ஒரு பரேலவிச இதழின் புளுகு மூட்டைகள்

முக்கிய குறிப்புகள்: முக்கிய ஆய்வுகள்

ஒரு பரேலவிச இதழின் புளுகு மூட்டைகள்

இஸ்லாத்திற்கு எதிரான சமாதி வழிபாட்டை ஆதரிக்கும் கொள்கையே பரேலவிசக் கொள்கை எனப்படும். இக்கொள்கைக்கு அடிப்படை பொய், புரட்டு, புளுகு மூட்டைகள் தாம். இவையே பரேலவிசக் கொள்கையின் அஸ்திவாரங்கள் ஆகும்.

அத்தகைய பரேலவிசம் எனும் விஷத்தைத் தாங்கிய இதழ் ஒன்றை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது.

(அவ்விதழின் பெயரை அலட்சியம் செய்து விட்டு, அதனுள் பொதிந்திருந்த விஷமக் கருத்திற்கான விளக்கத்தை இக்கட்டுரையில் தருகிறோம்.)

நபிகளாரின் தாயார் ஆமினா அவர்கள் முஸ்லிம் என்பது தான் அந்தப் பரேலவிச இதழ் எழுதிய குறிப்பிட்ட கட்டுரையின் சாராம்சம். நபிகளாரின் தாயாரை முஸ்லிம் என்று நிறுவ அக்கட்டுரையில் பெரும் பிரயத்தனம் மேற்கொள்கிறார்கள். அதற்காகப் பல புளுகு மூட்டைகளை மார்க்கத்தின் பெயரால் அவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.

அவர்களின் புளுகு மூட்டைகளை அறிந்து கொள்ளும் முன் நபியின் தாயார் முஸ்லிமா? காஃபிரா? மார்க்கம் என்ன சொல்கிறது? என்பதை அறிந்து கொள்வாம்.

நபியின் தாயார் காஃபிரே!

நபிகள் நாயகத்தின் மீது முஸ்லிம் சமுதாயத்திற்கு இருக்கும் அளவிட முடியாத நேசத்தின் காரணத்தால் நபியின் பெற்றோரை காஃபிர் என்று கூறுவதிலும், நம்புவதிலும் சில முஸ்லிம்கள் பெரிதும் தயக்கம் காட்டுகிறார்கள்.

ஆனால் ஒரு அடிப்படையை இவர்கள் கவனிக்கத் தவறி விட்டனர்.

அல்லாஹ்வும் ரசூலும் யாரை, எதை, எப்படி நம்பச் சொல்கிறார்களோ அவ்வாறு நம்புவதே முஸ்லிம்களின் கடமையாகும். நமது தனிப்பட்ட விருப்பு, வெறுப்பை மார்க்க விவகாரங்களில் தலையிட அனுமதிப்பது முஸ்லிம்களுக்கு அழகல்ல.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும்போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்.

(அல்குர்ஆன்: 33:36)

இவ்வசனத்தின் படி நபியின் தாயார் முஸ்லிமா? காஃபிரா? என்று நாம் முடிவு செய்யும் போது இதுபற்றி குர்ஆன், ஹதீஸ் என்ன கூறுகிறது என்று பார்த்தே முடிவு செய்ய வேண்டும். இறைத்தூதரைப் பெற்றெடுத்த பெற்றோர் எப்படி முஸ்லிமல்லாதவர்களாக இருப்பார்கள்?

ஒரு நபியைப் பத்து மாதம் சுமந்து மண்ணில் ஈன்றெடுத்த தாய் எப்படி காஃபிராக இருப்பார்கள்? அகில உலகத்திற்கும் அருட்கொடையாக அனுப்பப் பட்ட அண்ணலாரின் தாயை இணைவைப்பாளராகக் கற்பனை செய்ய முடியுமா? என்பன போன்ற தனிப்பட்ட விருப்பங்களின்படி முடிவெடுக்க கூடாது; அவற்றுக்கு இடமளிக்கவும் கூடாது. மாறாக, இது தொடர்பான முடிவை மார்க்கத்தின் ஆதாரங்களைக் கவனத்தில் கொண்டு தான் எடுக்க வேண்டும்.

முஸ்லிமில் இடம்பெறும் நபிமொழி, நபிகளாரின் தாயார் முஸ்லிமல்ல என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறிவிடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், “நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 1777)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தாயாருக்காக பாவமன்னிப்புக் கோர அல்லாஹ்விடம் அனுமதி கேட்ட போது இறைவன் அனுமதி தர மறுக்கின்றான் என்று இந்நபிமொழி தெரிவிக்கின்றது.

