முஸ்­லிம் யார்?

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

ஒரு முஸ்லிமின் இலக்கணத்தை குறித்தும் அவன் எப்படி வாழ வேண்டும் என்பதை குறித்தும்  திருமறைக் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் ஏராளமான அறிவுரைகள் நமக்கு சொல்லித் தரப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றை இந்த உரையில் வரிசையாக காண இருக்கிறோம்!

முஸ்­லிம் யார்?

அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பியவர்கள் தான் முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அல்லாஹ் தன் திருமறையில் முஸ்லிம் என்று சொல்வதற்கு தகுதியுடையவன் யார் என்றால் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பிய பிறகு நல்ல அமல்கள் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். ஆனால் எதற்கு எடுத்தாலும் நான் தான் முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் சில நபர்கள் நல்ல அமல்கள் செய்யவதில்லை. முஸ்லிம் என்று சொல்வதற்கு நமக்கு தகுதி இருக்கிறாதா? என்று பார்த்தால் கண்டிப்பாக கிடையாது.

முஸ்லிம் என்று சொல்ல கூடியவர்களின் சிலர் நல்ல அமல்களை விட்டுவிட்டு தீமையான செயல்களை செய்கிறோம். இவ்வாறு செய்வதற்கு இஸ்லாம் ஒரு போதும் அனுமதியளிக்காது. முஸ்லிம் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரனாக இருக்க வேண்டுமென்றால் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பிய பிறகு நல்ல அமல்கள் செய்ய வேண்டும் அல்லாஹ் கூறுகிறான்.

وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْنَ‏

அல்லாஹ்வை நோக்கி அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்? 

(அல்குர்ஆன்: 41:33)

நல்ல அமல் எவையென்றால் பிறருக்கு உதவுதலும் நல்ல அமல் தான். பிறருக்கு உதவுவதாக இருந்தால் நல்ல விஷயங்களில் உதவ வேண்டும். தீமையான காரியங்களுக்கு உதவக் கூடாது. நம்முடைய நண்பர் தர்மம் செய்வதற்கு நம்மிடத்தில் கடன் கேட்டால் உதவ வேண்டும். மாறாக பீடி, சிக்ரெட், புகையிலை, பாக்கு போன்ற தீமையான செயலுக்கு நம்மிடத்தில் கடன் கேட்டால் உதவக் கூடாது.

وَتَعَاوَنُوْا عَلَى الْبِرِّ وَالتَّقْوٰى‌ وَلَا تَعَاوَنُوْا عَلَى الْاِثْمِ وَالْعُدْوَانِ‌ وَاتَّقُوا اللّٰهَ ‌ؕ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‏

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

(அல்குர்ஆன்: 5:2)

நாம் பிறருக்கு உதவுவதாக இருந்தால் நன்மையான காரியங்களில் உதவ வேண்டும்.

மனிதனுக்கு மத்தியில் சமாதானம்  ஏற்படுத்துவது

இரு மனிதர்கள் மத்தியிலும், அல்லது இரு கூட்டத்தார்கள் மத்தியிலும் அல்லது கணவன் மனைவிக்கு மத்தியிலும் இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இரு நண்பர்களும் நல்ல விஷயத்தில் சண்டையிட்டு கொண்டால் அவர்கள் இருவரும் ஒன்று சோர்வதற்காக பொய் சொல்லி இருவரையும் ஒன்று சோர்க்கலாம். இரு நண்பர்களும் கெட்ட விஷயங்களுக்காக வேண்டி சண்டையிட்டு கொண்டால் அவர்களை ஒன்று சேர்க்கத் தேவையில்லை.

ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று பழமொழி அடிப்படையில் இரு நண்பர்கள் அல்லது இரு கூட்டத்தார்கள் சண்டையிட்டு கொண்டால் அவர்களை மேலும் பிரிப்பதற்கு வழிவகுக்காமல் அவர்களை ஒன்று சோர்ப்பதற்க்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

 وَاِنْ طَآٮِٕفَتٰنِ مِنَ الْمُؤْمِنِيْنَ اقْتَتَلُوْا فَاَصْلِحُوْا بَيْنَهُمَا‌ۚ

நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்!

(அல்குர்ஆன்: 49:9)

اِنَّمَا الْمُؤْمِنُوْنَ اِخْوَةٌ فَاَصْلِحُوْا بَيْنَ اَخَوَيْكُمْ‌ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ

நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.

(அல்குர்ஆன்: 49:10)

நாம் தேவையில்லாத விஷயங்களுக்கு பொய் சொல்கிறோம். ஆனால் இஸ்லாம் அனுமதித்த விஷயங்களுக்கு பொய் சொல்லாமல் விட்டுவிடுகிறோம். பிறரை இணைப்பதற்காக நாம் பொய் சொல்ல மாட்டோம். ஆனால் பிறரை பிரிப்பதற்காக அதாவது கணவன் மனைவியை பிரிப்பதற்காக நாம் பொய் சொல்கிறோம்.

 أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّ أُمَّهُ أُمَّ كُلْثُومٍ بِنْتَ عُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ، وَكَانَتْ مِنَ الْمُهَاجِرَاتِ الْأُوَلِ، اللَّاتِي بَايَعْنَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَخْبَرَتْهُ، أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ يَقُولُ
«لَيْسَ الْكَذَّابُ الَّذِي يُصْلِحُ بَيْنَ النَّاسِ، وَيَقُولُ خَيْرًا وَيَنْمِي خَيْرًا» قَالَ ابْنُ شِهَابٍ: وَلَمْ أَسْمَعْ يُرَخَّصُ فِي شَيْءٍ مِمَّا يَقُولُ النَّاسُ كَذِبٌ إِلَّا فِي ثَلَاثٍ: الْحَرْبُ، وَالْإِصْلَاحُ بَيْنَ النَّاسِ، وَحَدِيثُ الرَّجُلِ امْرَأَتَهُ وَحَدِيثُ الْمَرْأَةِ زَوْجَهَا

ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்த முதலாம் முஹாஜிர்களில் ஒருவரான என் தாயார் உம்முகுல்ஸும் பின்த் உக்பா பின் அபீமுஐத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பரஸ்பரம் பிணக்கு கொண்ட இரு தரப்பாரிடம் நல்லதைப் புனைந்து கூறி) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவர் பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொல்கிறார்; நன்மையையே எடுத்துரைக்கிறார்” என்று கூறுவதை நான் கேட்டேன்.

இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: மக்கள் பொய் என்று சொல்லக்கூடிய எதற்கும் (மார்க்கத்தில்) அனுமதியுள்ளதாக நான் கேள்விப்படவில்லை; மூன்று பொய்களைத் தவிர!

1. போர் (தந்திரத்திற்காகச் சொல்லப்படும் பொய்).

2. மக்களிடையே சமாதானத்தை உருவாக்குவதற்காகச் சொல்லப்படும் பொய்.

3. (குடும்ப ஒற்றுமைக்காக) கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய்.

