தீவிரவாதத்திற்கு எதிரான திருக்குர்ஆன்

பயான் குறிப்புகள்: கொள்கை

தீவிரவாதத்திற்கு எதிரான திருக்குர்ஆன்

உலகெங்கும் தற்போது தீவிரவாதம் தலைத்தோங்கியுள்ளது. தீவிரவாத செயல்களால் உலகம் முழுவதிலும் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். இத்தகைய தீவிரவாதச் செயல் மதம், மொழி, இனம், நாடு என்ற பல்வேறு அடிப்படைகளில் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்றாலும் தீவிரவாதம் என்பது இஸ்லாத்தின் மறுபெயராகவே மேற்கத்திய ஊடகங்களால் உலகத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சில இஸ்லாமியப் பெயர்தாங்கிகள் சில இடங்களில் இவ்வாறான காரியங்களில் ஈடுபட்டதை வைத்து ஒட்டுமொத்த இஸ்லாமிய மார்க்கத்திற்குமே தீவிரவாதச் சாயம் பூசிவிட்டது உலக ஊடகத்துறை. தனிமனிதர்களின் செயல்களை ஒட்டுமொத்த மதத்தோடு தொடர்புபடுத்தத் துவங்கினால் எந்த மதமும் தீவிரவாதப் பட்டம் பெறாமல் எஞ்சி இருக்காது.

பெயரளவில் இஸ்லாத்தைக் கடைப்பிடிக்கும் சிலரிடத்தில் இவ்வாறான காரியங்கள் இருக்குமே தவிர இஸ்லாமிய மார்க்கத்தில் தீவிரவாதத்திற்கு அறவே இடமில்லை. இஸ்லாம் அவர்களின் செயல்களை ஆதரிக்கவும் இல்லை. இஸ்லாம் தீவிரவாத்தை போதிக்கும் மார்க்கம்  அல்ல. திருக்குர்ஆன் தீவிரவாதத்தை போதிக்கும் வேதமல்ல. மாறாக, அன்பை ஏவும் மார்க்கம். மனித நேயத்தை போதிக்கும் மார்க்கம்.

ஒருவர் ஒரு உயிரைக் கொன்றால் அவருக்கு ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் கொன்ற பாவம் கிடைக்கும் என்று கூறி, உயிரைக் கொல்லும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று எச்சரிக்கும் மார்க்கம் இஸ்லாம்.

‘‘ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்’’ என்றும், “ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’’ என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம்.

(அல்குர்ஆன்: 5:32).) (சுருக்கம்)

இவ்வாறு, ஒரு உயிரைக் கொல்வதே ஒட்டுமொத்த மனிதர்களையும் கொல்வது போல் என்று சொல்லும் மார்க்கம் தீவிரவாதத்தை ஏவுமா? துணை நிற்குமா? மேலும், மனிதர்களுக்கு நலம் நாடுவதுதான் இஸ்லாமிய மார்க்கத்தின் இலக்கணமே என்பதையும் நபிகளார் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

மார்க்கம் என்பதே பிறர் நலம் நாடுவதுதான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(முஸ்லிம்: 95)

இன்னும், ஒவ்வொரு முஸ்லிமும் இவ்வுலகத்தில் வாழும் போது இறையன்பை எதிர்பார்த்தே வாழவேண்டும். அப்படி வாழ்பவரே முஸ்லிம். மக்களுக்கு இரக்கம் காட்டுவது தான் இறையன்பைப் பெற்றுத் தரும் என்றும் மார்க்கம் சொல்கிறது.

மனிதர்கள் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்ட மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புகாரி: 7376)

இவ்வாறு ஒரு மனிதன் பிற மனிதனுக்கு போதிக்கும் அன்பையே பிரதான தத்துவமாகக் கொண்ட மார்க்கமாக இஸ்லாம் இருக்கிறது. இதை முஸ்லிம்களிடத்தில் உலகம் கண்கூடாகக் காண்கிறது. சுனாமி, சென்னைப் பெருவெள்ளம், கஜா புயல் போன்ற எண்ணற்ற இயற்கைப் பேரிடர்களின் போது முஸ்லிம்களின் அன்பும் பாசமும் நிறைந்த அயராத பணி இதற்கெல்லாம் சாட்சிகளாக உலக மக்களின் கண் முன்னால் நிற்கிறது.