நபிகளாரின் தாயாரை இறைவன் முஸ்லிமாக அங்கீகரித்திருப்பான் எனில் அவர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடவும் அல்லாஹ் அனுமதி வழங்கியிருப்பான். அவ்வாறு இறைவன் அனுமதி வழங்காததலிருந்து நபியின் தாயார் காபிராகவே மரணித்துள்ளார் என்பதை உறுதியாக அறிய முடிகிறது.

ஏனெனில் இணைவைப்பாளருக்குப் பாவ மன்னிப்புத் தேட இறைவன் அனுமதிக்கவில்லை என்று திருக்குர்ஆன் உரைத்து விட்டது.

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது

(அல்குர்ஆன்: 9:113)

இவ்வசனத்தின்படி நபியின் தாயார் இணைவைப்பாளராக மரணித்துள்ளார் என்பதாலே அவருக்காக நபிகள் நாயகத்தை பாவமன்னிப்புக் கோரக்கூடாது என்று தடுத்துள்ளான் என்பதை அறியலாம்.

மேலும் நபியின் தாயார் முஸ்லிமாக மரணிக்க வாய்ப்பே இல்லை என்பதை நபியின் வரலாற்றை அறிந்த எவரும் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் நபிகள் நாயகத்தின் குழந்தைப் பருவத்திலேயே அவர்களின் தாயார் இறந்து விட்டார்கள். நபிகள் நாயகமோ தமது நாற்பதாம் வயதில் தான் தூதுத்துவப் பிரச்சாரத்தைத் துவங்குகிறார்கள்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்யும் முன்பே, அதாவது நபியின் குழந்தைப் பருவத்திலேயே நபியின் தாயார் இறந்து விடுவதால் அவர்கள் முஸ்லிமாக மரணித்தார் என்ற பேச்சுக்கே இடமில்லை.

மேற்கண்ட முஸ்லிம் நபிமொழியும் இக்கருத்தைத் தெளிவுபட எடுத்துரைத்து விடுகிறது.

ஆனால் மார்க்க ஆதாரங்களைப் புறந்தள்ளிவிட்டு, தங்களது சொந்த அபிப்ராயங்களையே எப்போதும் முன்னிறுத்தி, பரேலவிச நாற்றத்தைப் பரப்பும் பரேலவிகள், நபியின் தாயார் முஸ்லிம் தான் என்பதை நிறுவ அரும்பாடு படுகிறார்கள். அதற்காகவே பல பொய்களையும் வாதங்கள் எனும் பெயரில் முன்வைக்கிறார்கள்.

நபியின் தாயார் முஸ்லிம் தான் என்பதை நிலைநாட்ட மேற்படி பரேலவிசச் சிற்றேடும் சில வாதங்களை முன்வைத்துள்ளது.

பரேலவிச இதழின் சிரிப்பூட்டும் வாதங்கள்

தலைப்புக்கு ஏற்ப எள்ளி நகையாடும் வகையிலேயே அந்தச் சிற்றேட்டில் வைக்கப்பட்ட வாதங்கள் அமைந்துள்ளன. அவர்களின் மொத்த வாதங்களையும் பார்த்தால் நாம் போட்ட தலைப்பு சரிதான். என்பதை புரிந்துக் கொள்வீர்கள். 

இதோ அவர்களின் வாதம்…

  1. ஈமான் கொண்டோரே! என்னுடைய விரோதியையும் உங்களுடைய விரோதியையும் அவர்கள் பால் (உங்கள்) நேசத்தைச் சேர்த்து வைக்கின்ற நண்பர்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

(அல்குர்ஆன்: 60:1)

இந்த வசனத்தில் இறை நிராகரிப்பாளர்களைத் தன்னுடைய விரோதி என்று கூறி விட்டு, அந்த விரோதியின் வயிற்றிலிருந்தா தன்னுடைய நேயரான, அகில உலக நாயகரான ஸல் அவர்களை சுமக்கச் செய்து இவ்வுலகில் பிறக்க வைத்தான்?

