இதயங்களை ஈர்த்த இனிய குர்ஆன்!

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

இதயங்களை ஈர்த்த இனிய குர்ஆன்!

அல்குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட போது மக்காவில் உள்ள இறைமறுப்பாளர்கள் அந்தக் குர்ஆனை மக்கள் செவியுற்று விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.

وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَا تَسْمَعُوْا لِهٰذَا الْقُرْاٰنِ وَالْغَوْا فِيْهِ لَعَلَّكُمْ تَغْلِبُوْنَ

“இக்குர்ஆனைக் கேளாதீர்கள்! நீங்கள் மிகைப்பதற்காக அதில் (குழப்புவதற்காக) வீணான காரியம் செய்யுங்கள்!’’ என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.

(அல்குர்ஆன்: 41:26)

இதை நாம் அபூபக்ர் (ரலி) அவர்களின் வாழ்க்கையில் பார்க்க முடிகின்றது. அதை புகாரி ஹதீஸிலிருந்து பார்ப்போம்:

அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்காவிலிருந்து வெளியேற எண்ணிய போது, இப்னு தஃகினா என்பவர் அவருக்கு அடைக்கலம் கொடுத்து, திரும்ப அழைத்து வந்தார்.

(குரைஷிகள்) இப்னு தஃகினாவை நோக்கி, “அபூபக்ர், தமது இல்லத்திற்குள்ளேயே தமது இறைவனை வணங்கவோ, தொழுகவோ, தாம் விரும்பியதை ஓதவோ செய்யட்டும். ஆனால், இவற்றின் மூலம் எங்களுக்கு இடையூறு செய்யவோ இவற்றை பகிரங்கமாகச் செய்வதோ கூடாது. ஏனெனில் எங்கள் மனைவி மக்கள் (புதிய மத நம்பிக்கை மற்றும் வணக்க வழிபாட்டு முறைகளைப் பார்த்து) குழப்பமடைந்து விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்று அவரிடம் கூறிவிடுங்கள்’’ என்று சொன்னார்கள். அ(வர்கள் கூறியதை இப்னு தஃகினா அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார்.

அதன்படி அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது இல்லத்திற்குள் தம்முடைய இறைவனை வணங்கியும், தமது தொழுகையை பகிரங்கப்படுத்தாமலும் தமது வீட்டுக்கு வெளியில் (திருக்குர்ஆன் வசனங்களை) ஓதாமலும் (அவர்கள் விதித்த நிபந்தனைப்படி) இருந்து வந்தார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (மாற்று யோசனை) தோன்றியது. தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அதில் தொழுது கொண்டும் திருக்குர்ஆனை ஓதியும் வந்தார்கள்.

அப்போது, இணை வைப்பவர்களின் மனைவி, மக்கள் அபூபக்ர் அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு (அவர்களை பார்ப்பதற்காக) அவர்கள் மீது முண்டியடித்து விழுந்தனர். அபூபக்ர் (ரலி) அவர்கள் குர்ஆன் ஓதும் போது தமது கண்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகமாக அழக்கூடியவராக இருந்தார்கள். இந்த நடவடிக்கை (தங்களது இளகிய இதயம் படைத்த மனைவி மக்களை மதம் மாறச் செய்து  விடுமோ என்ற அச்சம்) இணைவைப்பவர்களான குறைஷிகளை பீதிக்குள்ளாக்கியது.

அதனால் அவர்கள் இப்னு தஃகினாவிடம் ஆளப்பினர். அவரும் குறைஷிகளிடம் வந்தார். அப்போது அவர்கள், “அபூபக்ர் தமது இல்லத்திற்குள்ளேயே தமது இறைவனை வழிபட்டுக் கொள்ளட்டும் என்று (நிபந்தனையிட்டு) அவருக்கு நீங்கள் அடைக்கலம் தந்ததன் பேரிலேயே நாங்கள் அவருக்கு அடைக்கலம் தந்தோம். அவர் அதை மீறி விட்டு தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அந்த இடத்தில் பகிரங்கமாக தொழுதுகொண்டும், (குர்ஆனை) ஓதிக் கொண்டும் இருக்கிறார். நாங்கள் எங்கள் மனைவி மக்கள் குழப்பத்திற்குள்ளாகி விடுவார்களோ என்று அஞ்சுகிறோம். எனவே அபூபக்ரைத் தடுத்து வையுங்கள்.

