கண் தெரியாத தோழருக்குக் கண்ணியம் கொடுத்த குர்ஆன்
கண் தெரியாத தோழருக்குக் கண்ணியம் கொடுத்த குர்ஆன்
அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற பார்வையற்ற தோழர் நபிகள் நாயகத்திடம் வந்தார். எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இணைவைப்பவர்களில் முக்கியப் பிரமுகர் ஒருவர் இருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பார்வையற்ற தோழரைப் புறக்கணித்து விட்டு, முக்கியப் பிரமுகரின் பால் கவனம் செலுத்தினார்கள்.
“நான் கூறுவதில் தவறு ஏதும் காண்கிறாயா?” என்று அந்தப் பிரமுகரிடம் நபியவர்கள் கேட்க, அவர் இல்லை என்று கூறினார். அப்போது தான் அல்குர்ஆன் 80வது அத்தியாயம் 1 முதல் 10 வரையிலான வசனங்கள் அருளப்பட்டன.
நூல் : (திர்மிதீ: 3331) (3452), 3328, முஸ்னத் அபூயஃலா – 4848
தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.
ஏற்கனவே இஸ்லாத்தை ஏற்ற பலவீனரை விட இஸ்லாத்தை ஏற்காதவர், பிரமுகர் என்பதற்காக நபிகள் நாயகம் முக்கியத்துவம் அளித்தார்கள் என்பதால் எவ்வளவு கடுமையான சொற்களால் இறைவன் கண்டிக்கிறான் என்பதைக் காணும் போது இணை வைத்தலுக்கு அடுத்தபடியாக குலத்தால் உயர்வு கற்பித்தல் இறைவனுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தும் காரியம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே இந்த விஷயத்திற்காக மிகவும் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளதால் தான் முஸ்லிம்கள் சாதி, குலம், நிறம், மொழி, இனம், தேசம் போன்ற காரணங்களால் மனிதர்களுக்கிடையே உயர்வு தாழ்வு கற்பிப்பதைக் காண முடியவில்லை. எத்தனையோ சட்டங்கள் போட்டு, ஒழிக்க முடியாத தீண்டாமையை அடியோடு இஸ்லாம் ஒழித்துக் கட்டியதற்கு இத்தகைய கடுமையான நிலைப்பாடே காரணமாக இருக்கின்றது.
சாதாரண மக்களுக்காக தனது தூதரையே இறைவன் கண்டிக்கிறான் என்பதால் தான் மனிதர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பித்தல் கூடாது என்பது முஸ்லிம்களின் இரத்தங்களில் இரண்டறக் கலந்து விட்டது.
Source:onlinetntj.com