இல்லறம் இனிக்க

பயான் குறிப்புகள்: குடும்பவியல்

இல்லறம் இனிக்க

ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து தோன்றிய மனித சமுதாயம் இன்று கோடான கோடி மக்கள் தொகையை எட்டியிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஒரு குடும்பத்தைச் சுற்றி வாழ்கிறான். ஒவ்வொரு மனிதனின் நிம்மதியையும், மன நெருக்கடியையும் தீர்மானிக்கும் விஷயங்களில் பெரும் பங்கு வகிக்கக் கூடியவையாக குடும்பங்களே இருக்கின்றன.

நிம்மதிக்கான வழி பொருளாதாரத்தில் இருக்கிறது என்று கற்பனை செய்து கொண்டு ஓடுகிற சில மனிதர்களின் வாழ்வில் பொருளாதாரம் கிட்டுகிறது. ஆனால் நிம்மதியில்லை. எவ்வளவு கோடிகள் தன்னிடத்தில் அவர் வைத்திருந்தாலும் அதனால் குடும்ப நிம்மதியையோ சந்தோஷத்தையோ அவரால் வாங்க இயலவில்லை.

ஆனால், அதற்கு நேரெதிரில் வேறு சிலர் ஏழ்மையில் பயணிக்கின்றனர். அவர்கள் எதையும் அலட்டிக் கொள்ளாமல் நிம்மதியுடன் வாழ்கின்றனர். நிம்மதி என்பது பணம் கொடுத்து வாங்கக் கூடிய ஒரு பொருள் அல்ல. அது நாம் வாழும் வாழ்க்கை முறையினால் கிடைக்கக்கூடிய ஓர் இன்பமாகும். அத்தகைய இன்பம் இம்மையிலும் மறுமையிலும் கிடைக்க வேண்டும் என்றால் முஃமின்கள் தங்கள் குடும்பத்தை எப்படி வார்த்தெடுக்க வேண்டும் என்பதை மார்க்கம் நமக்குச் சொல்லித்தருகிறது.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து காத்துக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமே ஆகும்.

(அல்குர்ஆன்: 66:6)

ஒரு குடும்பத்தின் அடிப்படை உறவுமுறை என்பது கணவன், மனைவி உறவுதான். இங்கிருந்துதான் குடும்பம் உருவாகிறது. அத்தகைய அந்த அடிப்படையான உறவைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல் தகுதியை நபிகளார் நமக்கு சொல்லித் தருகிறார்கள்.

நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:

1. அவளது செல்வத்திற்காக.

2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.

3. அவளது அழகிற்காக.

4. அவளது மார்க்கத்திற்காக.

ஆகவே, மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 5090)

ஓர் இல்லம் இனிய இல்லமாக உருவாவதற்கான பயணத்தின் முதல் பயணச்சீட்டே இந்தத் தகுதிதான். உலக வழக்கங்களில் திருமணத்திற்குத் தகுதிகளாக மேற்படி நான்கு விஷயங்களையும் கொண்டுள்ளனர்.

ஆனால் ஒரு முஃமினுடைய வெற்றி எங்கே இருக்கிறது என்றால் மார்க்கமுடைய பெண்ணை மணந்து கொள்ளும் போதுதான் என்று நபிகளார் சொல்லித் தருகிறார்கள். மார்க்கத்தை அறிந்து அதன் ஒழுங்கு நெறிகளைப் பேணி நடக்கும் தகுதியைத்தான் முதல் தகுதியாகப் பார்க்க வேண்டும். அதன்பின் தான் அழகு மற்ற விஷயங்கள் எல்லாமே!

ஆனால், நம்மிடத்தில் இந்த விஷயம் தலைகீழாகக் கடைபிடிக்கப்படுகிறது. மார்க்க ஒழுக்கம் என்பது கடைசிதான். முதலில் பெண் அழகாக இருக்கிறாளா? பணக்கார குடும்பத்தைச் சார்ந்தவளாக இருக்கிறாளா? ஊரில் அறியப்பட்ட பாரம்பரியத்தைக் கொண்ட குடும்பமா? என்றுதான் பார்க்கின்றனர்.

இவை எதுவும் இல்லை. ஆனால் பெண் மார்க்கப் பற்றுள்ளவளாக, ஒழுக்கமானவளாக இருக்கிறாள் என்றால் அப்பெண் கரை சேர்வதற்கு வருடங்கள் உருண்டோடுகின்றன.
மார்க்க ஒழுக்கத்தைத் தவிர இங்கு பார்க்கப்படும் அனைத்து விஷயங்களுமே சில நாட்கள் தான் போலி இன்பம் தரும். கடைசி வரை நிம்மதியையும் நன்மைகளையும் நமக்குத் தருகின்ற உண்மையான இன்பம் மார்க்கப் பற்றில்தான் இருக்கிறது.

