ஆட்சியாளர்களை வழிநடத்தும் இஸ்லாம்
அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு சாராரும் தங்களின் பெற்றோர்களும், தங்களின் முன்னோர்களும் எந்த மதத்தில் தங்களின் வாழ்க்கையைத் தொடர்ந்தார்களோ, அந்த மதத்திலேயே தங்களின் வாழ்க்கை வழிமுறைகளை அமைத்துக் கொள்கின்றார்கள்.
இதில் விதிவிலக்காக ஒரு சிலர் மட்டும் தங்களின் முன்னோர்களின் மதக் கோட்பாட்டுத் தத்துவங்களை சீர்தூக்கிப் பார்த்து, சரியா? தவறா? என்று ஆய்வு செய்து பின்பற்றுகின்றனர். பெரும்பான்மையான மக்கள், தலைமுறை தலைமுறையாக எந்தக் கடவுள் கொள்கையில், சித்தாந்தத்தில் வாழ்ந்தார்களோ அப்படிப்பட்ட கொள்கையையே தங்களின் வாழ்வியல் மதமாக ஏற்று நடக்கின்றனர்.
மனிதர்களுக்குத் தேவையான அனைத்து சட்டங்களும் அறிவுரைகளும் போதனைகளும் சிறு பிள்ளைகளின் உள்ளங்களில் கூட ஆழப்பதிய வைக்கப்படுகின்ற அளவுக்கு ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கிய மார்க்கம் இஸ்லாம். இது வெறுமனே வாயளவில் புகழ்வதற்காகச் சொல்லப்படுகின்ற கருத்து அல்ல. இஸ்லாத்தைப் படித்துக் கடைப்பிடிக்கின்ற அனைவரும் இந்தக் கருத்தைத் தான் முன்வைக்கின்றார்கள்.
இஸ்லாம், ஆன்மீகத்தை மட்டும் போதித்து விட்டுச் சென்று விடாமல், இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மட்டும் சட்டமாகச் சொல்லி விட்டுப் போகாமல் மக்களை வழிநடத்துகின்ற, மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்ற ஆட்சியாளர்களும் எப்படி இருக்க வேண்டும் என்று அற்புதமான முறையில் வழிகாட்டுகின்றது.
ஆட்சியாளர்கள் என்றால் யார்? ஆட்சியாளர்களின் கடமைகள் என்ன? ஆட்சியாளர்களின் தகுதி என்ன? ஆட்சி செய்பவர்கள் பேண வேண்டிய ஒழுங்குகள் என்ன? ஆட்சியாளர்கள் மக்களிடத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
ஆட்சிப் பொறுப்பை சரிவர நிறைவேற்றாத ஆட்சியாளரின் நிலை என்ன? என்று சொல்லி நம்முடைய உள்ளங்களின் ஒரு ஆட்சியாளருக்கென்று நாம் என்னென்ன அளவுகோலைத் தீர்மானித்து வைத்திருக்கின்றோமோ, கேள்விக்கணைகளைத் தொடுத்து வைத்திருக்கின்றோமோ அவை அத்தனைக்கும் தெளிவான, அற்புதமான பதிலைத் தருகின்றது இஸ்லாம். இஸ்லாம் காட்டும் சிறந்த ஆட்சியாளர்களின் தகுதிகளை இந்த உரையில் காண்போம்…
இன்றைய காலகட்டத்தில் மனிதர்களைப் பாடாய் படுத்துகின்ற, மக்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடுகின்ற, மக்களின் தூக்கத்தைக் கெடுத்து சோதனையிலும் வேதனையிலும் தள்ளி விடுகின்ற ஆட்சியாளர்கள் ஆட்சி செய்கின்ற அவல நிலையைப் பார்க்கின்றோம்.
மேலும், ஆட்சியாளர் என்பவர் மக்களின் பாதுகாப்புக் கேடயமாகவும், மக்களின் பாதுகாவலராகவும் தான் இருக்க வேண்டும். மக்களின் துன்பம், துயரம், வேதனை போன்ற இன்னல்களின் போது மக்களின் நலனில் அக்கறை காட்டுபவரே ஆட்சியாளராக இருக்க முடியும். மக்களை வேதனைப்படுத்தி, அந்த வேதனையை ரசித்துக் கொண்டிருப்பவர் ஆட்சியாளராக இருக்க முடியாது என்று இஸ்லாம் பாடம் நடத்துகின்றது.
