உறுதியான நம்பிக்கை.!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

உறுதியான நம்பிக்கை.!

உலக வாழ்கையில் மனிதர்கள் அனைவரும் எல்லா விஷயங்களிலும் சமமானவர்களாக இருப்பதில்லை. சிலர் பொருளாதாரா ரீதியாக ஏற்றத் தாழ்வுடன் இருப்பார்கள். சிலர் அறிவு ரீதியாக ஏற்றத் தாழ்வுடன் இருப்பார்கள். இன்னும் சிலர் நிற ரீதியாக கருப்பு, வெள்ளை என்று ஏற்றத் தாழ்வுடன் இருப்பார்கள். இப்படியாக ஒட்டு மொத்த மனித சமுதாயமும் ஒரு ஏற்றத்தாழ்வுடன் வாழ்ந்து வருவதை பார்த்து வருகிறோம். இது மாதிரியான ஏற்றத்தாழ்வுகள் மனிதர்களுக்கு மத்தியில் இருப்பதை போல  இன்னும் ஓர் முக்கியமான விஷயத்திலும்  மனிதர்களுக்கு மத்தியில் ஏற்றத் தாழ்வு இருக்கிறது.

அந்த முக்கியமான விஷயம் என்னவென்றால் மனிதர்கள் அல்லாஹ்வை பற்றி நம்பிக்கை கொண்டு இருக்கின்ற அந்த ஈமானுடைய விஷயத்திலும் ஏற்றத் தாழ்வுகள் இருப்பதை பார்க்க முடிகின்றது. எப்படி என்றால் சிலருடைய ஈமான் வலுவானதாகவும், இன்னும் சிலருடைய ஈமான் வலுவில்லாத பலவீனமானதாகாவும் இருக்கின்றது. இதை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

 قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :
الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறைநம்பிக்கையாளரைவிடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார்.

நூல்: (முஸ்லிம்: 5178) 

இறைநம்பிக்கை கொண்ட அடியார்களில் உறுதியான இறைநம்பிக்கை கொண்டவர்களும் இருப்பார்கள். உறுதியற்ற பலவீனமான இறைநம்பிக்கை கொண்டவர்களும் இருப்பார்கள். அதிலே உறுதியான இறைநம்பிக்கையை யார் பெற்று இருக்கிறாரோ அவர் சமுதாயாதில் சிறந்த நபரும் அல்லாஹ்விடத்தில் நேசத்திற்குரியவரும் ஆவார்.

இச்செய்தியை கேட்கின்ற நம் அனைவரின் ஈமான் எந்த நிலையில் இருக்கின்றது. நம்முடைய ஈமான் உறுதியாக உள்ளதா? அல்லது உறுதியற்ற நிலையில் உள்ளதா? என்பதை பரிசோதித்து பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு மனிதனின் உள்ளத்தில் ஈமான் உறுதியாக அமைந்துவிட்டால் அவன் எதையும் சந்திக்க தயாராகி விடுவான். இப்படியாக நபி (ஸல்) அவர்களுடைய் வாழ்கையில் ஒரு நகழ்வு நடக்கிறது.

நபிகளாரின் உறுதியான ஈமான்
 أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَ
أَنَّهُ غَزَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَلَ نَجْدٍ، فَلَمَّا قَفَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَفَلَ مَعَهُ، فَأَدْرَكَتْهُمُ الْقَائِلَةُ فِي وَادٍ كَثِيرِالْعِضَاهِ ، فَنَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَفَرَّقَ النَّاسُ يَسْتَظِلُّونَ بِالشَّجَرِ، فَنَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحْتَ سَمُرَةٍ، وَعَلَّقَ بِهَا سَيْفَهُ، وَنِمْنَا نَوْمَةً، فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُونَا، وَإِذَا عِنْدَهُ أَعْرَابِيٌّ، فَقَالَ : ” إِنَّ هَذَا اخْتَرَطَ عَلَيَّ سَيْفِي وَأَنَا نَائِمٌ، فَاسْتَيْقَظْتُ وَهُوَ فِي يَدِهِ صَلْتًا ، فَقَالَ :مَنْ يَمْنَعُكَ مِنِّي ؟ فَقُلْتُ : اللَّهُ ” ثَلَاثًا. وَلَمْ يُعَاقِبْهُ وَجَلَسَ

