அற்பமாகக் கருதாதீர்!
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
ஏக இறைவனால் அங்கீகரிக்கப்பட்டு, திருப்தி கொள்ளப்பட்ட இஸ்லாம் எனும் ஓர் உன்னத மார்க்கத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது, இறைவன் நமக்கு வழங்கிய வற்றாப் பேரருள் ஆகும். இம்மார்க்கத்தில் முஸ்லிம்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு நற்செயலுக்கும் அளவில்லாக் கூலி வழங்கப்படுகிறது. இந்தப் பாக்கியம் முஸ்லிமல்லாத வேறெவருக்கும் கிட்டுவதில்லை.
சக மனிதர்களை பார்த்துப் புன்னகைப்பது கூட ஒரு தர்மம் என்ற அளவிற்கு இறைவன் தனது அடியார்களுக்கு எல்லையில்லாக் கூலியை வழங்குகிறான்.
இதன் காரணமாகத் தான் நற்செயல்களில் சிறியது, பெரியது என்று பாகுபாடு காட்டி, எந்த ஒன்றையும் அற்பமாகக் கருதி விட வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் நபி (ஸல்) அவர்கள், “நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே’’ என்று கூறினார்கள்.
நூல்: (முஸ்லிம்: 5122)
இவ்வாறு கூறியதோடு மட்டுமல்லாமல் இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்கங்கள் முதற்கொண்டு சிறுசிறு அமல்கள் உட்பட அனைத்து விதமான நற்காரியங்களையும் வலியுறுத்தி, அதைச் செயல்படுத்தியும் காட்டியுள்ளார்கள்.
ஏந்தல் நபி வலியுறுத்திய நல்லமல்களில் ஒன்று தான் திக்ர் எனும் இறைவனை நினைவு கூர்தலாகும். இப்பண்பு இன்றைய காலத்தில் பெரும்பான்மையானவர்களிடம் இல்லாமலே போய்விட்டது.
திக்ர் செய்வதை சாதாரண ஒரு செயலாகக் கருதி நாம் அலட்சியம் செய்து விடுகிறோம். ஆனால் அல்லாஹ்வோ இதற்கென்று அளப்பரிய வெகுமதியை வாரிவழங்குகின்றான்.
எனவே நமது அலட்சியம் நீங்க வேண்டும் என்பதற்காகவும், சிறு அமலையும் நாம் அற்பமாகக் கருதிவிடக் கூடாது என்பதற்காகவும், இறைவனை நினைவு கூர்வதால் கிடைக்கும் பிரதிபலனை இங்கே இந்த உரையில் காண்போம்…
தனது அடியார்கள் ஒவ்வொரு தருணத்திலும் தன்னை நினைவு கூர வேண்டும் என்றும், அவ்வாறு அவனை நினைத்துத் துதிப்பது இவ்வுலகில் நாம் செய்யும் அனைத்து நற்காரியங்களை விடவும் உயர்வானது என்றும் தனது திருக்குர்ஆனில் இறைவன் கூறுகின்றான்.
அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: என்னைக் குறித்து என் அடியான் எப்படி நினைக்கிறானோ அப்படியே நான் அவனிடம் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவுகூரும்போது அவனுடன் நான் இருப்பேன்.
அவன் தனது உள்ளத்தில் என்னை நினைவுகூர்ந்தால், நானும் எனது உள்ளத்தில் அவனை நினைவுகூருவேன். என்னை ஓர் அவையோர் மத்தியில் அவன் நினைவுகூர்ந்தால், அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையோரிடம் அவனை நான் நினைவுகூருவேன்.
அவன் என்னை ஒரு சாண் அளவு நெருங்கினால், நான் ஒரு முழம் அளவு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவு என்னை நெருங்கினால், (வலமாகவும் இடமாகவும் விரிந்த) இரு கைகளின் நீட்டளவு அவனை நான் நெருங்குவேன். என்னை நோக்கி அவன் நடந்துவந்தால், அவனை நோக்கி நான் ஓடிச்செல்வேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: (முஸ்லிம்: 5195)
என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்!
