4) நல்ல கனவும், கெட்ட கனவும்..!

நூல்கள்: இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்

நல்ல கனவு கண்டால்…

நற்செய்தி கூறும் வகையில் நாம் கனவு கண்டால் நமக்கு ஏற்படவுள்ள நன்மையை முன் கூட்டியே அல்லாஹ் அறிவித்துத் தருவதாக கருதிக் கொள்ள வேண்டும்.

(நல்ல கனவின் விளக்கத்தை எவ்வாறு அறிந்து கொள்வது என்பதை கனவின் பலன்கள்‘ என்ற தலைப்பில் பின்னர் நாம் கூறியுள்ளோம்)

நல்ல கனவைக் காணும் போது நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என இஸ்லாம் நமக்கு வழிகாட்டியுள்ளது.

சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் தமக்குப் பணிவது போல் யூசுப் நபியவர்கள் கனவு கண்டு தமது தந்தையிடம் கூறினார்கள். அப்போது தந்தை யஃகூப் (அலை) அவர்கள் பின்வருமாறு அறிவுரை கூறினார்கள்.

என் அருமை மகனே! உனது கனவை உனது சகோதரர்களுக்குக் கூறாதே! அவர்கள் உனக்கு எதிராக சூழ்ச்சி செய்வார்கள். ஷைத்தான் மனிதர்களுக்கு பகிரங்கமான எதிரியாவான்‘  (அல்குர்ஆன்: 12:5)

யூசுப் நபியவர்களின் சகோதரர்கள் அவருக்கு எதிரியாக இருந்தனர் என்று யூசுப் அத்தியாயத்தில் பல இடங்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

எனவே நல்லது நடப்பது போல்அல்லது தீமை விலகுவது போல் நாம் கனவு கண்டால் நாம் மிகவும் நேசிக்கக் கூடியநம்மை நேசிக்கக் கூடிய மக்களிடம் மட்டும் தான் அதைத் தெரிவிக்க வேண்டும். மற்றவர்களிடம் தெரிவிக்கக் கூடாது என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் அறியலாம்.

இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தெளிவாக நமக்கு விளக்கியுள்ளனர்.

உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவைக் கண்டால் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது தான். எனவே அவர் அல்லாஹ்வைப் புகழட்டும். அதைப் பிறருக்கும் கூறட்டும்‘ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: (புகாரி: 6985)

நல்ல கனவு அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருவதாகும். எனவே ஒருவர் தமக்கு விருப்பமான கனவைக் கண்டால் தமக்கு மிகவும் விருப்பமானவரைத் தவிர யாருக்கும் அதைத் தெரிவிக்கக் கூடாது‘ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி)

நூல்: (புகாரி: 7044)

தமக்கு விருப்பமான கனவை ஒருவர் கண்டால் அவர் விரும்பினால் மற்றவருக்குச் சொல்லட்டும்‘ என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: (அஹ்மத்: 8766)

நல்ல கனவு கண்டவர் அதற்காக அல்லாஹ்வைப் புகழ வேண்டும் என்பதையும்அவர் விரும்பினால் அது பற்றி தமக்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் மட்டும் கூறலாம் என்பதையும் மற்றவர்களிடம் கூறக் கூடாது என்பதையும் இந்த நபிமொழிகளிலிருந்து நாம் அறியலாம்.

கெட்ட கனவுகளைக் கண்டால்

கெட்ட கனவுகளைக் கண்டால் அதற்காகக் கவலைப்படுவோர் உள்ளனர். அதனால் ஏற்படும் தீங்குகளிலிருந்து விடுபடுவதற்காக ஏதேனும் பரிகாரம் உண்டா என்று தேடியலைந்து நிம்மதியை இழப்பவர்களும் உள்ளனர்.

கெட்ட கனவு கண்டவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளனர்.