  1. நபி(ஸல்) அவர்களை தனது ஹபீபாக (நேயராக)த் தேர்ந்தெடுத்த அல்லாஹ், அவர்களை 10 மாதம் சுமந்து பெற்றெடுத்த மாதாவைத் தனது விரோதிகளில் ஒருவராக ஆக்கிக்கொண்டானா?
  2. ஒரு ஹபீபை (நேயரை) சகலரிலும் விஷேசமாகத் தேர்ந்தெடுத்த அல்லாஹ் அவர்களைப் பெற்றெடுக்கும் அன்னையைத் தனது நேசத்திற்க் குறியவராகவும் ஆக்கிக் கொள்ளமாட்டானா?
  3. இணை வைப்பவரைத் தனது விரோதி என்றும் நஜீஸ் (அசுத்தமானவர்) என்றும் கூறிய அல்லாஹ், தனது விரோதியிலிருந்தும் அசுத்தமானவரிலிருந்துமா இந்த அகில உலக நாயகரைப் பெற வைத்தான்?
  4. இஸ்லாம் அல்லாஹ்வின் விரோதியிலிருந்தும் அசுத்தமானவரிலிருந்தும் பிறந்ததா?

இதுதான் அறிவுகெட்ட பரேலவிகளின் ஆவிபறக்கும் (சூடான) வாதம் (?)

அதாவது இணைவைப்பாளர் இறைவனின் விரோதி என்று திருக்குர்ஆன் கூறுகிறதல்லவா? அப்படியான விரோதிகளிலிருந்து இறைவன் தன் தூதரைத் தேர்வு செய்வானா?

இந்த ஒரு கேள்வியைத் தான் மேற்கண்டவாறு பல விதங்களில் பல கேள்விகளைப் போல் அடுக்கியுள்ளார்கள்? குர்ஆனைக் கருத்தூன்றிப் படிக்கும் யாரும் இது எந்தளவு அபத்தமான வாதம் என்பதைச் சிரமமின்றி அறிந்து கொள்வர்.

இணைவைப்பாளர் எனும் விரோதியிலிருந்து ஓர் இறைத்தூதர் தோன்ற மாட்டார் எனும் இவர்களின் கருத்து குர்ஆனின் கருத்தல்ல. நபிகளாரும் இந்த அடிப்படையை நமக்குப் போதிக்கவில்லை. மாறாக முழுக்க முழுக்க இவர்களின் கற்பனையான பிதற்றலின் வெளிப்பாடிது.

திருக்குர்ஆனில் இதற்கு நேர்மாறானதை அதிகமாகவே காண முடியும்.

இறைவனின் விரோதியிலிருந்து இறைநேசர் தோன்றுவதும், இறைநேசரிலிருந்து இறைவனின் விரோதி தோன்றுவதும் சாதாரணமான ஒன்று என்பதையே திருக்குர்ஆன் பிரதிபலிக்கின்றது.

ஆஸர் எனும் இணைவைப்பாளரான இறைவனின் விரோதியிலிருந்து தான் இப்ராஹீம் எனும் இறைத்தூதரை இறைவன் வெளிப்படுத்தினான்.

இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர்.

(அல்குர்ஆன்: 9:114)

அதே போல நூஹ் எனும் இறைத்தூதரிலிருந்து வெளிப்பட்ட அவரது மகன் இறைவனின் விரோதியாகவே இருந்தார். அப்படியே மரணிக்கவும் செய்தார்.

நூஹ், தம் இறைவனை அழைத்தார். “என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்’’ என்றார். “நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்’’ என்று அவன் கூறினான்.

(அல்குர்ஆன்: 11:45),46)

இவ்விரண்டு வசனங்களே இவர்களின் தத்துவத்தை அடியோடு நிராகரித்து விடுகின்றது. இப்போது என்ன செய்ய போகிறார்கள்? திருக்குர்ஆனின் இந்த வசனங்களை எல்லாம் மறுக்க போகின்றார்களா? அல்லது திருக்குர்ஆனின் தெளிவான கருத்துக்கு மாற்றமாக நூஹ் நபியின் மகனும் முஸ்லிம் தான், இப்ராஹீம் நபியின் தந்தை ஆஸர் அற்புதமான முஸ்லிம் (?) என்று விளக்கமளிக்கப் போகிறார்களா?

பரேலவிகளின் பிதற்றல்களுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. நபியைப் பத்து மாசம் சுமந்து பெற்றெடுத்த மாதாவைத் தன் நேசத்திற்குரியவராக ஆக்கிக் கொள்ளமாட்டானா?