ஹசன் பின் அபில்ஹசன் யசார் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்கள் (அன்றைய பஸ்ராவின் ஆட்சியராயிருந்த) உபைதுல்லாஹ் பின் ஸியாதிடம் சென்று, “அன்புக் குழந்தாய்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நிர்வாகிகளில் மிகவும் மோசமானவர், இரக்கமற்ற கல் நெஞ்சக்காரர்தாம்’’ என்று கூறியதை நான் கேட்டேன். அவர்களில் ஒருவராக நீ ஆகிவிட வேண்டாம் என உன்னை நான் எச்சரிக்கிறேன்’’ என்று கூறினார்கள்.
ஆதாரம்: (முஸ்லிம்: 3736)
நிர்வாகிகளிடமும், ஆட்சியாளர்களிடமும் இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பை இந்தச் செய்தி வலியுறுத்துகின்றது. ஆட்சியாளர்களில் மிகவும் மோசமானவர்கள் மக்களை வதைக்கின்ற, துன்புறுத்துகின்ற கடும் உள்ளமும், கல் நெஞ்சமும் கொண்டவர்கள் தான் என்று வன்மையாக நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கின்றார்கள்.
ஒரு ஆட்சியாளர் மக்களை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்று இரத்தினச் சுருக்கமாக, அற்புதமான வார்த்தைகளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்களுக்கும், இன்னும் உலகத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற அனைவருக்கும் பாடம் நடத்துகின்றார்கள்.
ஒரு ஆட்சியாளருக்கு, தான் ஆட்சி செய்கின்ற மக்களின் மீது இரக்கமும் அன்பும் பரிவும் கட்டாயம் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் தன்னுடைய மனம் போன போக்கிலே சட்டங்களைக் கொண்டு வராமல், மக்களின் வாழ்வியல் சூழலுக்கு தகுந்தாற்போன்று தங்களின் நடவடிக்கையை அமைத்துக் கொள்வார்கள்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் மக்களை நிர்வகிக்கின்ற ஆட்சியாளர்கள் கடின சித்தம் கொண்டவர்களாகவும், கோர குணம் படைத்தவர்களாகவும், இரக்க குணத்தைக் குழிதோண்டிப் புதைத்து விட்டும் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இதன் காரணமாகத் தான் மக்கள் என்ன அவதிப்பட்டாலும் வேதனைப்பட்டாலும் அவற்றைக் கண்டு கொள்ளாமல், தங்களுக்கு ஆட்சி கிடைத்து விட்டது, இருக்கின்ற குறிப்பிட்ட ஆண்டுகளில் மக்களை எந்த அளவிற்குப் பிழிய முடியுமோ அந்த அளவிற்குக் கொடுமைப்படுத்தி, ஆனந்தமடைகின்றார்கள்.
உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்களின் மனோநிலைக்குத் தகுந்தாற்போன்று ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் மற்றும் அதற்குக் கீழ் உள்ள பகுதிகளிலும் ஆட்சியாளர்கள் அமைந்து விட்டால் மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சாக அமைந்து விடும்.
மேலும் ஒரு ஆட்சியாளரிடத்தில் மக்கள் எந்தெந்த குணநலன்களை எல்லாம் எதிர்பார்க்கின்றார்களோ, ஆட்சியாளர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றார்களோ, எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்று சிந்தனை ஓட்டத்தில் ஓட விடுகின்றார்களோ அதுபோன்ற ஆட்சியாளர்கள் மக்களுக்குக் கிடைப்பது எட்டாக்கனியாகவும், குதிரைக் கொம்பாகவும் இருக்கின்றது.
