4) நபிமார்கள் வழியாக அல்லாஹ்வே அற்புதங்களை செய்தான்!

நூல்கள்: அற்புதங்கள் ஓர் ஆய்வு

4) நபிமார்கள் வழியாக அல்லாஹ்வே அற்புதங்களை செய்தான்!

நபிமார்கள் செய்ததாகச் சொல்லப்படும் அற்புதங்கள் எதுவும் அவர்களால் செய்யப்பட்டவை அல்ல. அற்புதங்கள் செய்யும் ஆற்றல் அவர்களுக்கு இயல்பாக வழங்கப்படவும் இல்லை. மக்கள் முன்னிலையில் அற்புதம் செய்துகாட்ட அல்லாஹ் நாடும் போது நபிமார்கள் வழியாக நிகழ்த்திக் காட்டினான் என்பது தான் அற்புதங்களைப் புரிந்து கொள்ளும் சரியான முறையாகும்.

ஒருவர் ஒரு காரியத்தை தாமாகச் செய்வதற்கும், அச்செயல் அவரிடம் வெளிப்படுவதற்கும் உள்ள வேறுபாட்டைப் பின்வரும் உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்.

கோமாவில் கிடக்கும் ஒருவன் எழவே மாட்டான் என்று எல்லா மருத்துவர்களும் உறுதிப்படுத்தி விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் திடீரென்று அவன் எழுந்து உட்கார்ந்து நம்மிடம் நலம் விசாரித்தால் அது அற்புதச் செயல் தான். அதில் சந்தேகம் இல்லை. அதை அவன் செய்த அற்புதம் என்று அவனும் சொல்ல மாட்டான். நாமும் சொல்ல மாட்டோம். அவனுக்கு அருள் புரிவதற்காக அவனுக்கு அல்லாஹ் செய்த அற்புதம் என்று இதைச் சொல்வோம்.

ஒருவன் தானே நினைத்து, தானே திட்டமிட்டு செய்தால் தான் அதை அவன் செய்தான் என்போம்.

ஒருவன் 50 மாடிக் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து சாகாமல் பிழைத்தால் எப்படி அதைப் புரிந்து கொள்வோம்? இது அற்புதச் செயல் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இது அவன் செய்த அற்புதமா? அவன் மூலம் அல்லாஹ் வெளிப்படுத்திய அற்புதமா?

அவன் எப்போது வேண்டுமானாலும் ஐம்பது மாடிக் கட்டடத்தில் இருந்து விழுவான். அவனுக்கு ஒன்றும் ஆகாது என்று இருந்தால் தான் அவன் செய்த அற்புதம் என்று கூறுவோம். இப்படி அவனும் சொல்ல மாட்டான். எவனும் சொல்ல மாட்டான். அவனே எதிர்பாராமல் அல்லாஹ் அவனுக்கு அதிசயமாக முறையில் உதவியுள்ளான் என்று இதைப் புரிந்து கொள்வோம்.

ஒருவர் ஒரு காரியத்தைச் செய்ய வல்லவர் என்று எப்போது நாம் கூறுவோம்?

அவர் செய்ய நினைக்கும் போதெல்லாம் அதைச் செய்து காட்ட வேண்டும். ஒரு தீக்குச்சியை இரண்டாக உடைக்கும் சக்தி எல்லா மனிதர்களுக்கும் உள்ளது என்று நாம் நம்புகிறோம். நாம் எப்போது நினைக்கிறோமோ அப்போதெல்லாம் தீக்குச்சியை இரண்டாக உடைத்துக் காட்ட முடியும். இலட்சத்தில் ஒன்று அல்லாஹ்வின் நாட்டப்படி தவறிடலாம்.

ஒருவன் பெரிய கடப்பாரையை வளைக்கிறான். அது இரண்டாக உடைந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். இவன் பெரிய கடப்பாரையை உடைக்கும் அளவுக்கு வலிமை பெற்றவன் என்று எப்போது கூறுவோம்? மேலும் சில கடப்பாரைகளைக் கொடுத்து உடைத்துக் காட்டு என்று சொல்வோம். கொடுக்கும் கடப்பாரைகளை எல்லாம் அவன் உடைத்துக் காட்டினால் அப்போது அவனுக்கு அந்தச் சக்தி உள்ளதாக நாம் கருதுவோம்.

