பார்வை ஒன்றே போதும்.!

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

பார்வை ஒன்றே போதும்

ஒரு முஃமின் இன்னொரு முஃமினிடம் ஒரு தவறைக் காணும் போது அவர் அந்தத் தவறிலிருந்து அவரைத் திருத்துவதும் அவரிடம் நன்மையை ஏவுவதும் கடமையாகும்.

நான் ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ”இஸ்லாத்தைத் தழுவுவதாக தங்களிடம் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வந்திருக்கின்றேன்” என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்” என்று எனக்கு நிபந்தனை விதித்தார்கள்.

அறிவிப்பவர் : ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி),
நூல் : (புகாரி: 58) 

இந்த ஹதீஸின் அடிப்படையில் நாம் நம்முடைய சக கொள்கைவாதிக்கு நன்மையைக் கருத வேண்டும். அதையொட்டி அவரிடம் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம். இதை ஆதாரமாகக் கொண்டு நாம் ஒரு தவறைச் சுட்டிக் காட்ட முனைகின்ற போது அவரிடம் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து விடக் கூடாது.

தவறைச் சுட்டிக் காட்டுவது 

தவறைச் சுட்டிக் காட்டுவதில் ஒரு முரட்டுத்தனம் வந்து விடக் கூடாது. தவறை எப்படிச் சுட்டிக் காட்ட வேண்டும் என்பதை இஸ்லாம் தெளிவாக சொல்லிக் காட்டுகின்றது. இதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உள்ள முன்னுதாரணத்தை வாழ்க்கையில் நாம் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்கும் போது, ஒரு கிராமவாசி பள்ளிக்குள் நுழைந்து, ”யா அல்லாஹ்! எனக்கும் முஹம்மதுக்கும் மன்னிப்பை வழங்குவாயாக! எங்களுடன் சேர்த்து வேறு யாருக்கும் நீ மன்னிப்பளிக்காதே!” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடனே சிரித்து விட்டார்கள். ”(அல்லாஹ்வின்) விசாலமான தன்மைக்கு நீ தடை விதிக்கின்றாயே!” என்று கூறினார்கள்.

பிறகு அவர் பள்ளியின் ஓரத்தில் ஆடையை அகற்றி சிறுநீர் கழிக்கலானார். (தான் தவறு செய்து விட்டோம் என்று) அவர் உணர்ந்த பின் என்னருகில் வந்து நின்று கொண்டு, ”அவர்கள் கடுமையாக எச்சரிக்கவில்லை. ஏசவில்லை” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”இது பள்ளிவாசலாகும். இதனுள் சிறுநீர் கழிக்கப் படலாகாது. இது அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காகவும் தொழுவதற்காகவுமே கட்டப் பட்டுள்ளது” என்று கூறி ஒரு வாளி தண்ணீர் கொண்டு வர உத்தரவிட்டார்கள். அது அவரது சிறுநீரில் ஊற்றப்பட்டது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : (இப்னு மாஜா: 529) (522)

ஒரு கிராமவாசி பள்ளிவாசலில் சிறுநீர் கழித்து விட்டார். உடனே மக்கள் அவரைப் பிடித்தனர். நபி (ஸல்) அவர்கள், ”அவரை விட்டு விடுங்கள். அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளி தண்ணீரை ஊற்றி விடுங்கள். நீங்கள் நளினமாக எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக அனுப்பப் பட்டுள்ளீர்கள். கடினமாக எடுத்துச் சொல்பவர்களாக நீங்கள் அனுப்பப் படவில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 220) 

பள்ளிவாசலில் சிறுநீர் கழித்து விட்டதால் தன்னை நபி (ஸல்) அவர்கள் கண்டிப்பார்கள் என்று அந்தக் கிராமவாசி எதிர்பார்க்கின்றார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லை. அதே சமயம் அந்தக் கிராமவாசியை நோக்கிப் பாயும் மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் நளினத்தைப் போதிக்கின்றார்கள்.

