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

அகீதா விஷயங்கள்  ஆய்வுக்கு அப்பாற்பட்டதா?

உலகில் உள்ள பல மதங்களில் கொள்கையை தெளிவாகக் கூறுவதில் இஸ்லாம் தனித்து விளங்குகிறது. தெளிவாகக் கூறும் கொள்கையை ஆய்வு செய்யும் உரிமையை வழங்குவதன் மூலம் மேலும் தனித்து விளங்குகிறது.

இஸ்லாத்தின் அடிப்படையாக விளங்குகின்ற கடவுள் கொள்கையைக் கூறுவதில் உள்ள தெளிவு, ஆய்வு செய்பவர்களை உடனடியாக ஈர்க்கக் கூடியதாக உள்ளது. ஏனெனில் எந்த ஒரு பொருளையும் ஆய்வு செய்து அறிவதே மனிதர்களுடைய இயல்பு.

கடைகளில் சென்று சிறு பொருட்களை வாங்கினாலும் கூட அதனுடைய தரம் என்ன? எடை என்ன? நிறம் என்ன? விலையை எப்படித் தருவது என்பது போன்ற பல விஷயங்களை ஆய்வு செய்துதான் அவற்றைப் பெற்றுக் கொள்கின்றனர். இதற்கு மாற்றமாக ஆய்வின்றி எந்தச் செயலைச் செய்தாலும் அதில் ஏற்படும் தோல்வியை நம்மால் உணர முடிகிறது.

இதுபோன்ற உலக நடைமுறைகளுக்கே ஆய்வு தேவைப்படும்போது இஸ்லாத்தின் கொள்கை விஷயத்திலும் மனிதர்களுக்கு அந்த உரிமையை வழங்கினால் தான் இக்கொள்கையை நன்கு உணர்ந்து ஏற்றுக் கொள்வார்கள் என்பதால் இதில் ஆய்வு செய்யும் உரிமையை மனிதர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான்.

ஏகத்துவக் கொள்கையை ஆய்வும் செய்யும் உரிமை!

இறைத்தன்மை பற்றி ஆய்வு செய்த இப்ராஹீம் நபி

ஏகத்துவக் கொள்கையை உரக்கச் சொன்ன நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்டதைப் பற்றி அல்லாஹ் கூறும்போது அவர்கள் எந்தளவிற்கு ஆய்வு செய்து ஏற்றார்கள் என்பதையும் கூறுகிறான்.

وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ
فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ
فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَئِنْ لَمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ
فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ فَلَمَّا أَفَلَتْ قَالَ يَاقَوْمِ إِنِّي بَرِيءٌ مِمَّا تُشْرِكُونَ
إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ

இப்ராஹீம் உறுதியான நம்பிக்கையாளராக ஆவதற்கு அவருக்கு வானங்கள் மற்றும் பூமியின் சான்றுகளை இவ்வாறே காட்டினோம்.

இரவு அவரை மூடிக்கொண்டபோது ஒரு நட்சத்தித்தைக் கண்டு ‘‘இதுவே என் இறைவன்’’ எனக் கூறினார். அது மறைந்த போது ‘‘மறைபவற்றை நான் விரும்பமாட்டேன்’’ என்றார்.

சந்திரன் உதிப்பதை அவர் கண்டபோது “இதுவே என் இறைவன்’’ என்றார். அது மறைந்தபோது “என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டாவிட்டால் வழிகெட்ட கூட்டத்தில் ஒருவனாக ஆகிவிடுவேன்’’ என்றார்.

சூரியன் உதிப்பதை அவர் கண்டபோது “இதுவே என் இறைவன்! இதுவே மிகப்பெரியது’’ என்றார். அது மறைந்தபோது “என் சமுதாயமே! நீங்கள் இணைகற்பிப்பவற்றை விட்டும் நான் விலகிக்கொண்டவன்’’ எனக்கூறினார்.

‘‘வானங்களையும், பூமியையும் படைத்தவனை நோக்கி உண்மை வழியில் நின்றவனாக என் முகத்தை திருப்பிவிட்டேன். நான் இணைகற்பித்தவனல்லன்’’ (எனவும் கூறினார்).

