1) முன்னுரை

நூல்கள்: அற்புதங்கள் ஓர் ஆய்வு

முன்னுரை

முஸ்லிம் சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் நுழைந்ததற்கான காரணங்களில் அற்புதங்கள் குறித்த அறியாமை முதன்மையானதாகும்.

யாரேனும் ஒரு அதிசயமான செயலைச் செய்வதாகத் தெரியும் போதும், ஏதாவது அதிசயத்தைச் செய்தார்கள் என்று கேள்விப்படும் போதும் அவர்களிடம் மனித சக்தியை மிஞ்சிய கூடுதல் சக்தி உள்ளதாக பாமர மக்கள் கருதுகிறார்கள்.

அவர்கள் மெய்யாகவே அந்த அற்புதத்தைச் செய்தார்களா? அல்லது தந்திரம் செய்து இப்படி எமாற்றினார்களா? என்று சிந்திக்கத் தவறுகின்றனர். இவ்வாறு செய்யும் ஆற்றல் மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ளதா? இதற்கு திருக்குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் சான்று உள்ளதா? என்றும் சிந்திக்கத் தவறுகின்றனர்.

ஓரிரு அதிசயங்களை ஒருவர் செய்வது மெய் என்று வைத்துக் கொண்டாலும் அவரால் எது வேண்டுமானாலும் செய்ய முடியுமா? என்றும் சிந்திக்கத் தவறிவிடுகின்றனர். இதன் விளைவாகத் தான் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் எனும் மாபாதகம் முஸ்லிம் சமுதாயத்திலும் காணப்படுகிறது.

எனவே அற்புதங்கள் குறித்து இஸ்லாத்தின் நிலைபாடு என்ன என்பதை தக்க ஆதாரங்களுடன் விளக்குவதற்காக இந்நூலை வெளியிடுகிறோம். மனிதர்களைக் கடவுளர்களாக்கி வழிபடும் அறியாமையில் இருந்து முஸ்லிம்கள் விடுபட இந்நூல் பெரிதும் உதவும் என்று நம்புகிறோம்.

நபீலா பதிப்பகம்

சென்னை

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்