தவ்ஹீத் நெஞ்சமே தடுமாறாதே!

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

தவ்ஹீத் நெஞ்சமே தடுமாறாதே!

வேதனைகளாலும் சோதனைகளாலும் மன அழுத்தங்களாலும் சூழப்பட்டது தான் இந்த உலக வாழ்க்கை! இதுபோன்ற சோதனைகளிலிருந்து நம்மை மீட்டெடுத்த அபூர்வ அருட்கொடை தான் இஸ்லாம். நாம் எதை வாழ்க்கையின் அடித்தளமாக உருவாக்கி வைத்திருக்கிறோமோ அந்த இன்பங்களாலும் சில சமயம் வேதனைகள் ஏற்படும். பொருளாதாரம், பெண்ணாசை போன்றவையும் இதில் அடங்கும். இத்தகைய உலகக் கவர்ச்சிகளால் நாம் நேரடியாகச் சோதனைகளைச் சந்திக்க நேரலாம்.

இதுபோன்ற சமயத்தில் எக்காலத்திற்கும் சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கின்ற இஸ்லாமிய மார்க்கத்தை, எக்காரணத்தைக் கொண்டும் இழக்க மாட்டேன் என்று ஒரு முஸ்லிம் உறுதியேற்க வேண்டும். அவ்வாறில்லாமல் இந்தக் கவர்ச்சிகளால் ஒரு முஸ்லிமின் உள்ளம் சிறை பிடிக்கப்பட்டு, அதற்காக இந்த மார்க்கத்தை வளைத்து விடலாம் என்ற எண்ணம் ஒருவனிடம் தோன்றி விட்டால் அவன் இஸ்லாம் என்ற தடத்தில் இனி பயணிக்க முடியாது.

இது கற்பனையல்ல! பின்வரும் சம்பவத்தால் நமக்குக் கற்பிக்கப்பட்ட பாடம்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கிப் புறப்பட்டோம். அல்லாஹ் எங்களுக்கு வெற்றியளித்தான். அப்போரின் போது நாங்கள் தங்கத்தையோ வெள்ளியையோ போர்ச்செல்வமாகப் பெறவில்லை. உபயோகப் பொருட்கள், உணவுப்பொருட்கள், ஆடைகள் ஆகியவற்றையே போர்ச்செல்வங்களாகப் பெற்றோம்.

பிறகு நாங்கள் (மதீனா அருகிலுள்ள) ‘வாதீ (அல்குரா)’ எனுமிடத்தை நோக்கி நடந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களுடைய (மித்அம் என்றழைக்கப்படும்) ஓர் அடிமையும் இருந்தார். அவரை ‘பனுள்ளுபைப்’ குலத்திலுள்ள ஜுதாம் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அல்லாஹ்வின் தூதருக்கு அன்பளிப்பாக வழங்கி இருந்தார். அவர் ‘ரிஃபாஆ பின் ஸைத்’ என்று அழைக்கப்பட்டார்.

நாங்கள் அந்த (வாதில் குரா) பள்ளத்தாக்கில் இறங்கியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அந்த அடிமை எழுந்து அவர்களது சிவிகையை (ஒட்டகத்திலிருந்து) இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது (எங்கிருந்தோ வந்த) ஓர் அம்பால் அவர் தாக்கப்பட்டார். அதுவே அவரது இறப்புக்குக் காரணமாக அமைந்தது.

அப்போது நாங்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு இறைவழியில் உயிர் தியாகம் செய்யும் பேறு கிடைத்து விட்டது. வாழ்த்துக்கள்!” என்று கூறினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! கைபர் போரில் கிடைத்த போர்ச்செல்வங்கள் பங்கிடும் முன்பே அவர் எடுத்துக்கொண்ட போர்வை அவருக்கு நரக நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: (முஸ்லிம்: 183) 

மேற்கண்ட சம்பவத்தில் அம்பு தைக்கப்பட்ட உடன், அவர் ஷஹீதாகி விட்டார் என்பதை அறிந்து, நபித்தோழர்களின் உள்ளத்தில் உருவான மகிழ்ச்சியே அவர் முஸ்லிம்தான் என்பதற்குப் போதுமான சான்று. தலையை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்தி, கம்பீர நடை போட்டு சுவனத்தில் நுழைய வேண்டிய ஒரு முஸ்லிம் நரகத்தில் எரிக்கப்பட்ட பின்னணி என்ன?

அவருக்கு, போர் செல்வத்தை நபிகளார் தான் பங்கிடுவார்கள் என்ற உண்மை தெரியாமல் இல்லை. ஆனாலும் அற்பமான ஒரு போர்வையே குற்றவாளிக்கான விலங்காக அவரது கரத்தை ஆக்கிரமித்தது. உள்ளத்தைத் தடுமாறச் செய்தது. இறுதியில் நரகமே அவருக்குப் போக்கிடமானது.

