பாபர் மஸ்ஜித் தீர்ப்பு: நங்கள் கேட்டது நிலத்தை அல்ல! நீதியை

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு: நங்கள் கேட்டது நிலத்தை அல்ல! நீதியை

நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பாபர் மசூதியின் வழக்கில் உச்சநீதிமன்றம் (9/11/19) அன்று தனது தீர்ப்பை வழங்கியது. பாபர் மசூதி நிலம் முழுக்க ராம் லல்லா தரப்பினருக்கு உரியது, அங்கு அவர்கள் ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும், முஸ்லிம்களுக்கு அயோத்தியில் ஐந்து ஏக்கர் நிலம் வழங்க மத்திய – மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் கூறுகின்றது. இது எந்த விதத்திலும் நியாயபூர்வமான, மற்றும் ஆதாரத்தின் அடிப்படையிலான தீர்ப்பல்ல!

பாபர் மசூதி என்பது ஏதோ இன்று நேற்று கட்டப்பட்ட ஒன்றல்ல! 450 வருடத்திற்கும் மேலாக பாபர் மசூதி நிலைகொண்டுள்ளது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் இதை உறுதி செய்கின்றது. இத்தகைய தொன்மையான, இந்தியச் சின்னமான பாபர் மசூதி கடந்த 1992 டிசம்பர் ஆறாம் நாள் சமூகவிரோதிகளால் இடிக்கப்படுவதற்கு இரண்டு பிரதான காரணங்கள் கூறப்பட்டது.

  • 1.மசூதி இருந்த அந்த இடத்தில் இதற்கு முன்பு கோவில் இருந்தது. கோவிலை இடித்துத் தான் மசூதி கட்டப்பட்டது.
  • 2.மசூதி இருந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார். இதுவே எங்களின் நம்பிக்கை என்று ராம் லல்லா அமைப்பினர் கூறினார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்களை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், அந்த விசாரணையின் அடிப்படையில் ஒரு தகவலை உறுதி செய்கின்றது. அதாவது, கோவிலை இடித்துத் தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது தான் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள அந்தத் தகவல். கோவிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டது என்ற வாதத்தின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்காகக் குறிப்பிட்ட நிலத்தை தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.

அதன் அடிப்படையில் தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் மசூதி இருந்த இடத்தில் கோவில் இருந்ததற்கான எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதன் மூலம் கோவிலை இடித்து பாபர் மசூதி மசூதி கட்டப்பட்டது என்கிற வாதம் பச்சை பொய் என்பது ஆதாரத்துடன் இங்கே நிரூபணமாகி உள்ளது.

அடுத்து, மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்ற நம்பிக்கை அடிப்படையில் சொல்லப்படுகின்ற வாதத்தைப் பொறுத்தவரை, நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் பாபர் மசூதியை இடிப்பதற்குப் பிரதானமாக எந்த இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டதோ அந்த இரண்டுமே சட்டத்தின் அடிப்படையில் ஆதாரமாக ஏற்கத்தக்கவை அல்ல! என்பது தற்போதைய உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

அப்படியென்றால் ஆவணங்களின் அடிப்படையிலும் அனுபவப் பாத்தியதை அடிப்படையிலும் பாபர் மசூதி நிலம் முஸ்லிம்களுக்கே சொந்தம் என்றுதான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்க வேண்டும். ஆனால் உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன? 1045 பக்கங்களைப் படித்தாலும் பாபர் மசூதி நிலம் முஸ்லிம்களுக்கு இல்லை என்பதுதான் அதன் தீர்ப்பின் சாராம்சம்.

கடந்த 2010 ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் பாபர் மசூதி இருந்த இடத்தை மூன்று பங்குகளாகப் பிரித்து அளித்த தீர்ப்பைத் தவறு என்று விமர்சிக்கின்றது உச்ச நீதிமன்றம். மூன்று பங்காகப் பிரித்து அளிக்கப்பட்ட தீர்ப்பைத் தவறு என்று சொன்ன உச்சநீதிமன்றம், மொத்தப் பங்கையும் எவ்வித ஆதாரமுமின்றி முஸ்லிம்களிடமிருந்து பறித்து ராமர் கோவில் கட்ட வழங்குவது எவ்விதத்தில் நியாயமான தீர்ப்பாக இருக்க முடியும்?

எனவே இது தீர்ப்பல்ல! முஸ்லிம்கள் மீதான திணிப்பு. “முஸ்லிம்கள் பாபர் மசூதி நிலத்தை விட்டுத் தர வேண்டும். வேறு இடத்தில் பள்ளிவாசலைக் கட்டிக் கொள்ள வேண்டும்” இதுதான் கடந்த பல வருடங்களாக குறிப்பிட்ட இந்துத்துவ அமைப்புகளின் குரலாக, கோரிக்கையாக இருந்தது.  பிரவீன் தொகாடியா போன்றவர்களும் இந்தக் கருத்தையே கூறினார்கள்.

தற்போது உச்ச நீதிமன்றமும் அதையே தீர்ப்பாக அளிக்கின்றது என்றால் இத்தீர்ப்பு எப்படி பாதிக்கப்பட்டவர்களின் குரலாக இருக்க முடியும்? நீதியின் குரலாக இந்த தீர்ப்பை எப்படிக் கருத முடியும்? இந்தியாவில் முஸ்லிமாக வாழ்வதே கடினம் என்பதையே பாபர் மசூதி விவகாரத்தில் நடைபெற்ற தொடர்ச்சியான சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. பாபர் மசூதி விவகாரத்தில் தொடர்ச்சியாக நீதிமன்றங்களும் அதிகார வர்க்கமும் முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்து வருகிறது.

