பொய்யர்கள் அழிவார்கள்!
அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
இஸ்லாமிய மார்க்கத்தில் மனிதர்கள் செய்கின்ற செயல்களில் நன்மையைப் பெற்றுத் தருகின்ற காரியம் எது? தீமையைப் பெற்றுத் தருகின்ற காரியம் எது? என்பதை ஏராளமான உபதேசங்களின் மூலமாக மிகவும் விரிவாகவும், எளிமையான முறையிலும் அறிவுரை கூறப்பட்டிருக்கின்றது.
நாம் செய்யக்கூடிய கேடுகெட்ட காரியங்களைப் பொறுத்தே இம்மையிலும், மறுமையிலும் தண்டனை வழங்கப்படும் என்று மார்க்கம் நமக்கு தெளிவுபடுத்துகின்றது. நாம் செய்யக்கூடிய செயல்களில் சர்வ சாதரணமாக நம்முடைய நாவினால் செயல்படுத்துகின்ற பெரும்பாவம் பொய்.
இன்றைய காலகட்டங்களில் பொய் என்பது பெரும்பாலான மக்களால் அலட்சியப்படுத்தப்படுகின்ற பெரும்பாவமாக இருக்கின்றது. உலகத்திலே பொய் பேசாதவர்கள் யாருமில்லை என்று மிகைத்து சொல்கின்ற அளவிற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பொய் எனும் பெரும்பாவத்தில் மூழ்கிக் கிடப்பதையும், சர்வ சாதாரணமாக அனைவராலும் மொழியப்பட்டும், பேசப்பட்டும் வருவதையும் நம்மால் பரவலாக காண முடிகின்றது.
இன்னும் ஒருசிலர் பொய்யை மூலதனமாகக் கொண்டு வயிறு வளர்ப்பதையும், இன்னும் சிலர் பொய்யை மூலதனமாகக் கொண்டு பிறரை அழிக்க நினைப்பதையும், இன்னும் சிலர் பொய் பேசி அப்பாவி மக்களை நம்ப வைத்து சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்துவதையும் பார்க்கின்றோம்.
இஸ்லாமிய மார்க்கத்தில் இறைவனும், இறைத்தூதரும் பொய்யையும், பொய்யர்களையும் கடுமையான முறையில் விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் பொய்யர்களுக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் கடுமையான இழிவு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
சிலைகள் எனும் அசுத்தத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! பொய் பேசுவதிலிருந்தும் விலகிக் கொள்ளுங்கள்!
இணைகற்பித்தல் போன்ற பெரும் பாவங்களுக்கு நிகராக இறைவன் பொய்யையும் பெரும் பாவமாக கருதி பொய் பேசுவதிலிருந்து விலகி திருந்தி வாழுங்கள் என்று கட்டளையிடுகின்றான்.
يُؤْفَكُ عَنْهُ مَنْ أُفِكَ
قُتِلَ الْخَرَّاصُونَ
இதை விட்டும் திசை திருப்பப்படுபவர் திசை திருப்பப்படுகிறார். பொய்யர்கள் அழிவார்கள்.
பொய்யர்கள் தாங்கள் பேசி வருகின்ற பொய்யின் காரணத்தினால் கட்டாயமாக இவ்வுலகிலும், மறுமையிலும் நட்டத்தையும், அழிவையும் சந்திப்பார்கள் என்று அல்லாஹ் ஆழமாக எச்சரிக்கை விடுக்கின்றான்.
பொய் பேசுபவர்கள் எந்த விஷயத்தில் பொய் பேசினாலும் அது அவர்களுக்கு வெற்றியைத் தருவது போன்ற ஒரு மாயத் தோற்றம் ஏற்படுமே தவிர, கட்டாயம் அவர்கள் கடும் வீழ்ச்சியை தான் சந்திப்பார்கள் என்றும், அவர்களின் அழிவு உறுதி என்றும் இறைவன் அழுத்தமாக பதிய வைக்கின்றான்.