ஆனாலும், எத்தகைய மாற்றம் வந்தாலும் ஊடகங்கள் ஒரு நொடிப் பொழுதில் பொய் பிரச்சாரங்களின் வாயிலாகத் தவிடுபொடியாக்கி, இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என மக்களை ஏமாற்றிவிடுகின்றன. இவ்வாறு கூறும் போது, குர்ஆனில் ‘கண்ட இடத்தில் வெட்டுங்கள்’ என்பன போன்ற வன்முறையை ஆதரிக்கும் கருத்துக்கள் இருக்கத் தானே செய்கின்றன என்ற கேள்விகளை எழுப்புகின்றனர்.

அவை அனைத்துமே ஒரு நாட்டில் இஸ்லாமிய ஆட்சி இருந்து, அந்த நாட்டுக்கும் வேறொரு நாட்டுக்கும் போர் நடக்கும் போது கடைபிடிக்க வேண்டிய அம்சமாகும். இஸ்லாமிய நாடு மட்டுமல்ல. எந்த நாடாயினும் தனது எல்லையைப் பாதுகாக்கும் போர் செய்யும் போது எதிர்த்து வருபவர்களைக் கொல்வதுதான் உலக வழக்கம். கைகட்டி வேடிக்கை பார்ப்பது இல்லை.

அதுதான் அங்கு சொல்லப்பட்டுள்ளதே தவிர இஸ்லாத்தைப் பரப்ப போர் செய்யுங்கள் என்றோ, அப்பாவிகளைக் கொல்லுங்கள் என்றோ திருக்குர்ஆன் போதிக்கவில்லை. மேற்படி சொன்னது போல் நாடுகளுக்கிடையே போர் புரிவதற்குக் கூட இஸ்லாம் சில நெறிமுறைகளை சொல்லித் தருகிறது. அவற்றையும் பார்ப்போம்.

ஆட்சி இருந்தால் மட்டுமே போர்

திருக்குர்ஆனில் உள்ள பல கட்டளைகள், அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியது என்றாலும் ஆட்சியாளர்கள் மீதும், அரசுகள் மீதும் மட்டும் சுமத்தப்பட்ட கட்டளைகளும் உள்ளன. அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட கடமைகளைத் தனி நபர்கள் செயல்படுத்தக் கூடாது.

திருடினால் கையை வெட்டுதல், விபச்சாரத்துக்கு நூறு கசையடி வழங்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பன போன்ற சட்டங்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. இச்சட்டங்களைத் தனிப்பட்ட எந்த முஸ்லிமும், முஸ்லிம் குழுவும் கையில் எடுக்க முடியாது. மாறாக இஸ்லாமிய அரசு தான் இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதுப்போலத்தான் போர் செய்வதென்பது தனிநபர்களின் மீதோ, குழுக்கள் மீதோ கடமையில்லை. அரசாங்கத்தின் மீது மட்டுமே கடமையானதாகும்.

“தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான்’’ என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். “எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லை’’  என்று அவர்கள் கூறினர். “உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வி மற்றும் உடலை (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான். தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்’’ என்று அவர் கூறினார்.

“அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டதற்கு அடையாளமாக, உங்களிடம் ஓர் அலங்காரப் பெட்டி வரும். அதில் உங்கள் இறைவனிடமிருந்து (உங்களுக்கு) மன நிறைவு இருக்கும். மூஸாவின் குடும்பத்தாரும், ஹாரூனின் குடும்பத்தாரும் விட்டுச் சென்றவற்றில் எஞ்சியது அதில் இருக்கும். அதை வானவர்கள் சுமந்து வருவார்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அதில் உங்களுக்கு தக்க சான்று உள்ளது’’ என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார்.

(அல்குர்ஆன்: 2:247), 248.)

படை திரட்டி யுத்தம் செய்வதென்றால் அதற்கு ஒரு ஆட்சியும், மன்னரும் இருப்பது அவசியம் என்பது இதில் பெறப்படும் சட்டமாகும். ஏனெனில் அந்தச் சமுதாயம் மிகப் பெரும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தும், போர் செய்வதற்கான எல்லா நியாயங்களும் அவர்களிடம் இருந்தும் அவர்கள் போர் செய்யவில்லை.

