இஸ்லாம் ஓர் அதிசயம்!
இஸ்லாம் ஓர் அதிசயம்!
ஒரு மதம் (மார்க்கம்) தானாக பரவுகின்றது, வளருகின்றது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் அந்த அதிசயத்தை உலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தை பரப்புவதற்கு உலகளவில் ஒரு அமைப்பு இல்லை. ஒரு இயக்கம் இல்லை. ஆனாலும் அது பரவுகின்றது வளருகின்றது.
இஸ்லாத்தை எதிர்த்தால் பெரிய பெரிய வல்லரசுகளின் ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கின்றது. அதற்கு உதாரணம் சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரீன். ஒரு முஸ்லிம் விரைவில் கோடீஸ்வரன ஆக வேண்டுமா? அவன் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. திருக்குர்ஆன் சரியில்லை என்று அவன் ஏதாவது உளறினாலோ, கிறுக்கினாலோ போதும்; உடனே அவனுக்கு உலகில் பெயரும் புகழும் கிடைக்கும். ஒரே இரவில் அவனை ஓர் ஒரு சிறந்த அறிஞன், மிகப்பெரிய சிந்தனையாளன், புரட்சி எழுத்தாளான் என்றெல்லாம் அவனுக்கு பட்டங்கள் வந்து சேர்ந்துவிடும்.
எல்லா பத்திரிகைகளும் பத்தி பத்தியாக செய்திகள் வெளியிடும். அப்பாவி முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்பட்டு கொதித்தெழுவார்கள். துப்பாக்கி சூடுகளுக்குப் பழியாகி பிணமாவார்கள். இஸ்லாத்தை விமர்சித்த அந்த பெயர் தாங்கி முஸ்லிமுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கிடைத்துவிடும். ஒரு சிலர் ஆத்திரப்பட்டு கொலை மிரட்டல்கள் விடுவார்கள். உடனே அவனுக்கு பாஸ்போர்ர்ட் இல்லாமலேயே உலகப் பயனம் மேற்கொள்ளும் தகுதி கிடைத்துவிடும். அவனுக்காக அடைக்கலம் தர பெரிய பெரிய நாடுகள் முன் வருவார்கள்.
வல்லரசுகளின் அதிபர்கள் எல்லாம் அவனுக்கு விருந்துகளும், விருதுகளும் தந்து கெளரவிப்பார்கள். முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை; விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனோபக்குவம் இல்லை; கருத்து சுதந்திரம் இல்லை; முஸ்லிம்கள் என்றாலே அது ஒரு வெறிப் பிடித்த கூட்டம்; தீவிரவாத கூட்டம் என்றெல்லாம் உலக அரங்கில் பிரச்சாரம் முடுக்கிவிடப்படும்.
இஸ்லாத்தை எதிர்ப்பதுதான் கெளரவமான செயல் என்பதை நிலை நாட்டத்தான் இத்தனை ஆதரவுகள் தரப்படுகின்றன. இஸ்லாத்தை முஸ்லிம்களே எதிர்க்க வேண்டும் என்று சில முஸ்லிம் அதிருப்தியாளர்களை தூண்டத்தான் இத்தனை வஞ்சக நாடகங்களும் நடத்தப்படுகின்றன. ஆக அனைத்து மீடியாக்களும் ஒன்று சேர்ந்து அல்லும் பகலும் பிரச்சாரம் செய்கின்றன. ஆனாலும் இஸ்லாம் தேய்பிறையாக மாறாமல் வளர் பிறையாக மின்னுகிறது. இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் நாடுகளிலேயே அவர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இஸ்லாம் வளருகின்றது.