நூல் : (முஸ்லிம்: 5079) 

தூதருக்கு கட்டுபடுதலும் நல்ல அமல் தான்
أَمَرَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعٍ، وَنَهَانَا عَنْ سَبْعٍ: أَمَرَنَا بِاتِّبَاعِ الجَنَائِزِ، وَعِيَادَةِ المَرِيضِ، وَإِجَابَةِ الدَّاعِي، وَنَصْرِ المَظْلُومِ، وَإِبْرَارِ القَسَمِ، وَرَدِّ السَّلاَمِ، وَتَشْمِيتِ العَاطِسِ، وَنَهَانَا عَنْ: آنِيَةِ الفِضَّةِ، وَخَاتَمِ الذَّهَبِ، وَالحَرِيرِ، وَالدِّيبَاجِ، وَالقَسِّيِّ، وَالإِسْتَبْرَقِ

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களை (ச் செய்யும்படி) கட்டளையிட்டு, ஏழு விஷயங்களை தடை செய்தார்கள். ஜனாசாவை பின் தொடரும்படியும், நோயாளியை நலம் விசாரிக்கும்படியும். விருந்துக்கு அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளும்படியும், அநீதி இழைக்கப்பட்ட வருக்கு உதவும்படியும், சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவும்படியும், சலாமுக்கு பதில் கூறும்படியும், தும்மியவ(ர் அல்ஹம்து லில்லாஹ் – எல்லாப் புகழும் இறைவனுக்கே! எனக் கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் – இறைவன் உங்களுக்கு கருணை புரிவானாக! என) மறுமொழி கூறும்படியும் கட்டளையிட்டார்கள்.

வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதிலிருந்தும், ஆண்கள் தங்க மோதிரம் அணிவதிலிருந்தும் (கலப்படமில்லாத) பட்டு, அலங்காரப் பட்டு, கஸ் எனும் பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, தடித்த பட்டு ஆகியவற்றை அணிவதிலிருந்தும் எங்களை தடுத்தார்கள்.

(நூல் : (புகாரி: 1239))

1 . ஜனாஸாவை பின்பற்றுதல்
مَنِ اتَّبَعَ جَنَازَةَ مُسْلِمٍ، إِيمَانًا وَاحْتِسَابًا، وَكَانَ مَعَهُ حَتَّى يُصَلَّى عَلَيْهَا وَيَفْرُغَ مِنْ دَفْنِهَا، فَإِنَّهُ يَرْجِعُ مِنَ الأَجْرِ بِقِيرَاطَيْنِ، كُلُّ قِيرَاطٍ مِثْلُ أُحُدٍ، وَمَنْ صَلَّى عَلَيْهَا ثُمَّ رَجَعَ قَبْلَ أَنْ تُدْفَنَ، فَإِنَّهُ يَرْجِعُ بِقِيرَاطٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் ஒருவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ஒரு முஸ்லிமுடைய சடலத்தைப் பின்தொடர்ந்து சென்று அதற்காக(ப் பிரார்த்தனைத்) தொழுகை நடத்தப்பட்டு, அது அடக்கம் செய்யப்படும் வரை அதனுடன் இருந்தாரோ நிச்சயமாக அவர் இரண்டு “கீராத்’ நன்மையுடன் திரும்புகிறார்.

ஒவ்வொரு கீராத்தும் உஹுத் மலை போன்றதாகும். எவர் அதற்காகப் (பிரார்த்தனைத்) தொழுகையை மட்டும் முடித்துவிட்டு அதனை அடக்கம் செய்யும் முன்னர் திரும்பிவிடுகிறாரோ அவர் ஒரு “கீராத்’ நன்மையுடன் திரும்புகிறார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 47)

2 . நோயாளியைச் சந்தித்தல்

நோயாளியைச் சந்தித்து உடல் நலம் விசாரிப்பது நபிவழி (சுன்னத்) ஆகும். விரும்பத் தகுந்த நற்செயலாகும். நோயாளியை சந்தித்து உடல்நலம் விசாரிப்பதால் நோயாளி ஆறுதலும் உற்சாகமும் அடைவார். இதுவே உடல் நலம் முன்னேற்றமடையக் காரணமாகலாம். அத்துடன் இருவரிடையே அன்பும் இணக்கமும் அதிகரிக்க வழிபிறக்கும்.

அதே நேரத்தில் நோயாளிக்குச் சங்கடம் ஏற்படுகின்ற அளவுக்கோ, அவருடைய குடும்பத்தாருக்குச் சிரமம் உண்டாகும் அளவுக்கோ அங்கே நீண்ட நேரம் அமர்ந்துவிடக் கூடாது. நோயாளியை சந்திக்குமாறு அல்லாஹ் கூறுகிறான். நோயாளியை சந்திக்கவில்லையென்றால் மறுமையில் அல்லாஹ் விசாரிப்பான்.

நோயாளியை விசாரிக்கவில்லையென்றால் மறுமையில் கேள்வி?
إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ: يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ، أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي عِنْدَهُ؟ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي، قَالَ: يَا رَبِّ وَكَيْفَ أُطْعِمُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِي فُلَانٌ، فَلَمْ تُطْعِمْهُ؟ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي، يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ، فَلَمْ تَسْقِنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: اسْتَسْقَاكَ عَبْدِي فُلَانٌ فَلَمْ تَسْقِهِ، أَمَا إِنَّكَ لَوْ سَقَيْتَهُ وَجَدْتَ ذَلِكَ عِنْدِي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), “ஆதமின் மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?” என்று கேட்பான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?” என்று கேட்பான்.

அதற்கு அல்லாஹ், “உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்” என்று கூறுவான்.

மேலும் அல்லாஹ், “ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை” என்பான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்! அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.

மேலும் “”ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை” என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்துகொள்! அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல் : (முஸ்லிம்: 5021)

நோயாளியை சந்திக்கும் போது கூற வேண்டியவை

நோயாளியை சந்திக்க சென்றால் அவர்களை பார்த்து விட்டு திரும்பிவிடக் கூடாது. அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நாம் செய்ய வேண்டும். அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்னவெனில் அவர்களுடைய உடல் குணமாகுவதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும். இவை தான் நாம் நோயாளிக்கு செய்ய வேண்டிய கடமைகள்.

دَخَلْتُ أَنَا وَثَابِتٌ عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ، فَقَالَ ثَابِتٌ: يَا أَبَا حَمْزَةَ، اشْتَكَيْتُ، فَقَالَ أَنَسٌ: أَلاَ أَرْقِيكَ بِرُقْيَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: بَلَى، قَالَ: «اللَّهُمَّ رَبَّ النَّاسِ، مُذْهِبَ البَاسِ، اشْفِ أَنْتَ الشَّافِي، لاَ شَافِيَ إِلَّا أَنْتَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا»

அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் ஸாபித் பின் அஸ்லம் அல்புனானீ (ரஹ்) அவர்களும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்றோம். ஸாபித் (ரஹ்) அவர்கள் “அபூஹம்ஸாவே! நான் நோய் வாய்ப்பட்டுள்ளேன்” என்று சொல்ல, அனஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதனால் ஓதிப்பார்த்தார்களோ அதனால் உங்களுக்கும் நான் ஓதிப் பார்க்கட்டுமா?” என்று கேட்டார்கள்.

ஸாபித் (ரஹ்), “சரி (அவ்வாறே ஓதிப்பாருங்கள்)” என்று சொல்ல, அனஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹும்ம ரப்பன்னாஸ்! முத்ஹிபல் பஃஸி, இஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ, லா ஷாஃபிய இல்லா அன்த்த, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்’ என்று கூறி ஓதிப் பார்த்தார்கள். (பொருள்: இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குபவனே! குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன்னைத் தவிர குணமளிப்பவர் வேறு எவருமில்லை. அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக.)

(நூல் : (புகாரி: 5742) )

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى أَعْرَابِيٍّ يَعُودُهُ، قَالَ: وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ عَلَى مَرِيضٍ يَعُودُهُ قَالَ: «لاَ بَأْسَ، طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ» فَقَالَ لَهُ: «لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ» قَالَ: قُلْتُ: طَهُورٌ؟ كَلَّا، بَلْ هِيَ حُمَّى تَفُورُ، أَوْ تَثُورُ، عَلَى شَيْخٍ كَبِيرٍ، تُزِيرُهُ القُبُورَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَنَعَمْ إِذًا»

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) ஒரு கிராமவாசியிடம், அவரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் நலம் விசாரிக்கச் சென்றால், “கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால் (இது உங்கள் பாவத்தை நீக்கி) உங்களைத் தூய்மைப்படுத்திவிடும்” என்று கூறுவார்கள். (தமது அந்த வழக்கப் படியே) நபி (ஸல்) அவர்கள் கிராமவாசியிடம், “கவலை வேண்டாம்.
இறைவன் நாடினால் உங்களைத் தூய்மைப்படுத்தும்” என்று சொன்னார்கள்.