இறைவன் நம்மை நினைக்கிறான் என்றால் நாம் நினைப்பது போன்று அல்ல. நாம் இறைவனைப் புகழ்ந்து, துதித்து அவனை அழைக்கும் போது அதற்காக நன்மையை வழங்குகிறான் என்பதாகும்.
மக்கள் தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற வணக்கங்களில் காட்டும் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் திக்ர் செய்வதில் காண முடிவதில்லை. பிரச்சாரங்களில் கூட மேற்சொன்ன வணக்கங்கள் வலியுறுத்தப்படும் அளவிற்கு இது வலியுறுத்தப்படுவதும் இல்லை. இதில் ஏகத்துவவாதிகளும் விதிவிலக்கு இல்லை.
ஆனால் அல்லாஹ்வோ எந்த நிலையிலும் தன்னை நினைவுற வேண்டும் என வலியுறுத்துகின்றான்.
நீங்கள் தொழுகையை முடித்ததும் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினையுங்கள்!
இறைவனைப் புகழ்ந்து, துதித்து, தூய்மைப்படுத்துவதற்கென்று நபி (ஸல்) அவர்கள் அழகிய திருநாமங்களையும் கற்றுத் தந்து, அதற்கான கூலியையும் குறிப்பிட்டுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப் படும்) தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவையுமாகும். (அவை:)
சுப்ஹானல்லாஹில்அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி.
பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கின்றேன்.
நூல்: (புகாரி: 6406) ,(முஸ்லிம்: 381)
இலகுவான இரு வார்த்தைகளை மொழிவதன் மூலம் அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதோடு, மீஸான் என்ற தராசுத் தட்டிலும் எடை கனத்து சுவனத்திற்குக் கொண்டு செல்லும் என்பதை இந்த ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன.
அபூமூசா அப்தில்லாஹ் பின் கைஸ் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நாங்கள் கைபர் பயணத்தில் இருந்த போது) நபி (ஸல்) அவர்கள் ஒரு ‘குன்றில்’ அல்லது ‘மேட்டில்’ ஏறலானார்கள். அதன் மீது ஏறியபோது ஒரு மனிதர் உரத்த குரலில் “லாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்’’ – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன் – என்று முழங்கினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது கோவேறு கழுதையில் இருந்தபடி, “(மெதுவாகக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேளாதவனையோ இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை’’ என்று கூறினார்கள்.
பிறகு, “அபூமூசா!’ அல்லது ‘அப்துல்லாஹ்!’ (என்று என்னைக் கூப்பிட்டு) “சொர்க்கத்தின் கருவூலமான ஒரு வார்த்தையை உமக்கு நான் அறிவித்துத் தரட்டுமா?’’ என்று கேட்டார்கள். நான், “ஆம் (அறிவித்துத் தாருங்கள்)’’ என்று கூறினேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (அல்லாஹ்வின் உதவியின்றி பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ, நல்லறங்கள் புரிய வலிமை பெறவோ மனிதனால் இயலாது)’’ என்று சொன்னர்கள்.
நூல்: (புகாரி: 6409)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர் –
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ்அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமையுள்ளவன்’’ என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்கின்றாரோ அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமாமா(க நற்பலன் பெற்றுக்கொடுப்பதா)கும்.
மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரது கணக்கிலிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். மேலும், அந்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும்.
மேலும், அவர் புரிந்த இந்த நற்செயலைவிடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான (தடவைகள் இதை ஓதினால், அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: (புகாரி: 6403) ,(முஸ்லிம்: 5221)
நபி (ஸல்) அவர்கள், ‘மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஊடுருவியுள்ளான்’ என்றார்கள்.
