2) உளுச் செய்ய வேண்டும்
உளுச் செய்ய வேண்டும்
படுக்கைக்குச் செல்லும் முன் தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்ய வேண்டும்.
பராஃ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
“நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்து கொள்” என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள்.
இது நபி (ஸல்) அவர்கள் காட்டிய ஒழுங்கு முறையாகும். ஆனால் இன்று பலர் இதைக் கடைப்பிடிப்பதில்லை.
உளூச் செய்து விட்டு உறங்குவதற்கும், உளூச் செய்யாமல் உறங்குவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நபியவர்கள் காட்டித் தந்தபடி உளூச் செய்து விட்டு படுத்தால் புத்துணர்ச்சியுடன் கூடிய நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.
அன்றாடம் வேலை பார்த்து விட்டு, வெயிலில் அலைந்து திரிந்து விட்டு, வியர்வை நாற்றத்துடன் அப்படியே படுக்கைக்குச் சென்று விடாமல் உளூச் செய்து விட்டு, உறங்குவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி வகுக்கின்றது.
படுக்கை விரிப்பை உதறுதல்
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
“நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் ஆடையின் ஓரத்தால் மூன்று முறை விரிப்பைத் தட்டி விடுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இஸ்லாம் எதைச் சொன்னாலும் அதில் ஒரு நன்மை இருக்கும். நாம் படுக்கும் இடத்தை நன்றாகச் சுத்தம் செய்து விட்டு நம் படுக்கைகளையும் நன்றாக உதறிக் கொள்ள வேண்டும். ஏனெனில் அதில் ஏதாவது பூச்சிகளோ, அல்லது எறும்புகளோ இருக்கலாம். படுக்கையை உதறாமல் படுத்தோம் என்றால் அந்தப் பூச்சிகளால் ஏதாவது தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. எனவே இந்த ஒழுங்கையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.