தொழுகை முடிந்ததும் அறிவிப்புகள் செய்யலாமா?

கேள்வி-பதில்: தொழுகை

தொழுகை முடிந்ததும் அறிவிப்புகள் செய்யலாமா?

ஏகத்துவ அடிப்படையில் அமைந்த ஐவேளை தொழுகைக்கான பள்ளிவாசல்களின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அந்த பள்ளிவாசல்கள் வெறுமனே ஐவேளைத் தொழுகைகளுக்கான ஸ்தலாமாக மட்டுமிராமல் அழைப்புப் பணி, சமுதாயப் பணி என்று பல்வேறு பணிகளை முன்னெடுத்துச் செல்லும் மையங்களாகவும் இருக்கிறது.

அந்த பணிகள் தொடர்பான அறிவிப்புகள் மக்கள் ஒன்றினையும் நேராமான தொழுகை நேரத்தில் ஸலாம் கொடுத்து முடிந்ததும் பல இடங்களில் செய்யப்படுகிறது.

இவ்வாறு தொழுகை முடிந்ததும் அறிவிப்பு செய்தல் என்பது சில இடங்களில் விமர்சனப் பொருளாக மாறியுள்ளது. இவ்விவகாரத்தை மார்க்க அடிப்படையில் எப்படி முடிவு செய்வது என்று இக்கட்டுரையில் காண்போம்.

அல்லாஹ் ஐவேளைத் தொழுகையை கட்டாயக் கடமையாக்கியுள்ளான். ஒவ்வொரு தொழகை முடிந்ததும் சில துஆக்களையும், திக்ருகளையும் செய்ய நபி(ஸல்) அவர்கள் அதிம் வலியுறுத்தியுள்ளார்கள்.

பொதுவாக, மார்க்கத்தில் ஃபர்ளாக – கடமையாக உள்ளவற்றை நிச்சயம் செய்ய வேண்டும். அதை செய்யாவிடில் குற்றமாகிவிடும். சுன்னத்தாக உள்ளவற்றை செய்தால் அல்லாஹ்விடத்தில் நன்மை என்றாலும் அதை செய்யாவிடில் அல்லாஹ்விடத்தில் குற்றமாகாது.

இந்த இரு வகைகளில் இரண்டாம் வகையான சுன்னத்தைச் சார்ந்ததுதான் தொழுகைக்கு பின்னால் உள்ள துஆ, திக்ரு ஆகியவைகள். மேலும், ஒரு சுன்னத்தை செய்வதும், அதை செய்யாலம் விட்டுவிடுவதும் ஒவ்வொரு தனிமனிதனைச் சார்ந்த விஷயமாகும்.

யாரையும் அதை செய் என்று நிர்பந்திக்கவும் இயலாது. அதை செய்யாதே என்று தடுக்கவும் இயலாது என்ற இந்த அடிப்படையை முதலில் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.

அடுத்து, நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைகளுக்கு பின்னால் உள்ள திக்ரு, துஆ போன்றதில் எவ்வாறு நடந்துள்ளார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள் என்றாலும் மார்க்கத்தில் உள்ள சுன்னத்தான் காரியங்களில் அலட்சியம் கொள்ளாமல் அவற்றில் அதிகம் ஈடுபாடுள்ளவர்களாகதான் அவர்கள் இருப்பார்கள் என்று வரலாறு நமக்கு சொல்கிறது. அதே போலத்தான், இந்த தொழுகைக்கு பின்னால் உள்ள திக்ருகள் விஷயத்திலும் நபி(ஸல்) அவர்கள் இருந்துள்ளார்கள்.

தொழுகைக்கு பின்னால், அஸ்தஃக்ஃபிருல்லாஹ் என்று பாவமன்னிப்பு கோருவதிலும், அல்லாஹும்ம அன்த்த ஸலாம் என்று துவங்கும் துஆக்கள் போன்வற்றை மொழிவதிலும் சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என்ற திக்ருகளை செய்வதிலும், மேலும் மற்ற அனைத்திலும் நபி(ஸல்) அவர்கள் ஈடுபாடுடன் இருந்துள்ளார்கள்.

தொழுகைக்கு பின்னால் ஓதப்படும் திக்ருகளைப் பற்றி அறிவிக்கப்படும் செய்திகளில் சொல்லப்படும் தகவல், “கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும் நபி(ஸல்) அவர்கள் இவற்றை கூறுபவர்களாக இருந்தார்கள்” என்பதுதான்.

இந்தளவிற்கு நபி(ஸல்) அவர்கள் இவற்றை பேணி கடைப்பிடித்தாலும் ஒரு சில சமயங்களில் தொழுகை முடிந்ததும் வேறு காரியங்களில் ஈடுபட்டுமிருக்கிறார்கள்.

