தஃவா களத்தில் தளர்ந்து விடாதீர்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

தஃவா களத்தில் தளர்ந்து விடாதீர்

மனிதர்களில் சிலர், ஒரு காரியத்தில் பலமுறை தோற்றுவிட்டால் மீண்டும் அதற்கு முயற்சி செய்யாமல் கைவிடக்கூடிய காட்சியை நம்மால் காண முடிகிறது. இது மனிதர்களிடத்தில் அறவே இருக்க கூடாத ஒரு பண்பாகும். இதற்கு நபியவர்களின் வாழ்க்கை நமக்குப் பெரும் பாடமாக உள்ளது. நபியவர்கள் இந்த ஏகத்துவத்தை ஆரம்பத்தில் ரகசிய பிரச்சாரமாகச் செய்து வந்தார்கள். அப்போது அதை பகிரங்கப்படுத்தும் படி வேத அறிவிப்பு வந்த பிறகு அதை பகிரங்கப்படுத்தினார்கள்.

‘(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்’ எனும் (அல்குர்ஆன்: 26:214) வது இறைவசனம் அருளப் பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் ‘ஸஃபா’ மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, ‘பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!’ என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள்.

இவ்வாறு அபூலஹப் உள்ளிட்ட குறைஷியர் (அனைவரும்) வந்(து சேர்ந்)தனர். நபி (ஸல்) அவர்கள், ‘சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்களின் மீது தாக்குதல் தொடுக்கப் போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?’ என்று கேட்க, மக்கள் ‘ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை’ என்று பதிலளித்தனர்.

நபி (ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கிறேன்’ என்று (தம் மார்க்கக் கொள்கையைச்) கூறினார்கள். (இதைக் கேட்ட) அபூலஹப், ‘நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?’ என்று கூறினான். அப்போதுதான் ‘அபூலஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்…’ என்று தொடங்கும் (111வது) அத்தியாயம் அருளப்பெற்றது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: (புகாரி: 4770) 

இதில் அவர்கள் இஸ்லாத்தை மறுத்ததோடு மண்ணை அள்ளி நபியின் மீது எறிந்தார்கள். இதைக் கண்ட நபியவர்கள் பிரச்சாரத்தை நிறுத்தினார்களா? இல்லை மீண்டும் செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்:
நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘(தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் காலக் கட்டத்தை விடக் கொடுமையான காலக் கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்துண்டா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்து விட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது ‘அகபா (தாயிஃப்) உடைய நாளில் சந்தித்த துன்பமேயாகும்.

ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் இப்னி அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை. எனவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். ‘கர்னுஸ் ஸஆலிப்’ என்னுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன்.

அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல்(அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, ‘உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்’ என்று கூறினார்கள்.

உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு சலாம் சொல்லி, பிறகு, ‘நபியே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரண்டு பக்கமும் உள்ள) இந்த இரண்டு மலைகளையும் அவர்களின் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)’ என்று கூறினார்.

உடனே, ‘(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நம்புகிறேன் (எனவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)’ என்று சொன்னேன்.

நூல்: (புகாரி: 3231) 

இப்படி சுய நினைவு இல்லாத அளவுக்கு அவர்கள் கவலை கொண்டு, மனக்கஷ்டத்திற்கு ஆளான பிறகும் கூட நபியவர்கள் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை. தொடர்ந்து சொல்லத்தான் செய்தார்கள்.

அபூதாலிபுக்கு மரணம் நெருங்கியபோது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூஜஹ்ல் இப்னு ஹிஷாம், அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூதாலிபிடம், ‘என்னுடைய சிறிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வாசகத்தைச் சொல்லிவிடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சி கூறுவேன்’ எனக் கூறினார்கள்.

