மீண்டும் ஒரு கறுப்புச் சட்டம்!

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

மீண்டும் ஒரு கறுப்புச் சட்டம்!

மிக மோசமான ஒரு சட்டத் திருத்தம் பாரளுமன்றத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

NIA (National Investigation Agency) என்று சொல்லப்படக் கூடிய தேசிய புலனாய்வு முகமைக்கு வலுசேர்க்கும் சட்டத் திருத்தம் அது.

இந்த சட்டத்தின் அடிப்படையில் முஸ்லீம்கள் தான் பெருமளவில் ஒடுக்கப்படுகிறார்கள் என்று கேட்ட அசதுதின் உவைசி அவர்களின் கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, முஸ்லீம்களை மட்டுமல்ல, தமிழ் தீவிரவாத அமைப்புகளையும் ஒடுக்கியிருக்கிறோம் என்று பதிலளித்திருக்கிறார். தமிழ்நாட்டினை நோக்கி பாஜக விடுத்திருக்கிற எச்சரிக்கையாகவே அமித்ஷாவின் இந்த அகங்காரத்தினைப் பார்க்க முடியும்.

தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட NIA என்கிற இந்த அமைப்பினால் நாடு முழுதும் இஸ்லாமியர்களும், தேசிய இன உரிமைகளுக்காக குரல்கொடுப்பவர்களும் தொடர்ச்சியாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

NIA மூலமாக விசாரிக்கப்படும் வழக்குகளின் விசாரணை, NIAக்கான சிறப்பு நீதிமன்றத்தில்தான் நடக்கும். தடா, பொடா மூலம் நிகழ்த்தப்பட்ட அநீதிகளைப் போன்று தற்போது UAPA(Unlawful Activities Prevention Act), NIA(National Investigation Agency) மூலமாக நிகழ்த்தப்பட்டு வருகிறது.

பாராளுமன்றத்தில் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்டத் திருத்தத்தில் ஆன்லைன் குற்றங்களாக கருதப்படுபவற்றையும் NIA விசாரிக்க முடியும் என்ற திருத்தத்தினைக் கொண்டு வந்திருக்கிறார்கள். NIA உருவாக்கத்திற்கான காரணமாக பயங்கரவாத செயல்கள் என்று காரணம் சொல்லப்பட்டது. ஆனால் இன்று பேஸ்புக் பதிவுகள், யூடியூப் வீடியோக்களுக்கு கூட NIA விசாரிக்க முடியும் என்ற நிலையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். மிகப் பெரிய மனித உரிமை மீறலை நோக்கி இந்த நாடு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த புதிய திருத்தத்தின்படி, NIA ஒரு மாநிலத்தின் உள்ளே சென்று விசாரிப்பதற்கும், சொத்துக்களை முடக்குவதற்கும், வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் நடவடிக்கை நடத்துவதற்கும் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று மாற்றியிருக்கிறார்கள். இதன் மூலம் மாநில அரசின் அதிகாரம் என்பது பெருமளவில் கேள்விக்குளளாக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு தனது அரசியல் எதிரிகளாக கருதுபவர்களை மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே எந்த மாநிலத்தின் உள்ளேயும் NIA மூலமாக கைது செய்ய முடியும்.

மேலும் UAPA சட்டத்தில் கொண்டு வரப்படுகிற திருத்தத்தின்படி தனிநபர்களையும் “பயங்கரவாதிகள்” என்று இந்த அரசு வரையறுக்கலாம். இதுவரை அமைப்புகளைத் தான் பயங்கரவாத அமைப்புகள் என்று வரையறை செய்து தடை செய்யும் வழிமுறை இருந்தது. அந்த வழிமுறையிலேயே பல்வேறு உரிமை பேசும் அமைப்புகள் தடை செய்யப்பட்டன. தற்போது தனிநபர்களை பயங்கரவாதிகளாக வரையறுக்கலாம் என்பதன் மூலமாக ஆன்லைன் பதிவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், நாடகக் கலைஞர்கள், திரைப்படக் கலைஞர்கள், சூழலியல் செயல்பாட்டாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என எந்தவொரு தனிநபரையும் பயங்கரவாதிகள் என்று வரையறை செய்து பல ஆண்டுகள் சிறையில் வைத்து ஒடுக்க முடியும்.

பீமா கோரேகான் விவகாரத்தில் 5 செயல்பாட்டாளர்களை Urban Naxalகள் என்று சொல்லி UAPA சட்டத்தில் கைது செய்து ஒடுக்கி வருவதைப் போன்று இனி யாரை வேண்டுமானாலும் ஒடுக்க முடியும். பிரிட்டிஷ் காலத்தைக் காட்டிலும் மிக மோசமான கருப்புச் சட்டங்கள் மூலமாக இந்த நாட்டின் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுதும் மனித உரிமை சட்டங்களை மேம்படுத்துவதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிற காலத்தில் இங்கு அடக்குமுறை சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு இருண்ட காலத்தினை நோக்கி பாஜக அரசு மக்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது.

UAPA சட்டத்தினை நீக்க வேண்டும் என நாடு முழுதும் மனித உரிமைக் குரல்கள் ஒலித்து வந்த நிலையில்,அதை கிஞ்சித்தும் மதிக்காமல் அச்சட்டத்தை மேலும் வலிமையாக்கி மசோதா கொண்டு வந்திருக்கிறது மத்திய பாஜக அரசு.

மாட்டின் பெயராலும், மதத்தின் பெயராலும் மிகப் பெரும் வன்முறைகளை விதைத்து மதவாதப் பிரிவினைவாதத்தை தூண்டி வரும் இந்துத்துவ தீவரவாத சக்திகள் இதுவரை NIA விசாரணை வளையத்தில் பெரிதாக கொண்டுவரப்படவில்லை. அப்பாவி இசுலாமியர்களை தீவிரவாதிகளாக காட்டி கைது செய்வதும், தேசிய இன உரிமைக்காக குரல் கொடுப்பவர்களையும், தலித்திய செயல்பாட்டாளர்களையும் ஒடுக்குவதே பெருமளவில் நடைபெற்று வருகிறது.

இந்த சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தில் மிகப் பெரிய எதிர்ப்பில்லாமல், சிறிய சலசலப்புகளுடன் நிறைவேறியிருப்பது எதிர்க்கட்சிகள் எத்தனை மோசமான தன்மையானதாக அல்லது பொறுப்பற்றதாக இருக்கின்றன என்பதையே காட்டுகிறது.