ஆனால் ஆட்சியாளர் என்றால் யார்? ஆட்சியாளரின் குணநலன் என்ன? ஆட்சியாளர் மக்களை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும்? ஆட்சியாளரின் பண்புகள் என்ன? இதுபோன்ற ஏராளமான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக ஆட்சி செய்த, மக்களை வழிநடத்திய முன்மாதிரித் தலைவர் உலகத்தில் ஒருவர் இருப்பார் என்றால், சவாலாகச் சொல்வதாக இருந்தால் அது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மட்டும் தான்.
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.
இறைவன் கற்றுத் தந்த அடிப்படையில் மக்களை வழிநடத்துகின்ற ஆட்சியாளர் என்ற அடிப்படையிலும் நபி (ஸல்) அவர்களிடத்தில் ஏராளமான முன்மாதிரிகள் இருக்கின்றன.
மக்கள் நலனில் அக்கறை காட்டி, ஆட்சி என்றால் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று அற்புதமான முறையில் வழிகாட்டி விட்டுச் சென்றிருக்கின்றார்கள். மக்களை எவ்வாறெல்லாம் ஆட்சி செய்தார்கள் என்பதற்கு ஏராளமான செய்திகள் கொட்டிக் கிடந்தாலும், அவைகளில் ஒரு சில முக்கியமான செய்திகளை, இன்றைய கால ஆட்சியாளர்களுக்கு எடுத்துக் காட்டுகின்றோம்.
மக்களை ஆட்சி செய்கின்ற ஆட்சியாளர் வீரமிக்கவராக, எதிரிகளைக் கலங்கடிக்கக் கூடிய வகையில் தைரியமான, துணிச்சல் மிகுந்தவராக இருக்க வேண்டும். இந்தப் பண்பு ஆட்சி செய்பவர்களுக்கு மிக மிக அவசியமான ஒன்று.
ஏனென்றால் தன்னுடைய மக்களின் உயிர், உடைமை, பொருளாதாரம் என்று சொல்லி அத்தனைக்கும் பாதுகாவலராக ஒரு ஆட்சியாளர் இருக்க வேண்டும். மக்களுக்குப் பின்னால் ஒளிந்து நின்று கொண்டு வீர வசனம் பேசுவது மட்டும் ஆட்சியாளரின் வீரத்தை எடுத்துரைக்காது.
மாறாக, எதிரிகள் எப்போது தாக்க வந்தாலும், தாக்குதலைத் தொடுத்தாலும், துன்பங்களை அள்ளித் தெளித்தாலும் மக்களுக்கு முன்னணியில் ஆட்சியாளர் தான் நிற்க வேண்டும்.
பத்ருப் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலமே எங்களை நாங்கள் காத்துக் கொண்டோம். அவர்கள் தான் எதிரிகளுக்கு எங்களை விட நெருக்கத்தில் இருந்தனர். அன்றைய தினம் அவர்கள் தாம் கடுமையாகப் போரிட்டனர்.
நூல்: (அஹ்மத்: 654) (619), 991
எதிரிகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத போது பெரும்பெரும் வீரமிக்க நபித்தோழர்கள் கூட, நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னே நின்று தம்மைக் காத்துக் கொண்டு நிற்கின்றார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் எதிரிகளுக்கு மிகவும் நெருக்கத்தில் நிற்கின்றார்கள்.
இதுபோன்ற வீரமிக்கவர்களாகவும், மக்களைப் பாதுகாக்கின்ற கேடயமாகவும் ஆட்சியாளர்கள் இருக்க வேண்டும். கோழைகளாக இருப்பவர்கள் ஆட்சியில் இருப்பது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடுதான். மேலும், இதுபோன்ற வீரத்தைப் பறைசாற்றுகின்ற மற்றொரு செய்தியும் நபி (ஸல்) அவர்கள் சிறந்த வீரமிக்க மக்களின் பாதுகாவலர் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்தக் கூடியதாக இருக்கின்றது.