அவர் அவரது இறைவனை தமது இல்லத்தில் வணங்குவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ள விரும்பினால் அவ்வாறு செய்யட்டும். அவர் அதை மறுத்து பகிரங்கப்படுத்தவே செய்வேன் என்றால் அவரிடம் உமது (அடைக்கலப்) பொறுப்பைத் திரும்பத் தருமாறு கேளுங்கள். ஏனெனில், (உங்களது உடன்பாட்டை முறித்து) உங்களுக்கு நாங்கள் மோசடி செய்வதை வெறுக்கிறோம். (அதே சமயம்) அபூபக்ர் (அவற்றை) பகிரங்கமாகச் செய்ய நாங்கள் அனுமதிக்கவும் மாட்டோம்’’ என்று கூறினர்.

இப்னு தஃகினா அபூபக்ர் அவர்களிடம் வந்து, “நான் எதன் பேரில் உங்களிடம் ஒப்பந்தம் செய்தேன் என்பதை தாங்கள் அறிவீர்கள். ஆகவே ஒன்று, அதனோடு மட்டும் நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். அல்லது எனது (அடைக்கலப்) பொறுப்பை  என்னிடம் திரும்பத் தந்து விடவேண்டும். ஏனென்றால் நான்  உடன்படிக்கை செய்து கொண்ட ஒரு மனிதரின் விஷயத்தில் நான் ஏமாற்றப்பட்டேன் என்று அரபுகள் கேள்விப்படுவதை நான் விரும்ப மாட்டேன்’’ என்று கூறினார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “உமது அடைக்கலத்தை உம்மிடமே திரும்பத் தந்து விடுகிறேன். அல்லாஹ்வின் அடைக்கலம் குறித்து  நான் திருப்திப்படுகிறேன்’’ என்று கூறினார்கள்.

நூல்: (புகாரி: 3906) 

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஓதுகின்ற குர்ஆனைக் கேட்டு, தங்கள் மனைவிமார்கள் இஸ்லாத்திற்கு மாறி விடுவார்களோ என்று குரைஷிகள் குலை நடுங்கியதையும், அதற்காக அவர்கள் எடுத்த தீவிரத் தடுப்பு நடவடிக்கைகளையும் இந்த ஹதீஸ் எடுத்துக் காட்டுகின்றது.

மக்கத்து குரைஷிகள் போட்ட அத்தனை தடுப்பணைகளையும் தாண்டி குர்ஆனின் சீர்மிகு வசனங்கள் மக்களின்  செவிப்பறைகளில் சீறிப்பாய்ந்து ரீங்காரமிட்டன. இதயங்களைக் கொள்ளை கொண்டன. அதற்கு சில எடுத்துக் காட்டுகளை பார்ப்போம்:

கவிஞரைக் கவர்ந்த காந்தமிகு குர்ஆன்

அபூதர் (ரலி) இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பாகவே தனக்குத் தெரிந்த வழிமுறையில் இறைவனை ஏதோ ஒரு விதத்தில் தொழுது கொண்டிருந்தார்கள். உனைஸ் (ரலி) என்பவர் அவர்களின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். உனைஸ்  (ரலி) ஒரு கவிஞர் ஆவார். ஓர் அலுவல் நிமித்தமாக அவர் மக்காவுக்குச் செல்கின்றார். அது தொடர்பாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிப்பதைக் கேட்போம்:

என்னிடம் (எனது சகோதரன்) உனைஸ், “நான் ஓர் அலுவல் நிமித்தம் மக்காவுக்குச் செல்கிறேன். ஆகவே, நீர் (என் பணிகள் எல்லாவற்றையும்) கவனித்துக் கொள்வீராக” என்று கூறிவிட்டு, மக்காவுக்குச் சென்றார். பின்னர் தாமதமாகவே உனைஸ் என்னிடம் திரும்பி வந்தார். அப்போது அவரிடம் நான், “(இத்தனை நாட்கள்) என்ன செய்தாய்?” என்று கேட்டேன். அதற்கு உனைஸ், “நீர் கடைப்பிடிக்கும் மார்க்கத்தில் இருக்கும் ஒரு மனிதரை மக்காவில் சந்தித்தேன். அவர் “அல்லாஹ்தான் தம்மைத் தூதராக அனுப்பியுள்ளான்” என்று கூறுகிறார்” என்று சொன்னார்.

நான், “மக்கள் என்ன சொல்கிறார்கள்?” என்று கேட்டேன். அதற்கு உனைஸ், “(அவர் ஒரு) கவிஞர், சோதிடர், சூனியக்காரர் என்று சொல்கிறார்கள்” என்றார்.

ஆனால், கவிஞர்களில் ஒருவராக இருந்த உனைஸ் கூறினார்:

நான் சோதிடர்களின் சொற்களைச் செவியுற்றுள்ளேன். ஆனால், இவரது சொல் சோதிடர்களின் சொற்களைப் போன்றில்லை. அனைத்து வகையான கவிதைகளோடும் அவருடைய சொற்களை நான் ஒப்பிட்டுப் பார்த்து விட்டேன். வேறு எந்தக் கவிஞரின் நாவும் அந்த மனிதரின் சொற்களைக் கவிதை என ஏற்காது. அல்லாஹ்வின் மீதாணையாக! நிச்சயமாக அவர் ஓர் உண்மையாளர். அந்த மக்கள் தான் பொய்யர்கள்.

பிறகு நான் (என் சகோதரர் உனைஸிடம்), “இனி (என் பணிகளை) நீர் கவனித்துக் கொள்வீராக! நான் சென்று (அவரைப்) பார்த்துவிட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு மக்காவுக்குச் சென்றேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (கஅபாவுக்கு) வந்து “ஹஜருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிட்டுவிட்டு, கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். அவர்களுடன் அவர்களுடைய நண்ப(ர் அபூபக்)ரும் சுற்றி வந்தார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், நானே முதலில் (சென்று) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! அஸ்ஸலாமு அலைக்க! (உங்களுக்குச் சாந்தி உண்டாகட்டும்)” என இஸ்லாமிய முகமன் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வ அலைக்க, வ ரஹ்மத்துல்லாஹ் (அவ்வாறே உங்களுக்கும் சாந்தியும் இறையருளும் கிடைக்கட்டும்)” என்று பதில் சொன்னார்கள்.

பிறகு “நீங்கள் யார்?” என்று கேட்டார்கள். நான், “ஃகிஃபார் குலத்தைச் சேர்ந்தவன்” என்று பதிலளித்தேன். நான் அவ்வாறு (என் குலத்தாரின் பெயரைக்) கூறியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் (கை) விரல்களைத் தமது நெற்றியின்மீது வைத்தார்கள். அப்போது நான் எனக்குள்ளே, “நான் ஃகிஃபார் குலத்தாரோடு இணைத்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதை அவர்கள் வெறுக்கிறார்கள்” என்று நினைத்துக் கொண்டேன்.