(இதைக் கேட்ட) அந்தக் கிராமவாசி, “நான் தூய்மை பெற்று விடுவேனா? முடியாது. இதுவோ வயது முதிர்ந்த பெரியவரைப் பீடிக்கின்ற சூடாகிக் கொதிக்கின்ற காய்ச்சலாகும். அது அவரை மண்ணறைகளைச் சந்திக்க வைக்கும்” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் ஆம். (அப்படித் தான் நடக்கும்.)” என்று கூறினார்கள்.

(நூல் : (புகாரி: 3616))

நோயாளியை சந்தித்தல் சுவனத்தின் பழம் சாப்பிடுதல்
مَنْ عَادَ مَرِيضًا لَمْ يَزَلْ فِي خُرْفَةِ الْجَنَّةِ»، قِيلَ يَا رَسُولَ اللهِ وَمَا خُرْفَةُ الْجَنَّةِ؟ قَالَ: «جَنَاهَا»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நோயாளியை நலம் விசாரிக்கச் சென்றவர் சொர்க்கத்தின் “குர்ஃபா’வில் இருக்கிறார்” என்று கூறினார்கள். அப்போது “”அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கத்தின் “குர்ஃபா” என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அதன் கனிகளைப் பறிப்பதாகும்” என்று பதிலளித்தார்கள்.

(நூல் : (முஸ்லிம்: 5020))

3 . விருந்துக்கு செல்லுதல்

இஸ்லாமிய சகோதர்கள் விருந்திற்காக அழைத்தால் அந்த விருந்தில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். விருந்தின் அழைப்புகளை நாம் மறுக்க கூடாது. இஸ்லாம் அனுமதியளித்துள்ள அனைத்து விருந்துகளுக்கும் அழைக்கப்பட்டால் நாம் கலந்துக்கொள்ள வேண்டும்.

மார்க்கத்திற்கு முரணான விருந்துகளில் கலந்துக் கொள்ள கூடாது. திருமணத்தில் பெண் வீட்டார் விருந்து, மவ்லித் விருந்து, இறந்தவருக்கு பாத்திஹா ஓதி தரப்படும் விருந்துக்கு அழைத்தால் நாம் கலந்துக் கொள்ள கூடாது. ஹலாலான முறையில் அனுமதிக்கப்பட்ட விருந்தில் நாம் கலந்துக் கொள்ளலாம்.

அடுத்து, ஒருவர் ஆவலோடு விருந்துக்கு அழைக்க தகுந்த காரணமேயின்றி அதை ஏற்க மறுத்தால் அழைத்தவரின் மனம் புண்படும். இது ஒருபுறம், மறுபுறம் தகுந்த காரணமின்றி மறுப்பவரின் அகந்தையும் வெளிப்படுகிறது. பகைமை ஏற்படும். அது தொடரவும் வாய்ப்புண்டு. மேலும் பிரிந்தவர்கள் ஒன்று சேர இதைப் போன்ற விசேஷங்கள் ஒரு வாய்ப்பாக இருக்க, இந்த வாய்ப்பினையும் தவறவிட்டுவிட்டால் உறவைகளைப் புதுப்பித்துக் கொள்ள முடியாமலேயே போய் விடும். உறவுகளை இணைந்து வாழுமாறு இஸ்லாம் கூறுகிறது.

விருந்துக்கு அழைத்தால் போக வேண்டும்
إِذَا دَعَا أَحَدُكُمْ أَخَاهُ، فَلْيُجِبْ عُرْسًا كَانَ أَوْ نَحْوَهُ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் சகோதரரை விருந்துக்கு அழைத்தால், அதை ஏற்று அவர் செல்லட்டும். அது மணவிருந்தாக இருந்தாலும் சரி, மற்ற விருந்தாக இருந்தாலும் சரி.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : (முஸ்லிம்: 2809) 

إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى الوَلِيمَةِ فَلْيَأْتِهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் வலீமா (மண) விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதனை ஏற்றுச் செல்லட்டும்!

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : (புகாரி: 5173) 

விருந்தை மறுத்தால் தூதருக்கு மாறு செய்ததாக ஆகும்

இஸ்லாம் அனுமதிக்கப்பட்ட விருந்துகளில் அழைக்கப்பட்டால் கட்டாயமாக கலந்துக் கொள்ள வேண்டும். நாம் கலந்துகொள்ளவில்லையென்றால் நபி (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்ததாகும். நபி (ஸல்) அவர்களுக்கு செய்வதென்றால் நபி வழியை பின்பற்றாதவர் ஆவார்.

شَرُّ الطَّعَامِ طَعَامُ الوَلِيمَةِ، يُدْعَى لَهَا الأَغْنِيَاءُ وَيُتْرَكُ الفُقَرَاءُ، وَمَنْ تَرَكَ الدَّعْوَةَ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஏழைகளை விட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் வலீமா மணவிருந்து உணவே, உணவுகளில் மிகத் தீயதாகும். விருந்தழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவராவார்.

நூல் : (புகாரி: 5177) 

நோன்பாளியாகயிருந்தால் துஆ செய்ய வேண்டும்

நாம் சுன்னத்தான நோன்பை வைத்திருக்கும் போது இஸ்லாம் அனுமதிக்கப்பட்ட விருந்துக்கு அழைக்கப்பட்டால் சுன்னத்தான நோன்பை விட்டுவிட்டு விருந்துக்கு செல்லலாம். நோன்பை விடுவதற்கு விருப்பமில்லையென்றால் விருந்துக்கு அழைத்தவருக்காக அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும்.

إِذَا دُعِيَ أَحَدُكُمْ، فَلْيُجِبْ، فَإِنْ كَانَ صَائِمًا، فَلْيُصَلِّ، وَإِنْ كَانَ مُفْطِرًا، فَلْيَطْعَمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (விருந்துக்கு) அழைக்கப்பெற்றால் ஏற்றுக்கொள்ளட்டும். அவர் நோன்பு நோற்றிருந்தால் (அழைத்தவருக்காகப்) பிரார்த்திக்கட்டும்; நோன்பு நோற்காமருந்தால் உண்ணட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : (முஸ்லிம்: 2815) 

விருந்தயளித்தவருக்கு துஆ செய்தல்

நாம் பல விருந்துகளில் கலந்துக் கொள்கிறோம். ஆனால் நமக்கு விருந்து வழங்கியவருக்கு எப்போதாவது துஆ செய்து இருப்போமா என்று பார்த்தால் ஒருநாள் கூட துஆ செய்துயிருக்க மாட்டோம். ஆனால் நம்மால் முடிந்த அளவு அதாவது மூக்கு பிடிக்க சாப்பிட்டுவிட்டு நம்மால் நடக்க முடியாமல் நடந்து வருவோம். இப்படி இருக்காமல் நமக்கு விருந்து அளித்தவருக்கு துஆ செய்ய வேண்டும்.

نَزَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَبِي، قَالَ: فَقَرَّبْنَا إِلَيْهِ طَعَامًا وَوَطْبَةً، فَأَكَلَ مِنْهَا، ثُمَّ أُتِيَ بِتَمْرٍ فَكَانَ يَأْكُلُهُ وَيُلْقِي النَّوَى بَيْنَ إِصْبَعَيْهِ، وَيَجْمَعُ السَّبَّابَةَ وَالْوُسْطَى – قَالَ شُعْبَةُ: هُوَ ظَنِّي وَهُوَ فِيهِ إِنْ شَاءَ اللهُ إِلْقَاءُ النَّوَى بَيْنَ الْإِصْبَعَيْنِ – ثُمَّ أُتِيَ بِشَرَابٍ فَشَرِبَهُ، ثُمَّ نَاوَلَهُ الَّذِي عَنْ يَمِينِهِ، قَالَ: فَقَالَ أَبِي: وَأَخَذَ بِلِجَامِ دَابَّتِهِ، ادْعُ اللهَ لَنَا، فَقَالَ: «اللهُمَّ، بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ، وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ»

அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தை (புஸ்ர் பின் அபீபுஸ்ர் (ரலி) அவர்களிடம் (விருந்தாளியாகத்) தங்கினார்கள். அப்போது அவர்களுக்கு அருகே உணவும் (பேரீச்சம் பழம், பாலாடை, நெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட “வத்பா’ எனும்) ஒரு வகைப் பலகாரமும் வைத்தோம். அதிலிருந்து அவர்கள் உண்டார்கள். பிறகு பேரீச்சம் பழங்கள் கொண்டுவரப்பட்டன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, அவற்றின் கொட்டைகளை (பாத்திரத்தினுள்ளே போடாமல்) தம்மிரு விரல்களுக்கிடையே வைத்திருந்(துவிட்டு பிறகு வீசியெறிந்)தார்கள். இதைக் கூறியபோது அறிவிப்பாளர் தம் ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் இணைத்து சைகை செய்கிறார். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா (ரஹ்) அவர்கள் “”இன்ஷா அல்லாஹ், “இரு விரல்களுக்கிடையே கொட்டையை வைத்திருந்தார்கள்’ என்பது ஹதீஸிலேயே உள்ளதாகும் என்பதே என் எண்ணமாகும்” என்று (ஐயத்துடன்) கூறினார்கள்.

பிறகு ஒரு பானம் கொண்டு வரப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதையும் அருந்தினார்கள். பிறகு மீதியிருந்ததைத் தமக்கு வலப் பக்கத்திலிருந்தவருக்குக் கொடுத்தார்கள். பிறகு (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்படத் தயாரானபோது) என் தந்தை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனத்தின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு, “எங்களுக்காகப் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இறைவா! நீ இவர்களுக்கு வழங்கிய உணவில் அருள்வளம் (பரக்கத்) புரிவாயாக! இவர்களை மன்னித்து, இவர்களுக்குக் கருணை புரிவாயாக!” (அல்லாஹும்ம, பாரிக் லஹும் ஃபீமா ரஸக்த்தஹும், வஃக்ஃபிர் லஹும், வர்ஹம்ஹும்) எனப் பிரார்த்தித்தார்கள்.

(நூல் : (முஸ்லிம்: 4149) )

4 . அநீதி இழைக்கப்பட்டவனுக்கு உதவுதல்

நம்முடைய சகோதர்கள் யாராவது கஷ்டப்பட்டால் அல்லது அவருக்கு யாராவது அநீதி இழைத்தியிருந்தால் அந்த நேரத்தில் அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவ வேண்டும். அல்லது நம்முடைய நண்பன் பிறருக்கு தீங்கு இழைக்கிறான் என்றால் அவனை பிறருக்கு அநீதி இழைக்காமல் அவனை தடுக்க வேண்டும். இதுவே அவனுக்கு செய்கின்ற உதவியாகும்.

தீமையை விட்டும் தடுப்பது
«انْصُرْ أَخَاكَ ظَالِمًا أَوْ مَظْلُومًا» فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَنْصُرُهُ إِذَا كَانَ مَظْلُومًا، أَفَرَأَيْتَ إِذَا كَانَ ظَالِمًا كَيْفَ أَنْصُرُهُ؟ قَالَ: «تَحْجُزُهُ، أَوْ تَمْنَعُهُ، مِنَ الظُّلْمِ فَإِنَّ ذَلِكَ نَصْرُهُ»

அனஸ் பின் மாலிக் அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்” என்று சொன்னார்கள்.

அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்திற்குள்ளானவனுக்கு நான் உதவி செய்வேன். (அது சரிதான்.) அக்கிரமக்காரனுக்கு எப்படி நான் உதவி செய்வேன்? கூறுங்கள்!” என்றார். நபி (ஸல்) அவர்கள், “அவனை அக்கிரமம் செய்ய விடாமல் நீ தடுப்பாயாக! இதுவே நீ அக்கிரமக்காரனுக்குச் செய்யும் உதவியாகும்” என்றார்கள்.

நூல் : (புகாரி: 6952) 

நம்முடைய நண்பனை தீங்கு செய்யாமல் தடுத்தோம் என்றால் அவர் தீமையில் ஈடுபடாத வரை நமக்கு நன்மை கிடைத்துக் கொண்டே இருக்கும்.

جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي أُبْدِعَ بِي فَاحْمِلْنِي، فَقَالَ: «مَا عِنْدِي»، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ، أَنَا أَدُلُّهُ عَلَى مَنْ يَحْمِلُهُ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ»

அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “என் வாகனப் பிராணி மடிந்துவிட்டது. எனவே, நான் ஏறிச்செல்வதற்கு எனக்கு வாகனப் பிராணி தாருங்கள்” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “என்னிடம் (வாகனப் பிராணி) இல்லை” என்று கூறினார்கள்.

அப்போது மற்றொரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! இவரை வாகனத்தில் ஏற்றியனுப்பும் ஒருவரை நான் இவருக்கு அறிவித்துக் கொடுக்கிறேன்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்” என்று கூறினார்கள்.

நூல் : (முஸ்லிம்: 3846) 

அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி செய்கிறான்

கல்வி, பொருளாதரம், ஒத்துழைப்பு, கஷ்டபடுவர்களுக்கு, அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு, நல்ல ஆலோசனை உள்ளிட்ட பிறருக்குச் செய்யும் போது நமக்கு அல்லாஹ் உதவி செய்கிறான். ஒருவரது துன்பத்தை நாம் துடைத்தால் நம் துயரங்களை அல்லாஹ் துடைக்கிறான்.

مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا، نَفَّسَ اللهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ، يَسَّرَ اللهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا، سَتَرَهُ اللهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَاللهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ، وَمَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا، سَهَّلَ اللهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ، وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللهِ، يَتْلُونَ كِتَابَ اللهِ، وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ، إِلَّا نَزَلَتْ عَلَيْهِمِ السَّكِينَةُ، وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَحَفَّتْهُمُ الْمَلَائِكَةُ، وَذَكَرَهُمُ اللهُ فِيمَنْ عِنْدَهُ، وَمَنْ بَطَّأَ بِهِ عَمَلُهُ، لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் இம்மையில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ அவருடைய மறுமைத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அகற்றுகிறான். யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி செய்கிறான்.

யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் மறைக்கிறான். அடியான் தன் சகோதரன் ஒருவனுக்கு உதவி செய்துக் கொண்டிருக்கும்வரை அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்துக் கொண்டிருக்கிறான். யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான்.

மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக் கொள்கிறது.

அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான். அறச் செயல்களில் பின்தங்கிவிட்ட ஒருவரைக் குலச் சிறப்பு முன்னுக்குக் கொண்டு வந்துவிடுவதில்லை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : (முஸ்லிம்: 5231) 

5 . சத்தியத்தை நிறைவேற்றுதல்

மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியத்தைச் செய்வதாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால் அதைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் (அல்குர்ஆன்: 5:89) வசனத்தில் கூறப்படும் பரிகாரத்தைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். சிலர் அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்யும் எண்ணமின்றி வாய் தவறி “அல்லாஹ்வின் மீது சத்தியமாக” எனக் கூறி விடுவதுண்டு. சத்தியம் செய்யும் எண்ணமில்லாமல் அந்தச் சொல்லைக் கூறியதற்காக அல்லாஹ் தண்டிக்க மாட்டான்.

