அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே!-1
அல்ஹம்துலில்லாஹ்
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
ஒவ்வொரு நாளும் நமது தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதத் துவங்கும் போது ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்கிறோம். ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் 33 முறை அல்ஹம்துலில்லாஹ் சொல்கிறோம். இரவில் உறங்கும் முன்பும் பிறரை சந்தித்துப் பேசுகையில் நாம் நலமுடன் இருக்கிறோம் என்பதைத் தெரிவிக்கவும் அல்ஹம்துலில்லாஹ் என்கிறோம்.
இப்படி அனுதினமும் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறும் நாம், அதன் பொருள், ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று புரிந்திருக்கிறோம். ஆனால் இந்த வார்த்தையில் பொதிந்திருக்கும் ஏராளமான விளக்கங்களையும் இந்த வார்த்தையை மொழிவதினால் நமக்குக் கிடைக்கும் இம்மை மறுமை பலன்களையும் அறிந்தால் அல்ஹம்துலில்லாஹ் என்ற அற்புத வார்த்தையை உளப்பூர்வமாக மொழியாமல் ஒருநாளும் இருக்கமாட்டோம்.
பல்வேறு ரகசியங்களை உள்ளடக்கிய இந்த வார்த்தையின் விளக்கத்தினையும் இதை எப்போது சொல்ல வேண்டும் என்பதையும் இதனால் நமக்குக் கிடைக்கும் நன்மைகளையும் விரிவாக இந்தத் தொடரில் அறிந்துகொள்வோம்.
அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்வதற்கான காரணங்கள்
- அல்லாஹ்வின் வல்லமையை வெளிப்படுத்திட,
- அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திட…
- புகழுக்குரியவன் அவனே! நாம் அல்ல என்பதை உணர்த்திட…
அல்லாஹ்வின் வல்லமையை வெளிப்படுத்த அல்ஹம்துலில்லாஹ் என்போம்!
இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தனக்கு அமையவிருக்கும் துணைவிக்குத் தகுதிகள் பலவற்றை எதிர்பார்க்கிறான். தனக்குக் கீழ் பணிபுரிபவனுக்குத் தகுதிகள் எதிர்பார்க்கிறான்.
இவ்வாறு அனைத்திலும் தகுதி தராதரங்களை எதிர்பார்க்கும் மனிதன் தன்னைப் படைத்த, பரிபாலிக்கின்ற, பாதுகாக்கின்ற, படுகுழிக்குப் போன பின் எழுப்பி விசாரிக்கின்ற இறைவன் பேராற்றல் மிக்கவனாக இருக்க வேண்டும், பலவீனங்களுக்கு அப்பாற்பட்டவனாக இருக்க வேண்டும், தேவைகளற்றவனாக இருக்க வேண்டும் என்ற தகுதியை மறந்துவிடுகிறான்.
அதன் விளைவாக ஊதுபத்தியிலும் சாம்பிராணிப் புகையிலும் கடவுள் மயங்கி விடுவார் என நம்புகிறான். தேங்காயும் வாழைப்பழமும் கடவுளுக்குத் தேவை என நினைக்கிறான். இசை வாத்தியங்களால் தூங்கும் கடவுளைத் தட்டி எழுப்பிடலாம் என நினைக்கிறான்.
கடவுளை, ஒரு பழத்திற்காகச் சண்டை போட்ட பங்காளிகளாகப் பார்க்கிறான். தீப ஆராதனைகளையும், சந்தனம், பால் அபிஷேகத்தையும் எதிர்பார்ப்பவர்களாகத் தனது கடவுளை நினைத்து வழிபடுகிறான்.
ஆனால் அல்லாஹ்வோ தன் படைப்புகளின் தேவைகளை நிறைவேற்றுபவனாக இருக்கிறானே தவிர படைப்புகளிடம் எதையும் எதிர்பார்ப்பவனாக இல்லை எனவும், அவன் பேராற்றல் மிக்கவன் எனவும், பலவீனத்திற்கு அப்பாற்பட்டவன் எனவும் அல்லாஹ் தனது திருமறையில் தெரிவிக்கின்றான்.
பலவீனத்திற்கு அப்பாற்பட்ட அவனே அனைத்துப் புகழுக்கும் தகுதியானவன் என்பதைப் பின்வரும் வசனங்களில் வர்ணிக்கிறான்.
اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ
الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ
مٰلِكِ يَوْمِ الدِّيْنِؕ
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன். அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். தீர்ப்பு நாளின் அதிபதி.
மேற்கண்ட வசனத்தில் படைத்தவன், அருளாளன், அன்பாளன், ஆட்சியாளன் ஆகிய நான்கு பண்புகளைக் கொண்ட அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்பது இதன் கருத்து. இந்நான்கு பண்புகளிலும் இறைவனுக்குரிய அனைத்து இலக்கணங்களும் அடங்கியுள்ளன.