كُنَّا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَدْرِ النَّهَارِ، قَالَ : فَجَاءَهُ قَوْمٌ حُفَاةٌ عُرَاةٌ مُجْتَابِي النِّمَارِ أَوِ الْعَبَاءِ، مُتَقَلِّدِي السُّيُوفِ، عَامَّتُهُمْ مِنْ مُضَرَ، بَلْ كُلُّهُمْ مِنْ مُضَرَ فَتَمَعَّرَ وَجْهُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَا رَأَى بِهِمْ مِنَ الْفَاقَةِ، فَدَخَلَ ثُمَّ خَرَجَ، فَأَمَرَ بِلَالًا فَأَذَّنَ وَأَقَامَ، فَصَلَّى ثُمَّ خَطَبَ فَقَالَ: {يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ} [النساء: 1] إِلَى آخِرِ الْآيَةِ، {إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا} [النساء: 1] وَالْآيَةَ الَّتِي فِي الْحَشْرِ: {اتَّقُوا اللهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللهَ} [الحشر: 18] «تَصَدَّقَ رَجُلٌ مِنْ دِينَارِهِ، مِنْ دِرْهَمِهِ، مِنْ ثَوْبِهِ، مِنْ صَاعِ بُرِّهِ، مِنْ صَاعِ تَمْرِهِ – حَتَّى قَالَ – وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ» قَالَ: فَجَاءَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ بِصُرَّةٍ كَادَتْ كَفُّهُ تَعْجِزُ عَنْهَا، بَلْ قَدْ عَجَزَتْ، قَالَ: ثُمَّ تَتَابَعَ النَّاسُ، حَتَّى رَأَيْتُ كَوْمَيْنِ مِنْ طَعَامٍ وَثِيَابٍ، حَتَّى رَأَيْتُ وَجْهَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَهَلَّلُ، كَأَنَّهُ مُذْهَبَةٌ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً، فَلَهُ أَجْرُهَا، وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ، وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً، كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ»

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த “கம்பளி ஆடை’ அல்லது “நீளங்கி’ அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் “முளர்’ குலத் தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே “முளர்’ குலத்தைச் சேர்ந்த வர்கள்தாம்.

அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.

அப்போது “மக்களே! உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனை பயந்துகொள் ளுங்கள்’’ எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும், “அல்ஹஷ்ர்’ அத்தியாயத்திலுள்ள “நம்பிக்கை யாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங் கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்கென்று எதனை அனுப்பியுள்ளது என்பதை கவனத்திற் கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்’’ எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக் காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யு மாறு கூறி)னார்கள்.

அப்போது “(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக் காசு, துணி, ஒரு “ஸாஉ’ கோதுமை, ஒரு “ஸாஉ’ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்‘’ என்று கூறி, “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை யேனும் தர்மம் செய்யட்டும்‘’ என்று வலியுறுத் தினார்கள்.

உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொரு வரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக் காசுகளிலிருந்தும்  ஆடைகளிலிருந்தும் ஒரு “ஸாஉ’ கோதுமையிலிருந்தும் ஒரு “ஸாஉ’ பேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது; ஏன் தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டி ருந்தனர்.

இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக்கொண்டிருப்பதையும் நான் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது.

அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு’’ என்று கூறினார்கள்.

(முஸ்லிம்: 1848)

மேற்படி செய்தியில் நபி(ஸல்) கடமையான தொழுகையை தொழுது முடிந்ததும், எழுந்து திக்ருகளுக்கு பதிலாக தர்மத்தை வலியுறுத்தி உரை நிகழ்த்தியுள்ளார்கள் என்றுள்ளது.

மேலும் பின்வரும் செய்தியில், தர்மப் பொருள் தன்னிடம் இருப்பதை நினைவுக்கூர்ந்த நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் தன் இல்லத்திற்கு சென்று அதை எடுத்து பகிர்ந்து கொடுக்க கட்டளையிட்டுள்ளார்கள் என்றுள்ளது.

صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ العَصْرَ، فَلَمَّا سَلَّمَ قَامَ سَرِيعًا دَخَلَ عَلَى بَعْضِ نِسَائِهِ، ثُمَّ خَرَجَ وَرَأَى مَا فِي وُجُوهِ القَوْمِ مِنْ تَعَجُّبِهِمْ لِسُرْعَتِهِ، فَقَالَ: «ذَكَرْتُ وَأَنَا فِي الصَّلاَةِ تِبْرًا عِنْدَنَا، فَكَرِهْتُ أَنْ يُمْسِيَ – أَوْ يَبِيتَ عِنْدَنَا – فَأَمَرْتُ بِقِسْمَتِهِ»

நான் நபி (ஸல்) அவர்களுடன் அஸ்ர் தொழுதேன். அவர்கள் சலாம் கொடுத்ததும் வேகமாக எழுந்து தமது துணைவியின் இல்லத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பினார்கள். தமது விரைவைக் கண்டு மக்கள் வியப்படைவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் “நான் தொழுதுகொண்டிருக்கும்போது எங்களிடம் இருந்த தங்கக்கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது எங்களிடம் ஒரு மாலைப்பொழுதோ, ஓர் இரவுப் பொழுதோ இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே அதைப் பகிர்ந்து வழங்குமாறு கட்டளையிட்டேன்’’  என விளக்கினார்கள்.

இதை உக்பா பின் ஹாரிஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 1221)

தொழுததும் திக்ரு செய்வதற்கு பதிலாக நபி(ஸல்) அவர்கள் எழுந்து சென்றுள்ளார்கள் என்று இச்செய்தி கூறுகிறது. இது போல் வேறு சில செய்திகளும் நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் திக்ரு செய்ததற்கு பதிலாக வேறு காரியங்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை நமக்கு சொல்கிறது.

தொழுகை முடித்ததும் சில திக்ருகளை செய்ய வலியுறத்திய நபி(ஸல்) அவர்கள் மேற்படி செய்திகளில் அதை செய்யாமல் வேறு காரியங்களில் ஏன் ஈடுபட்டுள்ளார்கள் என்பதற்கு அந்த செய்திகளிலேயே விடையிருக்கிறது. மிகவும் அவசியமான, அவசரமான சூழ்நிலையில் இதுபோல் நடந்துக் கொள்ளலாம் என்பதே அந்த விடையாகும்.

முளர் குலத்தைச் சேர்ந்த ஏழைகள் வந்தது தொடர்பான செய்தியில், அவர்களின் பஞ்சத்தை போக்க வேண்டும். மக்கள் திரண்டிருக்கும் இந்த சூழல்தான் அதற்கு சரியான தருணம் என்பதால் நபி(ஸல்) அவர்கள் தொழுகை முடிந்ததும் உரை நிகழ்த்தியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

தொழுகையை முடித்ததும் வீட்டிற்கு விரைந்து சென்ற செய்தியில், தர்மப்பொருள் நபி(ஸல்) அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் தடுக்கப்பட்டுள்து. தடுக்கப்பட்ட பொருள் தன்னிடத்தில் ஒரு மாலைப் பொழுதை கடப்பதை கூட நபி(ஸல்) அவர்கள் விரும்பவில்லை. அதனால் உடனே சென்று அதை பங்கிட கட்டளையிட்டுள்ளார்கள் என்று உறுதியாகிறது.

இதுபோன்ற அவசியமான விஷயம் என்றால், அப்போது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தான விஷயமான இந்த திக்ருகளுக்கு முன்னால் அந்த அறிவிப்புகள் செய்யலாம்.

வந்திருக்கும் ஏழைகளுக்கு தர்மம் செய்ய வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் செய்த அறிவிப்பும், தர்மப்பொருளை பங்கீட்டு கொடுக்க வேண்டும் என்ற கட்டளை அறிவிப்பும் இதற்கு சான்றாகவுள்ளது.

இதுபோன்றல்லாமல், அவசியமில்லாத விஷயங்களுக்கு இடம்கொடுத்து திக்ரு என்ற சுன்னத்தை விடுவதும் அதை செய்யும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் தவறாகும்.

சில இடங்களில், தொழுகை முடிந்ததும் குர்ஆன் வசனம் வாசிக்கப்படுகிறதே அதுவும் செய்யக்கூடாதா? என்ற கேள்வி நமக்கு தற்போது எழலாம்.

குர்ஆன் ஓதுவதும், அது ஓதப்படுவதை கேட்பதும் அதிகமான நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய விஷயங்கள்தான். எனினும் தொழுகை முடிந்தவுடன் செய்ய வேண்டிய சில குறிப்பிட்ட அமல்களைச் செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளதால் அதைச் செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

தொழுகை முடிந்தவுடன் இந்த திக்ருகளைச் செய்வதற்குப் போதுமான இடைவெளி விட்டு, அதற்குப் பின்னர் குர்ஆன் வசனத்தை வாசிப்பதே சிறந்தது. இவ்வாறு செய்வதன் மூலம் நபிவழியை நிறைவேற்றியவர்களாக ஆவதுடன் குர்ஆன் வசனங்களை ஓதிய நன்மையையும் பெறமுடியும்.