(நூல்: (புகாரி: 7171))
அப்படிப்பட்ட ஷைத்தானின் ஊசலாட்டத்திற்கு ஆட்படும் போது தான் நாம் தீமைகளை அதிகமதிகம் செய்கிறோம். மேற்கூறிய வார்த்தைகளைக் கூறுவதன் மூலம் ஒவ்வொரு நாளும் ஷைத்தானிடமிருந்து விடுதலை பெறும் அரிய வாய்ப்பை அல்லாஹ் வழங்குகிறான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவருடைய தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!’’
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: (புகாரி: 6405)
நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? அதை நீங்கள் கடைப்பிடித்தால் (இந்த சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்ட(செல்வர்)ர்களையும் நீங்கள் பிடித்து விடலாம். உங்களுக்குப் பின்னால் வரும் எவராலும் உங்களை பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களிடையே வாழ்கிறீர்களோ அவர்களில் சிறந்தவர்கள் ஆவீர்கள். உங்களைப் போன்று மற்றவரும் அதைச் செயல்படுத்தினால் தவிர. (அந்தக் காரியமாவது:)
நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 தடவை தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்) சொல்லுங்கள்; 33 தடவை தஹ்மீத் (அல்ஹம்துலில்லாஹ்) கூறுங்கள்; 33 தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்லுங்கள்’’ என்று கூறினார்கள்.
நாங்கள் இது தொடர்பாகக் கருத்து வேறுபாடு கொண்டோம். எங்களில் சிலர் ‘‘சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை கூறவேண்டும்’’ என்றனர். ஆகவே நான் நபி (ஸல்) அவர்களிடமே திரும்பி(ச் சென்று இதுபற்றி வினவி)னேன்.
நபியவர்கள், “சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி, வல்லாஹு அக்பர் (அல்லாஹ் தூயவன்; அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்; அல்லாஹு மிகப் பெரியவன்) என்று 33 தடவை சொல்! இதனால் அவற்றில் ஒவ்வொன்றும் 33 தடவை கூறியதாக அமையும்’’ என்று பதிலளித்தார்கள்.
நூல்: (புகாரி: 843)
மேற்கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் கூறித் துதிப்பதன் மூலம் நாம் ஏகப்பட்ட நன்மைகளைக் கொள்ளையடித்துவிட முடியும். நாமோ இதை உணராமல் தஸ்பீஹ் செய்வது எல்லாம் முதியவர்களுக்கு மட்டுமே உரிய அமலைப் போன்று ஓரம் கட்டி வைத்து விட்டோம்.
உண்மையில் நன்மை செய்வதாயினும், தீமை செய்வதாயினும் அதற்கு ஏற்ற பருவம் இளமைப் பருவமே! கிடைக்கின்ற நேரங்களை எல்லாம் வீண் பேச்சிலும் வெட்டி அரட்டையிலும் ஈடுபட்டுக் கழிக்கின்ற நாம் நன்மை செய்யும் வாய்ப்பை இழந்து விடுகின்றோம். தீமைகளை அதிகமாகச் சேமிக்கின்றோம்.
இறைவனின் நினைவு நமது உள்ளத்தில் குடி கொண்டு விட்டால் தீமைகள் கட்டுக்குள் வந்துவிடும். நாம் அற்பமாகக் கருதும் திக்ர் என்ற இந்த அமல் அதற்குச் சிறந்த வழியாகும். நன்மைகளின் மூலம் தீமைகளை அழிக்க முடியும் என்றே திருக்குர்ஆனும் கூறுகின்றது.
நல்லதைக் கொண்டு கெடுதியைத் தடுப்பீராக! அவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம்.
திக்ர் என்றவுடனே நமக்கு நினைவுக்கு வருவது, கூட்டமாகச் சேர்ந்து கொண்டு ஹூ ஹூ ஹை, ஹக் தூ ஹக் என்று சப்தம் போட்டுக் கொண்டே ஆட்டம் போடுவது தான்.