இப்பண்புகளைப் பற்றிச் சரியாக அறிந்து கொள்ளும் எவரும் அல்லாஹ்வை முழுமையாகப் புரிந்து கொள்ளலாம். இந்த நான்கு பண்புகளுக்கும் சொந்தக்காரனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (அவன்) வானவர்களை இரண்டிரண்டு, மும்மூன்று, நான்கு நான்கு சிறகுகளைக் கொண்ட தூதர்களாக அனுப்புவான். அவன் நாடியதைப் படைப்பில் அதிகமாக்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
மனிதர்களுக்காக அல்லாஹ் திறந்து விட்ட எந்த அருளையும் தடுப்பவன் எவனும் இல்லை. அவன் தடுத்ததை அதற்குப் பின் அனுப்புபவனும் இல்லை. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
மனிதர்களே! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருளை எண்ணிப் பாருங்கள்! வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு அல்லாஹ்வைத் தவிர உணவளிக்கும் (வேறு) படைப்பாளன் உண்டா? அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எவ்வாறு நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்?
இறைவன் வானங்களையும் பூமியையும் வானவர்களையும் படைத்தவன், மனிதர்களுக்கு அருள் வழங்குபவன் என கடவுளுக்கு இருக்க வேண்டிய அனைத்துப் பண்புகளையும் உள்ளடக்கிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்!
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான். இருள்களையும், ஒளியையும் ஏற்படுத்தினான். பின்னரும் (ஏகஇறைவனை) மறுப்போர் தம் இறைவனுக்கு (மற்றவர்களை) சமமாக்குகின்றனர்.
அவனே உங்களைக் களிமண்ணால் படைத்தான். பின்னர் (மரணத்திற்கான) காலக்கெடுவை நிர்ணயித்தான். (திரும்ப உயிர்ப்பிக்கப்படுவதற்கு) குறிப்பிட்ட மற்றொரு காலக்கெடுவும் அவனிடத்தில் உள்ளது. பின்னரும் நீங்கள் சந்தேகப்படுகின்றீர்கள்!
வானங்களிலும் பூமியிலும் அவனே அல்லாஹ். அவன் உங்களின் இரகசியத்தையும், வெளிப்படையானதையும் அறிகிறான். நீங்கள் செய்பவற்றையும் அவன் அறிகிறான்.
மேற்கண்ட வசனங்களில் இறைவன் தனக்குரிய இலக்கணத்தை அழகாக விவரிக்கிறான்.
அல்லாஹ் தேவைகளற்றவன்
அல்லாஹ்வுக்குத் தூக்கம் தேவையில்லை, அல்லாஹ்வுக்குச் சோர்வு இல்லை, அல்லாஹ்வுக்கு மரணமில்லை, அல்லாஹ்வுக்கு மறதி இல்லை, அல்லாஹ்வுக்குப் பசி, தாகம் இல்லை, அல்லாஹ்வுக்கு உதவியாளன் இல்லை, அல்லாஹ்வுக்கு வீண் விளையாட்டு தேவை இல்லை, அல்லாஹ்வுக்கு மனைவி, மகன் போன்ற தேவைகள் இல்லை, அல்லாஹ்வுக்குப் பெண் மக்கள் தேவையில்லை, அல்லாஹ்வுக்குப் பெற்றோர் இல்லை.
அல்லாஹ் வல்லமை மிக்கவன்
அவனே அடுக்கடுக்கான ஏழு வானங்களையும் கண்ணுக்குத் தெரியாத தூண்களால் படைத்தவன். பூமியைப் படைத்து அதில் மனிதர்களை வாழச் செய்தவன். பூகம்பத்தால் மக்கள் அழிந்துவிடாமலிருக்க மலைகளை முளைகளாக நாட்டியவன். சுட்டெரிக்கும் சூரியனால் ஒளியூட்டியவன். இரவு பகலை மாறி மாறி வரச் செய்பவன்.
அண்டம் படைத்த நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கையைப் பன்னிரண்டாக நிர்னயித்தவன். மனிதனைப் பல நிறங்களில், மொழிகளில் வகைப்படுத்தியவன். மனிதனுக்கு மரம் செடி கொடிகளை வசப்படுத்தியவன். காய் கனிகளை அள்ளிக் கொடுத்தவன். மழையால் மண்ணையும் மனதையும் குளிர்வித்தவன். இப்படி அல்லாஹ்வின் எண்ணிலடங்கா அருளையும் அவனது வல்லமையையும் அடுக்கிக்கொண்டே போகலாம்.
இவ்வளவு பெரிய மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வை அறிந்த எவரும் அவனுக்கு இணைகற்பிக்க மாட்டார்கள்.
அல்லாஹ்வுக்கு இணையாக்குமளவிற்கு அந்தப் போலி தெய்வங்கள் யாவும் வல்லமை பெற்றவை அல்ல. அவை அனைத்தும் படைப்பினங்கள். பலவீனத்திற்கு உட்பட்டவைகள். அணுவைக் கூட படைக்க சக்தியற்றவைகள்.