வேறு கடப்பாரைகளை அவ்வாறு உடைத்துக் காட்ட அவனுக்கு இயலாவிட்டால், அல்லது அதைச் செய்ய அவன் மறுத்தால் அவன் ஒருமுறை கடப்பாரையை உடைத்தது அவனது சக்தியால் அல்ல. அந்தக் கடப்பாரை உள்ளுக்குள் முறிந்து உடையும் நிலையில் இருந்திருக்கும். அல்லது அல்லாஹ் அந்தக் கடப்பாரை உடைய வேண்டும் என அந்த நேரத்தில் மட்டும் கட்டளை போட்டதால் உடைந்து இருக்கும். இப்படித் தான் புரிந்து கொள்வோம். இவனுக்கு கடப்பாரையை உடைக்கும் ஆற்றல் இல்லை என்ற முடிவுக்கு வருவோம்.

நபிமார்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்களில் அவர்களின் அதிகாரம் எப்படி இருந்தது என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

நமக்கு நம்பிக்கையான ஒருவரிடம் நமது ஒரு வங்கிக் கணக்கின் செக் புத்தகத்தைக் கொடுக்கிறோம். செக் புத்தகத்தின் எல்லா சீட்டுக்களிலும் தொகையை நிரப்பாமல் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கிறோம். அவர் எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும். இந்த வகையில் அல்லாஹ் நபிமார்களுக்கு அற்புதங்களைக் கொடுக்கவில்லை.

நம்பகமானவரிடம் செக் புத்தகத்தில் ஒரு சீட்டில் கூட கையெழுத்துப் போடாமல் கொடுக்கிறோம். இப்போது அவர் பணம் எடுப்பதாக இருந்தால் ஒவ்வொரு தடவையும் நம்மிடம் எவ்வளவு தொகை? எதற்காக என்று தெரிவிக்க வேண்டும். நாம் விரும்பினால் கையெழுத்துப் போடுவோம். அல்லது மறுப்போம். அவர் குறிப்பிட்ட தொகையையே எழுதுவோம். அல்லது அதைவிட அதிகமாகவோ, குறைவாகவோ எழுதுவோம்.

இது போன்ற நிலையில் தான் அற்புதங்களில் நபிமார்களின் அதிகாரம் இருந்தது.

மேலே நாம் எடுத்துக்காட்டிய ஆதாரங்களில் நபிமார்கள் மூலம் மட்டுமின்றி மற்றவர்கள் வழியாகவும் அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. வாயில்லா ஜீவன்கள் வழியாகவும் அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன.

ஹுத் ஹுத் எனும் பறவை சுலைமான் நபியுடன் பேசியுள்ளது. இன்னொரு நாட்டை ஆட்சி புரியும் பெண்ணைப் பற்றி அறிந்து கொள்கிறது. அவர்களின் நடவடிக்கைகளையும் அறிந்து சுலைமான் நபியிடம் கூறுகிறது.

பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத் பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார். ‘அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும்’ (என்றும் கூறினார்). (அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. ‘உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்துள்ளேன். ஸபா எனும் ஊலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்’ என்று கூறியது.

‘நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது. அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்) வழியை விட்டும் தடுத்துள்ளான். அவர்கள் நேர் வழி பெற மாட்டார்கள் (என்றும் கூறிற்று.) வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தாச் செய்ய மாட்டார்களா?

நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷுக்கு அதிபதி. ‘நீ உண்மை சொல்கிறாயா? பொய்யர்களில் ஆகி விட்டாயா? என ஆராய்வோம்’ என்று அவர் கூறினார். ‘எனது இந்தக் கடிதத்தை நீ கொண்டு சென்று அவர்களிடம் அதைப் போடு! பின்னர் அவர்களை விட்டும் விலகி என்ன பதில் தருகிறார்கள் என்று கவனி!’ (என்றார்).