பிறரை ஏமாற்றுவதற்காகவோ, தம்மைக் காக்கும் கேடயமாகவோ “அல்லாஹ்வின் மீது சத்தியமாக” என்று கூறுவதை இவ்வசனம் அனுமதிப்பதாகக் கருதக் கூடாது. ஏனெனில் இவ்வாறு செய்வது குற்றம் என வேறு இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

(பார்க்க: அல்குர்ஆன்: 2:224, 2:225, 3:77, 16:91, 16:92, 16:94, 58:16, 63:2

வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் ஏமாற்றவோ, தங்களுக்கு ஏதேனும் சங்கடங்கள் வருவதைத் தவிர்ப்பதற்காகவோ அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்துவோர் மேற்கண்ட வசனங்களைப் பார்த்து தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தி அவனை சாட்சியாக்கிப் பேசும் போது பொய் சொல்வதும், அல்லாஹ்வின் பெயரால் அளித்த வாக்கை நிறைவேற்றாமல் இருப்பதும் கடும் குற்றமாகும்.

சத்தியம் செய்தால் அல்லாஹ்வின் மீது தான் செய்ய வேண்டும்
مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ أَشْرَكَ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ் அல்லாதவரின் மீது சத்தியம் செய்கிறாறே அவர் இணைகற்பித்து விட்டார். 

இதை இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல் : (அபூதாவூத்: 3251) (2829)

مَنْ كَانَ حَالِفًا، فَلْيَحْلِفْ بِاللَّهِ أَوْ لِيَصْمُتْ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் சத்தியம் செய்கின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி (மவுனமாக) இருக்கட்டும்.

இதை அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல் : (புகாரி: 2679) 

சத்தியத்தை முறிக்க கூடாது (பரிகாரம்)
لَا يُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِىْۤ اَيْمَانِكُمْ وَلٰـكِنْ يُّؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُّمُ الْاَيْمَانَ‌ ۚ فَكَفَّارَتُهٗۤ اِطْعَامُ عَشَرَةِ مَسٰكِيْنَ مِنْ اَوْسَطِ مَا تُطْعِمُوْنَ اَهْلِيْكُمْ اَوْ كِسْوَتُهُمْ اَوْ تَحْرِيْرُ رَقَبَةٍ‌ ؕ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ‌ ؕ ذٰ لِكَ كَفَّارَةُ اَيْمَانِكُمْ اِذَا حَلَفْتُمْ‌ ؕ وَاحْفَظُوْۤا اَيْمَانَكُمْ‌ ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே.

(இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே. உங்கள் சத்தியங்களைப் பேணிக் கொள்ளுங்கள்! நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ் இவ்வாறே தனது வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்.

(அல்குர்ஆன்: 5:89)

சத்தியத்தை செய்த பிறகு அதை விட சிறந்ததை கண்டால் சத்தியத்தை முறிக்கலாம்

அல்லாஹ்வை முன்னிலைப்படுத்தி செய்யப்படும் சத்தியம் இரு வகைப்படும்.

(1) வீண் சத்தியம், மனதில் எதையும் உறுதியாக எடுத்துக்கொள்ளாமல் அல்லாஹ்வின் மீதானையாக அப்படிதான் எனப் பேச்சு வழக்கில் கூறுவது. இதற்கு எந்த தடையும் இல்லை.

(2) மன உறுதியுடன் செய்யப்படும் சத்தியம். இவ்வாறு சத்தியம் செய்துவிட்டால் அதைக் காப்பாற்ற வேண்டும்.

சத்தியத்தை காப்பாற்றத் தவறி அதை முறித்து விட்டால் அதற்கான பரிகாரம் செய்திட வேண்டும்.. ஆனால் இன்னாரிடம் பேச மாட்டேன், இன்னாருக்கு உதவி புரிய மாட்டேன் , இன்னார் பொருளை சாப்பிட மாட்டேன் என்பதை போன்ற விரும்பத்தகாத சத்தியங்களை ஒருவர் செய்துவிட்டால் அந்த சத்தியத்தைக் கைவிட்டுவிட்டு சத்திய முறிவுக்கான பரிகாரம் செய்திட வேண்டும். ஏனெனில் நற்செயல் ஒன்றை அல்லது மார்க்கத்தில் அனுமதிக்கப்பெற்ற ஒன்றைச் சத்தியத்தின் வாயிலாகத் தமக்குத் தாமே தடை விதித்துக்கொள்ள எவருக்கும் அதிகாரம் கிடையாது.

«يَا عَبْدَ الرَّحْمَنِ بْنَ سَمُرَةَ، لاَ تَسْأَلِ الإِمَارَةَ، فَإِنَّكَ إِنْ أُوتِيتَهَا عَنْ مَسْأَلَةٍ وُكِلْتَ إِلَيْهَا، وَإِنْ أُوتِيتَهَا مِنْ غَيْرِ مَسْأَلَةٍ أُعِنْتَ عَلَيْهَا ، وَإِذَا حَلَفْتَ عَلَى يَمِينٍ، فَرَأَيْتَ غَيْرَهَا خَيْرًا مِنْهَا، فَكَفِّرْ عَنْ يَمِينِكَ وَأْتِ الَّذِي هُوَ خَيْرٌ»

அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), “அப்துர் ரஹ்மான் பின் சமுராவே! ஆட்சிப் பொறுப்பை நீயாக (ஆசைப்பட்டு)க் கேட்காதே! ஏனெனில், (நீ) கேட்டதால் அது உனக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய். (இறைவனின் உதவி கிட்டாது.) கேட்காமல் அது உனக்கு அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உனக்கு (இறைவனின்) உதவி அளிக்கப்படும்.

நீ ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீ கருதினால் உனது சத்தியத்(தை முறித்துவிட்டு முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்துவிடு. சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்து” என்று சொன்னார்கள்.

நூல் : (புகாரி: 6622) 

أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَهْطٍ مِنَ الأَشْعَرِيِّينَ أَسْتَحْمِلُهُ، فَقَالَ: «وَاللَّهِ لاَ أَحْمِلُكُمْ، وَمَا عِنْدِي مَا أَحْمِلُكُمْ عَلَيْهِ» قَالَ: ثُمَّ لَبِثْنَا مَا شَاءَ اللَّهُ أَنْ نَلْبَثَ، ثُمَّ أُتِيَ بِثَلاَثِ ذَوْدٍ غُرِّ الذُّرَى، فَحَمَلَنَا عَلَيْهَا، فَلَمَّا انْطَلَقْنَا قُلْنَا، أَوْ قَالَ بَعْضُنَا: وَاللَّهِ لاَ يُبَارَكُ لَنَا، أَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَسْتَحْمِلُهُ فَحَلَفَ أَنْ لاَ يَحْمِلَنَا، ثُمَّ حَمَلَنَا، فَارْجِعُوا بِنَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنُذَكِّرُهُ، فَأَتَيْنَاهُ فَقَالَ: ” مَا أَنَا حَمَلْتُكُمْ، بَلِ اللَّهُ حَمَلَكُمْ، وَإِنِّي وَاللَّهِ – إِنْ شَاءَ اللَّهُ – لاَ أَحْلِفُ عَلَى يَمِينٍ، فَأَرَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا، إِلَّا كَفَّرْتُ عَنْ يَمِينِي وَأَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ – أَوْ: أَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ وَكَفَّرْتُ عَنْ يَمِينِي

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (என்) அஷ்அரீ குலத்தாரில் ஒரு குழுவினருடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, (எங்களையும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி கேட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றியனுப்ப முடியாது. ஏனெனில், உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் (தற்போது கைவசம்) இல்லை” என்று சொன்னார்கள்.