(அல்குர்ஆன்: 6:75-79)

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் உறுதியான நம்பிக்கையாளராக ஆவதற்காக சான்றுகளை அல்லாஹ் எடுத்துக்காட்டிய போது அவற்றை  ஆய்வு செய்கிறார்கள். முதலில் நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள். அது மறைந்த பிறகு சந்திரனைப் பார்க்கிறார்கள். அதுவும் மறைந்த பிறகு சூரியனைப் பார்க்கிறார்கள். அதுவும் மறைந்த பிறகு “நான் இணை கற்பித்தவனில்லை. அல்லாஹ்வை மட்டுமே வணங்குபவன்’’என்று கூறுகிறார்கள்.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற ஏகத்துவ வாசகத்தைப் பிரதிபலிப்பதில் அழகிய எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த இப்ராஹீம் (அலை) அவர்கள் ஒவ்வொன்றையும் நுணுக்கமாக ஆய்வு செய்யும்போது அதை அல்லாஹ் அங்கீகரிக்கிறான்.

கொள்கையை ஆய்வு செய்யாமல் அவரிடம் விவாதித்த மக்கள் தான் தவறான கொள்கையில் இருப்பதாகவும் அல்லாஹ் கூறுகிறான். எனவே ஆய்வு செய்வதற்கு அபரிமிதமான உரிமைகளையும், வழிகளையும் மார்க்கம் வழங்கியிருப்பதை யாராலும் மறுக்கமுடியாது.

தூதுத்துவக் கொள்கையை ஆய்வு செய்யும் உரிமை!

ஏகத்துவக் கொள்கையை மட்டுமின்றி தூதுத்துவக் கொள்கையையும் ஆய்வு செய்யும் உரிமையினை இஸ்லாம் வழங்குகிறது. ஏகத்துவப் பிரச்சாரம் செய்யும்போது முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைநிராகரிப்பாளர்கள் பல்வேறு வகைகளில் விமர்சனம் செய்தனர்.

அதற்குப் பதிலளிக்கும் போது, ‘இத்தூதரை நன்றாக ஆய்வு செய்யுங்கள்’ என இறைவன் கூறுகிறான். ஏனெனில் அவ்வாறு ஆய்வு செய்யும்போது நபி (ஸல்) அவர்களிடம் தவறு கண்டுவிட்டால் தூதுத்துவக் கொள்கையை எளிதில் தோற்கடித்துவிடலாம். அவ்வாறிருந்தும் ஆய்வு செய்யும் உரிமையை அல்லாஹ் வழங்குகிறான்.

مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوٰى‌ۚ‏
وَمَا يَنْطِقُ عَنِ الْهَوٰىؕ
 اِنْ هُوَ اِلَّا وَحْىٌ يُّوْحٰى

உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழிகெடவுமில்லை.

அவர் மனோ இச்சைப்படி பேசுவதில்லை.

அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத்தவிர வேறில்லை.

(அல்குர்ஆன்: 53:2-4)

قُلْ اِنَّمَاۤ اَعِظُكُمْ بِوَاحِدَةٍ ۚ اَنْ تَقُوْمُوْا لِلّٰهِ مَثْنٰى وَفُرَادٰى ثُمَّ تَتَفَكَّرُوْا مَا بِصَاحِبِكُمْ مِّنْ جِنَّةٍ ؕ اِنْ هُوَ اِلَّا نَذِيْرٌ لَّـكُمْ بَيْنَ يَدَىْ عَذَابٍ شَدِيْدٍ‏

நீங்கள் இருவர் இருவராகவோ, தனித் தனியாகவோ அல்லாஹ்வுக்காக சற்று நேரம் ஒதுக்கி பின்னர் ‘‘உங்கள் தோழருக்கு (எனக்கு) பைத்தியம் எதுவுமில்லை. கடுமையான வேதனைக்கு முன் அவர் உங்களுக்கு எச்சரிக்கை செய்பவரே தவிர வேறில்லை” என்பதை நீங்கள் சிந்திக்கவேண்டும் என்ற ஒரே விஷயத்தையே உங்களுக்குப் போதிக்கிறேன் எனக்கூறுவீராக!

(அல்குர்ஆன்: 34:46)

லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்பதன் கருத்தாகிய ஏகத்துவம் மற்றும் தூதுத்துவத்தை ஆய்வு செய்வதற்கு எந்தத் தடையுமில்லை. மேலும் இந்த ஆய்வை மார்க்கம் வரவேற்கிறது என்பதை இந்த ஆதாரங்களின் மூலம் அறியமுடிகிறது.