(அல்குர்ஆன்: 27:20-28)

ஹுத் ஹுத் எனும் பறவை மனிதனைப் போல் பகுத்தறிவு பெற்றிருந்தது என்று இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். ஹுத் ஹுத் பறவை அற்புதம் செய்தது என்று இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். அல்லாஹ், அவன் நிகழ்த்த விரும்பும் அற்புதத்தை இப்பறவையின் மூலம் வெளிப்படுத்தினான் என்றுதான் புரிந்து கொள்வோம்.

சுலைமான் நபி அவர்கள் தமது படையினருடன் சென்ற போது எறும்புப் புற்றைக் கடந்து சென்றனர். அதை எறும்பு புரிந்து கொண்ட விபரம் திருக்குர்ஆனில் உள்ளது.

அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது ‘எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாது’ என்று ஓர் எறும்பு கூறியது.

(அல்குர்ஆன்: 27:18)

அந்த எறும்புக்கே இந்த ஆற்றல் இருந்தது என்றும், எறும்புக் கூட்டங்களுக்கு இதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் அளிக்கப்பட்டது என்றும் இதை விளங்கக் கூடாது. இந்தச் சந்தர்ப்பத்தில் அல்லாஹ் தனது அற்புதத்தை அந்த எறும்பின் மூலம் வெளிப்படுத்தினான் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

எறும்பு, மற்றும் ஹுத் ஹுத் பறவை மூலம் தனது அற்புதத்தை அல்லாஹ் சில சமயங்களில் வெளிப்படுத்தியதைப் போலவே நபிமார்கள் வழியாகவும் சில சந்தர்ப்பங்களில் அற்புதங்களை வெளிப்படுத்தியுள்ளான். பறவைகள், எறும்புகள் ஒரு புறம் இருக்கட்டும். அல்லாஹ்வின் எதிரிகள் வழியாகவும் அல்லாஹ் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறான்.

ஸாமிரி என்பவன் மூஸா நபி காலத்தில் வாழ்ந்தவன். அவன் தங்கத்தால் ஒரு காளை மாட்டைச் செய்து அதை இரத்தமும், சதையும் கொண்ட காளையாக ஆக்கி அதைச் சப்தமிடவும் செய்தான். இந்த விபரங்களைப் பின் வரும் வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

அவர்களுக்காக உடலுடன் கூடிய காளைக் கன்றை (ஸாமிரி) வெளிப்படுத்தினான். அது சப்தமும் போட்டது. உடனே அவன் ‘இதுவே உங்கள் இறைவன். மூஸாவின் இறைவன். அவர் வழி மாறிச் சென்று விட்டார்’ என்றான். ‘அது எந்தச் சொல்லுக்கும் பதிலளிக்காது என்பதையும், அவர்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அது அதிகாரம் பெற்றிருக்கவில்லை’ என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா? ‘என் சமுதாயமே! இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்! அளவற்ற அருளாளன் தான் உங்கள் இறைவன். எனவே என்னைப் பின்பற்றுங்கள்! எனது கட்டளைக்குக் கட்டுப்படுங்கள்!’ என்று இதற்கு முன் அவர்களிடம் ஹாரூன் கூறியிருந்தார்.

(அல்குர்ஆன்: 20:88-90)

மூஸா நபியின் சமுதாய மக்கள் எந்த அளவு உறுதியுடன் இருக்கிறார்கள் என்பதைச் சோதிக்கும் விதமாக அல்லாஹ் இந்த அற்புதத்தை ஸாமிரி மூலம் நிகழ்த்திக் காட்டினான். என் சமுதாயமே! ‘இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்’ என்று ஹாரூன் நபி கூறியதிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

நினைத்த மாத்திரத்தில் நினைத்த அற்புதத்தை ஸாமிரி செய்வான் என்று இதைப் புரிந்து கொள்ள முடியாது. இது பற்றி அல்லாஹ் தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்.