எதிர்ப்புகள் வளர வளர, அப்படி இஸ்லாத்தில் என்னதான் குறைகள் இருக்கின்றன; நாமும் பார்ப்போமே என்று, இன்று இஸ்லாத்தை ஆராய முன் வருகிறார்கள். அவர்களுடைய மனக்கண்கள் திறக்கின்றன. உலகில் இப்படி மனித குலத்தை ஒருங்கிணைக்கும் மார்க்கம் ஒன்று இருக்கின்றதா? அடடா இதுவரை எங்களுக்கு தெரியாமல் போய்விட்டதே என்று அங்கலாய்க்கிறார்கள். ஒரு தூய்மையான மார்க்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தோமே என்று வருத்தப்படுகிறார்கள். உண்மை என்னவென்று தெரிந்த பிறகு உடனே அதை அரவணைத்துக் கொள்கிறார்கள்.
இன்று இஸ்லாத்தை எதிர்க்கின்ற அனைத்து சக்திகளும் தங்களுக்கு தெரியாமல் இஸ்லாம் வளர்வதற்கு காரணமாக இருக்கின்றார்கள். எதிர்ப்புகளையும், எதிர்ப்பாளர்களையும் வைத்தே இஸ்லாம் பரவுகின்றதென்றால் இது ஒரு அதிசயமல்லவா? பத்திரிகைகள், சினிமா தொலைக்காட்சி, இசை இவை இல்லாமல் இன்று உலகில் எதுவும் பரவ முடியாது. இது இன்றைய உலக நிலை. மற்ற மதங்கள் அழகான பெண்களைக் காட்டி சீரியல் நாடகங்களையும் நடத்தி பட்டி மன்றங்களையும், திருவிழாக்களையும், தெருக்கூத்துகளையும் காட்டி இசையுடன் சேர்ந்த பாடல்களை பாடி பத்திரிகைகளில் விளம்பரம் செய்து தங்கள் மதங்களை வளர்க்க முயற்சிக்கின்றன.
ஆனால் இத்தனைக்குப் பிறகும் இவைகளைப் பார்த்து மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த மதத்தில் இணைந்ததாக செய்திகளை நாளிதழ்களில் பார்க்க முடிகிறதா? ஒரு மதம் பரவ வேண்டுமானால் சிலைகள் அவசியம் வேண்டும். மதச் சின்னங்களைப் பரப்ப வேண்டும். இவையில்லாமல் எந்த மதத்தையும் பரப்ப முடியாது. ஆனால் சிலைகளும் இல்லாமல்; சின்னங்களும் இல்லாமல் இஸ்லாம் பரவுகின்றதே! இது ஆச்சயரியமில்லையா?
இன்றைய பிரச்சார சாதனங்களுக்கு மூலதனமே பெண்கள்தான். விளம்பரத்தின் திறவுகோலும் தோற்று வாயுமாக இருக்கின்ற பெண்ணின் கவர்ச்சியான உடலமைப்பிற்குத் திரைப்போட்டு மூடிவிட்டு இஸ்லாம் வளருகின்றதே… இசை கூத்துக்கு இங்கே இடமேயில்லை. மனிதன் விரும்பும் மனம்போல் வாழ இஸ்லாத்தில் சுதந்திரம் இல்லை. மனம்போன போக்கில் ஒரு முஸ்லிம் வாழ முடியாது, இங்கு கட்டுப்பாடுகள் அதிகம். மக்கள் விரும்பும் விபச்சாரம், சூதாட்டம், மதுபானம், வட்டி இந்த நான்கையும் அறவே தடுப்பது இஸ்லாம் ஆனாலும் இஸ்லாம் வளருகின்றதே.
முஸ்லிம்களிடம் வல்லரசுகள் இல்லை. ஐ.நா சபையில் ஆதிக்கம் இல்லை. ஒருங்கிணைப்பு இல்லை. எங்கே பார்த்தாலும் முஸ்லிம்கள் தம் வீடுகளிலிருந்து துரத்தப்படுகிறார்கள், முஸ்லிம் என்று சொன்னாலேயே ஆபத்து வலிய வருகின்றது. ஆனாலும் இஸ்லாம் வளருகின்றதே. முஸ்லிம்களின் கடவுளோ கண்களுக்குத் தெரியாது. அவர்களுடைய தலைவரின் (இறைத்தூதர்) படம் கூட அவர்கள் பார்த்ததில்லை.