நபி (ஸல்) அவர்கள், மக்களிலேயே அழகானவர்களாக, வீரமிக்கவர்களாக இருந்தார்கள். மதீனா நகர மக்கள் ஓரிரவு (எதிரிகள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி) பீதிக்குள்ளானார்கள். ஆகவே, அவர்கள் சத்தம் வரும் திசையை நோக்கிப் புறப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அதற்குள் செய்தியைத் தீர விசாரித்து விட்டு அபூதல்ஹா (ரலி) அவர்களின் சேணம் பூட்டப்படாத குதிரை மீது சவாரி செய்தவர்களாக வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கழுத்தில் வாள் (மாட்டப் பட்டுத்) தொங்கிக் கொண்டிருந்தது. அவர்கள், “பயப்படாதீர்கள். பயப்படாதீர்கள்’’ என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: (புகாரி: 2908)
இந்தச் செய்தி ஒரு ஆட்சியாளரின் சிறப்பு மிக்க மாவீரத்திற்கு முன்னுதாரணமாக உள்ள செய்தியாகும். மக்கள் நன்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கின்ற வேளையிலோ, அல்லது ஒய்வு எடுத்துக் கொண்டிருக்கும்போதோ கடைக் கோடிப் பகுதியிலிருந்து கடுமையான சப்தம் வருகின்றது.
மக்களெல்லாம் என்ன சப்தம்! என்ன சப்தம்! என்று பேசிக் கொண்டிருக்கின்ற வேளையிலே, சப்தம் வருகின்ற திசையிலிருந்து சிங்கமாகக் கர்ஜித்து, யாருடைய துணையும் இல்லாமல் தன்னந்தனியாக என்னவென்று பார்த்து விட்டுத் திரும்பி வந்து, ‘மக்களே! பயப்படாதீர்கள்! பயப்படாதீர்கள்!’ என்று மக்களின் பாதுகாவலராகத் திகழ்ந்தாரே, இவரல்லவா ஒரு வீரமிக்க ஆட்சியாளர்.
ஆனால், இன்றைய ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு நாளும் ஏழை, நடுத்தர மக்களின் தூக்கத்தை நாசப்படுத்தி, நிம்மதியைத் தொலைத்து ஒவ்வொரு நாளும் அவதிப்பட வைக்கின்ற காரியங்களில் ஈடுபட்டு மக்களை வேதனையில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள். இது ஒரு ஆட்சியாளருக்கு உகந்த குணமல்ல.
மக்களை நிர்வகிக்கின்ற ஆட்சியாளர் மக்கள் படுகின்ற சிரமத்தைப் போக்குகின்ற வகையில் இருப்பார். மேலும், மக்கள் ஏதாவது தங்களின் வாழ்வாதாரத்திற்காக, உணவுக்காக, இன்னபிற தேவைக்காகக் கடன் வாங்கியிருந்தால், அவரது கடனை ஆட்சியாளர் பொறுப்பேற்று, தன்னுடைய அரசு கஜானாவிலிருந்து பொருளை எடுத்து அடைக்க வேண்டும். இவர்தான் சிறந்த ஆட்சியாளர்.
நபியவர்களிடம், கடன்பட்டவரின் உடல் (ஜனாஸா தொழுகைக்காகக்) கொண்டு வரப்பட்டால், ‘‘கடனை அடைப்பதற்கு எதையேனும் இவர் விட்டுச் சென்றிருக்கிறாரா?’’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்பார்கள். கடனை அடைக்க எதையேனும் அவர் விட்டுச் சென்றதாகக் கூறப்பட்டால் அவருக்குத் தொழுகை நடத்துவார்கள். இல்லாவிட்டால் ‘‘உங்கள் தோழருக்கு நீங்கள் தொழுகை நடத்திக் கொள்ளுங்கள்’’ என்று முஸ்லிம்களிடம் கூறி விடுவார்கள்.
ஏராளமான வெற்றிகளை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய போது ‘‘முஃமின்கள் விஷயத்தில் அவர்களை விட நானே அதிக உரிமை படைத்தவன். எனவே கடன்பட்டு முஃமின்கள் யாரேனும் மரணித்து விட்டால் அதைத் தீர்ப்பது என் பொறுப்பு. அவர் சொத்தை விட்டுச் சென்றால் அது அவரது வாரிசைச் சேர்ந்தது’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 2298) , 5371
ஒரு மனிதர் மரணமடைந்தவுடன் அவர் விஷயத்தில் எப்படிப்பட்ட அழகான அணுகுமுறையை ஒரு ஆட்சியாளர் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்தச் செய்தி அற்புதமான முறையில் பறைசாற்றுகின்றது.