“ஸாமிரியே! உனது விஷயமென்ன?” என்று (மூஸா) கேட்டார். “அவர்கள் காணாததைக் கண்டேன். இத்தூதரின் காலடியில் ஒரு பிடி அள்ளினேன். அதை எறிந்தேன். என் மனம் இவ்வாறு என்னைத் தூண்டியது” என்றான். “நீ சென்று விடு! உனது வாழ்க்கையில் ‘தீண்டாதே’ என நீ கூறும் நிலையே இருக்கும். மாற்றப்பட முடியாத வாக்களிக்கப்பட்ட நேரமும் உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார்! அதை நெருப்பில் எரித்து பின்னர் அதைக் கடலில் தூவுவோம்” என்று (மூஸா) கூறினார்.

(அல்குர்ஆன்: 20:95), 96, 97)

என்ன நடந்தது என்று மூஸா நபி விசாரித்தபோது இது போன்ற ஆற்றல் எனக்கு உள்ளது என்று அவன் கூறவில்லை. மாறாக சிற்பத்தைச் செய்து தூதரின் காலடி மண்ணை அதில் போட வேண்டும் என என் மனதுக்குத் தோன்றியது. அவ்வளவு தான் என்று அவன் விடையளித்தான். இதுபோல் செய்யும் ஆற்றல் இவனுக்கு இருக்கவில்லை. இப்படிச் செய் என்று இவன் உள்ளத்தில் அல்லாஹ் ஒரு எண்ணத்தைப் போட்டுள்ளான். அதை அவன் செய்துள்ளான் என்பது இதில் இருந்து தெரிகிறது.

ஸாமிரிக்கு மந்திர சக்தி இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக மூஸா நபியவர்கள் அவன் செய்த காளைச் சிற்பத்தைத் தீயிலிட்டு பொசுக்கி கடலில் வீசிக் காட்டினார்கள். ஸாமிரி வெறுமனே அதைப் பார்த்துக் கொண்டு தான் இருக்க முடிந்தது.

உறுதியான நம்பிக்கை உடைய மூஸா நபியை ஸாமிரியால் எதிர்த்து நிற்க முடியவில்லை. தான் உண்டாக்கிய சிற்பத்தை அவனால் காப்பாற்ற முடியவில்லை. அந்தச் சிற்பமும் அவனைக் காப்பாற்றவில்லை. இது போல் தற்செயலாக பலரது வாழ்விலும் அற்புதங்கள் நிகழும். ஆனால் அதற்கு அவர்கள் சொந்தக்காரர்களாக மாட்டார்கள்.

அற்புதங்கள் இரு வகை

அற்புதங்கள் இரு வகைகளில் உள்ளன.

  • அல்லாஹ் அனுமதி அளித்து அதன்படி செய்யப்படும் அற்புதங்கள் முதல் வகை.
  • யாரிடம் அற்புதம் நிகழ்த்தப்படுகிறதோ அவருக்கே தெரியாமல் நிகழும் அற்புதங்கள் இரண்டாவது வகை.

இந்த இரண்டாம் வகை அற்புதங்கள் மனிதர்களில் பலருக்கு நிகழ்ந்துள்ளன. தர்போதும் நிகழ்கின்றன. மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள் பிழைத்துக் கொள்கிறார்கள். விமானம் நொறுங்கி விழுந்து அனைவரும் மரணித்த பின் ஒரு குழந்தை மட்டும் உயிர் பிழைத்துக் கொள்கிறது. இடிபாடுகளில் சிக்கி அனைவரும் இறந்திருக்கும் நிலையில் பத்து நாட்கள் கழித்து உயிருடன் ஒருவர் மீட்கப்படுகிறார். இது போல் அற்புதங்கள் பலரது வாழ்வில் நடக்கின்றன.

ஐம்பது மாடி கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து சாகாமல் ஒருவன் பிழைத்துக் கொள்கிறான். இது அற்புதம் தான். ஆனால் அவன் கீழே விழுவதற்கு முன்போ, கீழே விழும் போதோ இப்போது நீ சாகமாட்டாய் என்று அவனுக்கு அறிவிக்கப்படுவதில்லை. இது நடந்து முடியும் வரை நாம் சாக மாட்டோம் என்பது அவனுக்குத் தெரியாது.