அனைத்து விஷயங்களையும் ஆய்வு செய்ய ஆர்வமூட்டுதல்!

குர்ஆனை ஆய்வு செய்யவேண்டும்

இறைத்தூதர்களுக்கு இறக்கப்பட்ட பல்வேறு வேதங்களில் குர்ஆனை மட்டும் தான் இறுதிநாள் வரை பாதுகாப்பேன் என்று அல்லாஹ் உத்திரவாதம் அளிக்கிறான்.

 اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப்  பாதுகாப்போம்.

(அல்குர்ஆன்: 15:9)

 بَلْ هُوَ اٰيٰتٌۢ بَيِّنٰتٌ فِىْ صُدُوْرِ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ‌ؕ وَمَا يَجْحَدُ بِاٰيٰتِنَاۤ اِلَّا الظّٰلِمُوْنَ‏

மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்கமாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 29:49)

குர்ஆனில் எந்த சந்தேகமும் இல்லை

تَنْزِيْلُ الْكِتٰبِ لَا رَيْبَ فِيْهِ مِنْ رَّبِّ الْعٰلَمِيْنَؕ
اَمْ يَقُوْلُوْنَ افْتَرٰٮهُ‌ۚ بَلْ هُوَ الْحَقُّ مِنْ رَّبِّكَ لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اَتٰٮهُمْ مِّنْ نَّذِيْرٍ مِّنْ قَبْلِكَ لَعَلَّهُمْ يَهْتَدُوْنَ

(இது) அகிலத்தின் இறைவனிடமிருந்து அருளப்பட்ட வேதம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ‘இதை இவர் இட்டுக்கட்டிவிட்டார்” என்று அவர்கள் கூறுகிறார்களா? அவ்வாறில்லை! உமக்கு முன்னர் எச்சரிப்பவர் வராத சமுதாயத்தை (முஹம்மதே) நீர் எச்சரிப்பதற்காகவும், அவர்கள் நேர்வழி பெறுவதற்காகவும் (இது) உம் இறைவனிடமிருந்து உமக்கு வந்த உண்மை.

(அல்குர்ஆன்: 32:2,3)

ஒரு வேதம் ஆட்சேபணைக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டுமென்றால் பிரமாண்டமான பாதுகாப்பும் சந்தேகத்திற்கிடமில்லாத பரிசுத்த தன்மையும் தேவை. இந்த இரண்டையுமே குர்ஆனுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிறான். அப்படியிருந்தும் குர்ஆனின் உண்மைத் தன்மையை நிரூபிப்பதற்கும் இஸ்லாத்தை ஏற்பவர்களுடைய கொள்கை உறுதி அதிகரிப்பதற்கும் குர்ஆனை ஆய்வு செய்யுமாறு அல்லாஹ் அறைகூவல் விடுக்கிறான்.

 اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ‌ؕ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللّٰهِ لَوَجَدُوْا فِيْهِ اخْتِلَافًا كَثِيْرًا

அவர்கள் இந்தக் குர்ஆனை சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பாரகள்.

(அல்குர்ஆன்: 4:82)

ஆய்வாளர்களுக்கு ஓர் அறைகூவல்

وَاِنْ کُنْتُمْ فِىْ رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلٰى عَبْدِنَا فَاْتُوْا بِسُوْرَةٍ مِّنْ مِّثْلِهٖ وَادْعُوْا شُهَدَآءَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
فَاِنْ لَّمْ تَفْعَلُوْا وَلَنْ تَفْعَلُوْا فَاتَّقُوْا النَّارَ الَّتِىْ وَقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ  ۖۚ اُعِدَّتْ لِلْكٰفِرِيْنَ‏

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தை கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!

உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள் (கெட்ட) மனிதர்களும், கற்களுமே அதன் எரிபொருட்கள். (ஏக இறைவனை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன்: 2:23,24)

தன்னை ஆய்வுசெய்து விடக்கூடாது என குர்ஆன் அஞ்சினால் இத்தகைய பகிரங்க அறைகூவலை விடுத்திருக்காது. மாறாக இந்த அறைகூவலின் மூலம் தன்னை ஆய்வு செய்பவர்களிடம், தானே வெற்றி பெறுவதற்கு அதிகம் தகுதியான வேதம் என்பதை நிரூபிக்கிறது.