நல்ல கனவு அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருவதாகும். ஒருவர் தமக்கு விருப்பமான கனவைக் கண்டால் தனக்கு விருப்பமானவரைத் தவிர மற்றவருக்கு அதைக் கூற வேண்டாம். தனக்குப் பிடிக்காத கனவை ஒருவர் கண்டால் அதனால் ஏற்படும் தீங்கை விட்டும்ஷைத்தானின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் அவர் பாதுகாவல் தேடட்டும். மேலும் இடது புறம் மூன்று தடவை துப்பட்டும். எவரிடமும் அது பற்றிக் கூறவும் கூடாது. இவ்வாறு நடந்து கொண்டால் அவருக்கு அவரது கனவால் எந்தக் கேடும் எற்படாது‘ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: (புகாரி: 7044)

நல்ல கனவு அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்படுவதாகும். கெட்ட கனவு ஷைத்தானிடமிருந்து ஏற்படுவதாகும். தனக்கு அச்சத்தை ஏற்படுத்தும் கெட்ட கனவை ஒருவர் கண்டால் தனது இடது புறத்தில் துப்பி விட்டு அதன் தீங்கை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். இவ்வாறு செய்தால் அதனால் அவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது‘ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: (புகாரி: 3292)

கெட்ட கனவைக் கண்டால் எழுந்து அவர் தொழட்டும். அதை மனிதர்களிடம் கூற வேண்டாம்‘ என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: (முஸ்லிம்: 4200)

கெட்ட கனவு காண்பவர்கள் இறைவா! இதன் கேடுகளிலிருந்தும் ஷைத்தான் மூலம் ஏற்படும் கேடுகளிலிருந்தும் பாதுகாப்பாயாக‘ எனக் கூற வேண்டும்.

இடது புறமாக மூன்று தடவை துப்ப வேண்டும்.

கெட்ட கனவு கண்டு விழித்தவுடன் எழுந்து இயன்ற அளவுக்குத் தொழ வேண்டும்.

கெட்ட கனவை வேண்டியவரிடமோவேண்டப்படாதவரிடமோ எவரிடமும் கூறக் கூடாது.

இந்த விஷயங்களை மேற்கண்ட நபிமொழிகள் வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம்.

எந்தக் கனவைக் காணும் போது நமக்கு கவலையோஅச்சமோ ஏற்படுகிறதோ அவை தாம் கெட்ட கனவுகள்.

அது தவிர அர்த்தமற்ற கனவுகளையும் நாம் காணலாம். இதுவும் கூட கெட்ட கனவுகள் தாம். அது பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு விளக்கியுள்ளனர்.

ஒரு கிராமவாசி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். என் தலை வெட்டப்படுவது போலவும் அதை நான் விரட்டிச் செல்வது போலவு கனவு கண்டேன்‘ என்று அவர் கூறும் போது, ‘ஷைத்தான் உன்னோடு கனவில் விளையாடுவதைப் பற்றி (யாருக்கும்) கூறாதே‘ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்:  (முஸ்லிம்: 4211, 4213)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் ஒருவரது கனவில் ஷைத்தான் விளையாடினால் அதை யாருக்கும் கூற வேண்டாம்‘ என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: (முஸ்லிம்: 4212)

காணாத கனவைக் கண்டதாகக் கூறுதல்…

ஒருவர் கனவு கண்ட விஷயம் அவருக்கும்அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த விஷயமாகும். கனவு கண்டவர் கூறாத வரை மற்றவர்களால் அதை அறிந்து கொள்ள முடியாது. கனவு கண்டது உண்மை தான் என்பதை எந்த சாட்சியத்தின் மூலமும் நிரூபிக்க முடியாது. கனவு கண்டவனின் சொல்லை நம்பித் தான் அவனது கனவையும் நம்ப வேண்டும்.

எந்த விஷயத்தைப் பற்றி நாம் பேசினாலும் மக்கள் அதற்கு ஆதாரம் கேட்பார்கள். ஆனால் கனவு கண்டதாக ஒருவர் கூறினால் அதற்கு யாரும் ஆதாரம் கேட்க மாட்டார்கள்.

அந்த நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு காணாததைக் கண்டதாக மனிதன் தயக்கமில்லாமல் பொய் சொல்லக் கூடாது என்பதற்காக இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையான குற்றமாக அறிவிக்கிறார்கள்.