இந்த அற்புதங்கள் இரண்டாவது வகையைச் சேர்ந்ததாகும்

ஒருவனிடம் நிகழும் அற்புதம் அவனுக்கே தெரியாமல் இருப்பது போல் நபிமார்களின் அற்புதம் இருக்கவில்லை. நபிமார்கள் அல்லாஹ்வின் அனுமதியோடு அற்புதம் செய்வதால் இப்போது நாம் போடும் கைத்தடி பாம்பாக மாறும் என்ற விபரம் பாம்பாக மாறுவதற்குச் சற்று முன்பு அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டு விடுகிறது. நடக்கப் போவதை முன்னரே அவர்கள் அறிந்திருந்தால் தான் அதை ஆதாரமாகக் காட்டி தனது தூதுத்துவத்தை அவர்களால் நிரூபிக்க முடியும்.

இல்லாவிட்டால் தற்செயலாக நடந்தது என்று மக்கள் கூறி நிராகரித்து விடுவார்கள். இந்த வகையில் இரண்டு அற்புதங்களும் வேறுபடுகின்றன.

இப்போது இந்த அற்புதத்தைச் செய்து காட்டப்போகிறேன் என்று அறிவித்து விட்டு நபிமார்கள் அற்புதம் செய்வார்கள். இது முதல் வகை அற்புதம். யாரிடம் அற்புதம் நிகழ்கிறதோ அவருக்கே தெரியாமல் யாரும் எதிர்பாராமல் திடீரென நிகழும் அற்புதங்கள் இரண்டாம் வகையாகும்.

இப்லீஸ், தஜ்ஜால் செய்யும் அற்புதங்கள்

அல்லாஹ்வைப் போல் யாரும் செயல்பட முடியாது என்றால் இப்லீஸ் எப்படி நமது உள்ளங்களுக்குள் புகுந்து நம்மை வழிகெடுக்கிறான்? இது அல்லாஹ்வின் செயல்பாடு போல் தானே உள்ளது என்று சிலர் கேட்கின்றனர்.

தஜ்ஜால் என்பவனும் இறந்த ஒரு மனிதனை உயிர்ப்பிப்பான் என்றும் இன்னும் பல காரியங்களைச் செய்வான் என்றும் ஹதீஸ்களில் உள்ளது. மனிதனால் செய்ய முடியாத – இறைவனால் மட்டுமே செய்ய முடிந்த காரியங்களை எப்படி இவர்கள் செய்ய முடிகிறது என்றும் சிலர் கேட்கின்றனர்.

இப்லீஸ் செய்யும் அற்புதம் அவனது ஆற்றலால் செய்யப்படுகிறதா? அல்லாஹ்வின் அனுமதியோடு செய்யப்படுகிறதா? என்பதை முதலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்லீஸை இறைவன் வின்னுலகில் இருந்து வெளியேற்றும் போது என்ன நடந்தது என்பதைப் பின்வரும் வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

“இங்கிருந்து நீ இறங்கி விடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு! நீ சிறுமையடைந்தவனாவாய்” என்று (இறைவன்) கூறினான். “அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!” என்று அவன் கேட்டான். “நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய்” என்று (இறைவன்) கூறினான்.

(அல்குர்ஆன்: 7:13),14,15)

இங்கிருந்து நீ வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உள்ளது (என்று இறைவன் கூறினான்) “இறைவா! அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் தருவாயாக!” என்று அவன் கேட்டான். “குறிப்பிட்ட நேரத்திற்கான நாள் வரை நீ அவகாசம் அளிக்கப்பட்டவன்” என்று (இறைவன்) கூறினான்.