இறந்த மனிதருக்குக் கடன் இருக்கின்றதா? என்று கேட்கப்படுகின்றது. ஆம்! கடன் இருக்கின்றது என்று கூறினால், இதோ! அந்தக் கடனைத் தீர்ப்பது என் பொறுப்பு! என்று சொல்லி மக்களின் கடனைத் தீர்த்தார்களே, இவர் தான் உண்மையில் மக்களின் பாதுகாவலர்.
ஆனால் இன்றைய ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பவர்கள் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் குறிப்பிட்ட ஒரு தொகையை கடனாக நிர்ணயித்து, யார் வாங்கிய கடன் என்று தெரியாமல் சாதாரண மனிதர்கள் அந்தக் கடனை அடைக்க கூடிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றார்கள்.
மேலும் ஒரு சாமானியன், அரசிடம் கடன் வாங்கியிருந்தால் அவனால் கட்ட முடியாத சூழல் ஏற்பட்டாலும் கூட அவனைக் கேவலப்படுத்தி, அவமானப்படுத்தி, அவனது கடனை எப்படியாவது வசூலித்து விடுவதைப் பார்க்கின்றோம். அல்லது கடனை அடைக்க முடியாமல் அவன் உயிரை விட்டு விடுவதையும் பார்க்க முடிகின்றது. இதுபோன்ற கோரமான ஆட்சியாளர்கள் மக்களிடத்தில் இருப்பது இழிவே!
இன்றைய காலகட்டத்தில் வட்டி என்ற சாபக்கேடு, ஒவ்வொருவருடைய குடும்பத்தாரின் ரத்தங்களையும் குடித்துக் கொண்டிருக்கின்றது.
மக்களின் சிரமங்களையும், பலவீனங்களையும் கன கச்சிதமாக அரசு பயன்படுத்திக் கொள்கின்றது. அதாவது, மனிதர்களின் பொருளாதார சிரம கால கட்டத்தில் மக்களிடமிருந்து அதிகப்படியான வட்டியை உறிஞ்சி எடுக்கும் அவல நிலையைப் பார்க்கின்றோம்.
ஆனால், நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் வட்டி என்ற வன்கொடுமையை எவ்வாறு ஒழித்துக் காட்டினார்கள் என்பதற்கு அற்புதமான சான்று இதோ!
“அறியாமைக் கால நடவடிக்கைகள் அனைத்தையும் என் காலுக்கடியில் மிதித்துப் புதைக்கிறேன். அறியாமைக் காலத்தில் நடந்த எல்லாக் கொலைகளுக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்படுகின்றது. முதன் முதல் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆவின் மகனுடைய கொலையை நான் மன்னிக்கிறேன். அறியாமைக் காலத்து வட்டிகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
முதன் முதல் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அப்பாஸின் வட்டியை நான் தள்ளுபடி செய்கிறேன். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்று நபி (ஸல்) தமது இறுதிப் பேருரையில் பிரகடனம் செய்தார்கள்.
நூல்: (முஸ்லிம்: 2334)
வட்டி வாங்குவது அதற்கு முன் தடை செய்யப்படாமல் இருந்தது. அந்தக் கால கட்டத்தில் மிகப் பெரிய அளவில் வட்டித் தொழில் செய்தவர் நபியவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) ஆவார். வட்டியைத் தடை செய்த நபி (ஸல்) அவர்கள் இதற்கு முன் யாரெல்லாம் வட்டிக்குக் கடன் கொடுத்தார்களோ அவர்கள் அசலை மட்டும் தான் வாங்க வேண்டும்; ஏற்கனவே பேசப்பட்ட வட்டியானாலும் அதை வாங்கவும், கொடுக்கவும் கூடாது என்று பிரகடனம் செய்தார்கள்.
தம்மிடமிருந்தே எதையும் ஆரம்பிக்க வேண்டும் என்ற கொள்கையின் காரணமாக, தமது பெரிய தந்தையின் வட்டிகள் அனைத்தையும் முதன் முதலாகத் தள்ளுபடி செய்து, மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றார்கள். எனது பெரிய தந்தையிடம் வட்டிக்குக் கடன் வாங்கியவர் அசலை மட்டும் கொடுத்தால் போதும். வட்டியைக் கொடுக்கக் கூடாது என்று அறிவிப்புச் செய்கின்றார்கள்.