ஒரு விரோதியின் வயிற்றிலிருந்தா தனது நேசத்திற்குரிய நபியை அல்லாஹ் வெளிப்படுத்துவான்? இவ்வாறு இவர்கள் எழுதுவதைப் பார்த்தால் இவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை அறிவு இல்லை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஒருவரை முஸ்லிமாக்குகின்ற இஸ்லாம் எனும் பாக்கியத்தை, நேர்வழியை இறைவன் தான் நாடியோர்க்கு வழங்குவான். இஸ்லாத்தை ஒருவருக்கு வழங்குவது இறைவனின் அதிகாரத்தில் உள்ள அம்சமாகும்.

நபியின் விருப்பத்திற்குரிய, துவக்க காலத்திலிருந்து நபியின் பிரச்சாரத்திற்குப் பக்கபலமாக இருந்த நபியின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்களுக்குக் கூட அல்லாஹ் இஸ்லாம் எனும் நேர்வழியைக் கொடுக்கவில்லை.

(நபியவர்களின் பெரிய தந்தை) அபூதாலிபுக்கு மரணம் நெருங்கியபோது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூஜஹ்ல் பின் ஹிஷாம், அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூதாலிபிடம், “எனது பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) எனச் சொல்லி விடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சியம் கூறுவேன்’’  எனக் கூறினார்கள்.

அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், “அபூதாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக்கப் போகின்றீரா?’’ எனக் கேட்டனர்.

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமுமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும் போது அபூதாலிப் கடைசியாக, “நான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே (மரணிக்கின்றேன்)’’  என்று கூறியதோடு ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’  எனக் கூறவும் மறுத்து விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும் வரை உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவேன்’’ என்று கூறினார்கள். அப்போது “இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதன்று’’ எனும் (9:13ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பவர்: முஸய்யப் (ரலி)

(புகாரி: 1360)

அபூதாலிப் இஸ்லாத்தை ஏற்பதை நபிகள் நாயகம் பெரிதும் விரும்பியிருந்தும் அவர்களுக்கு இஸ்லாம் எனும் பொக்கிஷத்தை இறைவன் வழங்கவில்லை என்பதை இச்செய்தி சுட்டிக்காட்டுகிறது.

இந்நிலையில் அல்லாஹ் இவரை இப்படி ஆக்குவானா? இவருக்கு இஸ்லாத்தை வழங்காமல் இருப்பானா? என்றெல்லாம் கேள்வி எழுப்பினால் அது முறையா? திருக்குர்ஆனின் அறிவு இல்லாதவர்கள் தாம் இப்படியான கேள்விகளை எழுப்புவார்கள்.

கொஞ்சம் சுதாரிப்பு இல்லையென்றால் ‘‘தன் சிறிய தந்தை இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்று தனது ஹபீப் பெரிதும் விரும்பிய நிலையில் அல்லாஹ் அபூதாலிபை முஸ்லிமல்லாதவராக மரணிக்கச் செய்வானா?” என்று கேள்வி எழுப்பி அபூதாலிபையும் இவர்கள் முஸ்லிம் என்றாக்கி விடுவார்கள்.

(அட மறந்து விட்டோமே! ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி எப்போதோ இந்த அரிய தத்துவத்தை உதிர்த்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.)

‘ஒரு விரோதியின் வயிற்றிலிருந்தா தனது நேசத்திற்குரிய நபியை அல்லாஹ் வெளிப்படுத்துவான்?’

குர்ஆனைப் பற்றிய அரைகுறை அறிவுடன் இப்படிக் கேள்வி எழுப்ப ஆரம்பித்தால் குர்ஆனின் நிலை என்னாவது?

நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவ்விரு பெண்களும் அவ்விருவருக்கும் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. “இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!’’ என்று கூறப்பட்டது.

(அல்குர்ஆன்: 66:10)

ஒரு இறைத்தூதரின் அந்தரங்கங்களை அறிந்த அவரின் மனைவியை இறைவன் தன் நேசத்திற்குரியவராக ஆக்காமல் இருப்பானா? என்று கேள்வி எழுப்பி இந்த வசனத்தையும் பரேலவிகள் மறுக்கலாம்.

