ஜமாத் உறுப்பினர் படிவத்தில் கையொப்பம் வாங்குவது பைஅத் தானே?

கேள்வி-பதில்: நவீன பிரச்சனைகள்

ஜமாத் உறுப்பினர் படிவத்தில் கையொப்பம் வாங்குவது பைஅத் தானே?

மார்க்கம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் நபிகள் நாயகம் ஸல் தவிர வேறு யாரிடமும் பைஅத் செய்யக் கூடாது. இது அதுபோன்றது இல்லை. 

தொழுகை நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளை முறையாக நிறைவேற்றுவதாகவும் மார்க்கம் தடை செய்த பாவமான காரியங்களைச் செய்ய மாட்டேன் என்றும் உறுதிமொழி அளிப்பதற்கு பைஅத் என்று சொல்லப்படுகின்றது.

இந்த ஆன்மிக பைஅத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தவிர வேறு யாரிடமும் செய்யக்கூடாது என்றே நாம் கூறி வருகின்றோம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் உறுப்பினராக சேர வருபவரிடம் உறுப்பினர் படிவத்தில் குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்ற வேண்டும் என உறுதி மொழி வாங்கப்படுகின்றது. ஆன்மிக விஷயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தவிர வேறு யாரிடமும் உறுதிமொழி அளிக்கக் கூடாது என்ற நமது நிலைபாட்டிற்கு இது முரணாக உள்ளதே என்ற கேள்வி எழுகின்றது.

ஒருவரை மார்க்கத் தலைவராக ஏற்றுக் கொண்டு அவரிடம் செய்யும் உறுதி மொழி தான் பைஅத் எனப்படும். ஒருவரை மார்க்கத்திற்கு தலைவராகக் கருதாமல் அவர் நிர்வாகம் சம்மந்தப்பட்ட விஷயத்தில் விதிக்கும் கட்டுப்பாடுகளை ஏற்பதாக உறுதி கூறுவது பைஅத்தில் சேராது.

ஒரு நிறுவனத்தில் நாம் பணியில் சேரும் போது குடிக்க மாட்டேன் என்று உறுதி மொழி கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதனிப்படையில் நாமும் அவ்வாறு உறுதி மொழி கொடுக்கிறோம். குடிக்கக் கூடாது என்பது மார்க்கத்தில் உள்ள அம்சமாக இருந்தாலும் நாம் உறுதி மொழி அளிப்பது அந்த நிறுவனத்தின் தலைவரை மார்க்கத் தலைவராக ஏற்றுக் கொள்வதற்காக அல்ல. அது அந்த நிறுவனத்தின் கட்டுப்பாடு என்பதற்காகவே உறுதி மொழி கொடுக்கிறோம். இது பைஅத்தில் சேராது.

அது போல் ஒரு இஸ்லாமியப் பள்ளிக் கூடத்தில் விதிக்கப்படும் விதிகளில் தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் சேர்த்திருப்பார்கள். அதை நாம் ஏற்றுக் கொண்டு உறுதி மொழி கொடுத்து அந்தப் பள்ளிக்கூடத்தில் நமது பிள்ளைகளைச் சேர்க்கிறோம். இந்த உறுதி மொழி அவர்களை மார்க்கத் தலைவராக எற்றுக் கொண்டு அளிக்கப்படுவது அல்ல. மாறாக அது அந்த நிறுவனத்தின் விதி என்பதற்காக அவ்வாறு உறுதி மொழி கொடுக்கிறோம்.

அந்த நிறுவனத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எல்லா நேரத்திலும் எல்லா விஷயங்களிலும் அந்த நிறுவனத்துக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த உறுதி மொழி கொடுப்பதில்லை. அமீருக்குக் கட்டுப்படுதல் குறித்து இஸ்லாம் வலியுறுத்தும் ஆதாரங்கள் அடிப்படையிலும் இந்த நிறுவனத்துக்குக் கட்டுப்படுவது இஸ்லாத்தில் கடமை என்ற அடிப்படையிலும் இவ்வாறு உறுதி மொழி கொடுப்பதில்லை.

