விலைகொடுத்து வாங்கும் விபரீதம்.!
விலைகொடுத்து வாங்கும் விபரீதம்.!
இன்றைய நவீன உலகில் மொபைல் போன் இல்லாதவர்களே இல்லை என்ற நிலையில் தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மொபைல் போன் இல்லாதவன் முழு மனிதனே இல்லை என்ற அளவுக்கு சகமனிதர்கள் நம்மை தவறாக பார்க்கும் நிலை இன்று உருவாகியிருக்கிறது. ஆனால் இந்த மொபைல் போன் அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் நமக்கு வழங்கி கொண்டிருந்தாலும், அதைவிட மிக அபாயமான ஆபத்துகளையும் ஏற்படுத்தும் என்பதை நாம் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்.
அவ்வப்போது வாட்சப் மூலமாகவும், சமூக வலை தளங்களிலும், மொபைல் போன் வெடித்தல் அல்லது போன் பேசியபடியே சென்று ஆபத்துக்களில் மாட்டி கொள்ளுதல் என பல வகை வீடியோக்களை பார்த் திருப்போம். சென்ற வாரம் கூட கிருஷ்ணகிரியில் ஒருவர் ஹெல்மெட்டிற்குள் மொபைல் வைத்து பேசிக்கொண்டே டூவீலரில் சென்று கொகண்டிருக்கும் போது வெடித்ததில் படுகாயம் அடைந்ததாக செய்திகள் வந்தது. செல்பி எடுக்கும் போது, மலை உச்சியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த வீடியோக்களும் அடிக்கடி வலைதளங்களில் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
24 மணி நேரத்தில் 20 மணி நேரம், நாம் ஸ்மார்ட்போனில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதே மாதிரி அதில் இருக்கும் ஆபத்தையும் நாம் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். செல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் ஆபத்து இல்லை, ஆனால் நிச்சயமாக பல நோய்கள் தாக்கும் என்பது உறுதி. செல்போனிலிருந்து வெளியேறும் மின்காந்த அலைகள், தோல் புற்றுநோய்கள், வலிப்பு நோய்கள், ரத்த புற்றுநோய் மற்றும் மூளை சம்பந்தமான அனைத்து நோய்களும் ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் அனைவரும் கடுமையாக எச்சரிக்கின்றனர்.
செல்போன் பயன்படுத்தும் போது ஏற்படும் அதிர்வலைகளால் நம்முடைய மூளை நினைவாற்றலை இழக்கும் என்று தெரிவிக்கிறது ஓர் ஆய்வு. இதனால் நமக்கு ஞாபக மறதி நோய் ஏற்படும். மேலும் இந்த அதிர்வலைகள் அதாவது கதிர்வீச்சுக்கள் மூளைக்குச் செல்லும் ரத்தத்தில் நச்சுத் தன்மையை உண்டாக்கி, நோமோஃபோபியா எனும் நோயை உண்டாக்கி விடும். அதாவது மனிதனுக்கு மொபைல் போன் இல்லாமல் எதுவுமே செய்ய முடியாது என்ற மனநிலையை ஏற்படுத்தும் இந்த நோய். இன்றைய காலகட்டத்தில் பலரும் தனிக்குடும்பமாக இருக்கிறார்கள். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிடுகின்றனர்.
குழந்தையை சமாளிக்க பெரும்பாலும் தங்களது ஸ்மார்ட் போனை கையில் கொடுத்து ஒரு வீடியோ அல்லது விளையாட்டுகளை ஆன் செய்து கையில் கொடுத்துவிடுகின்றனர். இதனால் குழந்தைகள் பல மணி நேரங்கள் ஸ்மார்ட் போன்களை உபயோகப்படுத்த தொடங்கவிட்டன. பெரியவர்கள் தான் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றால் இன்று குழந்தைகளும் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கின்றன.
ஒரு வயது குழந்தைக்கு கூட ஸ்மார்ட் போனை பயன்படுத்த தெரிந்து இருக்கிறது. இதனால் குழந்தைகளும் பலவிதமான நோய்களுக்கு ஆட்படுகின்றனர். தகவல்களை பேசிக் கொள்வதற்கும், செய்திகளை மெசேஜ் மூலம் பரிமாறிக் கொள்வதற்கும் பயன்படுத்தும் வரை செல் போன்களால் அதிக அளவு ஆபத்தும், பாதிப்பும் இருக்கவில்லை. அதையும் தாண்டி ஸ்மார்ட் போன்கள் வந்த பிறகுதான் நாம் இழந்ததும், இணைந்ததும் அதிகம் என்றால் அது மிகையாகாது.
Source: unarvu (26/07/19)