3) வஹீ மட்டுமே இஸ்லாத்தின் ஆதாரம்!
வஹீ மட்டுமே இஸ்லாத்தின் ஆதாரம்!
இஸ்லாம் மார்க்கம் அல்லாஹ்விடமிருந்து இறைத்தூதர்கள் வழியாக மனித குலத்துக்கு வழங்கப்பட்ட மார்க்கமாகும். இந்த மார்க்கத்திற்குச் சொந்தக்காரன் அல்லாஹ் மட்டுமே.
அறிந்து கொள்க! இந்தத் தூய மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது.
(அல்குர்ஆன்: 39:3) ➚.)
இஸ்லாத்தின் பெயரால் எதைச் சொல்வதாக இருந்தாலும், செய்வதாக இருந்தாலும் அதை அல்லாஹ் கூறியிருக்க வேண்டும். அல்லது அல்லாஹ்விடமிருந்து வஹீயைப் பெற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க வேண்டும். இம்மார்க்கத்தின் அதிபதி அல்லாஹ் தான் என்பதன் அர்த்தம் இதுதான். இந்த அடிப்படையை விளங்கிக் கொண்டால் அல்லாஹ்விடமிருந்து வஹீயைப் பெறாத நான்கு இமாம்கள் உள்ளிட்ட எந்த இமாமின் கருத்தும் மார்க்க ஆதாரமாக ஆகாது என்பது தெளிவாகிவிடும்.
இம்மார்க்கம் தனக்கே உரியது என்ற அதிகாரத்தை அல்லாஹ் எந்த அடியாருக்கும் வழங்கவே இல்லை. தனது தூதர்களுக்கும் கூட வழங்கவில்லை.
முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் எல்லாவிதமான ஞானங்களையும் கற்றுக் கொடுத்தான். ஆதம் (அலை) அவர்களுக்கு அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்ததாக அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான். அப்படி இருந்தும் அவர்களைப் பூமிக்கு அனுப்பும்போது தன்னுடைய வஹீ செய்தியை மட்டுமே பின்பற்ற வேண்டும் என கட்டளை பிறப்பித்தே அனுப்பினான்.
இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்” என்று கூறினோம்.
(அல்குர்ஆன்: 2:38) ➚.)
இருவரும் ஒட்டுமொத்தமாக இங்கிருந்து இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்குப் பகைவர்களாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வருமானால் எனது நேர்வழியைப் பின்பற்றுபவர் வழிதவற மாட்டார். துர்பாக்கியசாலியாகவும் மாட்டார்.
(அல்குர்ஆன்: 2:123) ➚.)
என்னிடமிருந்து நேர்வழி வரும்; அதைத் தான் பின்பற்ற வேண்டும் என்பதுதான் இம்மண்ணுலகுக்கு அல்லாஹ் வழங்கிய முதல் கட்டளையாகும்.
மிகப்பெரிய மேதையான ஆதம் (அலை) அவர்கள் கூட தமது அறிவுத்திறனை மார்க்க ஆதாரமாக்கக் கூடாது என்றால் மத்ஹபு இமாம்கள் ஆதம் (அலை) அவர்களை விடப் பெரியவர்களா? என்று சிந்தித்தால் மத்ஹபு என்பது வழிகேடு என்பது தெளிவாகும். இதுபோன்ற கட்டளையைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ் பிறப்பித்தான்.
உண்மையை உள்ளடக்கிய வேதத்தை உமக்கு அருளினோம். அது தனக்கு முன் சென்ற வேதத்தை உண்மைப்படுத்துவதாகவும், அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது. எனவே அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! உம்மிடம் வந்துள்ள உண்மையை அலட்சியம் செய்து அவர்களின் மனோஇச்சைகளைப் பின்பற்றாதீர்! உங்களில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைத் திட்டத்தையும், வழியையும் ஏற்படுத்தியுள்ளோம்.
(அல்குர்ஆன்: 5:48) ➚.)
(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!
(அல்குர்ஆன்: 6:106) ➚.)