பிறகு அல்லாஹ் நாடிய நேரம் வரை நாங்கள் (அங்கேயே) இருந்தோம். பின்பு நபியவர்களிடம் வெள்ளைத் திமில்கள் கொண்ட மூன்று ஒட்டக மந்தைகள் கொண்டுவரப்பட்டன. ஆகவே, அவற்றின் மீது எங்களை ஏற்றி அனுப்பினார்கள். நாங்கள் (அங்கிருந்து விடைபெற்றுச்) சென்றுகொண்டிருந்தபோது “நாங்கள் எங்களுக்குள்” அல்லது “எங்களில் சிலர்”, “அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் தரமாட்டேனென்று சத்தியம் செய்த பிறகு இவற்றை நாம் வாங்கிச் சென்றால் இவற்றில் நமக்கு வளம் (பரக்கத்) ஏற்படாது.

நபி (ஸல்) அவர்களிடம் நம்மைச் சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி கேட்டோம். அவ்வாறு நம்மை ஏற்றியனுப்பத் தம்மால் இயலாது என நபியவர்கள் சத்தியம் செய்து கூறினார்கள். பிறகு, நாம் ஏறிச்செல்ல ஒட்டகங்களை வழங்கினார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்களிடம் நாம் மீண்டும் சென்று (அவர்கள் செய்த சத்தியத்தை) அவர்களுக்கு நினைவுபடுத்துவோம்” என்று சொல்லிக் கொண்டோம்.

அவ்வாறே நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். (அவர்கள் செய்த சத்தியத்தை நினைவுபடுத்தினோம்.) அப்போது அவர்கள், “நான் உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்ப வில்லை, மாறாக, அல்லாஹ்தான் உங்களை (அதில்) ஏற்றி அனுப்பினான்.

அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், இனிமேல் நான் ஏதேனும் ஒரு சத்தியம் செய்து, பிறகு அதுவல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் “சத்திய முறிவுக்காகப் பரிகாரம் செய்துவிட்டு, அந்தச் சிறந்ததையே செய்வேன்’ அல்லது “சிறந்ததையே செய்துவிட்டு, சத்திய முறிவுக்காகப் பரிகாரம் செய்துவிடுவேன்’ என்று சொன்னார்கள்.

நூல் : (புகாரி: 6623) 

ஒருவர் தம் குடும்பத்தார் தொடர்பாக ஒரு சத்தியம் செய்தார். அதனால் குடும்பத்தார் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் உடனே அவர் அந்த சத்தியத்தை முறித்து விட்டு சத்திய முறிவுக்கான பரிகாரத்தைச் செய்திட வேண்டும். அதை விடுத்து சத்தியத்தை முறிப்பது பாவமாயிற்றே என்று தயங்கக் கூடாது. ஏனெனில் இத்தகைய சத்தியத்தை முறிப்பதை விட இந்தச் சத்தியத்தில் பிடிவாதம் காட்டுவதான் பெரிய குற்றமாகும்.

وَاللَّهِ، لَأَنْ يَلِجَّ أَحَدُكُمْ بِيَمِينِهِ فِي أَهْلِهِ، آثَمُ لَهُ عِنْدَ اللَّهِ مِنْ أَنْ يُعْطِيَ كَفَّارَتَهُ الَّتِي افْتَرَضَ اللَّهُ عَلَيْهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் ஒருவர் தம் குடும்பத்தார் (துன்புறும் வகையில் அவர்கள்) தொடர்பாகத் தாம் செய்த சத்தியத்தில் பிடிவாதமாக இருப்பது, (அந்தச் சத்தியத்தை முறித்துவிட்டு) அதற்காக அவர் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ள பரிகாரத்தைச் செய்வதைவிடப் பெரும் பாவமாகும்.

நூல் : (புகாரி: 6625) 

6 . ஸலாத்திற்கு பதில் கூறுதல்

இந்த ஸலாம் இஸ்லாத்தில் சிறந்த செயலாக திகழ்கிறது. முஸ்லிம்களுக்கு மட்டுமில்லாமல், இறைமறுப்பாளருக்கும் கூறவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. தெரிந்தவருக்கும், தெரியாதவருக்கும் ஸலாம் சொல்ல வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தெரிந்தவர் என்றால் முஸ்லிம் அல்லது முஸ்லிம் அல்லாதவரையும் குறிக்கும். தெரியாதவர் என்றால் முஸ்லிம் அல்லது முஸ்லிம் அல்லாதவரையும் குறிக்கும். இதன் அடிப்படையில் ஒட்டுமொத்த மக்களுக்கும் ஸலாம் சொல்லலாம். ஆனால் முஸ்லிமான மனிதருக்கு கட்டாயமாக ஸலாம் சொல்ல வேண்டும்.

இஸ்லாத்தின் சிறந்த செயல்
تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம், “இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது’ எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பசித்தோருக்கு நீர் உணவளிப்பதும், நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் (முகமன்) கூறுவதுமாகும்” என்று பதிலளித்தார்கள்.

நூல் : (புகாரி: 12) 

சகோதரரை சந்தித்தால் ஸலாம் கூறுதல்

எல்லாநேரத்திலும் ஸலாம் சொல்லலாம். ஒரு நண்பனை சந்திக்கும் போது ஸலாம் சொல்கிறோம். பிறகு 5 நிமிடம் கழித்து அதே நண்பரை சந்தித்தால் மறுபடியும் ஸலாம் சொல்ல வேண்டும்.

إِذَا لَقِيَ أَحَدُكُمْ أَخَاهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ، فَإِنْ حَالَتْ بَيْنَهُمَا شَجَرَةٌ أَوْ جِدَارٌ، أَوْ حَجَرٌ ثُمَّ لَقِيَهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ أَيْضًا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தன்னுடைய சகோதரரை சந்தித்தால் அவருக்கு ஸலாம் செல்லட்டும். அவர்கள் இருவருக்கும் மத்தியில் ஒரு மரமோ, அல்லது சுவரோ, அல்லது கல்லோ குறிக்கிட்டு பிறகு அவரைச் சந்தித்தால் மீண்டும் அவருக்கு ஸலாம் கூறட்டும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல் : (அபூதாவூத்: 5200) (4524) 

ஸலாத்தை முதலில் ஆரம்பிபவர் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்

இருவர் சந்தித்துக்கொள்ளும் போது யார் முதலில் சலாம் கூறுவது என யோசித்துக் கொண்டிராமல், முதலில் கூறுகின்றவரே சிறந்தவர் ஆவார். ஒருவர் சலாம் சொன்ன பிறகு அதற்கு பதில் சலாம் கூறுவது மற்றவரின் பொறுப்பாகி விடும். ஆகவே முதலில் ஸலாம் சொல்வது நபி வழியாகும்.

لاَ يَحِلُّ لِرَجُلٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ، يَلْتَقِيَانِ: فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلاَمِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) இவர்கள் இருவரில் சிறந்தவர், யார் சலாமை (முகமனை) முதலில் தொடங்குகிறாரோ அவர்தாம்.