(அல்குர்ஆன்: 15:34),35,36,37,38)

“என்னை விட நீ சிறப்பித்த இவரைப் பற்றிக் கூறுவாயாக! கியாமத் நாள் வரை எனக்கு நீ அவகாசம் அளித்தால் சிலரைத் தவிர இவரது சந்ததிகளை வேரறுப்பேன்” எனவும் கூறினான். “நீ போ! அவர்களில் யாரேனும் உன்னைப் பின்பற்றினால் உங்களுக்கு நரகமே கூலி. (அது) நிறைவான கூலி” என்று (இறைவன்) கூறினான். உனது குரல் மூலம் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக் கொள்! உனது குதிரைப் படையையும், காலாட்படையையும் அவர்களுக்கு எதிராக ஏவிக் கொள்! பொருட்செல்வத்திலும், மக்கட்செல்வத்திலும் அவர்களுடன் நீ கூட்டாளியாகிக் கொள்! அவர்களுக்கு வாக்குறுதியும் அளித்துக் கொள்! (என்றும் இறைவன் கூறினான்.) ஏமாற்றத்தைத் தவிர வேறெதனையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை. “எனது (நல்ல) அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை” (என்றும் இறைவன் கூறினான்.) உமது இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன்.

(அல்குர்ஆன்: 17:62), 63, 64, 65)

குர்ஆனை ஓதும்போது விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்வீராக! நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு அதிகாரம் இல்லை. தன்னைப் பாதுகாப்பாளனாக ஆக்கிக் கொண்டோர் மீதும், இறைவனுக்கு இணைகற்பிப்போர் மீதுமே அவனுக்கு அதிகாரம் உள்ளது.

(அல்குர்ஆன்: 16:98),99,100)

தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உள்ளது (என்று இறைவன் கூறினான்) “இறைவா! அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் தருவாயாக!” என்று அவன் கேட்டான். “குறிப்பிட்ட நேரத்திற்கான நாள் வரை நீ அவகாசம் அளிக்கப்பட்டவன்” என்று (இறைவன்) கூறினான். “என் இறைவா! என்னை நீ வழிகேட்டில் விட்டதால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழிகெடுப்பேன்” என்று கூறினான். “இதோ என்னிடம் நேரான வழி உள்ளது” என்று (இறைவன்) கூறினான். எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை.

(அல்குர்ஆன்: 15:35-42)

இந்த வசனங்கள் கூறுவதென்ன? ஷைத்தானுக்கு மனிதர்களின் உள்ளங்களில் ஊடுறுவி வழிகெடுக்கும் ஆற்றல் அறவே இல்லை. நான் மனிதனை வழிகெடுத்துக் காட்டுகிறேன்; எனக்கு அனுமதியும், அவகாசமும் வழங்கு என்று இப்லீஸ் அல்லாஹ்விடம் வேண்டினான். அல்லாஹ்வும் அதற்கு அனுமதி வழங்கினான். ஆனாலும் உறுதியான மக்களிடம் நீ தோற்றுவிடுவாய் என்ற பலவீனத்துடன் அவனுக்கு அல்லாஹ் அனுமதி அளித்தான்.

அல்லாஹ் அனுமதி கொடுத்ததாகத் தெளிவாக அல்லாஹ்வே சொல்லி இருக்கும் போது ஷைத்தான் அல்லாஹ்வைப் போல் செயல்படுகிறான் என்று ஆகாது. இதை நம்புவது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலிலும் சேராது.

அல்லாஹ்வுக்கு மட்டுமே இயன்ற காரியங்களை நபிமார்கள் செய்ததாக நம்புவது எப்படி இணை கற்பித்தலில் சேராதோ அது போல் இதுவும் சேராது. ஏனெனில் நபிமார்கள் செய்த அற்புதங்கள் அல்லாஹ் அனுமதி கொடுத்த அடிப்படையில் நிகழ்த்தப்படுகிறது. ஷைத்தானின் ஊசலாட்டங்களும் அல்லாஹ் அனுமதி அளித்த அடிப்படையில் தான் அமைந்துள்ளன.

இறைவனுக்கு மட்டுமே உரித்தான சில காரியங்களை தஜ்ஜால் செய்வான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதிலிருந்து இக்காரியங்களைச் செய்ய அவனுக்கு இறைவன் அனுமதி அளித்துள்ளான் என்று தெரிகிறது.