(முஹம்மதே!) உமது இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! அவனது வார்த்தைகளை மாற்றுபவன் இல்லை. அவனன்றி எந்தப் புகலிடத்தையும் நீர் காண மாட்டீர்!
(அல்குர்ஆன்: 18:27) ➚.)
இது அகிலத்தாரின் இறைவனிடமிருந்து அருளப்பட்டது. சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக் கட்டியிருந்தால் இவரை வலது கையால் தண்டித்திருப்போம். பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம். உங்களில் எவரும் அவனைத் தடுப்பவர் அல்லர். இது (இறைவனை) அஞ்சியோருக்கு அறிவுரை.
அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் “இது அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வருவீராக! அல்லது இதை மாற்றியமைப்பீராக!” என நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர். நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறுசெய்து விட்டால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்” என (முஹம்மதே!) கூறுவீராக!
(அல்குர்ஆன்: 10:15) ➚.)
உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் இருக்கிறீர். இது உமக்கும், உமது சமுதாயத்துக்கும் அறிவுரை. பின்னர் விசாரிக்கப்படுவீர்கள்.
(அல்குர்ஆன்: 43:43) ➚,44.)
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக! அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர்.
(அல்குர்ஆன்: 5:49) ➚.)
அல்லாஹ்விடமிருந்து கிடைத்த செய்திகளைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமும் கடைப்பிடித்து மற்றவர்களுக்கும் கூறவேண்டும். இம்மார்க்கத்தில் அவர்கள் தமது சுய விருப்பத்தின்படி எதையும் கூறக் கூடாது என்றும், அது கடுமையான குற்றம் என்றும் இவ்வசனங்களில் அல்லாஹ் எச்சரிக்கிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கே வழங்கப்படாத அதிகாரம் மத்ஹபு இமாம்களுக்கு வழங்கப்பட்டிருக்குமா என்று சிந்திப்பவர்கள் ஒருபோதும் மத்ஹபை ஏற்கமாட்டார்கள்.
நபியவர்கள் தமது சுயவிருப்பப்படி தேன் குடிப்பதை தம்மீது ஹராமாக ஆக்கினார்கள். அல்லாஹ் ஹலாலாக ஆக்கியதை தம்மளவில் அவர்கள் ஹராமாக ஆக்கியதை அல்லாஹ் எப்படி கண்டிக்கிறான் என்று பாருங்கள்!
நபியே! உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் ஹராமாக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன்: 66:1) ➚.)
சில நேரங்களில் அல்லாஹ்வின் வஹீயை எதிர்பார்க்காமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முடிவு செய்தபோது அல்லாஹ் கண்டித்த நிகழ்வுகள் பல உள்ளன.
ஆதம் (அலை) அவர்களுக்கும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் பிறப்பித்த அதே கட்டளையைத் தான் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் பிறப்பித்துள்ளான்.
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்.
(அல்குர்ஆன்: 7:3) ➚.)
மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! எனது வசனங்களை அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்! அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் (ஏக இறைவனை) மறுப்பவர்கள்.
(அல்குர்ஆன்: 5:44) ➚.)
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.
(அல்குர்ஆன்: 5:45) ➚.)
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள்.
(அல்குர்ஆன்: 5:47) ➚.)
இவ்வசனங்கள் யாவும் மத்ஹபுகள் வழிகேடு என்பதற்கு தெளிவான சான்றுகளாக உள்ளன.
அல்லாஹ் கூறுவதையும், நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதலையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் பல வசனங்களில் கட்டளையிடுகிறான். அவற்றில் சில வசனங்களைப் பாருங்கள்!
மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.
(அல்குர்ஆன்: 16:44) ➚.)
அல்லாஹ்வின் விருப்பப்படி மக்கள் கட்டுப்பட வேண்டுமென்பதற்காகவே தவிர எந்தத் தூதரையும் அனுப்புவதில்லை.
(அல்குர்ஆன்: 4:64) ➚.)
இத்தூதருக்கு கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை.
(அல்குர்ஆன்: 4:808) ➚.)
“நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக!
(அல்குர்ஆன்: 3:311) ➚.)
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.