அறிவிப்பாளர் : அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள்.
நூல் : (புகாரி: 6077) 

إِنَّ أَوْلَى النَّاسِ بِاللَّهِ مَنْ بَدَأَهُمْ بِالسَّلَامِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”மக்களில் அல்லாஹ்விடத்தில் மிகவும் நெருக்கத்திற்குரியவர் அவர்களில் முதலில் ஸலாம் கூறுபவரே ஆவார்”

அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி)
நூல் : (அபூதாவூத்: 5197) (4522)

நன்மைகள்
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ، فَرَدَّ عَلَيْهِ السَّلَامَ، ثُمَّ جَلَسَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَشْرٌ» ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، فَرَدَّ عَلَيْهِ، فَجَلَسَ، فَقَالَ: «عِشْرُونَ» ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، فَرَدَّ عَلَيْهِ، فَجَلَسَ، فَقَالَ: «ثَلَاثُونَ»

இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
”நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ”அஸ்ஸலாமு அலைக்கும் ” என்று கூறினார். நபியவர்கள் அவருக்கு பதில் ஸலாம் கூறினார்கள். பின்னர் அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்) அவர்கள் (இவருக்கு) பத்து (நன்மைகள்) என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் கூறியவுடன் அவர் அமர்ந்தார். நபியவர்கள் ”(இவருக்கு) இருபது (நன்மைகள்)” என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு” என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் பதில் கூறினார்கள். பிறகு அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்) அவர்கள் ”(இவருக்கு) முப்பது (நன்மைகள்)” என்று கூறினார்கள்.”

நூல் : (அபூதாவூத்: 5195) (4521)

சுவனம் செல்ல முடியும்
لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا، أَوَلَا أَدُلُّكُمْ عَلَى شَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ؟ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் இறைநம்பிக்கை (ஈமான்) கொள்ளாத வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளர்களாக ஆக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள்.

நூல் : (முஸ்லிம்: 93) 

ஸலாத்தின் ஒழுங்குகள்

இருவர் தனியாகச் சந்திக்கும் போது யார் வேண்டுமானாலும், முதலில் ஸலாம் கூறலாம். முதலில் சலாமைக் தொடங்குபவரே சிறந்தவர் ஆவார். இரு குழுவினர் சந்தித்துக்கொண்டால் அனைவரும் ஒரே நேரத்தில் சலாம் சொல்லி குரலெழுப்புவது உசிதமாக இராது. எனவே எந்தக் குழுவினர் முதலில் சலாம் கூற வேண்டும் என்பதற்கு நபி (ஸல்)  அவர்கள் ஒரு வழிமுறையைக் காட்டினார்கள். எண்ணிக்கையில் குறைவாக உள்ள குழுவினர் அதிக உறுப்பினர் கொண்ட குழுவினருக்கு முதலில் சலாம் கூறவேண்டும்.

வயதில் சிறியவர் பெரியவருக்கு முதலில் சலாம் கூற வேண்டும். உட்கார்ந்திருப்பவருக்கு அவ்வழியே நடந்து செல்பவர் முதலில் சலாம் கூறவேண்டும். வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கு முதலில் சலாம் கூறவேண்டும். இதுவெல்லாம் ஒழுக்கத்தையும், பணிவையும் எடுத்துக் காட்டுகிறது.

يُسَلِّمُ الصَّغِيرُ عَلَى الكَبِيرِ، وَالمَارُّ عَلَى القَاعِدِ، وَالقَلِيلُ عَلَى الكَثِيرِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங்குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : (புகாரி: 6231) 

«أَنَّهُ مَرَّ عَلَى صِبْيَانٍ فَسَلَّمَ عَلَيْهِمْ» وَقَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ»

ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்து வந்தார்கள்” என்று கூறினார்கள்.

(நூல் : (புகாரி: 6247))

பெண்களுக்கு ஸலாம் கூறுதல்

ஆண்களுக்கு சலாம் கூறுவதைப் போன்று பெண்களுக்கு சலாம் கூறக் கூடாது. நாம் ஆண்களுக்கு சலாம் கூறுவதாக இருந்தால் வாயால் மொழிந்து விடுவோம். ஆனால் பெண்களுக்கு சலாம் கூறும் போது வாயால் மொழிந்து தனது கைகளை அசைக்க வேண்டும். இவை தான் நபி வழியாகும்.

كَانَتْ فِينَا امْرَأَةٌ تَجْعَلُ عَلَى أَرْبِعَاءَ فِي مَزْرَعَةٍ لَهَا سِلْقًا، فَكَانَتْ إِذَا كَانَ يَوْمُ جُمُعَةٍ تَنْزِعُ أُصُولَ السِّلْقِ، فَتَجْعَلُهُ فِي قِدْرٍ، ثُمَّ تَجْعَلُ عَلَيْهِ قَبْضَةً مِنْ شَعِيرٍ تَطْحَنُهَا، فَتَكُونُ أُصُولُ السِّلْقِ عَرْقَهُ، وَكُنَّا نَنْصَرِفُ مِنْ صَلاَةِ الجُمُعَةِ، فَنُسَلِّمُ عَلَيْهَا، فَتُقَرِّبُ ذَلِكَ الطَّعَامَ إِلَيْنَا، فَنَلْعَقُهُ وَكُنَّا نَتَمَنَّى يَوْمَ الجُمُعَةِ لِطَعَامِهَا ذَلِكَ

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மதீனாவில்) எங்களிடையே (வயது முதிர்ந்த) பெண்மணி ஒருவர் இருந்தார். அவர் தமது தோட்டத்தின் வாய்க்கால் வரப்பில் தண்டுக் கீரைச் செடியை பயிர் செய்வார். வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அவர் அந்தக் கீரையின் தண்டுகளைப் பிடுங்கி வந்து ஒரு பாத்திரத்தில் போடுவார். அதில் ஒரு கையளவு வாற்கோதுமையை போட்டுக் கடைவார்.

அந்தக் கீரைத் தண்டுதான் (எங்கள்) உணவில் மாமிசம் போன்று அமையும். நாங்கள் ஜுமுஆத்தொழுகை தொழுதுவிட்டுத் திரும்பி வந்து அவருக்கு சலாம் சொல்வோம். அந்த உணவை அவர் எங்களுக்குப் பரிமாறுவார். அதை நாங்கள் ருசித்துச் சாப்பிடுவோம். அவருடைய அந்த உணவுக்காக நாங்கள் வெள்ளிக்கிழமையை (அது எப்போது வருமென) எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்.

நூல் : (புகாரி: 938) 

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ فِي المَسْجِدِ يَوْمًا وَعُصْبَةٌ مِنَ النِّسَاءِ قُعُودٌ، فَأَلْوَى بِيَدِهِ بِالتَّسْلِيمِ

பெண்களில் சிறுகூட்டத்தினர் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களுக்கு ஸலாம் கூறி தன்னுடைய கைகளை அசைத்தார்கள்.

அறிவிப்பவர் : அஸ்மா பின்த் யஸீத் (ரலி)
நூல் : (திர்மிதீ: 2697) (2621)

யூதர்கள் கிறிஸ்தவர் கூறியதை போன்று கூறகூடாது

யூதர்கள் கிருஸ்தவர்கள் ஸலாம் கூறுவதைப் போன்று நாம் சொல்ல கூடாது. அவர்கள் வாயால் மொழியாமல் தனது கைகளையும், தலைகளையும் அசைப்பார்கள். ஆனால் இப்படி செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். நாம் அப்படி சொல்வதாக இருந்தால் தனது வாயால் மொழிய வேண்டும். பெண்களுக்கு ஸலாம் கூறுவதாக இருந்தால் ஸலாத்தை வாயால் மொழிந்து தனது கைகளை அசைக்க வேண்டும். இப்படி தான் நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டியுள்ளார்கள்.

 أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَا تُسَلِّمُوا تَسْلِيمَ الْيَهُودِ وَالنَّصَارَى، فَإِنَّ تَسْلِيمَهُمْ بِالْأَكُفِّ وَالرُّؤوسِ وَالْإِشَارَةِ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்கள் மற்றும் கிருஸ்துவர்கள் ஸலாம் கூறுவதைப் போன்று நீங்கள் ஸலாம் கூறாதீர்கள். அவர்களுடைய ஸலாம் (வார்த்தைகள் இல்லாமல்) முன்கைகள் மூலமும், தலை (தாழ்த்துவதின்) சைக்கினையின் மூலமும் ஆகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா-10100 .

ஸலாத்திற்கு பதில் கூறுதல்
   وَاِذَا حُيِّيْتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوْا بِاَحْسَنَ مِنْهَاۤ اَوْ رُدُّوْهَا‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰى كُلِّ شَىْءٍ حَسِيْبًا‏

உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 4:86)

7) தும்பியவருக்கு பதில் கூறுதல்

தும்மினால் கழிவுகள் வெளியேறி மயிர்க்கண் திறந்து உடல் இலேசாகிறது. புத்துணர்ச்சியும் உற்சாகமும் தோன்றுகிறது. மனிதன் புத்தியக்கத்திற்கு வழிகோலுவதால் தும்மல் விரும்பத்தக்கதாகும். இதனாலேயே தும்மியவர் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு அல்ஹம்துலில்லாஹ் என அல்லாஹ்வை புகழ்கிறார். அல்லாஹ்வைப் புகழ்ந்ததற்குப் பிரதிபலனாக அதை கேட்பவர் யர்ஹமுகல்லாஹ் எனப் பிரார்த்திக்கிறார்.

إِنَّ اللَّهَ يُحِبُّ العُطَاسَ، وَيَكْرَهُ التَّثَاؤُبَ، فَإِذَا عَطَسَ فَحَمِدَ اللَّهَ، فَحَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ سَمِعَهُ أَنْ يُشَمِّتَهُ، وَأَمَّا التَّثَاؤُبُ: فَإِنَّمَا هُوَ مِنَ الشَّيْطَانِ، فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ، فَإِذَا قَالَ: هَا، ضَحِكَ مِنْهُ الشَّيْطَانُ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்; கொட்டாவியை வெறுக்கிறான். ஆகவே, ஒருவர் தும்மியவுடன் “அல்ஹம்துலில்லாஹ்”(எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு (“யர்ஹமுக்கல்லாஹ் – அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்” என்று) மறுமொழி கூறுவது அவசியமாகும்.

ஆனால், கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் யாராவது கொட்டாவி விட்டால் முடிந்த வரை அதைக் கட்டுப்படுத்தட்டும். ஏனெனில், யாரேனும் (கட்டுப்படுத்தாமல்) “ஹா’ என்று (கொட்டாவியால்) சப்தமிட்டால் ஷைத்தான் சிரிக்கிறான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : (புகாரி: 6223) 

தும்மியவர் “அல்ஹம்து லில்லாஹ்’ என்று கூறினால் தான் அதை கேட்பவர் பதில் கூற வேண்டும். தும்மியவர் “அல்ஹம்து லில்லாஹ்’ கூறவில்லையென்றால் அதை கேட்பவர் பதில் கூற வேண்டாம்.

عَطَسَ رَجُلاَنِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَشَمَّتَ أَحَدَهُمَا وَلَمْ يُشَمِّتِ الآخَرَ، فَقِيلَ لَهُ، فَقَالَ: «هَذَا حَمِدَ اللَّهَ، وَهَذَا لَمْ يَحْمَدِ اللَّهَ

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கருகில் இரு மனிதர்கள் தும்மினர். அப்போது அவர்களில் ஒருவருக்கு நபி (ஸல்) அவர்கள் (“யர்ஹமுகல்லாஹ் அல்லாஹ் உமக்குக் கருணைபுரிவானாக’ என்று) மறுமொழி கூறினார்கள். மற்றொருவருக்கு மறுமொழி கூறவில்லை.

அப்போது அவர்களிடம் (இது குறித்துக்) கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “இவர் (தும்மியவுடன்) “அல்ஹம்துலில்லாஹ்” என்று இறைவனைப் புகழ்ந்தார். அவர், “அல்ஹம்து லில்லாஹ்” என்று இறைவனைப் புகழவில்லை. (எனவே, இவருக்கு மறுமொழி பகர்ந்தேன். அவருக்கு மறுமொழி பகரவில்லை)” என்று பதிலளித்தார்கள்.

நூல் : (புகாரி: 6221) 

தும்மியவர் “அல்ஹம்துலில்லாஹ்” என்று கூறினால் அதைக் கேட்பவர் யர்ஹமுக்கல்லாஹ் என்று கூறவேண்டும். அவர் யர்ஹமுக்கல்லாஹ் கூறுவதை தும்மியவர் கேட்டால் “யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹு பாலக்கும்” என்று கூற வேண்டும்.

إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلْ: الحَمْدُ لِلَّهِ، وَلْيَقُلْ لَهُ أَخُوهُ أَوْ صَاحِبُهُ: يَرْحَمُكَ اللَّهُ، فَإِذَا قَالَ لَهُ: يَرْحَمُكَ اللَّهُ، فَلْيَقُلْ: يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் தும்மினால், “அல்ஹம்துலில்லாஹ்” (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (இதைக் கேட்கும்) “உங்கள் சகோதரர்” அல்லது “நண்பர்” யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக “யர்ஹமுக்கல்லாஹ்” என்று சொன்னால், நீங்கள் (அவருக்காக) “யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹு பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : (புகாரி: 6224) 

தூதருக்கு கட்டுப்பட்டால் சுவனம்

ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அதன் அடிப்படையில் நாம் வாழ்ந்தால் தான் சொர்க்கம் சொல்ல முடியும். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய நல்ல அமல்களை காட்டி தந்துள்ளார்கள். இதனை நம்முடைய வாழ்க்கையில் கொண்டு வர வேண்டும். இந்த செயலை செய்தால் தான் தூதருக்கு கட்டுபடுகிறோம் என்று அர்த்தம். இதை அலட்சியமாக கருதி விட்டு விட்டால் மறுமையில் சொர்க்கம் கிடைக்காது.

كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الجَنَّةَ إِلَّا مَنْ أَبَى»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَمَنْ يَأْبَى؟ قَالَ: «مَنْ أَطَاعَنِي دَخَلَ الجَنَّةَ ، وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர” என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஏற்க மறுத்தவர் யார்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறுசெய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்” என்று பதிலளித்தார்கள்.

நூல் : (புகாரி: 7280) 

மனம் விரும்ப கூடியது கெட்டதாகும்

சில செயல்களை செய்வதற்கு நம்முடைய மனம் ஒப்புக்கொள்ளாது. அப்படி இருந்தாலும் அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத் தந்த அடிப்படையில் நம்முடைய வாழ்க்கை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

كُتِبَ عَلَيْکُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّـكُمْ‌ۚ وَعَسٰۤى اَنْ تَكْرَهُوْا شَيْـــًٔا وَّهُوَ خَيْرٌ لَّـکُمْ‌ۚ وَعَسٰۤى اَنْ تُحِبُّوْا شَيْـــًٔا وَّهُوَ شَرٌّ لَّـكُمْؕ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ

உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் போர் செய்வது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. ஒன்றை நீங்கள் வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும். ஒன்றை நீங்கள் விரும்பலாம். அது உங்களுக்குக் கெட்டதாக இருக்கும். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

(அல்குர்ஆன்: 2:216)

இது போன்ற நல்ல விஷயங்களை நம்முடைய வாழ்க்கையில் கடைபிடித்து மறுமையில் அனைவரும் சொர்க்கம் சொல்வோமாக.! அப்படிப்பட்ட நன் மக்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக.!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.