முஸ்லிம்கள் தொழுவதற்கு கைகால் கழுவ வேண்டும். சிறுநீர் கழித்தாலும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். குளிப்பு கடமையானால் (முழுக்கு) குளித்து விட்டுத்தான் இறை ஆலயத்திற்குள் நுழைய வேண்டும். தினந்தோறும் ஐந்து வேளை கட்டாயம் தொழ வேண்டும். இத்தனை சிரமங்கள், இத்தனை கஷ்டங்கள் இருப்பினும் இஸ்லாம் பரவுகின்றதே.
தர்மம் செய்துதான் தீரவேண்டும் என்று எந்த மதத்திலும் கட்டாயமில்லை. ஆனால் வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமும் வருடா வருடம் ரூபாய்க்கு இரண்டரை சதவீதம் தன்னுடைய சம்பாத்தியத்திலிருந்து ஏழைகளுக்குக் கொடுத்தே தீர வேண்டும். இந்த சுமையையும் ஒரு முஸ்லிம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். இஸ்லாத்தில் குற்றங்களுக்கு தண்டனை மிக கடுமையானவை. ஆனாலும் இஸ்லாம் பரவுகின்றதே! இது எப்படி சாத்தியமாகின்றது?
இறைவன் தன்னுடைய திருமறையில் இப்படி கூறுகின்றான்;
“அவர்கள் அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர். ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூரணமாக்கியே வைப்பான்.
உலகில் உள்ள மதங்கள் கடவுளுக்காக அல்லாமல், மதங்களுக்கே கடவுளை பயன்படுத்துகின்றன. கடவுளின் சட்டங்கள், கடவுளின் ஆட்சி வரவேண்டும் என்று கடவுளுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்கள் முஸ்லிம்கள் மட்டும்தான். மாற்று மதத்தினர் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்காகத்தான் கடவுளை வணங்குகிறார்களே தவிர, கடவுளின் விருப்பங்கள் நிறைவேற அவர்கள் ஆசைப்படுவதில்லை. கடவுளை தங்கள் இனத்திற்கும் மதத்திற்கும் சொந்தமாக்க முயற்சி செய்கின்றார்களே தவிர, கடவுளை எல்லோருக்கும் பொதுவாக்க அவர்கள் விரும்புவதில்லை.
Universal god என்ற பரந்த நோக்கை குறுகிய மனப்பான்மையோடு, கடவுளையே சிறுமைப்படுத்த முயல்கின்றார்களே தவிர, இவர்கள் கூறும் மதங்களால் கடவுளுக்குப் பெருமையில்லை. மனித குலத்திற்காக மதம் சேவையாற்ற வேண்டுமே தவிர, மதங்களுக்காக மனித குலத்தைக் கூறு போடக்கூடாது. ஆக உண்மையான கடவுள் நம்பிக்கை உடையவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதை தவிர வேறு வழி கிடையாது.
இஸ்லாம் ஒன்றுதான் கடவுளை பெருமைப்படுத்தும் மதமாக (மார்க்கமாக) இருக்கின்றது. அது மட்டும்தான் தனக்காக வாழாமல் கடவுளுக்காக வாழ கற்றுத் தருகின்றது. கடவுளை அடைய அது ஒன்றுதான் வழியாய் இருக்கின்றது. போலிப் பொருள்களுக்குத்தான் போலியான விளம்பரங்கள் தேவை. சர்க்கரையை யாரும் விளம்பரம் செய்ய அவசியமில்லை. அதன் இனிப்பு சுவைத்தவர்களுக்கு நன்கு தெரிகின்றது. விளம்பரம் இல்லாமல் அது தானே விற்பனையாகிறது. அது போலத்தான் இஸ்லாமும். நாம் சர்க்கரை உள்ள இடத்தைக் காட்டினால் போதும். மக்கள் தானே அதைப் பெற்றுக் கொள்வார்கள். இன்பம் அடைவார்கள்.