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்:
நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்தை நோக்கி (தாதுர் ரிகாஉ) போருக்காக சென்றேன். (போரை முடித்துக் கொண்டு) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் திரும்பியபோது நானும் அவர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தேன். கருவேல முள்மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கை அடைந்தபோது மதிய (ஓய்வு கொள்ளும் நண்பகல்) நேரம் வந்தது. எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மர நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய்விட்டனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு முள் மரத்திற்குக் கீழே தங்கி ஓய்வெடுத்தார்கள்;

அப்போது தம் வாளை அந்த மரத்தில் தொங்கவிட்டார்கள். நாங்கள் ஒரு தூக்கம் தூங்கியிருப்போம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். உடனே நாங்கள் அவர்களிடம் சென்றோம். அங்கே நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு கிராமவாசி அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘நான் தூங்கிக் கொண்டிருந்தபோது இவர் என்னுடைய வாளை (எனக்கெதிராக) உருவிக் கொண்டார்.

அந்த வாள் உருவப்பட்டு இவரின் கையிலிருந்த நிலையில் நான் கண்விழித்தேன். அப்போது இவர் என்னிடம், ‘என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?’ என்று கேட்டார். நான், ‘அல்லாஹ்’ என்று பதிலளித்தேன். இதோ அவர் இங்கே அமர்ந்திருக்கிறார்’ என்று கூறினார்கள். பிறகு அவரை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தண்டிக்கவில்லை (மன்னித்துவிட்டுவிட்டார்கள்.)

நூல் : (புகாரி: 2910) 

நபி (ஸல்) அவர்களின் கழுத்தில் வாள் வைத்தும் கூட உன்னிடமிருந்து என்னை அல்லாஹ் தான் காப்பாற்றுவான் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அந்த மனத் துணிவான பதிலை கேட்ட அந்த கிராமாவாசி நடுங்கிவிட்டார் என்று பல்வேறு ஹதீஸ்களில் பார்க்க முடிகிறது. இந்த மனத்துணிவு தான் உறுதியான இறைநம்பிக்கையின் அடையாளம்.

எப்படிப்பட்ட துன்பம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏற்பட்டாலும், நாம் எதிர்பார்த்த நேரத்தில் ஏற்பட்டாலும், நாம் எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்டாலும் அதை கண்டு துவண்டுவிடாமல் அதை நான் எதிர்கொள்வதற்கு நான் தாயாராகவே இருக்கிறேன். அது  தான் ஒரு உறுதியான இறைநம்பிக்கை கொண்ட அடியார்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும். நபி மூஸா (அலை) அவர்களின் வாழ்கையை பாருங்கள்.

மூஸா நபியின் உறுதிமிக்க நம்பிக்கை
فَلَمَّا تَرَآءَ الْجَمْعٰنِ قَالَ اَصْحٰبُ مُوْسٰٓى اِنَّا لَمُدْرَكُوْنَ‌ۚ

இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது: “நிச்சயமாக நாம் பிடிபட்டோம்” என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்.

قَالَ كَلَّا‌‌ ۚ اِنَّ مَعِىَ رَبِّىْ سَيَهْدِيْنِ

அதற்கு (மூஸா), “ஒருக்காலும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்” என்று கூறினார்;‏

(அல்குர்ஆன்: 26:61,62)