பிறகு (அன்போடு) அவர்களது கரத்தைப் பற்றிக் கொள்ளப் போனேன். ஆனால், அவர்களுடைய நண்பர் (அபூபக்ர்) என்னைத் தடுத்துவிட்டார். அல்லாஹ்வின் தூதரைப் பற்றி என்னை விட அவரே நன்கறிந்தவராக இருந்தார்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தி, “எத்தனை நாட்களாக இங்கிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “இரவு பகலென முப்பது நாட்களாக இங்கிருந்து கொண்டிருக்கிறேன்” என்று சொன்னேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இத்தனை நாட்களாக) உமக்கு உணவளித்து வந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “ஸம்ஸம் தண்ணீரைத் தவிர வேறெந்த உணவும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும், என் வயிற்றின் மடிப்புகள் அகலும் அளவுக்கு நான் பருமனாகி விட்டேன். என் ஈரலில் பசிக்கொடுமை தெரியவில்லை” என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது (ஸம்ஸம்) பரகத் மிக்கதாகும். அது (ஒரு வகையில்) வயிற்றை நிரப்பும் உணவாகும்“ என்று சொன்னார்கள்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவருக்கு இன்றிரவு உணவளிக்க எனக்கு அனுமதி அளியுங்கள்” என்று கேட்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும் சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் கதவைத் திறந்து எங்களுக்காக “தாயிஃப்” நகர உலர்ந்த திராட்சையை அள்ளித் தரலானார்கள். அதுவே நான் மக்காவில் உண்ட முதல் உணவாகும். பின்னர் இதே நிலையில் சில நாட்கள் இருந்தேன்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், பேரீச்சந்தோட்டங்கள் நிறைந்த ஒரு பூமி எனக்கு (கனவில்) காட்டப்பட்டது. அது “யஸ்ரிப்” (மதீனா) என்றே நான் கருதுகிறேன். ஆகவே, நீங்கள் என்னைப் பற்றி(ய செய்தியை) உங்கள் குலத்தாரிடம் கொண்டு போய்ச் சேர்ப்பீர்களா? அல்லாஹ் உங்கள் மூலம் அவர்களுக்குப் பயனளிக்கக்கூடும். (நல்வழி அடைந்தால்) அவர்களுக்காக உங்களுக்கும் அவன் பிரதிபலன் அளிப்பான்” என்று கூறி (என்னை அனுப்பி)னார்கள்.

ஆகவே, நான் (என் சகோதரர்) உனைஸிடம் திரும்பிச் சென்றேன். அப்போது உனைஸ் “நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்று கேட்டார். “நான் இஸ்லாத்தை ஏற்று, (அதை) உண்மையென நம்பினேன்” என்று கூறினேன். உனைஸ், “(நீங்கள் ஏற்றுள்ள) உமது மார்க்கத்தைப் புறக்கணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. நானும் இஸ்லாத்தை ஏற்று, (அதை) உண்மையென நம்புகிறேன்” என்று கூறினார்.

பிறகு நாங்கள் எங்கள் தாயாரிடம் சென்றோம். (நாங்கள் இஸ்லாத்தைத் தழுவிய விவரத்தைக் கூறினோம்.) அப்போது என் தாயார், “உங்கள் மார்க்கத்தைப் புறக்கணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. நானும் இஸ்லாத்தைத் தழுவி, (அதை) உண்மையென நம்புகிறேன்” என்று கூறினார்.

பிறகு நாங்கள் எங்கள் வாகனத்தில் ஏறி எங்கள் “ஃகிஃபார்” குலத்தாரைச் சென்றடைந்தோம். அவர்களில் பாதிப்பேர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு அய்மா பின் ரஹளா அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் முன்னின்று தொழுகை நடத்தினார்; அவரே அம்மக்களுக்குத் தலைவராக இருந்தார்.

ஃகிஃபார் குலத்தாரில் இன்னும் பாதிப் பேர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வரும்போது நாங்கள் இஸ்லாத்தை ஏற்போம்’’ என்று கூறினர். அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, எஞ்சியிருந்த பாதிப்பேரும் இஸ்லாத்தை ஏற்றனர்.