உலக முஸ்லிம்கள் எல்லாம் இன்றளவும் ஓதி வரும், மறுமை வரையிலும் ஓதவிருக்கும் ஆயத்துல் குர்ஸீயை ஒரு கெட்டவன் மூலம் அல்லாஹ் நமக்குக் கற்றுத் தருவானா? ஒரு கெட்டவன் எப்படி ஆயத்துல் குர்ஸீயை முஸ்லிம்களுக்குக் கற்றுக் கொடுப்பான்? இவ்வாறு கேள்வி எழுப்பி ஆயத்துல் குர்ஸீ தொடர்பான(புகாரி: 2311)வது செய்தியையும் இவர்கள் மறுத்து விடுவார்கள் போலும்.

இப்படிக் குர்ஆனையும் ஹதீஸையும் ஒரு சேர மறுக்கும் பரேலவிசக் கூட்டம் நம்மைப் பார்த்து ஹதீஸ் மறுப்பாளர்கள் என்பது உலக விந்தை.

இது தான் பரேலவிகள் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளும் இலட்சணம்.

இனி இடைவிடாத அவர்களின் புளுகல் பட்டியலைக் காண்போம்.

  1. கர்ப்ப ஸ்திரிகளுக்கு ஏற்படும் பளுவையும், வேதனையையும் அன்னை ஆமினா ரழி (?) அவர்களுக்கு இல்லாமல் இலகுவாக அல்லாஹ் ஆக்கினானே, தனது விரோதிக்கா இப்படிச் செய்தான்?

ஆமினா அவர்களுக்கு நபியை ஈன்றெடுத்த பொழுது பிரசவ வலி ஏற்படவில்லையாம். அதனால் ஆமினா அவர்கள் முஸ்லிமாம். அப்படியானால் ஒரே பிரசவத்தில் மூன்று, நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தால் முதல் தர முஸ்லிம் என்ற முத்திரையைக் குத்திவிடுவார்கள் போலும்.

முதலில் ஆமினா அவர்களுக்குப் பிரசவ வலி ஏற்படவில்லை என்பெதல்லாம் காதில் பூ சுற்றும் வேலையாகும். ஆமினா அவர்களுக்குப் பிரசவ வலி ஏற்படவில்லை என்று சொல்வதாக இருந்தால் அதை சம்பந்தப்பட்ட ஆமினா அவர்கள் தான் சொல்ல வேண்டும்.

ஆமினா அவர்களே இதைக் குறிப்பிடுவதைப் போன்ற ஒரு செய்தி பைஹகீ அவர்களின் தலாயிலுன் நுபுவ்வத் எனும் நூல் (பாகம் 1, பக்கம்  136)  உள்ளிட்ட சில நூல்களில் இடம்பெற்றுள்ளது.

ஆனால் இதில் அஹ்மத் பின் அப்துல் ஜப்பார் என்பவர் இடம் பெறுகிறார். இவரை அறிஞர்கள் பொய்யர் என்றும் பலவீனமானவர் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

 (பார்க்க தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 1, பக்கம் 44)

மேலும் இதில் ஜஹ்ம் பின் அபீ ஜஹ்ம் என்பவர் இடம் பெறுகிறார். இவரது நம்பகத்தன்மை ஹதீஸ்கலை அறிஞர்களிடம் உறுதி செய்யப்படவில்லை.

அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி) யிடமிருந்து அறிவிக்கும் நபர் யாரென்றும் இதில் குறிப்பிடப்படவில்லை. இப்படிப் பல பலவீனங்கள் நிறைந்த பொய்யான செய்தி என்பது கவனத்தில் கொள்ளத்தக்க விஷயம்.

இது தவிர இந்த அறிவிப்பு கூட நபியின் தாயார் ஆமினா அவர்கள் சொன்னதைப் போன்று தான் உள்ளது. ஆமினா அவர்களுக்குப் பிரசவ வலி ஏற்படவில்லை என்பதை வஹி எனும் இறைச்செய்தி உறுதி செய்யவில்லை.

ஆமினா அவர்கள் முஸ்லிமே அல்ல எனும் போது அவர்கள் கூறும் செய்தி ஒன்றும் மார்க்கமாகாது. அதை முஸ்லிம்கள் நம்பத் தேவையுமில்லை.

  1. அன்னை ஆமினா (ரழி) அவர்களின் கர்ப்ப காலத்தில் அல்லாஹ் தனது மலக்கை (அமரரை) அனுப்பி ஆமினாவே! நீர் இந்த உம்மத்துகளின் தலைவரைச் சுமந்திருக்கிறீர் என்று சொல்லச் செய்தானே! தனது விரோதியிடமா இப்படி சொல்லச் செய்தான்?

இது அவர்களின் அடுத்த புளுகல்.