அப்போது அபூஜஹ்லும், அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும், ‘அபூதாலிபே அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக்கப் போகிறீரா?’ எனக் கேட்டனர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூதாலிப் கடைசியாக, ‘நான் அப்துல் முத்தலிப் மார்க்கத்திலேயே (மரணிக்கிறேன்)’ என்று கூறியதோடு லாஇலாஹ இல்லல்லாஹ் எனக் கூறவும் மறுத்துவிட்டார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும்வரை உங்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவேன்’ என்று கூறியதும், ‘இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் தகுதியானதன்று’ (அல்குர்ஆன்: 9:113) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பவர்: முஸய்யிப் (ரலி),
நூல்: (புகாரி: 1360) 

அவர்களுடைய சிறிய தந்தை இஸ்லாத்தை ஏற்கவில்லை. நபிகளாரின் கண் முன்னே இஸ்லாத்தை ஏற்க மறுத்துவிட்டு இறந்தார். அதனால் நபியவர்கள் வெறுத்துப் போய் பிரச்சாரத்தை விட்டு ஒதுங்கிவிடவில்லை. மீண்டும் தொடரத்தான் செய்தார்கள்.

அபூ இஸ்ஹாக் (ரஹ்) அறிவித்தார்:
ஒருவர் பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அவர்களிடம், ‘நீங்கள் அல்லாஹ்வின் தூதரை விட்டுவிட்டு ஹுனைன் (போர்) அன்று பின்வாங்கி விட்டீர்களா?’ என்று கேட்டதற்கு அவர்கள், ‘(ஆம், உண்மைதான்.) ஆனால், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பின்வாங்கிச் செல்லவில்லை. ஹவாஸின் குலத்தார் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாயிருந்தார்கள்.

நாங்கள் அவர்களை (போரில்) சந்தித்தபோது அவர்கள் மீது (கடும்) தாக்குதல் நடத்தினோம். அதனால் அவர்கள் தோற்றுப் போய்விட்டார்கள். எனவே, முஸ்லிம்கள் (போர்க் களத்திலிருந்த) எதிரிகளின் செல்வங்களை எடுத்துச் செல்ல முனைந்தார்கள். எதிரிகள் அம்புகளை எய்து எங்களை எதிர் கொண்டார்கள். இறைத்தூதர் அவர்களோ பின்வாங்கிச் செல்லவில்லை.

(நாங்கள் தான் பின் வாங்கி ஓடிவந்து விட்டோம்.) நான் நபி (ஸல்) அவர்களை தம் ‘பைளா’ என்னும் வெண்ணிறக் கோவேறுக் கழுதையில் அமர்ந்திருந்த நிலையில் பார்த்தேன். அபூ சுப்யான் (ரலி) அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘நான் இறைத்தூதராவேன். இது பொய்யல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகனாவேன்’ என்று (பாடியபடி) கூறிக் கொண்டிருந்தார்கள்.

நூல்: (புகாரி: 2864) 

இத்தனை நபர்கள் ஓடிய பின்பும் கூட நபியவர்கள் ஓடாமல் ஒழியாமல் தான் ஏற்ற கொள்கையை மரணிக்கும் வரையிலும் சொல்லியே தீருவேன் என்பதில் உறுதியாக இருந்தார்கள். இன்று நாம் இந்தக் கொள்கையில் நம்முடன் பயணித்த நமக்குப் பிடித்தவரோ, நம்மை நேசித்தவரோ, நம்முடன் பணி செய்தவரோ எவரேனும் வெளியே சென்று விட்டால் தஃவா பணி செய்யாமல் தளர்ந்து விடுகிறோம்.

ஆனால் நபியவர்கள் அப்படியல்ல. தம்முடன் போருக்கு வந்தவர்கள் பின்வாங்கினாலும் சரி! இலக்கை அடைந்தே தீருவேன் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

لَعَنَ اللَّهُ اليَهُودَ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسْجِدًا

நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, ‘யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கத்தலங்களாக ஆக்கிவிட்டனர்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: (புகாரி: 1330) 

அல்லாஹு அக்பர்! மரணிக்கும் தருணத்திலும் கூட தஃவா பணியில் தளராமல் ஓயாமல், தான் பயணித்த கொள்கையை எடுத்துரைத்தார்கள்.

‘போர்த்தி இருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக!’ என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டதிலிருந்து நபியவர்கள் கஃபன் ஆடையால் போர்த்தப்படுகின்ற வரை இந்த ஏகத்துவப் பிரச்சாரத்தை சலிப்பு இல்லாமல் நபியவர்கள் செய்தார்கள்.

எனவே நாமும் இந்த தஃவா பணியை சாகின்ற வரை செய்வதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!