அஸ்லம் குலத்தார் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) சென்று, “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் சகோதரக் குலத்தார் எந்த அடிப்படையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்களோ அதே அடிப்படையில் நாங்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோம்’’ என்று கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(பெயருக்கேற்பவே) ஃகிஃபார் குலத்தாரை அல்லாஹ் மன்னித்து விட்டான்; அஸ்லம் குலத்தாரைப் பாதுகாப்புப் பெற்றவர்களாக ஆக்கிவிட்டான்” என்று கூறினார்கள். (ஹதீஸ் சுருக்கம்)

நூல்: (முஸ்லிம்: 4878) (4520)

நபி (ஸல்) அவர்களைப் பற்றிய அடையாளத்தைக் கேட்ட மாத்திரத்தில் அடி உதைகள் அபூதர் (ரலி)க்கு விழுகின்றன. அத்தனையையும் தாங்கிக் கொண்டு கஅபாவே கதியாக ஹரமில் அடைக்கலமாகக்  கிடந்தார்கள். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு தான் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கின்றார்கள். அவர்களைச் சந்திப்பதற்குக் காரணமானவர்  கவிஞரான அவரது  சகோதரர் உனைஸ் (ரலி) தான்.

கவித்துவமிக்க அவர் திருக்குர்ஆனை கவிதை உரை கல்லில் உரைத்து பார்க்கின்றார். அது கவிதை அல்ல; இறை வசனமே என்று அவருக்கு தெளிவாகியது.

இவர்கள் அனைவரையும் இந்த இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தது எது? இழுத்தது எது? அல்குர்ஆன்  என்ற கவின்மிகு காந்தசக்தி தான்!

ஜுபைர் பின் முத்இமை ஈர்த்த குர்ஆன்

நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் ‘அத்தூர்’ எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதக் கேட்டேன். “(படைப்பாளன்) யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்து விட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா? அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? இல்லை; இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை. உங்கள் இறைவனின் கருவூலங்கள் இவர்களிடம் உள்ளனவா? அல்லது (அவற்றின் மீது) இவர்கள் தாம் ஆதிக்கம் செலுத்துபவர்களா?’’ எனும் இந்த (அல்குர்ஆன்: 52:35-,36,37) ஆகிய) வசனங்களை நபி அவர்கள் ஓதியபோது, என் இதயம் பறந்து விடுமளவுக்குப் போய்விட்டது என ஜுபைர் பின் முத்இம் (ரலி) அறிவிக்கின்றார்கள்

நூல்: (புகாரி: 4854) 

سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَقْرَأُ فِي المَغْرِبِ بِالطُّورِ، وَذَلِكَ أَوَّلَ مَا وَقَرَ الإِيمَانُ فِي قَلْبِي»

நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் “அத்தூர்’ (என்னும் 52-வது) அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருக்க நான் கேட்டேன். இது தான் இறைநம்பிக்கை எனது இதயத்தில் இடம் பிடித்த முதல் சந்தர்ப்பமாகும் என ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.

நூல்: (புகாரி: 4023) 

இந்தக் குர்ஆன், ஜுபைர் பின் முத்இமின் இதயத்தைச் சுண்டி இழுத்து  விடுகின்றது. இறுதியில், அது அவரை இஸ்லாத்திலேயே இணைத்து விடுகின்றது. அந்த அளவுக்கு அல்குர்ஆன்  அவரது இதயத்தை ஆட்கொண்டது.

அதைத் தான் உலகத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள்,

مَا مِنَ الأَنْبِيَاءِ نَبِيٌّ إِلَّا أُعْطِيَ مَا مِثْلهُ آمَنَ عَلَيْهِ البَشَرُ، وَإِنَّمَا كَانَ الَّذِي أُوتِيتُ وَحْيًا أَوْحَاهُ اللَّهُ إِلَيَّ،

“ஒவ்வொரு இறைத்தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்’’ என்று குறிப்பிட்டார்கள்.

நூல்: (புகாரி: 4981) , 7274