பெண்ணுரிமை பேணிய புனித வேதம்
பெண்ணுரிமை பேணிய புனித வேதம்
இஸ்லாம் மார்க்கத்தைத் தவிர உலகிலுள்ள ஏனைய எல்லா மதங்களும் பெண்களை ஒரு போகப் பொருளாகவே பார்க்கின்றன. பெண் என்றால் அவள் கணவனுக்குப் பணிவிடை செய்வதும், அவனுடைய இச்சையைத் தீர்த்து வைப்பதும், அவனுக்காகக் குழந்தை பெற்றுக் கொடுப்பதும் தான் அவளது வேலை என்று பெண்களை அடிமைகளைப் போல் நடத்தி வந்துள்ளனர்.
- பெண்களுக்குக் கல்வி கற்கும் உரிமை இல்லை.
- சம்பாதிக்கும் உரிமை இல்லை.
- சொத்துரிமை இல்லை.
- கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை.
- பிடிக்காத கணவனை விவாகரத்துச் செய்யும் உரிமை இல்லை.
- கணவன் இறந்தால் மனைவிக்கு மறுமணம் செய்யும் உரிமை இல்லை.
- கணவன் இறந்தால் மனைவியும் உடன்கட்டை என்ற பெயரில் தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள வேண்டும். அல்லது மொட்டை அடித்து, வெள்ளை ஆடை அணிந்து துறவியைப் போல் வாழ வேண்டும்.
- மாதவிடாய் போன்ற இயற்கை உபாதைகளைக் கூட, தீட்டு என்ற பெயரில் அவளை வீட்டை விட்டே ஒதுக்கி வைத்துக் கொடுமை செய்தல்.
- அவர்களுக்குக் கடவுளை வழிபடும் உரிமை கூட இல்லை.
இப்படிப் பெண்களுக்கு எந்த உரிமையும் வழங்காமல் மதத்தின் பெயராலேயே அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றார்கள். அறிவியல் முன்னேற்றத்தாலும் நாகரீக வளர்ச்சியினாலும் பெண்கள் தற்போது தான் அரசியல் சட்ட ரீதியாக சில உரிமைகளைப் பெற்று வருகிறார்கள். எனினும் மதங்கள் மற்றும் அவை கொண்டுள்ள வேதங்கள் பெண்களுக்குச் செய்யும் அநீதிகளில் எந்த மாற்றமும் இல்லை.
பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று ஒரு பிரிவினரும் அனுமதிக்கக் கூடாது என்று ஒரு பிரிவினரும் இந்தக் காலத்திலும் போராட்டங்கள் நடத்தி வருவதைப் பார்க்கிறோம்.
ஆனால் திருக்குர்ஆன் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே பெண்ணுரிமையைப் பேணிப் பாதுகாத்தது. பெண்களின் கண்ணியத்தை உயர்த்தியது. இதைப் பற்றி விவரித்து எழுத வேண்டும் என்றால் பக்கங்கள் போதாது. எனவே பெண்களுக்கு இஸ்லாம் வழங்கிய உரிமைகள் தொடர்பான குர்ஆன் வசனங்களில் சிலவற்றை மட்டும் கீழே தந்துள்ளோம்.
ஆணில் ஒரு பகுதியே பெண்
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.
(அல்குர்ஆன்: 4:1) ➚.)
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
(அல்குர்ஆன்: 2:228) ➚.)
அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை.
(அல்குர்ஆன்: 2:187) ➚.)
கல்வி கற்கும் உரிமை
அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா?
(அல்குர்ஆன்: 39:9) ➚.)
“என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து’’
(அல்குர்ஆன்: 20:114) ➚.)
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள்.
(அல்குர்ஆன்: 9:71) ➚.)
சம்பாதிக்கும் உரிமை
சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன்: 4:32) ➚.)
சொத்துரிமை
குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை.
(அல்குர்ஆன்: 4:7) ➚.)
உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு.
நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.
(அல்குர்ஆன்: 4:12) ➚.)
இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது. இறந்தவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு.
இறந்தவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோர் மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞான மிக்கவனாகவும் இருக்கிறான்.
பிள்ளை இல்லாத ஒரு மனிதன் இறக்கும் போது அவனுக்குச் சகோதரி இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் பாதி அவளுக்கு உண்டு. அவளுக்குப் பிள்ளை இல்லாவிட்டால் (அவள் இறக்கும் போது) அவ(ளது சகோதர)ன் அவளுக்கு வாரிசாவான். இரண்டு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவர்களுக்கு உண்டு. ஆண்களும், பெண்களுமாக உடன் பிறப்புக்கள் இருந்தால் இரண்டு பெண்களுக்குரிய பங்கு ஓர் ஆணுக்கு என்ற விகிதத்தில் உண்டு. நீங்கள் வழி தவறி விடாமல் இருக்க அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் அறிந்தவன்.
பள்ளிவாசல்களுக்குச் செல்லும் உரிமை
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்?
(‘பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்காதீர்கள்’ என்பது நபிமொழி.
பார்க்க:(புகாரி: 900, 873, 5238)
கணவனைத் தேர்வு செய்யும் உரிமை
நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.
மஹர் எனும் மணக் கொடை
பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!