நாம் நம்பி வழிபடும் இறைவன் எவ்வளவு பெரிய ஆற்றல் மிக்கவன்? அவனே படைத்து, வடிவமைத்து, படைப்பினங்களுக்குக் காலக் கெடுவை நேர்த்தியாக நிர்ணயித்து, மனிதர்களின் இரகசியத்தையும் வெளிப்படையானதையும் அனைத்தையும் அறிந்த வல்லோன் அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்!
இறைவனின் வல்லமையை உணர்ந்து, நபி (ஸல்) அவர்கள் காலையிலும் மாலையிலும் இரவிலும் அவனைப் போற்றிப் புகழ்ந்ததைப் பின்வரும் செய்திகளில் அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை ஓதுவார்கள்.
அஸ்பஹ்னா வஅஸ்பஹல் முல்(க்)கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்.
ரப்பிஅஸ்அலு(க்)க கைர மா ஃபீ ஹாதிஹில் லைலத்தி, வ கைர மா பஃதஹா, வஅவூது பி(க்)க மின் ஷர்ரி மா ஃபீ ஹாதிஹில் லைலத்தி, வ ஷர்ரிமா பஃதஹா, ரப்பி அவூது பி(க்)க மினல் கஸ்லி, வஸுயில் கிபரி, ரப்பி அவூது பி(க்)க மின் அதாபின் ஃபின்னாரி, வஅதாபின் ஃபில் கப்ரி.
இதன் பொருள்:
நாங்கள் காலைப் பொழுதை அடைந்து விட்டோம். காலை நேரத்து ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. அவனுக்கே ஆட்சி. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
இறைவா! இந்த இரவின் நன்மையையும், அதன் பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த இரவின் தீங்கை விட்டும் அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும், மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்:(முஸ்லிம்: 4901)
மாலையில் ஓதும் போது “அம்ஸைனா வ அம்ஸல் முல்கு லில்லாஹ்” என்று சொல்லிவிட்டு மேற்கண்ட துஆவை ஓதி அல்லாஹ்வைப் புகழ்வார்கள்.
நள்ளிரவிலும் நாயனைப் புகழ்ந்த நபிகள் நாயகம்
அல்லாஹும்ம ல(க்)கல் ஹம்து அன்(த்)த நூருஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி வமன் பீஹின்ன, வல(க்)கல் ஹம்து அன்(த்)த கையிமுஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி, வல(க்)கல் ஹம்து அன்தல் ஹக்கு, வ வஃது(க்)க ஹக்குன், வ கவ்லு(க்)க ஹக்குன், வலி(க்)காவு(க்)க ஹக்குன், வல் ஜன்ன(த்)து ஹக்குன், வன்னாரு ஹக்குன், வஸ்ஸாஅ(த்)து ஹக்குன், வன்னபிய்யூன ஹக்குன்,
வ முஹம்மதுன் ஹக்குன், அல்லாஹும்ம ல(க்)க அஸ்லம்(த்)து, வ அலை(க்)க தவக்கல்(த்)து, வபி(ஙி](க்)க ஆமன்(த்)து, வஇலை(க்)க அனப்(த்)து, வபி(ஙி](க்)க காஸம்(த்)து, வஇலை(க்)க ஹாகம்(த்)து ப[தி]க்பி[தி]ர் லீ மா கத்தம்(த்)து வமா அக்கர்(த்)து வமா அஸ்ரர்(த்)து வமா அஃலன்(த்)து அன்(த்)தல் முகத்திமு வஅன்(த்)தல் முஅக்கிரு லாயிலாஹ இல்லா அன்(த்)த வலா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹி
இதன் பொருள்:
இறைவா! உனக்கே புகழனைத்தும். வானங்களுக்கும், பூமிக்கும், அவற்றுக்கு இடைப்பட்டவைகளுக்கும் நீயே ஒளியாவாய். உனக்கே புகழனைத்தும். வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவைகளையும் நிர்வகிப்பவன் நீயே. உனக்கே புகழனைத்தும். நீயே மெய்யானவன். உனது வாக்குறுதி மெய்யானது. உன் சொல் மெய்யானது. உன்னை (நாங்கள்) சந்திப்பது மெய்யானது. சொர்க்கம் மெய்யானது. நரகமும் மெய்யானது. யுக முடிவு நாளும் மெய்யானது. நபிமார்கள் மெய்யானவர்கள். முஹம்மதும் மெய்யானவர். இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன்.
உன் மீது நம்பிக்கை வைத்தேன். உன்னையே நம்பினேன். உன்னிடமே மீள்கிறேன். உன்னைக் கொண்டே வழக்குரைக்கிறேன். உன்னிடமே தீர்ப்புக் கோருகிறேன். எனவே நான் முன் செய்தவைகளையும், பின்னால் செய்யவிருப்பதையும், நான் இரகசியமாகச் செய்ததையும், நான் வெளிப்படையாகச் செய்ததையும் மன்னிப்பாயாக. நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.
ஆதாரம்: (புகாரி: 6317) , 7429, 7442, 7499
அல்லாஹ்வின் வல்லமையை வெளிப்படுத்த நாள்தோறும் நபிகளார் ஓதிய துஆக்களை நாமும் ஓதுவோம்.