இன்றைக்கு வட்டி காரணமாக சீரழிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கின்ற குடும்பங்கள் ஏராளம்! ஏராளம்! இன்னும் ஒருபடி மேலாக, வாங்கிய கடனுக்கு வட்டி கொடுக்க முடியாமல் குடும்பத்தோடு கொடூரமாகத் தற்கொலை செய்து கொள்கின்ற அவல நிலையைப் பார்க்கின்றோம்.
ஆனால் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற ஆட்சியாளர்கள் வட்டியைக் கண்டும் காணாமலும், அலட்சியமாக ஆட்சி நடத்திக் கொண்டும், வட்டியின் மூலமாக அரசாங்கத்தையும், வயிறையும் வளர்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். இதுபோன்ற ஆட்சியாளர்கள் வேரறுக்கப்பட வேண்டும்.
மக்களை நிர்வகிக்கின்ற ஆட்சியாளர் தனக்கோ, தன்னுடைய குடும்பத்தாருக்கோ, தன்னோடு நன்கு பழகிய நண்பர்களுக்கோ, பணக்காரர்களுக்கோ இவ்வாறு யாருக்குப் பாதகமாக இருந்தாலும், அத்தகையவர்கள் செய்த தவறுகளை தயவு தாட்சண்யமின்றி சுட்டிக் காட்டி, உரிய தண்டனை வழங்க வேண்டும். அவர் தான் மக்களை நிர்வகிக்கின்ற சிறந்த ஆட்சியாளர்.
மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். “அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்?’’ என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், “அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?’’ என்று கூறினர்.
(உஸாமா (ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்’’ என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள்.
பிறகு (அவ்வுரையில்), “உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்) விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விட்டால் அவனுக்குத் தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்திருப்பேன்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: (புகாரி: 3475)
ஆட்சி செய்கின்ற ஒவ்வொரு ஆட்சியாளரும் இந்தச் செய்தியை நன்றாக, ஆழமாக படித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றார்கள்.
மக்ஸூமி குலம் என்பது அன்றைய கால அரபு மக்களிடத்தில் மிகவும் உயர்ந்த குலமாகக் கருதப்பட்டவர்கள் ஆவார். அப்படிப்பட்ட உயர்ந்த குலத்தைச் சார்ந்த பெண்மணி திருடி விடுகின்றார். எனவே அவருக்குத் தண்டனையிலிருந்து விலக்கு கேட்டு நபி (ஸல்) அவர்களின் மிகவும் பிரியத்திற்குரிய நபரான உஸாமாவைப் பரிந்து பேச அனுப்பி வைக்கின்றார்கள்.
ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஸாமாவுக்குக் கொடுத்த பதிலில் கோபக் கணைகளால் கொந்தளிக்கின்றார்கள். என்னுடைய அன்பு மகள் ஃபாத்திமாவுக்கும் இதே சட்டம் தான்! சட்டத்தில் யாருக்கும் விதிவிலக்கு இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றார்கள். இவர்தான் உண்மையில் சிறந்த ஆட்சியாளர்.
மேலும் இறைவன் தன்னுடைய திருக்குர்ஆனில் அறிவுரை கூறும்போது…
நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகிவிடுங்கள்!
(வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
இந்த இறை போதனைக்கேற்ப, குறிப்பாக ஆட்சியாளர்கள் நீதி வழங்குவதிலும், நீதியை நிலைநாட்டுவதிலும் மனோ இச்சைகளை ஒருக்காலும் பின்பற்றக் கூடாது.
ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் பணக்காரர்களுக்கு ஒரு நீதியும், ஏழைகளுக்கு ஒரு நீதியும் என்று சொல்லி ஏழைகளை அடித்துத் துவம்சம் செய்தும், பணக்காரர்களைக் காப்பாற்றியும் தங்களின் விசுவாசத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
மேலும், பாமர மக்களை நசுக்குவதிலும், துன்புறுத்துவதிலும் முழுக் கவனத்தைச் செலுத்தி வருகின்றார்கள். இவர்கள் ஆட்சியில் இருப்பது மக்களுக்குப் பெருத்த துன்பத்தைத் தான் தந்து கொண்டிருக்கின்றது.