மூஸா நபி அவர்களையும் அவர்களோடு நம்பிக்கை கொண்ட மக்களையும் கொல்வதற்காக ஃபிர்அவ்ன் விரட்டுகிறான். தங்களை காப்பாற்றி கொள்வதற்காக ஓடுகிறார்கள். எதிரே கடல் குறிக்கிடுகிறது. அந்த நேரத்தில் மூஸா நபிக்கு அருகில் உள்ளவர் சொல்கிறார். மூஸாவே நாம் மாட்டிக்கொண்டோம் என்று. அப்போது மூஸா நபியவர்கள் சொல்கிறார்கள். இல்லை, நாம் மாட்டவில்லை அல்லாஹ் நம்மோடு இருக்கிறான். அவன் நமக்கு வழி காட்டுவான் என்று மூஸா நபியவர்கள் துணிவோடு பதில் சொல்கிறார்கள் என்றால் இதுவே உறுதியான இறைநம்பிக்கை வெளிப்படுத்கூடிய ஒரு  வெளிப்பாடு.

இறைநம்பிக்கையாளர்களின்  துணிவு
قَالَ آمَنتُمْ لَهُ قَبْلَ أَنْ آذَنَ لَكُمْ ۖ إِنَّهُ لَكَبِيرُكُمُ الَّذِي عَلَّمَكُمُ السِّحْرَ ۖ فَلَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلَافٍ وَلَأُصَلِّبَنَّكُمْ فِي جُذُوعِ النَّخْلِ وَلَتَعْلَمُنَّ أَيُّنَا أَشَدُّ عَذَابًا وَأَبْقَىٰ

“நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார். எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்” என்று அவன் கூறினான்.

(அல்குர்ஆன்: 20:71)

قَالُوا لَن نُّؤْثِرَكَ عَلَىٰ مَا جَاءَنَا مِنَ الْبَيِّنَاتِ وَالَّذِي فَطَرَنَا ۖ فَاقْضِ مَا أَنتَ قَاضٍ ۖ إِنَّمَا تَقْضِي هَٰذِهِ الْحَيَاةَ الدُّنْيَا

 “எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்தவனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்” என்று அவர்கள் கூறினார்கள்.

(அல்குர்ஆன்: 20:72)

மூஸா நபியவர்களுக்கும் சூனியக்காரார்களுக்கும் போட்டி நடக்கிறது. இறுதியில் சத்தியம் வென்றது. அசத்தியம் தோற்றுப்போனது. சத்தியத்தை கண்ணேதிரே பார்த்த அந்த மக்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறார்கள். அந்த நேரத்தில் ஃபிர்அவ்ன் மிரட்டுகிறான். கடுமையான தண்டனைகள் தருவதாக அச்சுறுத்துகின்றான்.

அந்த மக்கள் எதற்கும் அஞ்சாமல் உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்துக்கொள். இந்த உலகத்தில் மட்டும் தான் உன்னுடைய கை ஓங்கும். மறுமையில் இறைவன் உன்னை பார்த்துக்கொள்வான் என்று அந்த மக்கள் சொல்கிறார்கள் என்றால் எந்த அளவுக்கு இறைநம்பிக்கை அவர்களுக்கு துணிவை தந்திருக்கின்றது. இத்தனைக்கும் அந்த நொடிப்பொழுதிலே அல்லாஹ்வை அவர்கள் நம்பியவர்கள்.

நம்முடைய மனதில் மட்டும் இறைநம்பிக்கை உறுதியாக அமைந்துவிட்டால் அந்த இறைநம்பிக்கை  நமக்கு எந்த மாதிரியான துணிவையும் தந்துவிடும் என்பதை மேற்கண்ட இறைவசனங்களின் மூலம் அல்லாஹ் நமக்கு தெளிவுபடுத்துகின்றான்.