நபியின் தாயார் ஆமினா அவர்களுக்கு மலக்கை அனுப்பி இவ்வாறு சொல்லச் சொன்னதாக அண்டப்புளுகு புளுகுகிறார்கள். இது ஏதோ பிரபலமான, மக்கள் நன்கு அறிந்த ஹதீஸ் நூல்களில் இருப்பதைப் போன்ற தொனியில் சொல்லிக் கடந்து விடுகிறார்கள். உண்மையில் இது எந்த ஹதீஸ் நூல்களிலும் இல்லை.

இதற்கு முழுமையான அறிவிப்பாளர் தொடர் ஏதும் கிடையாது.

பரேலவிச சித்தாந்த சிந்தனை கொண்ட இப்னு ஹஜர் அல்ஹைதைமீ (புகாரிக்கு விரிவுரை எழுதிய இப்னு ஹஜர் அல்ல, அவர் அஸ்கலானீ என்று அழைக்கப்படுவார்) என்பவர், தான் எழுதிய மவ்லிதுர் ரசூல் எனும் சிறிய நூலில் இதைத் தன் சொந்தக் கருத்தாகப் பதிவு செய்கிறார்.

தற்காலத்தில் எழுதப்பட்ட மவ்லித் புத்தகங்களைப் போன்று அக்காலத்தில்  மேற்படி இப்னு ஹஜர் என்பவரால் எழுதப்பட்ட மவ்லித் புத்தகம் தானே தவிர ஹதீஸ் நூல் அல்ல, இதற்கு அறிவிப்பாளர் தொடரும் கிடையாது என்பதால் இதை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.

இது ஹதீஸ் அல்ல. எந்த ஹதீஸ் நூலிலும் இதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. அடிப்படை ஆதாரமற்ற செய்திதான் இது. எனவே ஆமினா அவர்கள் நபியை ஈன்றெடுத்த போது பிரசவ வலியை உணரவில்லை என்பது அடிப்படையற்ற கட்டுக்கதையாகும்.

அடுத்த இவர்களின் அண்டப்புளுகல்கள் யாவும் ஏற்கனவே கேட்டு சலித்தும் புளித்தும் போன பழைய புளுகல்களே. நபிகள் நாயகம் பிறக்கும் போது ஷாம் நகரின் கோட்டைகள் எல்லாம் பிரகாசம் அடைந்தது. ஒரு மலக்கை அனுப்பி முஹம்மத் என்று பெயர் வைக்குமாறு கூறினார் என்பவை தான் அவர்களின் பழைய புளுகல்கள்.

ஒரு வாதத்திற்கு நபி பிறக்கும் போது இந்த அற்புதங்கள் (?) நடைபெற்றன என்று வைத்துக் கொண்டாலும் அதன் காரணத்தினால் நபியின் தாயார் ஆமினா அவர்கள் முஸ்லிம் என்றாகுமா?

கெட்டவர்கள் மூலம் கூட சில வேளைகளில் சில அற்புத நிகழ்வுகள் ஏற்படலாம் என்று தான் இஸ்லாம் போதிக்கின்றது.

ஸாமிரி என்ற கெட்டவன் மூலம் சில அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. (பார்க்க:(அல்குர்ஆன்: 20:7), 88) அதனால் ஸாமிரி முஸ்லிமாகி விடுவானா?

மறுமை நாளின் நெருக்கத்தில் தஜ்ஜால் எனும் கெட்டவன் மூலம் சில அற்புத நிகழ்வுகள் நடைபெறும். அதனால் தஜ்ஜாலும் முஸ்லிம் என்ற பட்டியலில் வந்து விடுவானா? இந்த பரேலவிகள் ஸாமிரி, தஜ்ஜால் ஆகிய இருவரையும் முஸ்லிம்கள் என்று இந்த அற்புத அளவுகோலின் படி தீர்ப்பளிப்பார்களா?

ஒருவருக்குக் குறிப்பிட்ட வேளையில் அற்புத நிகழ்வு நடந்தேறியது என்று வைத்துக் கொண்டாலும் கூட அவர்கள் முஸ்லிமாகி விடமாட்டார்கள் என்பது தான் திருக்குர்ஆன் போதிக்கும் அறிவுரையாகும். திருக்குர்ஆனை மறுக்கும் பரேலவி கூட்டத்திடம் குர்ஆனின் அறிவுரையைக் கூறி என்ன பயன்?