தன் தந்தையல்லாத இன்னொருவரைத் தந்தை எனக் கூறுவதும்கனவில் காணாததைக் கண்டதாகக் கூறுவதும்நான் கூறாததைக் கூறியதாகச் சொல்வதும் பொய்களில் மிகப் பெரிய பொய்களாகும்‘ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: வாஸிலா (ரலி)

நூல்:  (புகாரி: 3509)

காணாத கனவைக் கண்டதாக யாரேனும் கூறினால் (மறுமையில்) இரண்டு கோதுமைகளுக்கிடையே முடிச்சுப் போட்டு இணைக்குமாறு அவன் கட்டாயப்படுத்தப் படுவான். அவனால் அதை ஒருக்காலும் செய்ய முடியாது‘ எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்:  (புகாரி: 7042)

கோதுமை வழுக்கக் கூடியதாக இருப்பதால் ஒரு முடிச்சுக்குள் இரண்டு கோதுமையை யாராலும் இணைக்க முடியாது. இந்தச் செயலைச் செய்யுமாறு அவன் கட்டாயப்படுத்தப்படுவான் என்பது கனவு விஷயத்தில் பொய் சொல்பவர்களுக்குப் போதுமான எச்சரிக்கையாகும்.

நபிகள் நாயகத்தைக் கனவில் காணுதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணாத முஸ்லிம்கள் அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது இயல்பான ஒன்று தான்.

ஒருவர் இறை நேசராக ஆகிறார் என்றால் அதற்கான அடையாளம் நபிகள் நாயகத்தைக் கனவில் காண்பது தான் எனவும் மார்க்க அறிவு குறைந்த சிலர் நினைக்கின்றனர்.

இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றுப் பேர்வழிகள் தாங்கள் கனவில் நபிகள் நாயகத்தைக் கண்டதாகப் புளுகி மக்களிடம் இறை நேசர் என்ற பட்டத்தைப் பெற்று விடுகின்றனர்.

குர்ஆனுக்கும் நபிவழிக்கும் எதிரான கருத்துக்களுடன் இயற்றப்பட்ட புர்தா‘ என்ற பாடலை %சிரி என்ற புலவன் எழுதினான். அவன் தனது கவிதையில் ஒரு இடத்தில் தடுமாறிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனுடைய கனவில் தோன்றி அடுத்த அடியை எடுத்துக் கொடுத்தார்கள் என்று புளுகி புர்தா‘ என்ற கட்டுக் கதையைப் புனிதமாக்கியுள்ளதைக் காண்கிறோம். மார்க்க அறிவு சிறிதும் இல்லாத %சிரி என்ற புலவனை இறை நேசராகச் சித்தரிப்பதையும் காண்கிறோம்.

புர்தாவைத் தூக்கிச் சாப்பிடும் வகையில் நபிகள் நாயகத்தின் பெயரால் இட்டுக்கட்டி எழுதப்பட்ட புளுகு மூட்டை தான் சீராப்புராணம். குர்ஆன் ஹதீஸைப் பற்றி ஓரளவு அறிவு உள்ளவர் கூட சீராப்புராணத்தைக் கட்டுக்கதை என்று கண்டு கொள்வார். இதைப் புனைந்த உமருப்புலவர் என்பவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கனவில் காட்சியளித்து புராணத்தை அங்கீகரித்ததாக மார்க்கத்தை அறியாதவர்கள் புளுகி வருகின்றனர்.

முரீது என்ற பெயரால் மக்களை வழிகெடுக்கும் பித்தலாட்டக்காரர்களும் கூட தாங்கள் நபிகள் நாயகத்தைக் கனவில் கண்டதாகக் கூறித் தான் ஆள் பிடிக்கும் வேலையில் இறங்குகிறார்கள்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியுமாஎன்பது பற்றிய அறிவும் நமக்கு இருப்பது அவசியமாகும்.

