நல்ல வார்த்தையும் தீய வார்த்தையும்.
அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
மனிதன் அன்றாடம் பயன்படுத்தும் வார்தைகள் என்பது பல வகைகளாக இருக்கின்றது. உதாரணமாக அன்பு வார்த்தைகள், கோப வார்த்தைகள்,கேலி வார்த்தைகள், இரட்டை அர்த்த வார்த்தைகள் இப்படி பல வார்த்தைகள் இருந்தாலும் நாம் ஏற்றிருக்கின்ற இஸ்லாமிய கொள்கையில் இந்த வார்த்தைகளுக்கும் தனி இடம் இருக்கிறது. நாம் பேசுகிற சில வார்த்தைள் இறைவனிடம் நன்மையையும் பெற்றுத் தருகிறது. அவ்வாறே சில வார்த்தைகள் தீமையும் பெற்றுத்தருகிறது. எனவே தான் அவன் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தைகளையும் கண்காணிக்கப்படுகிறது என்று இறைவன் அறிவுறுத்துகிறான். அவ்வாறான சில விஷயங்களை இந்த உரையில் காண்போம்..
اِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيٰنِ عَنِ الْيَمِيْنِ وَعَنِ الشِّمَالِ قَعِيْدٌ
مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ
(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.
உலகில் நிகழும் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம் நாவிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் தான் என்பது மறுக்க இயலாது. இந்த நாவிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் மூலம் பல சமூகங்களுக்கிடையே பெரும் போர்களும் அழிவுகளும் ஏற்படுவதற்கும், மிகப்பெரும் சமுதாய எழிச்சிகளும் புரட்சிகளும் ஏற்படுவதற்கும், இந்த நாவின் வார்த்தைகள் காரணமாக இருக்கிறது.
ஒவ்வொரு மனிதனும் இந்த உலக வாழ்கையில் ஒரு துரும்பை அகற்றினாலும் அதற்கு ஒரு கூலியை எதிர்பார்க்கிறான். இதே போன்று நாம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் நிதானித்து பேச வேண்டும். அப்படி பேசினால் அதற்கு நன்மைகள் இருக்கிறது என்பதை விளங்கி கொள்ள வேண்டும். எனவேதான் நபி (ஸல்) அவர்களைப் பற்றி இறைவன் சிலாகித்து கூறுகின்றான்.
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;
எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.
நபி (ஸல்) அவர்கள் அந்த மக்களை வென்றெடுத்தார்கள் என்றால் அதற்கு தான் பேசிய வார்த்தைகளும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. நபிகளாரைப்பற்றி கூறுவதின் மூலம் இந்த நபியை பின்பற்றக்கூடிய மக்களும் இதை உணர வேண்டும் என்பது தான். இவ்வாறே நல்ல வார்த்தைகளுக்கு இறைவன் ஒரு உதாரணம் தருவதைப் பாருங்கள்.
(நபியே!) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது; அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும்.
இந்த வசனத்தை படிகின்ற போது நமது நல்ல வார்த்தைகளுக்கு இறைவனிடத்தில் எவ்வளவு பெரிய அந்தஸ்து இருக்கிறது என்பதை விளங்கமுடிகிறது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் தம் மூட்டுகள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கிற ஒவ்வொரு நாளிலும் தர்மம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும்; அல்லது அவரின் பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும். நல்ல (இனிய) சொல்லும் ஒரு தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தருமமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: (புகாரி: 2989)
இதேபோன்று ஒருவர் தனது நாவின் மூலம் பிறருக்கு இடையூறு தராத நல்ல வார்த்தைகளை உபயோகிக்கும் இந்த மனிதனுக்கு சொர்க்கம் கிடைப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் நான் உத்தரவாதம் அளிக்கிறேன் என்கிறார்கள்.
தம் இரண்டு தாடைகளுக்கு இடையே உள்ளத(ான நாவி)ற்கும், தம் இரண்டு கால்களுக்கு இடையே உள்ளத(ான மர்ம உறுப்பி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருககு நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி),
நூல்: (புகாரி: 6474)
எவன் கண்ணியத்தை நாடுகிறானோ, அவன் எல்லாக் கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன.
முஃமின்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து பேசாதீர்கள், (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும்.
ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான்.
ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: (புகாரி: 6478)
நமது வாழ்கையில் பல சந்தர்ப்பங்களில் யாசிபோரிடம் கடுமையாக பேசி விரட்டுவதை பார்கிறோம். இதன் மூலம் அல்லாஹ் நரகத்தை விதியாக்கி விடுகிறான். இந்த சந்தர்ப்பத்தில் கூட இன்சொல்லை கொண்டு காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதைப் பின் வரும் ஹதீஸ் எச்சரிக்கின்றது.
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போது தம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். பிறகும் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போதும் அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போதும் தம் முகத்தைத் திருப்பினார்கள். பிறகு, ‘பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இன் சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்)’ என்றார்கள்.