ஈமான் உள்ளத்தில் உறுதியாக பதிந்த அடையாளம்
فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((قُومُوا إِلَى جَنَّةٍ عَرْضُهَا السَّمَوَاتُ وَالأَرْضُ)). قَالَ يَقُولُ عُمَيْرُ بْنُ الْحُمَامِ الأَنْصَارِيُّ يَا رَسُولَ اللَّهِ جَنَّةٌ عَرْضُهَا السَّمَوَاتُ وَالأَرْضُ قَالَ: ((نَعَمْ)). قَالَ بَخٍ بَخٍ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((مَا يَحْمِلُكَ عَلَى قَوْلِكَ بَخٍ بَخٍ)). قَالَ لاَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ إِلاَّ رَجَاءَةَ أَنْ أَكُونَ مِنْ أَهْلِهَا. قَالَ: ((فَإِنَّكَ مِنْ أَهْلِهَا)). فَأَخْرَجَ تَمَرَاتٍ مِنْ قَرْنِهِ فَجَعَلَ يَأْكُلُ مِنْهُنَّ ثُمَّ قَالَ لَئِنْ أَنَا حَيِيتُ حَتَّى آكُلَ تَمَرَاتِي هَذِهِ إِنَّهَا لَحَيَاةٌ طَوِيلَةٌ- قَالَ- فَرَمَى بِمَا كَانَ مَعَهُ مِنَ التَّمْرِ. ثُمَّ قَاتَلَهُمْ حَتَّى قُتِلَ.

இணைவைப்பாளர்கள் நெருங்கிவந்தவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கு எழு(ந்து தயாராகு)ங்கள்” என்று கூறினார்கள். உடனே உமைர் பின் அல்ஹுமாம் அல்அன்சாரீ (ரலி) அவர்கள், “வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கமா?” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆம்” என்று பதிலுரைக்க, “ஆஹா, ஆஹா” என்று உமைர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆஹா, ஆஹா என்று நீர் கூறக் காரணமென்ன?” என்று கேட்டார்கள். உமைர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! வேறொன்றுமில்லை, அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசிகளில் நானும் ஒருவனாக இருக்கவேண்டும் என்ற ஆசைதான் (அவ்வாறு நான் சொல்லக் காரணம்)” என்றார்.

அதற்கு “சொர்க்கவாசிகளில் நீரும் ஒருவர்தாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உமைர் (ரலி) அவர்கள் தமது அம்புக் கூட்டிலிருந்து பேரீச்சம் பழங்களை எடுத்து, அவற்றில் சிலவற்றை உண்ணத் தொடங்கினார்கள். பிறகு, “இந்தப் பேரீச்சம் பழங்களை உண்டு முடிக்கும்வரை நான் உயிர் வாழ்ந்தால் அது ஒரு நீண்ட நெடிய வாழ்க்கையாகிவிடுமே!” என்று கூறியபடி தம்மிடமிருந்த அந்தப் பேரீச்சம் பழங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, எதிரி(களை நோக்கிச் சென்று அவர்)களுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார்கள்.

நூல் : (முஸ்லிம்: 3858) 

நபி (ஸல்) அவர்கள் உமைர் பின் அல்ஹுமாம் (ரலி) அவர்களை சொர்க்கவாசி என்று கூறியவுடன் சில பேரீச்ச பழங்களை சாப்பிட்டு மற்ற பேரீச்ச பழங்கங்கள் சாப்பிடும் அளவுக்கு இந்த உலகில் நான் உயிரோடு இருந்தால் அதுவே எனக்கு மிகப்பெரிய வாழ்கை என்று கூறி ஈமானில் புது இரத்தம் பாய்ச்சியதைப்போல் யுத்தகளத்தில் இறங்கினார். பல்வேறு எதிரிகளை வெட்டி வீழ்தினார். இறுதியில் எதிரிகளால் வீழ்த்தப்பட்டு ஷஹீத் ஆனார்.

உயிரை இழப்பதற்கும் தயார் என்று தானே முன்வந்து போர்க்களத்திலே முன்னேறி செல்லக்கூடிய ஒரு புத்துணர்வை பெறுகிறார் என்று சொன்னால் எது அந்த புத்துணர்வை அவருக்கு கொடுத்தது. ஈமானுடைய உறுதி தான். எனவே நாம் நம்முடை ஈமான் எந்த நிலையில் உள்ளது என்பதை சிந்தித்து பார்த்து நம்முடைய ஈமானை உறுதியான ஈமானாக ஆக்கிக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிய வேண்டும்…

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.