ஷாதுலிய்யா திக்ரு, ஜலாலியா திக்ரு, ரிபாயிய்யா திக்ரு என்ற பெயர்களில் இப்படி ஆட்டம் போடுவதைத் தான் திக்ர் என்று சிலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தினர் திக்ர் என்ற பெயரில் அல்லாஹ்வின் பெயரைத் திரித்து, வரம்பு மீறிப் பாவம் செய்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களைப் போன்றே திக்ர் செய்வதும் இறைவனுக்காகச் செய்யக்கூடிய ஒரு வணக்கமாகும். எனவே இதில் பணிவுடனும் பயபக்தியுடன், இறைவனைத் துதிக்கிறோம் என்ற அச்சத்துடனும் இந்த வணக்கத்தை நாம் செய்ய வேண்டும். தன்னை நினைவு கூர வேண்டும் என்று கட்டளையிடும் தனித்தவனாகிய அல்லாஹ், அதற்கான வழிமுறையையும் கற்றுத் தருகிறான்.
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!
இதுதான் இறைவன் நமக்குக் கற்றுத்தரும் வழிமுறையாகும். இதற்கு மாற்றமாக, சப்தமிட்டு திக்ர் என்ற பெயரில் ஆட்டம் போடுபவர்கள் பாவத்தையே சம்பாதிக்கின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் ஓரிடத்தில் அமர்ந்து வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும்போது, அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். அவர்களை இறையருள் போர்த்திக்கொள்கிறது. அவர்கள் மீது அமைதி இறங்குகிறது. அவர்களைக் குறித்து அல்லாஹ் தன்னிடம் இருப்போரிடம் நினைவுகூருகிறான்.
இதை அபூஹுரைரா (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
நூல்: (முஸ்லிம்: 5232)
இவ்வுலகத்தில் நாம் செய்யும் வணக்க வழிபாடுகளாயினும், இதர விஷயங்களாயினும், நமக்கு ஏற்படும் கஷ்டங்களைச் சகித்துக் கொள்வதாயினும் இவை அனைத்துமே மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே! இதில் முஸ்லிம்களில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. மறுமையில் திருப்தியான வாழ்வு அமைய வேண்டும் என்றால் நன்மையின் எடை கனமானதாக இருக்க வேண்டும்.
فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَٰئِكَ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ فِي جَهَنَّمَ خَالِدُونَ
எவரது எடைகள் கனமாகி விட்டனவோ அவர்களே வெற்றி பெற்றோர். எவரது எடைகள் இலேசாகி விட்டனவோ அவர்கள் தமக்குத் தாமே நட்டத்தை ஏற்படுத்தினர். நரகத்தில் நிரந்தரமாக இருப்பார்கள்.
யாருடைய எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர் திருப்தியான வாழ்க்கையில் இருப்பார். யாருடைய எடைகள் இலேசாக உள்ளனவோ அவர் தங்குமிடம் ஹாவியாவாகும்.
மேலும் இறைவனை நினைவுகூரும் நல்லடியார்களே வெற்றியாளர்கள் என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா செல்லும் சாலையில் பயணம் மேற்கொண்டபோது ‘ஜும்தான்’ எனப்படும் மலையொன்றைக் கடந்து சென்றார்கள். அப்போது, “செல்லுங்கள்: இது ‘ஜும்தான்’ மலை ஆகும். தனித்துவிட்டவர்கள் வெற்றி பெற்றனர்’’ என்று சொன்னார்கள்.
மக்கள், “தனித்துவிட்டவர்கள் என்போர் யார், அல்லாஹ்வின் தூதரே?’’ என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் நினைவுகூரும் பெண்களும் ஆவர்’’ என்று பதிலளித்தார்கள்.
நூல்: (முஸ்லிம்: 5197)
நம்மிடம் அரிதாகிப் போன ‘திக்ர்’ என்ற நல்அமலை நாள்தோறும் செய்வதன் மூலம் நன்மையின் எடையை அதிகரித்து, மறுமையில் வெற்றி பெறும் பாக்கியத்தை நமக்கு அல்லாஹ் தந்தருள்வானாக!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.