(அல்குர்ஆன்: 4:4) ➚.)
மறுமணம் செய்யும் உரிமை
பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப் பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
(அல்குர்ஆன்: 2:232) ➚.)
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன்: 2:234) ➚.)
விவாகரத்திற்குப் பின் வாழ்வாதாரம்
அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாகரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை.
(அல்குர்ஆன்: 2:236) ➚.)
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.
(அல்குர்ஆன்: 2:241) ➚.)
உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள்! உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு வழங்கி விடுங்கள்! உங்களுக்கிடையே நல்ல முறையில் முடிவு செய்து கொள்ளுங்கள்! ஒருவருக்கொருவர் (இதைச்) சிரமமாகக் கருதினால் அவருக்காக இன்னொருத்தி பாலூட்டட்டும். வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்கு செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான். சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
(அல்குர்ஆன்: 65:6) ➚,7.)
பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு.
(அல்குர்ஆன்: 2:233) ➚.)
கணவனைப் பிரியும் உரிமை
தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன்: 4:128) ➚.)
இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள்.
(அல்குர்ஆன்: 2:229) ➚.)
(ஸாபித் பின் கைஸ் (ரலி) என்பவரின் மனைவி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்’’ என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?’’ என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி “சரி’’ என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் “தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு’’ என்றார்கள்.
பார்க்க:(புகாரி: 5273), நஸயீ)
கற்பு நெறியில் ஆணும் பெண்ணும் சமமே!
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!
(அல்குர்ஆன்: 24:30) ➚, 31)
தண்டனையில் ஆணும் பெண்ணும் சமமே!
விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்!
(அல்குர்ஆன்: 24:2) ➚.)
இறைவனின் கூலியில் ஆணும் பெண்ணும் சமமே!
ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
(அல்குர்ஆன்: 4:124) ➚.)
ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம்.
(அல்குர்ஆன்: 16:97) ➚.)
யாரேனும் ஒரு தீமையைச் செய்தால் அது போன்றதைத் தவிர அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள்.
(அல்குர்ஆன்: 40:40) ➚.)
சிலரை, வேறு சிலரை விட அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன்: 4:32) ➚.)
நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி.
(அல்குர்ஆன்: 9:72) ➚.)
நம்பிக்கை கொண்ட ஆண்கள், மற்றும் பெண்களின் ஒளி அவர்களுக்கு முன்னேயும் வலப்புறமும் விரைவதை (முஹம்மதே!) நீர் காணும் நாள்! இன்றைய தினம் சொர்க்கச் சோலைகளே உங்களுக்குரிய நற்செய்தி. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். இதுவே மகத்தான வெற்றி.
(அல்குர்ஆன்: 57:12) ➚.)
முஸ்லிமான ஆண்களும் பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும் பெண்களும், உண்மை பேசும் ஆண்களும் பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும் பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும் பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும் பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.
(அல்குர்ஆன்: 33:35) ➚.)
பெண்களுக்கான பாதுகாப்பு வளையங்கள்
அவதூறிலிருந்து பாதுகாப்பு
ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள்.
(அல்குர்ஆன்: 24:4) ➚.)
நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.
(அல்குர்ஆன்: 24:23) ➚.)
தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும். தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாக (கூற வேண்டும்) அவனே பொய்யன் என்று அல்லாஹ் வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது தண்டனை யிலிருந்து அவளைக் காக்கும் அவன் உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாக (கூறுவாள்).
(அல்குர்ஆன்: 24:6-9) ➚.)
ஆடை விஷயத்தில் பாதுகாப்பு
நபியே! உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன்: 33:59) ➚.)
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
(அல்குர்ஆன்: 24:31) ➚.)
திருமணத்தை நினைத்துப் பார்க்காத முதிய வயதுப் பெண்கள் அலங்காரம் செய்து கொள்ளாது, தமது மேலாடைகளைக் களைந்திருப்பதில் குற்றமில்லை. அவர்கள் பேணிக் கொள்வது அவர்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
(அல்குர்ஆன்: 24:60) ➚.)
கெட்டவர்களிடமிருந்து பாதுகாப்பு
நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.
(அல்குர்ஆன்: 33:32) ➚.)
கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). இவர்கள் கூறுவதை விட்டும் அவர்கள் சம்பந்தமில்லாதவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு.
(அல்குர்ஆன்: 24:26) ➚.)
மனைவியரிடையே பாரபட்சம் காட்டக்கூடாது
மனைவியரிடையே நீதியாக நடந்து கொள்ள நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்களால் இயலாது. எனவே முழுமையாக (ஒரு பக்கமாக) சாய்ந்து, (இன்னொருத்தியை) அந்தரத்தில் தொங்க விடப் பட்டவளைப் போல் விட்டு விடாதீர்கள்! நீங்கள் நல்லிணக்கம் பேணி (இறைவனை) அஞ்சினால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடை யோனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன்: 4:129) ➚.)
ஏனைய மதங்கள் அனைத்தும் பெண்களை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் எல்லா வகையிலும் பெண்களின் உரிமைகளை திருக்குர்ஆன் பாதுகாக்கின்றது.