வெள்ளிக்கிழமை கஹ்ஃபு அத்தியாயம் ஒதுவது
வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃபு ஒதுவது
வெள்ளிக்கிழமை கஹ்ஃபு அத்தியாயம் ஓதுவது சுன்னத் என்று ஆரம்பத்தில் கூறிவந்தோம். ஆனால் இது சம்பந்தமாக வரக்கூடிய அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவை ஆகும். எனவே வெள்ளிக் கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓதுவது சுன்னத் என்ற கருத்து மாற்றிக் கொள்ளப்பட்டது.
மக்கா வரை ஒளி?
யார் வெள்ளிக்கிழமை அன்று கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதி பின்பு தஜ்ஜாலை அடைந்தால் தஜ்ஜால் அவருக்குத் தீங்கு இழைக்க முடியாது. யார் கஹ்ஃப் அத்தியாயத்தின் இறுதியை ஓதுவாரோ அவருக்கும் மக்கா வரை ஒளி உண்டாகும் என்று அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
நூல்: ஷஅபுல் ஈமான் பாகம்: 3, பக்கம்: 112
இந்த செய்தி நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகப் பதிவு செய்யப்படவில்லை. அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.
நன்மை,தீமைகள், ஹலால், ஹராம் போன்றவற்றை திருக்குர்ஆன் அல்லது நபி (ஸல்) மட்டுமே கூற முடியும். அவர்கள் கூறியதை மட்டுமே மார்க்கமாக அங்கீகரிக்க முடியும்.எனவே இதை ஆதாரமாகக் கொண்டு செயல்படுத்த முடியாது.
மேகம் வரை ஒளி?
யார் கஹ்ஃப் அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை ஓதுவாரோ அவருக்கு மறுமை நாளின் அவரின் பாவத்திலிருந்து வானத்தின் மேகம் வரை ஒளி ஏற்படும். மேலும் இரண்டு வெள்ளிக்கிழமைக்கு இடையில் ஏற்படும் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
இந்தச் செய்தியை இப்னு மர்தவைஹி அவர்கள் தனது தப்ஸீரில் பதிவு செய்திருப்பதாக தப்ஸீர் இப்னு கஸீரில் அறிவிப்பாளர் வரிசையுடன் இடம்பெற்றுள்ளது.
இதில் இடம்பெற்றிருக்கும் காலித் பின் ஸயீத் பின் அபீ மர்யம் என்பவர் யாரென்று அறியப்படாதவர் என்று இப்னுல் கத்தான் அவர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள். இவர் யாரென நாம் அறியவில்லை என்று இப்னுல் மதீனீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் பாகம்: 3, பக்கம்: 83
இந்த தரத்தில் அமைந்த அறிவிப்பாளர்களின் செய்திகள் ஆதாரமாகக் கொள்ளப்படாது.
அனைத்து சோதனையிருந்தும் பாதுகாப்பு?
யார் கஹ்ஃப் அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை அன்று ஓதுவாரோ அவர் ஒவ்வொரு சோதனையில் இருந்தும் எட்டு நாள் பாதுகாக்கப்படுவார், தஜ்ஜால் வெளியேறினால் அவனிடமிருந்து இவர் பாதுகாப்பு பெறுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: அல்அஹாதீஸில் முக்தார் (பாகம்: 2, பக்கம்:50)
இந்தச் செய்தியில் அப்துல்லாஹ் பின் முஸ்அப் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று இப்னு மயீன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.!
(நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 4, பக்கம்: 201
பத்து நாட்கள் பாதுகாப்பு?
நான் உங்களுக்கு ஒரு அத்தியாயத்தை அறிவிக்கட்டுமா? அதன் மகத்துவம் வானத்திற்கும் பூமிக்கும் மத்தியில் உள்ள இடைப்பட்ட அளவாகும். அதை ஓதியவருக்கு இது போன்ற நன்மைகள் கிடைக்கும். யார் வெள்ளிக்கிழமை ஓதுவாரோ அவருக்கு அடுத்த வெள்ளிக்கிழமை வரை பாவங்கள் மன்னிக்கப்படும். மேலும் மூன்று நாட்கள் அது நீட்டிக்கப்படும் (அதை அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர் ஆம் என்றார்கள். அது தான் கஹ்ஃப் அத்தியாயமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: தைலமீ)
இச்செய்தியில் ஹிஷாம் பின் அப்துல்லாஹ் பின் இக்ரிமா அல்மக்ஸுமி என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர். இவர் அடிப்படையற்ற செய்திகளை அறிவிப்பவர் என்று இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ‘
(நூல்: அல்லுஃபாவு வல்மத்ரூகீன் லி இப்னுல் ஜவ்ஸீ, பாகம்:3, பக்கம்: 175)
அணைத்து நோயிலிருந்து பாதுகாப்பு?
யார் கஹ்ஃப் அத்தியாத்தை வெள்ளிக்கிழமை இரவு ஓதுவாரோ அவர் ஓதிய இடதிலிருந்து மக்கா வரை ஓலி கொடுக்கப்படும். வெள்ளிக்கிழமை யிலிருந்து அடுத்த ஜூம்ஆ வரையிலும் மேலும் மூன்று நாட்கள் வரை பாவங்கள் மன்னிக்கப்படும். அவருக்காக காலை வரை வானவர்கள் ஆயிரம் தடவை பாவமன்னிப்புத் தேடுவார்கள். பைத்தியம் அணைத்து தொழுநோய், தஜ்ஜாலின் சோதனையிலிருந்து காப்பாற்றப்படுவார். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல் : தத்கிரதுல் மவ்லூஆத் பாகம்: 565
இந்தச் செய்தி நபிகளார் பெயரால் இட்டுக்கட்டி சொல்லப்பட்டது. என்றும் இதில் இடம்பெறும் இஸ்மாயீல் என்பவர் பொய்யர் என்றும் எந்த செய்தியை பதிவு செய்துள்ள நூலாசிரியரே குறிப்பிடுகிறார்…