(அல்குர்ஆன்: 33:71) ➚.)
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.
(அல்குர்ஆன்: 24:52) ➚.)
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.
(அல்குர்ஆன்: 3:132) ➚.)
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.
(அல்குர்ஆன்: 4:69) ➚.)
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் யார் கட்டுப்படுகிறாரோ, அவரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். யார் புறக்கணிக்கிறாரோ அவருக்குத் துன்புறுத்தும் வேதனை அளிப்பான்.
(அல்குர்ஆன்: 48:17) ➚.)
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப்பட்டால் உங்கள் செயல்களில் எதையும் அவன் குறைத்து விட மாட்டான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன்: 49:14) ➚.)
மத்ஹபுகளை ஏற்றுக் கொள்பவர்கள் இவ்வசனங்களை மறுக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டிய வழியை விட்டு விலகி முன்னோர்களையும், மார்க்க அறிஞர்களையும், பெரியார்களையும், பெரும்பான்மையினரையும் பின்பற்றுவ்து வழிகேடு என்று பின்வரும் வசனங்களில் அல்லாஹ் எச்சரிக்கிறான்.
அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.
(அல்குர்ஆன்: 42:21) ➚.)
அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர்.
(அல்குர்ஆன்: 9:31) ➚.)
உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக!
(அல்குர்ஆன்: 49:16) ➚.)
அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால் “எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்” என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?
(அல்குர்ஆன்: 2:170) ➚.)
அல்லாஹ் அருளியதை நோக்கியும், இத்தூதரை நோக்கியும் வாருங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால் “எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்” என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?
(அல்குர்ஆன்: 5:104) ➚.)
அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் “நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுவார்கள். “எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்” எனவும் கூறுவார்கள். “எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!” எனவும் கூறுவார்கள்.
பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை.
(அல்குர்ஆன்: 6:116) ➚.)
வஹீ அல்லாத மற்ற எதனையும், எவரையும் பின்பற்றினால் அதன் பரிசு நரகம் தான் என்று இவ்வசனங்கள் மூலம் அல்லாஹ் எச்சரிக்கிறான்.
முழுமையாக்கப்பட்ட மார்க்கம்
இம்மார்க்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்திலேயே அல்லாஹ் முழுமைப்படுத்தி நமக்கு வழங்கி விட்டான். அதில் அல்லாஹ் எந்தக் குறையும் வைக்கவில்லை.
இதோ அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்!
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.
(அல்குர்ஆன்: 5:3) ➚.)
நபிகள் நாயகத்தின் காலத்திலேயே இம்மார்க்கம் முழுமைப்படுத்தி வழங்கப்பட்டது என்றால் என்ன பொருள்? நபிகள் நாயகத்தின் காலத்துக்குப் பின்னால் உருவாக்கப்பட்டவை இஸ்லாம் அல்ல என்பது தான் இதன் பொருள்.
மத்ஹப்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் உருவாக்கப்பட்டவை என்பதால் அவற்றுக்கும், இஸ்லாத்துக்கும் சம்மந்தமில்லை என்பது உறுதி.
எனக்குப் பின்னால் உருவாக்கப்படும் அனைத்தும் வழிகேடு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். அவற்றில் மத்ஹபும் அடங்கும் என்பதில் சந்தேகமில்லை.