மக்களைச் சோதித்துப் பார்க்க இப்லீசுக்கு அல்லாஹ் சில அதிகாரத்தைக் கொடுத்து போல் தஜ்ஜாலுக்கும் கொடுத்துள்ளான் என்பதால் இதை நம்புவது இணை கற்பித்தலில் சேராது. தஜ்ஜால் என்பவன் தான் நினைத்த போதெல்லாம் நினைத்த அற்புதத்தைச் செய்ய வல்லவன் என்று நம்பினால் தான் அது இணைகற்பித்தலாகும்.

صحيح البخاري

1882 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا طَوِيلًا عَنِ الدَّجَّالِ فَكَانَ فِيمَا حَدَّثَنَا بِهِ أَنْ قَالَ: ” يَأْتِي الدَّجَّالُ، وَهُوَ مُحَرَّمٌ عَلَيْهِ أَنْ يَدْخُلَ نِقَابَ المَدِينَةِ، بَعْضَ السِّبَاخِ الَّتِي بِالْمَدِينَةِ، فَيَخْرُجُ إِلَيْهِ يَوْمَئِذٍ رَجُلٌ هُوَ خَيْرُ النَّاسِ، أَوْ مِنْ خَيْرِ النَّاسِ، فَيَقُولُ أَشْهَدُ أَنَّكَ الدَّجَّالُ، الَّذِي حَدَّثَنَا عَنْكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثَهُ، فَيَقُولُ الدَّجَّالُ: أَرَأَيْتَ إِنْ قَتَلْتُ هَذَا، ثُمَّ أَحْيَيْتُهُ هَلْ تَشُكُّونَ فِي الأَمْرِ؟ فَيَقُولُونَ: لاَ، فَيَقْتُلُهُ ثُمَّ يُحْيِيهِ، فَيَقُولُ حِينَ يُحْيِيهِ: وَاللَّهِ مَا كُنْتُ قَطُّ أَشَدَّ بَصِيرَةً مِنِّي اليَوْمَ، فَيَقُولُ الدَّجَّالُ: أَقْتُلُهُ فَلاَ أُسَلَّطُ عَلَيْهِ “

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தஜ்ஜால் (மதீனாவை நோக்கி) வருவான்; மதீனாவின் வாசல்களில் நுழைவது அவனுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது; எனவே (மதீனாவுக்கு வெளியே), மதீனாவில் உவர் நிலத்தில் அவன் தங்குவான்; அவனை நோக்கி மக்களில் சிறந்த ஒரு மனிதர் அன்று புறப்படுவார்; அவர் அவனிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அடையாளம்) சொல்லிய தஜ்ஜால் நீதான் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்! என்பார்.

அப்போது தஜ்ஜால் (மக்களை நோக்கி), நான் இவனைக் கொன்று, பிறகு உயிர்ப்பித்தால் (என்) விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொள்வீர்களா? என்று கேட்பான். மக்கள் கொள்ள மாட்டோம்! என்பார்கள். உடனே, அவன் அவரைக் கொன்று, பின்னர் உயிர்ப்பிப்பான். அப்போது, அந்த நல்ல மனிதர் உயிர்ப்பிக்கப்பட்டதும், அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றைய தினத்தை விடத் தெளிவாக உன்னைப் பற்றி நான் (இதற்கு முன்) ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்று கூறுவார். தஜ்ஜால் நான் இவரைக் கொல்வேன்! என்பான். ஆனால், அவனால் அவரைக் கொல்ல முடியாது!

(புகாரி: 1882, 6599, 1749)

இறைவன் அனுமதித்த காரணத்தால் தான் ஒருவரை ஒரு தடவை தஜ்ஜால் உயிர்ப்பித்துக் காட்டுகிறான். அதே மனிதனை மீண்டும் கொலை செய்ய முயலும் போது அவனால் செய்ய இயலாமல் போனதற்குக் காரணம் இதற்கு அவனுக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்பதுதான்.