ஆஷுரா நோன்பை முஹர்ரம் பிறை 9 & 10ல் தான் நோற்க்க வேண்டுமா?

கேள்வி-பதில்: நோன்பு

ஆஷுரா நோன்பை முஹர்ரம் பிறை 9 & 10ல் தான் நோற்க்க வேண்டுமா?

அல்லது

பிறை 10 & 11வது நாளிலும் நோன்பு நோற்கலாமா?

ஆஷுரா நோன்பு எப்போது நோற்க்க வேண்டும் என்பது பற்றி நம்மில் சிலர் பரவலாக முஹர்ரம் பிறை 9 & 10 அல்லது 10 & 11 வது நாளிலும் நோன்பு நோற்கலாம் எனக் கூறுகின்றனர். அதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆஷூரா நோன்பு வையுங்கள். அதில் யூதர்களுக்கும் கிறிஸ்தவர் களுக்கும் மாற்றம் செய்யுங்கள். அதற்கு முந்திய நாளோ அல்லது அதற்கு பிந்திய நாளோ நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்.”

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
(அஹ்மத்: 2047), பைஹகீ

இது தொடர்பான அனைத்து அறிவிப்புகளிலும்  இப்னு அபீ லைலா என்பவர் இடம் பெறுகிறார். இவர் மனன சக்தியில் மிக மோசமானவர் ஆவார். மேலும் இவரை அறிஞர்கள் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். எனவே, இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.

முஹர்ரம் 9 & 10 வது நாள் நோன்பு நோற்க வேண்டும் என்று வரக் கூடிய செய்திகள் தான் ஆதாரப் பூர்வமானவை ஆகும்.

எனவே,

முஹர்ரம் 10 & 11வது நாள் நோன்பு நோற்பது கூடாது, அது நபிவழிக்கு மாற்றமானதாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?” என்று வினவினர்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில்(சேர்த்து) நோன்பு நோற்போம்” என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள்.

[(முஸ்லிம்: 2088)

அடுத்த ஆண்டுவரை நான் உயிரோடிருந்தால் ஒன்பதாவது நாளில்(சேர்த்து) நோன்பு நோற்பேன்* என்று நபி (ஸல்) அவார்கள் கூறினார்கள்.

(முஸ்லிம்: 2089)

நபி (ஸல்) அவர்கள், ஒன்பதாவது நாள் நோன்பு நோற்காமல் இறந்து விட்டாலும் அவர்கள் நம்மை நோக்கி ஒன்பதாவது நாளும் சேர்த்து (9&10) நோன்பு நோற்குமாறு கூறியிருப்பதால், நாம் முஹர்ரம் பிறை ஒன்பது, பத்து ஆகிய இரண்டு நாட்களும் ஆஷுரா நோன்பு நோற்க வேண்டும்.
அது தான் நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்த வழிமுறையாகும்!