இஸ்லாமிய மார்க்கம் வழிகாட்டிய அடிப்படையில் மக்களை நிர்வகிக்கின்ற ஆட்சியாளர்கள் தங்களின் பணிகளை, சேவைகளை, தொண்டுகளை செவ்வனே சிறப்பாகச் செய்து முடித்தார்கள்.
மகாத்மா காந்தி அவர்கள் சொன்ன அற்புதமான செய்திகள், இன்றளவும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வார்த்தைகளாக வரலாறுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
அதாவது இந்த நாடு சிறப்பான, வீரியமிக்க, மக்கள் நலனில் அக்கறை காட்டுகின்ற, மக்களைப் பாதுகாக்கின்ற நாடாக மாற வேண்டுமானால், உமர் (ரலி) அவர்களின் ஆட்சி போன்று ஆட்சி செய்ய வேண்டும் என்றார்.
உண்மையில், நபி (ஸல்) அவர்களின் பாசறையில் பாடம் படித்த உமர் (ரலி) அவர்கள் அற்புதமான ஆட்சியாளராக, மக்களைப் பாதுகாக்கின்ற, மக்களுக்காகவே ஆட்சி செய்கின்ற வேலையை கன கச்சிதமாகச் செய்து முடித்தார்கள்.
ஆனால் இன்றைய நவீன ஆட்சியாளர்கள் மக்களை எந்த அளவுக்குத் துன்பத்திற்கு உள்ளாக்க முடியுமோ, மக்களின் பொருளாதாரங்களை எந்த அளவுக்குச் சுரண்ட முடியுமோ, மக்களை எந்த அளவுக்குக் கதற வைக்க முடியுமோ அந்த அளவுக்குக் கடும் சிரமத்தையும், வேதனையையும் கொடுத்து, தங்களின் கொடூர ஆட்சியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த உலகத்தில் மனிதர்கள் தன்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பிற மக்களை ஆட்சி செய்து கொண்டிருந்தாலும், உண்மையான ஆட்சியாளன் உலகத்தைப் படைத்த இறைவன் தான். இந்தச் செய்தியை ஆட்சியாளர்கள் தங்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைக்க வேண்டும்.
“அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்’’ என்று கூறுவீராக!
இன்றைக்கு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பவர்கள் தமது பலத்தினாலும் திறமையினாலும் ஆற்றலினாலும் அறிவினாலும் அனுபவத்தினாலும் தான் நமக்கு இந்தப் பதவி கிடைத்திருக்கின்றது என்று நினைக்கின்றார்கள்.
ஆனால் நல்லவர்களாக இருந்தாலும் கொடூர குணம் கொண்டவர்களாக இருந்தாலும் ஆட்சியையும் பதவியையும் வழங்குவது இறைவனே! கெட்டவர்களுக்குக் கூட இறைவன் ஆட்சியைக் கொடுத்துக் கேவலப்படுத்துவான்.
இதைக் கவனத்தில் வைத்து ஆட்சியாளர்கள் அகம்பாவம், ஆணவம், கொடூர குணம் படைத்தவர்களாக இல்லாமல், மக்களின் நலனில் அக்கறை கொண்டு, மக்களுக்காக ஆட்சி செய்யக் கடமைப்பட்டிருக்கின்றார்கள்.
அப்படிப்பட்ட மனிதர்களாக, முழுமையாக இல்லையென்றாலும் இருப்பதில் ஓரளவு நற்குணம் படைத்த ஆட்சியாளர்கள் யார்? என்பதை மக்கள் தேர்ந்தெடுக்கவும் கடமைப்பட்டிருக்கின்றார்கள். அல்லாஹ்வே நன்கறிந்தவன்!!
இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளின் அடிப்படையில் வாழ்ந்து மரணிப்போமாக! மறுமையில் வெற்றி பெறுவோமாக!
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.