அறிவிப்பவர்: அதீ இப்னு ஹாத்திம் (ரலி),
நூல் : (புகாரி: 6023)
(இணை வைப்போரின்) கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம் கெட்ட மரமாகும்; பூமியின் மேல்பாகத்திலிருந்தும் (அதன் வேர்) பிடுங்கப்பட்டிருக்கும்; அதற்கு நிலைத்து நிற்கும் தன்மையுமில்லை.
மனிதனின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாக இருப்பது அவன் பேசும் வார்த்தைகள்தான் என்பதை மறுக்க முடியாது. சிலர் நல்ல வார்த்தைகளை இன்முகத்தோடு பேசுவதின் மூலம் மனிதர்களில் சிறப்பிடத்தைப் பெற்று விடுகிறார்கள். சிலர் முறையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி மனிதர்களில் தரம் தாழ்ந்தவர்கள்’ பட்டியலில் இடம் பெற்று விடுகிறார்கள்.
இறைவன் நல்ல வார்த்தைகள் பேசுவதைப் பற்றி அதற்கு நன்மைகள் இருக்கிறது என்று கூறியதைப் போன்று தீய வார்த்தைகள் பேசுவதைப் பற்றி அதற்கு பாவங்கள் இருக்கிறது என்பதையும் மேல் குறிப்பிட்ட ஆயத்திலிருந்தும், பின்வரும் ஹதீஸ்களிலிருந்தும் விளங்கமுடிகிறது.
“பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றை விட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி),
நூல்: (புகாரி: 10)
ஒரு மனிதன் எப்போது சிறந்த முஸ்லிமாக ஆகிறான் என்றால் அவன் அருகிலிருப்பவன் இவன் பேசிய வார்த்தைகளால் கோபப்படாமல் இன் முகத்தோடு இருக்கிறானோ அப்போது இவன் சிறந்த முஸ்லிமாக ஆகிறான். நமது முஸ்லிம் சமுதாயத்தில் பலரை, சின்னசின்ன வார்த்தைகளால் சண்டை சச்சரவுகளால் பிளவு பட்டு இருப்பதை காண்கிறோம். என்ன பேசுகிறோம் ஏன் பேசுகிறோம் என்று விளங்காமலேயே பேசிவிடுகிறோம். சிலர் நிகழ்வுக்குப் பிறகு நான் அப்படிப் பேசியிருக்கக்கூடாது என்று தன்னை நொந்துகொள்வார்கள். அல்லாஹ்வும், நபி (ஸல்) அவர்களும் பொறுமையைக் கையாளும்படி எச்சரித்திருக்கிறார்கள். இன்னும் ஒரு விஷயத்தை குர்ஆனில் பார்க்கமுடிகிறது.
“உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் சப்தமிடுவது போல் அவரிடம் சப்தமிட்டு கூறாதிர்கள். நீங்கள் அறியாத நிலையில் உங்கள் செயல்கள் (இதனால்) அழிந்து விடும்”
இப்படி சப்தமிட்டு பேசுவதை கண்டிப்பதோடு அதனால் நற்செயல்களும் அழிந்துவிடும் என்று இறைவன் கூறுகின்றான். ஆனால் நாம் கோபத்தில் எப்படியெல்லாமோ பேசிவிடுகிறோம். அப்படி கோபத்தில் பேசினால் அதன் விளைவு என்ன என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 6478)
ஒருவர் பேசுகின்ற வார்த்தைகளின் மூலம் சுவர்க்கம் செல்வார். அவ்வாறே பேசுகிற வார்த்தைகளின் மூலம் நரகமும் செல்வார் என்பதை நாம் விளங்க முடிகிறது. மற்றொரு ஹதீஸில் கடுமையாக எச்சரிக்கிறார்கள்.
“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய் மூடி இருக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி),
நூல் : (புகாரி: 6475)
ஒரு சிலர் ஏதோ ஒரு சிந்தனையில், தான் என்ன பேசுகின்றோம் என்று தெரியாமலேயே பேசிவிடுகிறார்கள். இதன் காரணமாக அல்லாஹ் மிகப்பெரிய தண்டனைகள் தருகிறான் என்று பின்வரும் ஹதீஸ் அறிவிக்கிறது.
ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவைவிட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 6477)
நாம் பேசக்கூடிய ஒவ்வொரு சொல்லையும் வானவர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் தவறாகப் பயன்படுத்திய வார்த்தைகளைப் பற்றி மறுமை நாளில் விசாரிக்கப்பட்டு, அவற்றிற்குரிய தண்டனை வழங்கப்படும். நாம் சிந்திக்காமல் பேசும் சில வார்த்தைகள் நம்மை நரகத்தின் அடித்தளத்திற்கே கொண்டு போய்ச் சேர்த்து விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதை உணர்ந்து நம் அனைவரையும் அல்லாஹ்வும் ரஸுலும் எதை போதித்தார்களோ அதனடிப்படையில் நமது வார்த்தைகளை அமைத்துக்கொள்ள கூடிய நல்லோர்களாக ஆக அல்லாஹ் அருள் புரிவானாக.!
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.