ஏனெனில் பிரச்சனைகள் இல்லாத குடும்பம் இல்லை. எந்தவொரு பிரச்சனை வரும்போதும் அது பெரிதாகாமல் தடுத்து, அதை எவ்வாறு அணுக வேண்டும் என்ற பக்குவமும், குடும்ப அமைப்புக்கு முக்கியத் தேவையான சகிப்புத் தன்மையும் மார்க்கத்தை அறிந்து கொள்கிற போது மட்டுமே கிடைக்கிறது. இதை உணர்ந்து தங்கள் திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொண்ட தம்பதிகள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அதிகம் இருந்தாலும் ஒரே ஒரு உதாரணம் இதற்குப் போதுமானதாகும்.

உம்மு சுலைம்(ரலி) அவர்களிடம் அபூ தல்ஹா அவர்கள் (திருமணத்திற்காக) பெண் பேசினார்கள். அதற்கு உம்மு சுலைம்(ரலி) அவர்கள், “அபூதல்ஹாவே! உங்களைப் போன்றவர் (திருமணம் செய்துக் கொள்ள) மறுக்கப்பட மாட்டார். என்றாலும் நீங்கள் இறைநிராகரிப்பாளர். நான் முஸ்லிமான பெண் ஆவேன்.

(அதனால்) எனக்கு உங்களைத் திருமணம் செய்துக் கொள்வது ஆகுமானதல்ல. நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அதுவே (திருமணத்திற்கான) எனக்குரிய மணக்கொடையாகும். அதைத் தவிர வேறு எதையும் உங்களிடம் நான் கேட்க மாட்டேன்” என்று கூறினார்கள். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அதுவே அவர்களின் மணக்கொடையாக இருந்தது.

(நஸாயீ: 3341)

அபூதல்ஹா (ரலி) அன்று பெரும் செல்வந்தர்களில் ஒருவராக இருந்தார். ஆனால் உம்முசுலைம் (ரலி) அவர்கள் திருமணத்திற்கு அந்தப் பொருளாதாரம் எதையும் அடிப்படைத் தகுதியாக எதிர்பார்க்கவில்லை. இஸ்லாம் இருக்க வேண்டும் என்றும் அதுவே எனக்கு மஹராகவும் போதுமானது என்றும் அதைத் தாண்டிய எந்தப் பொருளாதாரமும் வேண்டாம் என்றும் உம்மு சுலைம் (ரலி) உறுதியாக இருந்துள்ளார்.

இவர்கள் தங்கள் திருமணத்திற்கு மார்க்கத்தை அடிப்படை விதியாகக் கொண்ட காரணத்தினால், இவர்களின் திருமணத்திற்குப் பிந்தைய வாழ்வு எவ்வளவு இனிமையாக மார்க்க அடிப்படையில் கடந்து சென்றது!

அனஸ் (ரலி) என்ற தனது மகனை அல்லாஹ்வின் தூதரிடம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்படைத்தார்கள் உம்மு சுலைம்(ரலி). நன்மையை அதிகம் அடைவதற்காகத் தனது மிக செழிப்பான செல்வத்தையும் அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிக்க முன்வந்தவர்கள்.
உஹதுப் போரில் நபிகளாரைக் காப்பதற்காக தன்னையே கேடயமாக ஆக்கியவர் அபூதல்ஹா(ரலி).

இன்னும் இதுபோன்ற ஏராளமான சிறப்பு களைக் கொண்ட குடும்பமாக இக்குடும்பம் உருவானதற்கு அடிப்படை விதை எங்கே போடப் பட்டது என்றால் அந்தத் திருமணத்தில்தான்.
இவ்வாறு நமது திருமணங்கள் இருக்க வேண்டும். அன்று அபூதல்ஹா(ரலி) இஸ்லாத்திற்கு வெளியில் இருந்தார். அதனால் திருமணத்தை மறுத்து இஸ்லாம் இருந்தால் திருமணம் என்ற விதியை வைத்தார்கள் உம்மு சுலைம்(ரலி).

இன்று ஒரு சிலர் இறைநிராகரிக்கும் ஆண்களோடு காதல் என்ற வலையில் வீழ்ந்து தங்கள் இம்மை மறுமை வாழ்க்கையைத் தொலைக்கின்றனர். சிலர் இஸ்லாத்தில் இருந்தாலும் மார்க்கம் என்றால் என்னவென்று அறியாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருவார்கள். செல்வம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அவர்களைத் தங்கள் துணையாகத் தேர்ந்தெடுப்பவர்களாக இருக்கிறார்கள். இதில் ஆண், பெண் பேதமில்லாமல் இரு தரப்பிலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

அல்லாஹ்வை நம்பியவர்கள் உலகத்தின் போலி இன்பங்களுக்கு இடமளித்து, திருமணம் எனும் மனித வாழ்வின் அடுத்தக்கட்ட நகர்வை வீணடித்து விடாமல், நபிகளார் சொன்ன அடிப்படைத் தகுதியை எடுத்துக் கொண்டால் வாழ்வு வளமாகும்; மறுமை வசமாகும். இதோ அதற்கு மற்றுமொரு முன்மாதிரி!