1857ஆம் ஆண்டில், அதாவது பாபர் மசூதி கட்டப்பட்டு ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அது ராமர் பிறந்த இடம் என்று கூறி, முதல்முறையாக பாபர் மசூதியின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் வழிபாடு செய்து தங்களது ஆக்கிரமிப்பைத் துவக்கினார்கள். 1949-ல் கள்ளத்தனமாக, கொல்லைப்புற வழியாக பாபர் மசூதியின் உள்ளே ராமர் சிலை நள்ளிரவில் கொண்டு வைக்கப்படுகின்றது.

ராமர் தானாகவே தனக்குரிய இடத்தில் அவதரித்து விட்டார் என்ற பச்சைப் பொய் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு இந்த செயலுக்கு நியாயம் கற்பிக்கப்பட்டது. அப்போதைய காங்கிரஸ் அரசு இதை உரிய விதத்தில் கண்டிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ இல்லை. அதன் பிறகு 1986-ல் ராஜீவ் காந்தி ஆட்சியின் போது பாபர் மசூதியில் போடப்பட்டிருந்த பூட்டுக்கள் அகற்றப்பட்டு இந்துக்கள் வழிபாடு செய்வதற்கான வாசல் திறந்து விடப்பட்டது. 1992-ல் நரசிம்மராவ் ஆட்சியின் போது, மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

நீதிமன்றங்கள் இத்தகைய செயலை உரிய விதத்தில் கண்டிக்கவில்லை. மசூதி இருந்த இடத்தில் தற்காலிகக் கோவில் கட்டப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகளையும் அத்துமீறல்களையும் நீதிமன்றம் கண்டு கொள்ளவில்லை கோவிலுக்கு கூரைகள் அமைக்கப்பட்டது. அதையும் யாரும் கண்டிக்கவில்லை. இத்தகைய துரோகங்களை எதிர்த்து உயர்நீதிமன்றம் போய் நீதி கேட்டால் “உரிமைப் பட்டவனுக்கு ஒரு பங்கு, அபகரித்தவனுக்கு இரண்டு பங்கு” என்ற அநியாயமான தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியது.

அதை எதிர்த்து நம்பிக்கையோடு ஜனநாயகத்தின் அறநெறிகளில் ஆழ்ந்த பற்று கொண்டு உச்ச உச்சநீதிமன்றத்தின் படி ஏறினால் “உனக்கு எந்தப் பங்கும் இல்லை. இடித்தவர்களிடம் தான் முழு நிலத்தையும் கொடுப்போம். வேண்டுமானால் வேறு இடத்தில் பள்ளிவாசலை கட்டிக் கொள்” என்கிறது உச்சநீதிமன்றம். பாபர் மசூதியை இடித்தது சட்ட விரோதம் என்று கூறும் நீதிமன்றம், இடித்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு வழிகாட்டவில்லை.

மாறாக, இடித்ததற்குப் பரிசாக மசூதி இருந்த இடத்தை அவர்களிடமே ஒப்படைத்து, சட்ட விரோதச் செயலுக்கு அங்கீகாரம் வழங்குகின்றது. இதுதான் தீர்ப்பா? இதுதான் நியாயமா? இப்படி ஒரு தீர்ப்புக்காகவா எழுபது ஆண்டுகள் காத்திருந்தோம்? இத்தனை ஆயிரம் உயிர்களை இழந்தோம்? இந்திய முஸ்லிம்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை இத்தீர்ப்பு உணர்த்தவில்லையா? இதில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, வெந்த புண்ணில் ஆசிட் ஊற்றுவது போல அரசியல்வாதிகள் தீர்ப்பை வரவேற்று கருத்து தெரிவிக்கின்றனர்.

தற்போதைய அரசியல் களத்தில் அன்புக்குரிய சகோதரர் தொல். திருமாவளவன் மற்றும் சீமான், திருமுருகன் காந்தி ஆகியோரைத் தவிர்த்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை தெளிவாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இல்லை எனலாம். எது எப்படியோ பாபர் மசூதி முஸ்லிம்களை விட்டும் பறிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அதை மீட்டுத் தரக் கடமைப்பட்ட உச்ச நீதிமன்றமோ மசூதி உனக்கு இல்லை, அதற்கு பதிலாக ஐந்து ஏக்கர் நிலத்தை எடுத்துக் கொள் என்று கூறுகிறது.

ஒரு பள்ளிவாசல் கட்ட 5 ஏக்கர் நிலம் வாங்கக் கூட வக்கற்றவர்களா இந்த சமுதாயம்? இந்திய சுதந்திரத்திற்காக இன்னுயிரைத் தந்து போராடியவர்கள். ஆங்கிலேயர்களை விரட்டியடிக்க கோடிகளை கொட்டிக் கொடுத்து, நாட்டிற்குத் தொண்டாற்றியவர்கள். “நாங்கள் கேட்டது நிலத்தை அல்ல! நீதியை!” அது கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கைவிரித்து விட்டது.

முஸ்லிம்களுக்கு இருந்த ஒரே நம்பிக்கையும் இத்தீர்ப்பின் மூலம் தகர்ந்து விட்டது. ஜனநாயக வழியில் நமது உரிமைகளைப் பாதுகாத்து நிலைநாட்டிட வேண்டும். நியாய உணர்வுள்ள நன்மக்கள் நீதியின் பக்கம் நிர்ப்பார்கள் உண்மை ஒரு நாள் வெல்லும்.

Source: unarvu (15/11/19)