எனவே பொய் என்ற மோசமான, அழித்தொழிக்கும் பாவத்திலிருந்து நாம் அனைவரும் தவிர்ந்து வாழக் கடமைப்பட்டிருக்கின்றோம. இவ்வாறு பொய் பேசுபவர்களைப் பற்றி அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் கடுமையாக எச்சரித்தார்கள். அப்படிப்பட்ட எச்சரிக்கைகளைப் பற்றி சில தகவல்களை இந்த உரையில் காண்போம்.
இன்று நம்மில் பெரும்பாலானோர் பொய்யை ஒரு பாவமாகவே கருதாமல் அலட்சியம் காட்டிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், பொய் சொல்பவர்களுக்கு கடுமையான வேதனை ஏற்படும் என்று திருக்குர்ஆனில் ஏராளமான இடங்களில் இறைவன் எச்சரிக்கை விடுக்கின்றான்.
பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை மீறியதாலும், பொய்யுரைத்துக் கொண்டிருந்ததாலும் அவனை அவர்கள் சந்திக்கும் நாள் வரை அவர்களின் உள்ளங்களில் நயவஞ்சகத்தை அவன் தொடரச் செய்தான்.
இன்றைய சூழலில் சர்வ சாதாரணமாக கண்டவர் கழியவர் எல்லாம் முகநூல் வாயிலாகவும், வலைதளங்களின் வாயிலாகவும் பிறரின் நன்மதிப்பை கேவலப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பொய்யையே பிழைப்பாக நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
ஏதேனும் ஒரு ஆதாயத்திற்காகவோ, புகழுக்காகவோ, நம்முடைய முகம் முகநூலில் தெரிகின்றது. நம்முடைய முகத்தை பலரும் பார்க்கின்றார்கள் என்ற மட்டரகமான எண்ணத்தில் பொய் சொல்லித் திரிபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் உள்ளங்களில் அயோக்கியத்தனத்தின் மறு உருவமான நயவஞ்சகத்தனத்தை இறைவன் ஆழப்பதிய வைக்கின்றான்.
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பொய் பேசுபவர்களை நயவஞ்சகர்களின் பட்டியலுக்குள் கொண்டு வந்து எச்சரிக்கை செய்வதை பார்க்கின்றோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் அப்பட்டமான நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். எவனிடம் அவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் குடியிருக்கும்.
(ஏதேனுமொன்றை) நம்பி ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வதும், பேசும்போது பொய் சொல்வதும், ஒப்பந்தம் செய்துகொண்டால் நம்பிக்கை மோசடி செய்வதும், வழக்காடினால் அவமதிப்பதும்தான் அவை (நான்கும்).
ஆதாரம்: (புகாரி: 34)
இந்த செய்தியை நன்றாகப் படித்துப் பாருங்கள்! பொய் பேசுவது ஒரு முஃமினின் பண்பு அல்ல; முனாஃபிக்கின் பண்பு. நயவஞ்சகத்தனத்தின் நான்கு குணத்தில் ஒரு குணம் இருந்தாலும் நயவஞ்சகத்தனம் அவனை விட்டும் நீங்காது. மாறாக, அவனிடமே குடிகொண்டிருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கடுமையான முறையில் எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
எனவே பொய்ப்பித்தலாட்டத்தில் ஈடுபட்டு இந்தக் கோரமான குணத்தை பெற்று நரகத்திலே விழுந்து விடாமல் நம்மை நாமே தற்காத்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம்.
இன்றைக்கு மிகவும் கீழ்த்தனமான முறையில் நாம் பேசுகின்ற பொய் மக்களிடத்திலே விரைவாக சென்று குழப்பத்தை ஏற்ப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பயன்படுத்துகின்ற ஆயுதம் தான் முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்கள். இந்த சமூக வலைத்தளங்கள் மூலமாக என்ன பேசுகின்றோம் என்ற நிதானம் இல்லாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் அடித்து விட்டு அப்பட்டமாக பொய்ப்பிரச்சாரம் செய்து சத்தியக் கருத்துக்களை அழிக்க நினைக்கின்ற அநியாயக்காரர்களை பார்க்கின்றோம்.