அவர்களுக்குத் தலைமை தாங்கிய நபியும் போர் செய்யவில்லை. மாறாக ஒரு மன்னரை நியமிக்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்த பிறகு இறைவன் மன்னரை நியமித்தான். அதன் பிறகுதான் அவர்கள் போரிட்டுள்ளார்கள். போர் செய்வதற்கு ஆட்சியோ, மன்னரோ அவசியம் இல்லை என்றால் அவர்களின் கோரிக்கையை ஏற்று மன்னராக ஒருவரை இறைவன் நியமித்திருக்க மாட்டான்.

வம்புச் சண்டைக்கு வருவோருடன்தான் போர்

இஸ்லாம் போரை அரசாங்கத்திற்கு மட்டும்தான் கடமையாக்கியுள்ளது. அரசாங்கத்திற்குப் போர் கடமையாக்கப்பட்டிருந்தாலும் கூட அவர்கள் இஷ்டப்படி அனைவரையும் தாக்க அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. வம்புச் சண்டைக்கு வருவோருடன் போர் புரிய மட்டுமே வலியுறுத்துகிறது.

2:190 وَقَاتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ الَّذِيْنَ يُقَاتِلُوْنَكُمْ وَلَا تَعْتَدُوْا ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ‏

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

(அல்குர்ஆன்: 2:190).)

இவ்வாறு போர் புரிவது யதார்த்தமான நியதியே. வம்புச் சண்டைக்கு வருவோருடன் சண்டையிடாமல் கைகட்டி வேடிக்கை பாருங்கள் எந்த சித்தாந்தமும் சொல்லாது.

போரில் பெண்கள் குழந்தைகளை கொல்லக் கூடாது

வம்புச் சண்டைக்கு வருவோருடன்தான் போர் புரிய வேண்டும். அத்தகைய போரிலும் எதிர் தரப்பில் பெண்கள், குழந்தைகள் போன்ற அப்பாவிகள் இருந்தால் அவர்களைக் கொல்லக் கூடாது என்றும் அவர்களைக் கொல்வது கடும் கண்டனத்திற்குரிய குற்றம் என்றும் இஸ்லாம் சொல்கிறது.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட ஒரு புனிதப் போரில், பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.

(புகாரி: 3014)

எதிரிகளின் உடல்களை சிதைக்கக் கூடாது

போரிடும் போது எதிரிகளின் மீதுள்ள கோப அலையினால் அவர்களின் உடல்களை கோரப்படுத்தக் கூடாது; சிதைத்துவிடக் கூடாது.

கொள்ளையடிப்பதையும் ஒருவரின் அங்கங்களை (உயிருடன் இருக்கும் போதோ அல்லது இறந்த பிறகோ) சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி)

(புகாரி: 2474, 5516)

போரில் அத்துமீறக்கூடாது

போர் புரியும் போது எதிரிகளை விட அரசாங்கத்திற்கு படைபலம் அதிகம் இருந்தாலும் எல்லைக் மீறக் கூடாது, அக்கிரமம் புரியக்கூடாது.

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

(அல்குர்ஆன்: 2:190).)

இதுபோன்று இன்னும் பல பாதிப்பில்லா சட்டங்களையும் வழங்கி அப்பாவிகளைக் காத்து, நாட்டை அழிக்க வருபவர்களுக்கு எதிராக மட்டுமே போர் என்ற நெறிகளை இஸ்லாம் சொல்கிறது. இந்த நெறிகள், சட்டங்கள் யாவும் பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் போர் நெறிகளை விட பல மடங்கு உயர்ந்தவையாகும். இஸ்லாம் சொல்லும் போர் நெறிகள் மட்டுமே  மனித உரிமை மீறல் இல்லாத நீதமான போர் நெறியாகும்.

இவ்வாறு போரில் கூட மனித உரிமை மீறலைத் தடுக்கும் மார்க்கம் தீவிரவாதத்தை ஏவுமா? என்பதைச் சிந்திக்க வேண்டும். இஸ்லாத்தின் பெயரால் யாரோ ஒரு சிலர் செய்வதற்கு இந்த மார்க்கமோ அல்லது அதன் வழிகாட்டியான திருக்குர்ஆனோ ஒருபோதும் பொறுப்பாக முடியாது.