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! இன்னாருக்குச் சொந்தமான ஒரு பேரீத்த மரம் (என் தோட்டத்தை ஒட்டி) இருக்கிறது. (அதை அவர் எனக்குக் கொடுத்தால்) அதையும் சேர்த்து எனது சுற்றுச்சுவரை அமைத்துக் கொள்வேன். அதை எனக்கு வழங்குமாறு அவருக்கு உத்தரவிடுங்கள்” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அன்னாரிடம், “அதை நீ கொடுத்து விடு! உனக்குச் சுவனத்தில் அதற்குப் பகரமாக ஒரு மரம் கிடைக்கும்” என்று கூறினார்கள்.

ஆனால் அவர் மறுத்துவிட்டார். அப்போது, அபூ தஹ்தாஹ் (ரலி) அவர்கள் அவரிடம் வந்து, “என்னுடைய தோட்டத்திற்கு பகரமாக உன்னுடைய ஒரு மரத்தை எனக்கு விற்பனை செய்துவிடு” என்று கூறினார். அவரும் விற்றுவிட்டார். உடனே, அபூ தஹ்தாஹ்(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது தோட்டத்திற்குப் பகரமாக அந்த மரத்தை நான் வாங்கிவிட்டேன். இதை உங்களிடம் கோரிக்கை வைத்தவருக்கு நீங்கள் கொடுப்பதற்காக உங்களிடம் தந்து விட்டேன்” என்று கூறினார்கள்.

அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “எத்தனையோ பேரீத்த மரங்கள் சுவனத்தில் அபூதஹ்தாஹ்விற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன” என்று பல முறை கூறினார்கள்.
உடனே, அபூ தஹ்தாஹ் (ரலி) அவர்கள் தனது மனைவியிடத்தில் வந்து, “உம்மு தஹ்தாஹ்வே! உடனே இந்த தோட்டத்திலிருந்து வெளியேறு! ஏனெனில் சுவனத்தில் கிடைக்கவிருக்கும் பேரித்த மரத்திற்காக இந்தத் தோட்டத்தை நான் விற்றுவிட்டேன்” என்று கூறினார். அதற்கு அவருடைய மனைவி, “இதுவே லாபகரமான வியாபாரம்” என்றோ அதற்கு ஒப்பான வார்த்தையையோ கூறினார்கள்.

நூல்: அஹ்மது 12025

இந்தச் செய்தியில் அல்லாஹ்வின் கூலியைப் பெறுவதற்காகத் தன் தோட்டத்தையே அர்ப்பணிக்கத் தயாராக இருந்தவர் அபூதஹ்தாஹ் (ரலி) என்பது ஒரு புறம் இருக்கிறது.
மறுபுறம் இன்னுமொரு மிக முக்கியத் தகவலையும் நமக்குத் தருகிறது.

தனது பேரீச்சந் தோட்டத்தைக் கொடுத்து ஒற்றை மரத்தை வாங்கி, அதையும் தர்மம் செய்து விட்டு ஒரு மனிதர் தன் மனைவியிடம் வருகிறார். அந்த மனைவி அவரைத் திட்டவில்லை; வசை பாடவில்லை. அவர் செய்த வியாபாரத்தைப் பாராட்டி, “இதுதான் உண்மையில் லாபமான வியாபாரம்” என்றும் தெரிவிக்கிறார் என்றால் இத்தகைய ஒற்றுமை எங்கிருந்து கிடைக்கும்?

தம்பதியர்களில் ஒருவருக்கு மட்டும் மார்க்கம் இருந்து மற்றவருக்கு இல்லையென்றால் கிட்டுமா?
இருவருமே மார்க்கம் அறிந்தவர்களாகவும் மறுமைக்காக வாழ்பவர்களாகவும் இருந்தால் மாத்திரம் தான் இத்தகைய இனிமை நிகழும்.

கணவன் மனைவியிடத்தில் மார்க்கம் இருக்கிற போதுதான் அவர்களைப் பார்த்துப் பிரதிபலிக்கும் கண்ணாடி பிம்பமாக அவர்களது குழந்தை மார்க்க ஒழுக்கமுள்ளதாக வளரும். எளிமையில் வாழ்க்கையைப் போதுமாக்கிக் கொள்வதெல்லாம் மார்க்கம் இருக்கும் போதுதான் சாத்தியமாகும்.
இப்படி எல்லா உண்மையான சந்தோஷங்களும் இந்த அடிப்படை உறவின் அடிப்படைத் தகுதியிலிருந்துதான் பிறக்கிறது.