உலகத்தில் பொய் பேசுபவர்களாக இருப்பவர்களுக்கும், பேசுகின்ற பொய் உலகம் முழுவதும் பரவி மக்களை குழப்புகின்ற செயல்களில் ஈடுபட்டவர்களுக்கும் கடுமையான வேதனை வழங்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
“உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?’’ என்று கேட்டதும் நாங்கள் “இல்லை’ என்றோம். அவர்கள், ““நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் இருவர் என்னிடம் வந்து எனது கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றுகொண்டிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவருடைய பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற்பகுதி ஒழுங்காகிவிட்டது. பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் “இது என்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும் “நடங்கள்’ என்றனர். (இப்படியே பல சம்பவங்கள் எடுத்துக் காட்டப்பட்டது).
இறுதியாக, “இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பித்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்!’’ எனக் கேட்டேன். அதற்கு இருவரும் “ஆம், முதலில் தாடை சிதைக்கப்பட்டவரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள்வரை கொடுக்கப்படும்.
ஆதாரம்: (புகாரி: 1386) (ஹதீஸ் சுருக்கம்)
மற்றொரு அறிவிப்பிலே, தாடையில் குத்துகின்ற குத்தின் காரணமாக கண்களும், காதுகளும் பிதுங்கி வெளியேறுகின்ற அளவுக்கு அதன் வேகமும், ரணமும் இருக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையான முறையில் அச்சுறுத்துகின்றார்கள்.
ஒருவர் நின்று கொண்டு தன்னுடைய கரங்களிலே இரும்பாலான கொக்கிகளை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருப்பவரின் இருதாடைகளையும் கடுமையான முறையில் குத்திக் கிழித்துக் கொண்டிருக்கின்றார். குத்துகின்ற குத்து பிடரியைக் கிழித்துக் கொண்டு வெளியேறுகின்றது.
இதுபோன்று ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டால் சுகமாக இருக்குமா? தண்டனையைப் படிக்கும் போதே உள்ளம் நொறுங்கி, கடுமையான அச்சம் ஏற்படுகின்றது. வெறுமனே மக்களிடம் நன்மதிப்பை பெறுவதற்கு பொய்ப் பிரச்சாரம் செய்து மறுமையில் தாடை கிழிக்கப்படாமல் இருக்க, உண்மையை பேசி இந்த கோரமான தண்டனையிலிருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
ஒருவர் சர்வ சாதாரணமாக கருதிக் கொண்டு பேசுகின்ற பொய்யின் காரணத்தினாலும், எவ்வித ஆதாரமும் இல்லாமல் நம்முடைய நாவு ஆடுகின்ற ஆட்டத்தினாலும் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றார்கள். பல்வேறு விதமான நன்மையான காரியங்கள் தடைபட்டு போகின்றது. மக்கள் குழப்பமான சூழலுக்கு தள்ளப்படுகின்றார்கள்.
இதுபோன்ற கடுமையான விபரீதத்தை ஏற்படுத்தியவரின் தாடைகளை கிழித்து தொங்க விடுவதில் எள்முனையளவு கூட பாரபட்சம் காட்டாமலும், இரக்கம் காட்டாமலும் அத்தண்டனையை அமுல்படுத்துகின்றார்கள்.
இன்றைக்கு சர்வ சாதரணமாக பெரும்பாலான மக்கள் பொய் என்னும் கொடூரமான நோயில் மூழ்கிக் கிடக்கின்றார்கள். இன்னும் சொல்வதாக இருந்தால் பொய் பேசுதல் பெரும் பாவம் என்பதை அறியாமல் சகட்டு மேனிக்கு வாய்க்கு வந்ததையெல்லாம் அடித்து விடுவதைப் பார்க்கின்றோம்.
பொய்யைப் பற்றி அதிபயங்கரமான அல்லாஹ்வின் தூதரின் எச்சரிக்கை இதோ!