இது போல் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் அங்கம் வகிப்பவர் சில கொள்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்; சில தீமைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று சில கட்டுப்பாடுகளை இயக்கத்தின் விதியாக உருவாக்கியுள்ளோம். அந்த விதிகளை பேணா விட்டால் அமீருக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற கட்டளையை மீறி விட்டாய் என்று நாம் எச்சரிப்பதில்லை. இந்த இயக்கத்தில் இருப்பதற்கு நாங்கள் வகுத்த விதி என்று தான் நாம் சொல்கிறோம். மேலும் இயக்கத்தின் தலைவர் என்ன சொன்னாலும் அதைச் செய்வது கடமை என்றோ அவரது கட்டளையை மீறினால் அது பைஅத்தை முறித்த குற்றத்தில் சேரும் என்றும் நாம் யாரையும் ஏமாற்றுவதில்லை.

ஆனால் இயக்கத்தில் சேரும் போது பைஅத் வாங்கும் கூட்டத்தினர் அந்த இயக்கத்தின் தலைவ்ருக்குக் கட்டுப்படுவ்து மார்க்கத்தின் கட்டளை என்று மூளைச் சலவை செய்கின்றனர். அமீரின் கட்டளையை மீறினால் அல்லாஹ்விடம் கடும் தண்டனை உண்டு எனக் கூறுகின்றனர். எல்லா நேரமும் அந்த இயக்கத்தின் பிடியில் தான் அவர் இருக்க வேண்டும் என்று மூளைச் சலவை செய்கின்றனர். இப்படி வாங்கும் உறுதி மொழி தான் பைஅத் என்பதில் சேரும். அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுப்படுவது எப்படி மார்க்க அவசியமோ அது போல் தலைவருக்குக் கட்டுப்படுவதும் மார்க்கக் கடமை என்று மக்களை ஏமாற்றுகின்றனர்.

இத்தகைய எந்த அம்சமும் தவ்ஹீத் ஜமாஅத்தில் இல்லை.

வேறுபட்ட பல கொள்கைள் சமுதாயத்தில் பரவியிருக்கும் இந்நிலையில் ஒருவர் தவ்ஹீது ஜமாஅத்தில் இணைய நாடினால் அவர் ஜமாஅத்தின் கொள்கையை விளங்கியவராகவும் அக்கொள்கையில் சறுகாதவராகவும் இருக்க வேண்டும்.

ஜமாஅத்தில் உறுப்பினராக சேர நினைப்பவர் குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டும் பின்பற்றுவது தான் தனது கொள்கை எனப் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும். அதாவது கொள்கைப் பிரகடனம் என்ற அடிப்படையில் தான் இந்த உறுதிமொழி வாங்கப்படுகின்றது.

ஒருவர் தனது கொள்கையை வெளிப்படுத்த யாரிடம் வேண்டுமானாலும் உறுதிமொழி அளிக்கலாம். நபி (ஸல்) அவர்கள் மட்டுமல்லாமல் யாரிடம் வேண்டுமானலும் இவ்வாறு உறுதிமொழி அளிக்கலாம். இந்த அடிப்படையில் தான் நமது ஜமாஅத்தின் உறுப்பினர்கள் உறுதிமொழி அளிக்கின்றனர்.

உறுப்பினராகச் சேர்ந்த நபர் தொழுகையில் கவனக் குறைவாக இருக்கின்றார். சினிமா புகைபிடித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றார். இப்போது இவர் உறுப்பினர் தகுதியை இழக்க மாட்டார். இவற்றை எல்லாம் செய்யக் கூடாது என்று அவரிடம் ஜமாஅத் உறுதிமொழி வாங்கவில்லை என்பதே இதற்குக் காரணம்.

அதே நேரத்தில் ஜமாஅத்தில் உறுப்பினராகச் சேர்ந்த ஒருவர் நபித்தோழர்களைப் பின்பற்றலாம் என்றோ மத்ஹபுகளைப் பின்பற்றலாம் என்றோ கூறுவாரேயானால் அவர் உறுப்பினர் தகுதியை இழந்து விடுவார். இவர் தனது கொள்கைக்கு மாற்றமாக செயல்பட்டதே இதற்குக் காரணம்.

எனவே உறுப்பினர் படிவத்தில் அளிக்கப்படும் உறுதிமொழி கொள்கைப் பிரகடனமே தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மட்டும் செய்ய வேண்டிய ஆன்மிக பைஅத் அல்ல.

இன்னும் சொல்லப் போனால் தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் அமீர் என்று குறிப்படப்படுவதில்லை. ஆட்சியும் அதிகாரமும் உள்ளவர் தான் அமீர் என்றும் நாம் கூறி வருகிறோம். இது குறித்து அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு எனும் நூலில் விளக்கியுள்ளோம்.