سنن النسائي 1578 – أَخْبَرَنَا عُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ سُفْيَانَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي خُطْبَتِهِ: يَحْمَدُ اللَّهَ وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ يَقُولُ: «مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ، إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ»، ثُمَّ يَقُولُ: «بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ»، وَكَانَ إِذَا ذَكَرَ السَّاعَةَ احْمَرَّتْ وَجْنَتَاهُ، وَعَلَا صَوْتُهُ، وَاشْتَدَّ غَضَبُهُ كَأَنَّهُ نَذِيرُ جَيْشٍ يَقُولُ: صَبَّحَكُمْ مَسَّاكُمْ، ثُمَّ قَالَ: «مَنْ تَرَكَ مَالًا فَلِأَهْلِهِ، وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضَيَاعًا فَإِلَيَّ أَوْ عَلَيَّ، وَأَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ»
செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மதாகிய எனது நடைமுறையாகும். காரியங்களில் மிகத்தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாக்கப்படும் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
صحيح البخاري 6584 – قَالَ أَبُو حَازِمٍ: فَسَمِعَنِي النُّعْمَانُ بْنُ أَبِي عَيَّاشٍ، فَقَالَ: هَكَذَا سَمِعْتَ مِنْ سَهْلٍ؟ فَقُلْتُ: نَعَمْ، فَقَالَ: أَشْهَدُ عَلَى أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، لَسَمِعْتُهُ وَهُوَ يَزِيدُ فِيهَا: ” فَأَقُولُ إِنَّهُمْ مِنِّي، فَيُقَالُ: إِنَّكَ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ، فَأَقُولُ: سُحْقًا سُحْقًا لِمَنْ غَيَّرَ بَعْدِي ” وَقَالَ ابْنُ عَبَّاسٍ: سُحْقًا: بُعْدًا يُقَالُ: {سَحِيقٌ} [الحج: 31]: بَعِيدٌ، سَحَقَهُ وَأَسْحَقَهُ أَبْعَدَهُ
நான் உங்களுக்கு முன்பே அல்கவ்ஸர் தடாகத்திற்குச் சென்று காத்திருப்பேன். என்னிடம் வருபவர் அவர் அதை அருந்துவார். அதை அருந்துபவருக்கு தாகம் ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வருவார்கள். அவர்களை நான் அறிந்துகொள்வேன். என்னை அவர்களும் அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும், அவர்களுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படும். (இறைவா!) இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் என்று நான் கூறுவேன்.
அதற்கு உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியதை நீங்கள் அறியமாட்டீர்கள் என்று சொல்லப்படும். உடனே நான் எனக்குப் பின்னால் (மார்க்கத்தை) மாற்றியவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக!” என்று (இரண்டு முறை) கூறுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி: 6585)வது ஹதீஸில்
صحيح البخاري إِنَّكَ لاَ عِلْمَ لَكَ بِمَا أَحْدَثُوا بَعْدَكَ، إِنَّهُمُ ارْتَدُّوا عَلَى أَدْبَارِهِمْ القَهْقَرَى
“நபியே உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே திரும்பிச் சென்று விட்டார்கள்” என்று அல்லாஹ் கூறுவான்
என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
(புகாரி: 6587)வது ஹதீஸில்
صحيح البخاري إِنَّهُمُ ارْتَدُّوا بَعْدَكَ عَلَى أَدْبَارِهِمْ القَهْقَرَى
“நபியே உங்களுக்குப் பின்னால் இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிச் சென்றுவிட்டார்கள்” என்று அல்லாஹ் கூறுவான்
என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சமுதாயத்தில் மிகச் சிறந்தவர்களான நபித்தோழர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தராத வழிகளை உருவாக்கினால் அவர்களும் வெற்றி பெற முடியாது என்று இந்த ஹதீஸ்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றன. அவர்களைவிட பண்மடங்கு தகுதியில் குறைந்த இமாம்களுக்கு அந்த அதிகாரம் இருக்குமா?
صحيح البخاري 2697
– حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ»
நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யார் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
صحيح مسلم (1718)
وحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، جَمِيعًا عَنْ أَبِي عَامِرٍ، قَالَ عَبْدٌ: حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ الزُّهْرِيُّ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: سَأَلْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ، عَنْ رَجُلٍ لَهُ ثَلَاثَةُ مَسَاكِنَ، فَأَوْصَى بِثُلُثِ كُلِّ مَسْكَنٍ مِنْهَا، قَالَ: يُجْمَعُ ذَلِكَ كُلُّهُ فِي مَسْكَنٍ وَاحِدٍ، ثُمَّ قَالَ: أَخْبَرَتْنِي عَائِشَةُ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ»
நமது கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது மறுக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் உருவாக்கப்பட்டவை அல்லாஹ்வால் நிராகரிக்கப்படும் என்பதில் மத்ஹபுகளும் அடங்கும்.