«أَلاَ أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الكَبَائِرِ» قُلْنَا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: ” الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الوَالِدَيْنِ، وَكَانَ مُتَّكِئًا فَجَلَسَ فَقَالَ: أَلاَ وَقَوْلُ الزُّورِ، وَشَهَادَةُ الزُّورِ، أَلاَ وَقَوْلُ الزُّورِ، وَشَهَادَةُ الزُّورِ “ فَمَا زَالَ يَقُولُهَا، حَتَّى قُلْتُ: لاَ يَسْكُتُ
அபூபக்ரா நுஃபைஉ பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’’ என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், “ஆம், அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங்கள்)’’ என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்‘’ என்று சொல்லிவிட்டு சாய்ந்துகொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, “அறிந்து கொள்ளுங்கள்:
பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)’’ என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் “அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?’’ என்றேன்.
ஆதாரம்: (புகாரி: 5976)
பெரும் பாவங்களின் பட்டியலில் முன்னணியில் இருப்பது நாம் பேசுகின்ற பொய். மேலும் ஒரு நபித்தோழர் பெரும்பாவங்களைப் பற்றிப் கேள்வி எழுப்புகின்றார். நபி (ஸல்) அவர்கள் நிறுத்தாமல் திரும்பத் திரும்ப பொய்யைப் பற்றியும், பொய் சாட்சியத்தை பற்றியும் கூறுவதைப் பார்த்து விட்டு நிறுத்திக் கொள்ளக் கூடாதா? என்று நினைக்கும் அளவுக்கு பொய்யைப் பற்றி அதிபயங்கரமாக எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
இன்னும் சற்று சிந்தித்துப் பாருங்கள்! திரும்பத்திரும்ப ஏன் கூற வேண்டும்? நாம் சாதாரணமாக எண்ணிக் கொண்டிருக்கின்ற பொய்யின் விபரீதம் மோசமான விளைவை ஏற்படுத்தும். எந்த அளவிற்கென்றால் ஒருவரின் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப் போட்டு விடும்.
மேலும் ஆணவம், அகம்பாவம், பெருமை, பொறாமை போன்ற கேடுகெட்ட காரியங்களை இந்தப் பொய் மென்மேலும் தூண்டும். நாம் வாழ பிறர் வீழ்ந்தாலும் பரவாயில்லை. பொய்யைப் பரப்பியாவது நன்மதிப்பை பெற்றுக் கொள்வோம் என்ற கயமைத்தனம் உள்ளத்தில் ஏற்படும்.
ஒருவர் சொர்க்கவாசியா? நரகவாசியா? என்பதையும், இறைவனின் திருப்திக்குரியவரா? கோபத்திற்குரியவரா? என்பதையும் நாம் பேசுகின்ற பேச்சு தீர்மானித்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் அழகான ஒரு செய்தியின் மூலமாக நமக்கு அறிவுரை பகர்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஓரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.
ஆதாரம்: (புகாரி: 6478)
இறைவனிடத்தில் நம்முடைய அந்தஸ்து உயர வேண்டுமானால், இறைவனின் திருப்தியை பெற வேண்டுமானால் நல்ல வார்த்தையை பேச வேண்டும். நாம் பேசுகின்ற கெட்டப் பேச்சு, பொய்ப் பேச்சின் காரணத்தினால் கடுமையான பின்விளைவாக நரகத்திலே விழுந்து அழிந்து போவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
இறைவனிடத்தில் இருக்கின்ற சிறப்பு பதிவேட்டில் ஒருவர் உண்மையைப் பேசிக் கொண்டே வரும்போது வாய்மையாளர் என்று பதிய வைக்கப்படுகின்றார். பொய்யை பேசிக் கொண்டு வருபவர் பெரும் பொய்யர் என்றும் பதிய வைக்கப்படுகின்றார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் “வாய்மையாளர்’ (சித்தீக்- எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் “பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.
ஆதாரம்: (புகாரி: 6094)
ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் பொய் பேசிக்கொண்டே இருந்தால், அவன் பேசுகின்ற பொய் நிச்சயமாக தீமைக்கு வழிவகுக்கும் என்றும், இறைவனின் பதிவேட்டில் பெரும் பொய்யர் என்றும் பதிய வைக்கப்படுகின்றார். ஒருவன் தீமைக்கு மேல் தீமை செய்வதற்கு அவன் பேசுகின்ற பொய் மிகப்பிரதானமான காரணமாக அமைந்து விடுகின்றது.