யார் என்னைக் கனவில் காண்கிறாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான்‘ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: (புகாரி: 610, 6197)

இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு தான் நபிகள் நாயகத்தைக் கனவில் காண முடியும் என்று சிலர் வாதிட்டு வருகின்றனர்.

இந்த நபிமொழியை இவர்கள் தவறாக விளங்கியுள்ளனர். இந்த நபிமொழியை எவ்வாறு விளங்குவது என்பதற்கு மற்றொரு நபிமொழி துணை செய்கிறது.

என்னை யாராவது கனவில் கண்டால் விழித்தவுடன் என்னைக் காண்பார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான்‘ என்பது தான் அந்த நபிமொழி.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்:  (புகாரி: 6993)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எவர்கள் கனவில் காண இயலும் என்பதை இந்த நபிமொழி விளக்குகிறது.

என்னைக் கனவில் காண்பவர் விழித்தவுடன் நேரிலும் காண்பார்‘ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறுகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உலகில் உயிரோடு வாழும் போது மாத்திரம் தான் இது சாத்தியமாகும்.

அவர்கள் உயிரோடு இந்த உலகில் வாழும் போது ஒருவர் கனவில் அவர்களைக் கண்டால் விழித்தவுடன் அவர்களை நேரில் காணும் வாய்ப்பைப் பெறுவார் என்று இந்த நபிமொழி கூறுகிறது.

இன்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாகக் கூறினால் விழித்தவுடன் அவர் நேரிலும் அவர்களைக் காண வேண்டும். நகமும் சதையுமாக அவர்களை நேரில் காணவில்லையானால் அவர் கனவிலும் அவர்களைக் காணவில்லை என்பது உறுதி.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பிறகு எந்த மனிதரும்எந்த மகானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் பார்க்கவே இயலாது என்பதை இரண்டாவது கருத்துக்கு இடமில்லாமல் இந்த நபிமொழி தெரிவிக்கிறது.

இந்த இடத்தில் சிலருக்கு ஏற்படும் ஒரு சந்தேகத்தையும் அதற்கான விளக்கத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

கனவில் ஒருவர் தோன்றிநான் தான் முஹம்மத் நபி‘ என்று கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். நபிகள் நாயகத்தின் வடிவில் ஷைத்தான் வரமாட்டான் என்ற நபிமொழியின் அடிப்படையில் கனவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் வந்தார்கள் என்று கருதலாம் அல்லவாஎன்பது தான் அந்தச் சந்தேகம்.

நான் தான் முகம்மது நபி‘ என்று ஒருவர் கூறுகூது போல் கனவு கண்டாலும் அது நபிகள் நாயகம் அல்லர். ஷைத்தான் அவர்களின் பெயரைப் பயன்படுத்தியுள்ளான் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். ஷைத்தான் நபிகள் நாயகத்தின் வடிவத்தை எடுக்க மாட்டான் என்று தான் அந்த நபிமொழி உத்தரவாதம் தருகிறது. ஷைத்தான் தனக்கே உரிய வடிவத்தில் வந்து நான் தான் நபிகள் நாயகம் என்று கூற மாட்டான் என்று அந்த நபிமொழி கூறவில்லை.

என் வடிவில் ஷைத்தான் வர மாட்டான்‘ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். கனவில் ஒருவர் வந்தால் அவர் நபிகள் நாயகமா அல்லவாஎன்று முடிவு செய்வதாக இருந்தால் அவர் நபிகள் நாயகத்தை நேரில் பார்த்தவராக இருக்க வேண்டும். நேரில் அவர்களை எந்த வடிவத்தில் பார்த்தாரோ அதே வடிவில் கனவிலும் வந்தால் வந்தவர் நபிகள் நாயகம் தான் என்று அவரால் அறிந்து கொள்ள இயலும்.

நபிகள் நாயகத்தின் வடிவத்தைக் காணாத ஒருவரால் இதை அறிந்து கொள்ள இயலாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வடிவத்தை எடுப்பதை விட்டும் தான் ஷைத்தான் தடுக்கப்பட்டுள்ளான். வேறு வடிவத்தில் வந்து நான் தான் நபிகள் நாயகம் என்று கூற மாட்டான் என்று எந்த நபிமொழியும் இல்லை.