தவறைச் சுட்டிக் காட்டுவதாகக் கூறி, தவறு செய்தவரை கடித்துக் குதறி விடும் பழக்கம் நம்மில் பலரிடம் உள்ளது. அத்தகையவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த நடைமுறையில் அழகிய படிப்பினை உள்ளது.

ஒருவர் தன் நண்பரிடம் ஒரு பொருளைக் கொடுத்து, வெளியில் யாரிடமும் இதைக் கொடுக்கக் கூடாது என்று சொல்கிறார். இவரோ நண்பரின் வேண்டுகோளை மீறி அடுத்தவரிடம் கொடுத்து விடுகின்றார். அவர் திருப்பித் தர வரும் போது உரிமையாளர் அங்கு இருக்கின்றார். தனது உத்தரவை நண்பர் அப்பட்டமாகவே மீறி விட்டார் என்று தெரிந்த உரிமையாளர் நண்பர் மீது ஒரு பார்வை செலுத்துகின்றார்.

இந்தப் பார்வையில் மின்னல் பாய்ச்சிய மின்சாரத் தாக்குதல் அந்த நண்பரைப் படாத பாடு படுத்தி விடும். அனலில் பட்ட புளுவாக அவரை நெளிய வைத்து விடும். அந்தப் பார்வை பல கோடி அர்த்தங்களை அந்த நண்பரிடம் சொல்லி முடித்து விடும். இதற்குப் பிறகு வார்த்தைகள் தீயாக, ஏன் தென்றலாகக் கூட வரத் தேவையில்லை. இதிலேயே அந்த நண்பர் உரிய பாடத்தைப் பெற்றுக் கொண்டு விடுவார்.

நபிகளாரின் அணுகுமுறை 

இது போல் 9 மணிக்கு வரவேண்டிய ஊழியர் ஒருவர் அரை மணி நேரம் தாமதமாக வருகின்றார் என்றால் முதலாளி அவரைக் கடுமையான வார்த்தைகளால் வசை பாட வேண்டியதில்லை. கடிகார முட்களைப் பார்த்தாலே போதும். அது அந்த ஊழியரின் இதயத்தைத் தைத்து விடும். இப்படி ஒரு அணுகுமுறையை நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் பெறுகின்றோம்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பணியாள் எவரும் இல்லாத நிலையில் மதீனாவுக்கு வந்தார்கள். ஆகவே அபூதல்ஹா (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, ”அல்லாஹ்வின் தூதரே! அனஸ் புத்திசாலியான சிறுவன்.

அவன் தங்களுக்கு ஊழியம் செய்யட்டும்” என்று கூறினார்கள். ஆகவே நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பிரயாணத்திலும் ஊரில் இருக்கும் போதும் பணிவிடைகள் செய்து வந்தேன். நான் செய்த எந்தச் செய்கைக்காகவும் ‘இதை ஏன் இப்படிச் செய்தாய்?’ என்றோ, நான் செய்யாத எந்த விஷயத்திற்காகவும் ‘இதை ஏன் நீ இப்படிச் செய்யவில்லை’ என்றோ என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டதேயில்லை.

(நூல் : (புகாரி: 2768) )

இன்று இந்த அணுகுமுறைகளை முதலாளி தன் தொழிலாளியிடம் அனுசரிப்பதில்லை. நண்பர்கள் தங்களுக்குள் அலங்கரித்துக் கொள்வதில்லை. இப்படியொரு தன்மை இரு தரப்பிலும் நிலவுகின்ற போது அங்கு அமைதி தழுவும். பணி சிறக்கும். இதற்கு மாற்றமாக ஒரு நல்ல நண்பர் அல்லது ஒரு நல்ல ஊழியர் ஏற்கனவே குற்ற உணர்வில் இருக்கும் போது, அவரிடத்தில் சீறிப் பாயும் கடின வார்த்தைகள் அவரை சீர்குலைய வைக்கின்றன.

அனஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பத்து ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்கள். இந்தப் பத்தாண்டு காலத்தில் ஏதேனும் பிசகுதல் இல்லாமல் இருந்திருக்க முடியாது. ஆயினும் நபி (ஸல்) அவர்களின் மென்மையான அணுகுமுறையினால் அது சரி செய்யப்பட்டிருக்கும் என்பதை நாம் விளங்க முடிகின்றது.