எப்படி இருந்தவர்களும் இந்தக் கவர்ச்சி, தடுமாற்றம் என்ற போராட்டத்தில் சிக்கிவிட்டால் அவர்களின் நிலை எப்படி ஆகிவிடுகின்றது என்பதற்குப் பின்வரும் வசனம் ஓர் உதாரணம்.

لَـقَدْ نَصَرَكُمُ اللّٰهُ فِىْ مَوَاطِنَ كَثِيْرَةٍ‌ ۙ وَّيَوْمَ حُنَيْنٍ‌ ۙ اِذْ اَعْجَبَـتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَيْـًٔـا وَّضَاقَتْ عَلَيْكُمُ الْاَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّـيْتُمْ مُّدْبِرِيْنَ‌ۚ

பல களங்களில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். ஹுனைன் (போர்) நாளில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களுக்கு மமதையளித்தபோது, அது உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை. பூமி விசாலமாக இருந்தும் உங்களுக்கு அது சுருங்கி விட்டது. பின்னர் புறங்காட்டி ஓடினீர்கள்.

(அல்குர்ஆன்: 9:25)

மேலே சுட்டிக்காட்டப்பட்ட செய்தியின் கருத்தாழத்தை நம்மால் உணர முடிகிறது.
கூட்டத்தின் எண்ணிக்கையை வைத்து இஸ்லாத்தின் வெற்றியைத் தீர்மானிக்கக் கூடாது, போர்க்களத்தைச் சந்தித்து விட்டால் புறமுதுகிட்டு ஓடக்கூடாது என்பன போன்ற போதனைகள் நபித்தோழார்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது. எனினும் ஹுனைன் களத்து எண்ணிக்கையின் கவர்ச்சி அவர்களை மிகைத்து விட்டது.

எனவே, அல்லாஹ்வின் பாராட்டுக்களால் அலங்கரிக்கப்பட வேண்டிய சமுதாயம், குர்ஆனால் கண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

சில சமயம், அன்பின் உச்சியில் வைத்துப் பார்த்தவர்களை நாம் இழக்கும் போது உண்டாகும் கோபம், நம் கொள்கைப்பிடிப்பை அசைத்துப் பார்க்கும். இதோ! அத்தகைய தடுமாற்றத்தையும் தன் பாதத்தில் போட்டுப் புதைத்த வரலாறு.

உஹதுப்போர் நடந்த போது இணை வைப்பவர்கள் (ஆரம்பத்தில்) தோற்கடிக்கப்பட்டார்கள். உடனே, இப்லீஸ், “அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் பாருங்கள்” என்று கத்தினான். முஸ்லிம்களில் முன்னணிப் படையினர் திரும்பிச் சென்று (முஸ்லிம்களாகிய) தமது பின்னணிப் படையினருடன் போரிட்டார்கள்.

அப்போது, அங்கு இருந்த தம் தந்தை யமான் (ரலி) அவர்கள் (முஸ்லிம்களின் முன்னணிப் படையினரிடம்) சிக்கிக் கொண்டதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் பார்த்து விட்டு, “அல்லாஹ்வின் அடியார்களே! இது என் தந்தை! இது என் தந்தை!” என்று (உரக்கச்) சொன்னார்கள். ஆனால், அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் அவரை விட்டு வைக்கவில்லை. இறுதியில், அவரை (தாக்கிக்) கொன்று விட்டார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களை மன்னிபானாக!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: (புகாரி: 3290) 

தன் தந்தை கொலை செய்யப்படுகிறார். கொன்றவர்கள் முஸ்லிம்கள். தன் கண் முன்னாலேயே தன் தந்தை கொல்லப்படுவதால் ஏற்படும் உச்சக்கட்டக் கோபம், அந்தக் கட்டமைப்பை விட்டே அவரை வெளியேற்றி விடும். ஆனால், இந்த நேரத்திலும் தடுமாற்றம் என்ற வழிகேட்டை, மன்னிப்பால் தகர்த்து எறிந்த வரலாறு நம் உள்ளத்தைப் பலப்படுத்துகின்றது.

அன்பிற்கினிய இஸ்லாமிய சொந்தங்களே! உங்கள் மறுமை வாழ்க்கையைச் சிதைக்கும் சோதனைகள் உங்களை எதிர்கொண்டால், உங்கள் உள்ளத்தின் உறுதியால் அதைத் தரைமட்டமாக்கி விட்டு, ஏகன் தந்த அற்புத மார்க்கத்தை ஆரத் தழுவுவோமாக!