நபிகள் நாயகத்தை ஏற்கனவே நேரடியாகக் கண்டவர் தான் கனவில் காண முடியும். அல்லது கனவில் கண்டவர் பின்னர் நேரில் காண முடியும் என்பதைத் தான் இரண்டு நபிமொழிகளும் கூறுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பிறகு நபிகள் நாயகத்தை இந்தப் பெரியார் கனவில் கண்டார்அந்த மகான் கண்டார்‘ என்றெல்லாம் கூறப்படுமானால் அது கட்டுக்கதையாகத் தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

கனவில் வரும் உரிமை எவருக்கும் இல்லை

ஒருவர் நமது கனவில் வருகிறார் என்றால் அவரே நமது கனவில் வந்தார் என்று புரிந்து கொள்ளக் கூடாது. அவர் நம்முடன் எதையாவது பேசினால் அவரே நம்மோடு பேசுகிறார் என்றும் நாம் புரிந்து கொள்ளக் கூடாது. அது போன்ற காட்சிகளை இறைவன் நமக்கு எடுத்துக் காட்டுகிறான் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக இன்று உயிருடன் உலகத்தில் வாழும் ஒருவரை நாம் கனவில் காண்பதாக வைத்துக் கொள்வோம். கனவில் அவரைப் பார்த்த பின்னர் காலையில் அவரை நாம் நேரிலும் சந்திக்கிறோம் என்றும் வைத்துக் கொள்வோம். அப்போது அந்த மனிதர் நான் நேற்றிரவு உன் கனவில் வந்தேனே?’ என்று கூறுவாராஎன்றால் நிச்சயமாகக் கூற மாட்டார்.

நமது கனவில் அவர் வந்தது நமக்குத் தான் தெரியுமே தவிர அவருக்குத் தெரியாது. உங்களை நான் கனவில் கண்டேன்‘ என்று அவரிடம் நாம் கூறினால் தான் அதை அவரால் அறிந்து கொள்ள முடியும்.

அவர் தமது கனவில் எத்தனையோ விஷயங்களைப் பேசுவதாக நாம் கனவு கண்டிருப்போம். நாம் அவரிடம் போய்  நேற்று என் கனவில் நீங்கள் கூறிய அறிவுரையை மீண்டும் கூறுங்கள்‘ என்று கேட்டால் அவரால் அதைக் கூற முடியாது. நான் கனவில் என்ன அறிவுரை கூறினேன் என்பது எனக்கு எப்படித் தெரியும்?’ என்பது தான் அவரது பதிலாக இருக்கும்.

எனவே ஒருவரை நாம் கனவில் கண்டால் அவரே வந்து விட்டார் என்றும் கருதக் கூடாது. அவர் நம்மோடு பேசியது அனைத்தும் அவரது வார்த்தைகள் என்றும் நாம் நினைக்கக் கூடாது. அவருக்கு நமது கனவில் எந்தச் சம்மந்தமும் இல்லை.

அவரை எடுத்துக் காட்டி அவர் கூறுவது போல் சில செய்திகளை இறைவன் நமக்குக் கூறலாம். அல்லது ஷைத்தான் அவரது வடிவத்தில் வந்து நமக்கு கெட்ட கனவை ஏற்படுத்தியிருப்பான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் உயிருடன் உள்ள ஒருவரை ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் கூட கனவில் காண முடியும். அவர் ஆயிரம் இடத்துக்குச் சென்று காட்சியளித்தார் என்று புரிந்து கொள்ளக் கூடாது. ஒருவரை வீடியோவில் பதிந்து மற்றவருக்கு காட்டுவது போல் தான் கனவில் காண்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் நாளை இரவு உனது கனவில் வரட்டுமா?’ என்று எந்த மனிதரும் எந்த மனிதரிடமும் கேட்க முடியாது. இதிலிருந்து கனவில் தென்படுபவர் அவராக முடிவு செய்து நமது கனவில் வருவதில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.