இன்னொரு விஷயத்தையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். முஹம்மது (ஸல்) அவர்களைப் போன்று முதலாளி மட்டும் இருந்தால் போதாது. ஊழியராக இருப்பவர் அனஸ் (ரலி) அவர்களைப் போன்று முதலாளியின் எதிர்பார்ப்புகளை உள்வாங்கிக் கொண்டு செயல்படும் உண்மை உணர்வுள்ளவராகவும் இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அழகிய நற்பண்பு

இன்னோர் எடுத்துக்காட்டு!

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருக்கும் போது கூட்டத்தில் ஒருவர் தும்மினார். உடனே நான், ‘யர்ஹமுகுமுல்லாஹ் – அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக’ என்று சொன்னேன். உடன் மக்கள் என் மீது தங்கள் பார்வைகளைச் செலுத்தினர்.

”(உங்கள்) தாய் தொலைந்து போகட்டும்! உங்கள் செய்தி என்ன? என்னையே பார்க்கின்றீர்களே!” என்று நான் கேட்டேன். அதற்கு நபித்தோழர்கள் என்னை (கண்டிக்கும் விதமாக) தங்கள் தொடைகளில் கைகளால் அடித்துக் காட்டினர். அவர்கள் என்னைப் பேசாமல் இருக்கச் சொல்கின்றார்கள் என்று அறிந்து மவுனமாகி விட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் (கடுமையாகப் பிடிப்பார்கள் என்று நினைத்தேன்) என் தாயும் தந்தையும் அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்களை விட அழகிய முறையில் போதிக்கும் ஓர் ஆசிரியரை அவர்களுக்கு முன்னரும் பின்னரும் நான் கண்டதே இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னை அரற்றவில்லை.

என்னை அடிக்கவில்லை. என்னை ஏசவுமில்லை. ”நிச்சயமாக இது தொழுகை! இதில் மக்கள் பேச்சு எதுவும் பேசுதல் முறையாகாது. நிச்சயமாக தொழுகை என்பது தஸ்பீஹ், தக்பீர், குர்ஆன் ஓதுதல் என்பது மட்டும் அடங்கியதாகும்” என்று கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர் : முஆவியா பின் ஹகம் (ரலி),
நூல் : (முஸ்லிம்: 935) (836)

இந்த ஹதீஸை அறிவிக்கும் முஆவியா பின் ஹகம் (ரலி) தொழுகையில் தான் பேசிய பேச்சுக்காக நபி (ஸல்) அவர்களிடம் சரியாக வாங்கிக் கட்டப் போகின்றோம் என்று கனமான உள்ளத்தோடு காத்திருக்கின்றார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களோ அவர் செய்த செயல்கள் எதையும் கண்டனம் செய்யவில்லை என்பதை இங்கு காண்கிறோம். அதற்காக அந்தச் செயலை நபி (ஸல்) அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்று கூற முடியாது.

சம்பந்தப் பட்ட அவரே தவறு என்று உணர்ந்து குற்ற உணர்வில் கூனி குறுகிப் போயிருக்கும் அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேலும் அவற்றைச் சொல்லி குத்திக் காட்ட விரும்பவில்லை. ஏனெனில் அவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள். எதையும் அளவுக்கு மீறி கூறினால் அது அமிர்தமாக இருப்பினும் நஞ்சாகி விடும் என்ற மனித உளவியல் ஓட்டத்தைப் புரிந்த புனிதத் தலைவர் அவர்கள். அதனால் உடன்பாட்டு மறையாக, பாஸிடிவாக எதைச் சொல்ல வேண்டுமோ அதை மட்டும் சொல்லி முடிக்கின்றார்கள்.

இதுபோன்ற இதம், பதம் நம்மை என்றும் ஆட்கொள்ளும் விதத்தில் நமது பயணத்தை அமைப்போமாமாக.!