Life Insurance Banking Finance பணிகள் கூடுமா?
Health care, Life Insurance and Banking Finance சம்பந்தபட்ட சாஃப்ட்வேர் பணிகளை செய்து கொடுக்கலாமா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வட்டி தொடர்புடைய வேலைகளைச் செய்பவர்களை சபித்துள்ளார்கள்.
வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (3258)
நீங்கள் தயாரிக்கும் மென்பொருள் வட்டித் தொழிலுக்கு மட்டும் பயன்படக்கூடியதாக இருந்தால் அந்த பணியை நீங்கள் செய்துகொடுப்பது கூடாது.
உங்கள் மென்பொருள் மார்க்கம் அனுமதித்த இன்னும் பல விஷயங்களுக்கும் பயன்படக்கூடியதாக, பொதுவானதாக இருந்தால் அதை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் செய்து கொடுக்கலாம். உங்களிடமிருந்து இதை வாங்கியவர்கள் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்தினால் அதனால் உங்கள் மீது எந்த குற்றமும் ஏற்படாது.
உதாரணமாக, வங்கிகளுக்கு பீரோக்கள், ஸ்டேஸனரி பொருட்கள், டேபிள்கள், சேர்கள் விற்பனை செய்வது குற்றமாகாது. ஏனெனில் ஹலாலான பொருளைத் தான் அவர் விற்பனை செய்கிறார்.
நாம் விற்பனை செய்யும் பொருட்கள் ஹலாலாக இருக்கும் போது நம்மிடம் இருந்து அதனை விலைக்கும் வாங்குபவர் அதனைத் தடுக்கப்பட்ட காரியத்திற்குப் பயன்படுத்தினால் நாம் தீமைக்குத் துணை செய்தவராக ஆக மாட்டோம். எந்தத் தீய காரியத்திற்காகவும் ஒரு முஸ்லிம் துணை போகக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது.
‘நீங்கள் நல்ல காரியங்களுக்கும், இறையச்சத்திலும், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! தீய காரியத்திலும் வரம்பு மீறலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளக் கூடாது.
தீமையான காரியங்களுக்கு உதவக் கூடாது என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் யாருக்கும் இல்லை. தீமையான காரியங்களுக்கு உதவுவது என்பதைப் புரிந்து கொள்வதில் தான் கருத்து வேறுபாடு உள்ளது.
தீமைக்குத் துணை போகக் கூடாது என்று கூறும் மேற்கண்ட வசனத்தில் நன்மைக்கு உதவுமாறும் கூறப்படுகிறது. நன்மைக்கு உதவுதல் என்பதை எவ்வாறு புரிந்து கொள்கிறோமோ அவ்வாறு தான் தீமைக்குத் துணை செய்தல் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவர் பள்ளிவாசல் ஒன்றைக் கட்ட எண்ணுகிறார். அதற்கான வேலையிலும் ஈடுபடுகிறார். பள்ளிவாசல் கட்டுவது நல்ல காரியம் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தக் கட்டடத்திற்குத் தேவையான பொருட்களை ஒரு வணிகரிடம் அவர் வாங்குகிறார்.
பள்ளிவாசல் கட்டும் நல்ல பணிக்காக அந்த வணிகர் தமது சரக்குகளை விற்றதால் அவர் நன்மைக்குத் துணை செய்தவராக முடியாது. ‘இவர் தான் பள்ளிவாசல் கட்ட உதவியவர்’ என்று அவரைப் பற்றி நாம் குறிப்பிடுவதில்லை.
அந்த வணிகர் இலவசமாக அவற்றை வழங்கினால் அல்லது பள்ளிவாசல் கட்டும் பணி என்பதற்காக மற்ற எவருக்கும் விற்பதை விடச் சலுகை விலைகளில் வழங்கினால் மட்டுமே அவர் பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கு உதவினார் என்போம்.
ஒரு சிலை நிறுவுவதற்காக அதே வணிகரிடம் கட்டுமானப் பொருட்களை வாங்குகின்றனர். அந்த வணிகர் இலவசமாக அப்பொருளைக் கொடுத்தாலோ, அது சிறந்த பணி என்று கருதி விலையில் சலுகை அளித்தாலோ அப்போது அவர் தீமைக்குத் துணை செய்தவராவார். அவ்வாறு இல்லாமல் மற்ற பணிகளுக்கு விற்பது போல் அவர் விற்பனை செய்தால் அவர் தீமைக்குத் துணை போனவராக மாட்டார்.
‘நன்மையான காரியத்துக்கு உதவுதல்’ என்பதில் ‘உதவுதல்’ என்ற பதத்தை எந்தப் பொருளில் நாம் விளங்குகிறோமோ அதே பொருளில் தான் தீமையான காரியங்களுக்கு உதவுதல் என்பதற்கும் பொருள் கொள்ள வேண்டும். ஏனெனில் தீமைக்கு உதவக் கூடாது என்று சொல்வதற்கு ஆதாரமாகச் சமர்ப்பிக்கப்படும் 5:2 வசனம் தான் நன்மைக்கு உதவ வேண்டும் எனவும் கூறுகின்றது. இரண்டிலும் ஒரே வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் முக்கியமான நிபந்தனையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். விற்பனை செய்யப் படும் பொருள் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
பூவைப் பயன்படுத்துவதற்கு இஸ்லாம் தடை விதிக்கவில்லை. எனவே பூவை நாம் எவருக்கும் விற்கலாம். வாங்குபவர் அதைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு நாம் பொறுப்பாளியாக மாட்டோம்.
இலவசமாகவோ, மற்ற காரியங்களை விட சலுகை விலையிலோ வழங்கும் போது தான் எந்தக் காரியங்களுக்குப் பயன்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.
ஒரு ஜவுளிக் கடையில் துணி விற்பனை செய்யும் போது, வாங்கும் மனிதன் அதனைக் கற்சிலைக்கு அணிவிப்பதற்காகப் பயன்படுத்துவானோ? வேறு எதற்கும் பயன்படுத்துவானோ என்று நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
தேங்காய் வியாபாரி, தன்னிடம் வாங்கப்படும் தேங்காய்கள் சிலைகள் முன்னே உடைக்கப்படுமோ என்று புலன் விசாரணை செய்ய வேண்டியதில்லை.
ஒருவரின் வண்டியில் வாடகை கொடுத்து பயணிப்பவர் எந்த நோக்கத்திற்காகப் பயணிக்கிறார் என்பதை வண்டி ஓட்டுபவர் கவனிக்க வேண்டியதில்லை.
போர்க்களத்தில் அணிந்து கொள்ளும் தமது கவசத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் அடகு வைத்துள்ளார்கள்.
(புகாரி: 2068, 2096, 2200, 2251, 2252, 2386, 2509, 2513, 2916, 4467)
அந்தக் கவசம் அந்த யூதரால் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை.
உண்ணவும், பருகவும், பயன்படுத்தவும், வைத்திருக்கவும் எப்பொருட்களுக்கு இஸ்லாம் தடை விதித்து விட்டதோ அவற்றை மட்டுமே விற்கலாகாது.
நன்மை தீமை ஆகிய இரண்டு வழிகளிலும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ள பொருட்களை நாம் விற்க எந்தத் தடையும் இல்லை. வாங்குபவன் தீமைக்குப் பயன்படுத்துவதற்கு நாம் பொறுப்பாளியாக முடியாது.