இன்றைக்கு ஒருவன் பேசுகின்ற பொய் இறைவனின் பதிவேட்டில் பெரும் பொய்யர் என்று எப்படி பதிய வைக்கப்படுவாரோ, அது போன்று உலகத்திலும் அப்பட்டமான பொய்யர் என்று தெளிவாகின்றது. அந்தளவிற்கு பொய்யை சாதாரணமாக பேசி வருகின்றார்கள்.
கடந்த காலங்களில் ஆட்டம் போட்ட பொய்யர்களின் முடிவு எப்படி இருந்தது? என்பதை இறைவன் எச்சரிக்கின்றான்.
உங்களுக்கு முன்னர் முன்னுதாரணங்கள் சென்றுள்ளன. எனவே பூமியில் பயணம் செய்து (உண்மையைப்) பொய்யெனக் கருதியோரின் முடிவு எப்படி இருந்தது என்பதைச் சிந்தியுங்கள்!
உண்மை தெளிவாக தெரிந்த பிறகும் உண்மையைப் பொய்யென்று கருதிய அயோக்கியர்களின் முடிவு எப்படி இருந்தது? என்பதை சிந்தியுங்கள்! என்று இறைவன் அறிவுரை கூறுகின்றான். மேலும் உண்மையைப் பொய்யென்று கருதியவர்களின் கதி அதளபாதளம் தான் என்பதும் தெள்ளத் தெளிவாக விளங்க முடிகின்றது.
மேலும், இறைவன் கூறுகின்றான்;
உண்மை அவர்களிடம் வந்தபோது அதை அவர்கள் பொய்யெனக் கருதினர். அவர்கள் கேலி செய்து கொண்டிருந்தது குறித்த விபரங்கள் பின்னர் அவர்களிடம் வந்து சேரும்.
உண்மை என்று தெளிவாக தெரிந்த பிறகும் கேலிக்கூத்தாக கருதியவர்கள் குறித்த முழு விபரமும் பின்னால் அவர்களிடம் வந்து சேரும் என்று அவர்களின் பாணியிலேயே அவர்களை கேவலப்படுத்தி, கிண்டல் செய்யும் விதமாக இறைவன் பதிலளிக்கின்றான்.
உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது.
உண்மை என்பது அதிபயங்கரமான ஒரு ஆயுதம். அந்த உண்மையை அற்பத்திலும் அற்பமாக வலம் வருகின்ற பொய்யின் மீது வீசி எரியும் போது, அந்த பலமான உண்மை, போலியான பொய்யை அடித்து துவம்சம் செய்கின்றது என்று பொய்யர்களின் முகத்திரையை கிழித்து தொங்க விடும் முகமாக இறைவன் எச்சரிக்கின்றான்.
பொய்யர்கள் எவ்வளவு தான் கத்தினாலும், கூப்பாடு போட்டாலும் பொய் ஒருக்காலும் நிலைக்காது. பொய்யர்களை அல்லாஹ் அழித்து இருந்த இடம் தெரியாமல் தடம் மாற்றி தடுமாறச் செய்து விடுவான் என்பதை பொய்யர்களும், பொய்யர்களை நம்புபவர்களும் தங்களின் உள்ளங்களில் ஆழமாக பதிய வைத்துக் கொண்டு பொய்யர்களின் சதிவலையிலிருந்து வெளியேறி உண்மையின் பக்கம் வருவதற்கு அல்லாஹ் அருள் செய்வானாக!!
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்!
அல்லாஹ்வுக்கு அஞ்சி பொய் பேசுவதிலிருந்து விலகிக் கொள்வோமாக! உண்மையாளர்களாக வாழ்ந்து மரணித்து மறுமையில் சுவனத்தை அடைவோமாக! அப்படிப்பட்ட நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக!
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.