மாட்டிறைச்சியின் பெயரால் தொடரும் தாக்குதல்கள்
மாட்டிறைச்சியின் பெயரால் தொடரும் தாக்குதல்கள்
மதச்சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியாவில் பல இன மத மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்திய ஜனநாயகம் ஒவ்வொரு மத இன மக்களுக்கும் ஒவ்வொரு வகையான உரிமைகளை வழங்கியுள்ளது. பேச்சுரிமை எழுத்துரிமை மத வழிபாட்டு உரிமை என ஒவ்வொரு மத மக்களுக்கும் பலவிதமான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த உரிமைகளின் பட்டியலில் உணவிற்கான தனிநபர் உரிமையும் அடக்கம்.
இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இந்திய தேசத்தில் ஒருநபர் என்ன உணவை உட்கொள்ளலாம் எந்தமாதிரியான உணவை உட்கொள்ளக் கூடாது என்பது குறித்து எவ்விதக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. உணவு என்பது ஒரு தனிநபரின் உரிமையாக இருக்கின்றது. அந்த தனிநபர் உரிமையில் தலையிடுவதற்கோ தடை விதிப்பதற்கோ யாருக்கும் அதிகாரம் இல்லை. ஆ
னால் பாஜக அரசு ஆட்சியமைத்தது முதல் மாட்டிறைச்சியை உண்ணக்கூடாது அதற்காக மாடுகளை ஏற்றிச் செல்லக் கூடாது, கடைகளில் மாட்டிறைச்சியை அறுத்து விற்பனை செய்யக்கூடாது என பலவிதமான எழுதப்படாத சட்டங்களை மக்களின் மீது திணித்து வருகின்றது. உத்திரப்பிரதேச மாநிலம் தாத்ரி நகரில் உள்ள பிஷாரா கிராமத்தில் வசித்து வந்த ராணுவ வீரரின் தந்தையான முஹம்மது அஹ்லாக் என்ற அப்பாவி முதியவர் தனது வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் ஆட்டிறைச்சியை வைத்திருந்தார்.
ஆனால் அஹ்லாக் மாட்டு இறைச்சியை வைத்திருக்கின்றார் என்று பாசிச பயங்கரவாதிகள் பொய்ப்பிரச்சாரம் செய்து அவரை நடுத்தெருவில் இழுத்துப் போட்டு அடித்தே படுகொலை செய்தனர். இதுதான் உலக அளவில் இந்தியாவிற்குத் தலைகுணிவை ஏற்படுத்திய முதலாவது மாட்டிறைச்சிக் கொலையாகும். இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பசு பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பாசிச மாட்டு பயங்கரவாதிகள் பலரை அடித்தே கொலை செய்துள்ளனர்.
ஹரியானாவில் ஓடும் ரயிலில் பயணம் செய்த 16 வயது சிறுவன் ஜுனைத்., மாட்டிறைச்சி சாப்பிட்டான் என்று கூறி அந்த அப்பாவிச் சிறுவனை பாசிச பயங்கரவாதிகள் துடிக்கத்துடிக்க கத்தியால் குத்தி படுகொலை செய்தனர். ரயில் நிலையத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானான் அந்தச் சிறுவன்.
இன்னும் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. மாடுகளை வாங்கி பால் கறந்து விற்பனை செய்வதற்காக வாகனங்களில் ஏற்றிச் சென்ற அப்பாவிகள் பலர் பயங்கரவாதிகளால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மாட்டிறைச்சியின் பெயரால் நடைபெற்றுள்ள கொலைகள் மொத்தம் 28 ஆகும். மாடுகளின் பெயரால் அப்பாவிகள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதில் இதுவரைக்கும் 124 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.
மாட்டிறைச்சியின் பெயரால் இதுவரைக்கும் 30 வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பதிவு செய்யப்படாத வன்முறைச் சம்பவங்கள் மிக அதிகம் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் பாஜக அரசு மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து விட்ட நிலையில் தற்போதுதான் ஆட்சியமைப்பதற்கான உரிமை கோரலை கொடுத்துள்ளது. ஆனால் பசு குண்டர்கள் அதற்குள் தங்களின் பயங்கரவாத தாக்குதல் செயல்களைத் துவங்கி விட்டார்கள்.
பசு குண்டர்களால் கடந்த வாரம் ஒரு பெண் உள்ளிட்ட 3 அப்பாவி இஸ்லாமியர்கள் மிகவும் கொடூரமாகத் தாக்கப்படுள்ள சம்பவம் நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் கடந்த 24/05/2019 அன்று ஒரு சிலர் ஆட்டோவில் மாட்டிறைச்சியைக் கொண்டு செல்வதாக ஒரு வதந்தி பரவியது. அதனைத் தொடர்ந்து இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரு பாசிச கும்பல் தங்களின் கைகளில் ஆயுதங்களை ஏந்தி அட்டூழியம் செய்துள்ளது.
இந்த புரளியின் அடிப்படையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட மூன்று இஸ்லாமிய இளைஞர்களைப் பிடித்து வந்து ஒரு மரத்தில் கட்டி வைத்து கம்புகள், கட்டைகள் போன்ற ஆயுதங்களைக் கொண்டு அவர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளது அந்தக் கொடூர கும்பல். அவர்களுடன் இருந்த இஸ்லாமியப் பெண்ணை, அவரது கணவரை விட்டே அடிக்க வைத்து “ஜெய் ஸ்ரீராம்” என்று சொல் என்று அந்தப் பெண்ணின் கணவனின் கையில் செருப்பைக் கொடுத்து மாற்றி மாற்றி கன்னத்தில் அறைந்து சித்ரவதை செய்யும் கொடூரக் காட்சிகள் இணையத்தளத்தில் வீடியோவாக பரவி வருகின்றன.
காஷ்மீரில் ஒருவர் படுகொலை காஷ்மீர் மாநிலம் செனாப் மாவட்டத்திலுள்ள பதர்வா பகுதியில் நயீம் மற்றும் யாசிர் ஆகிய இருவர் வாகனத்தில் குதிரைகளை ஏற்றி சென்றுள்ளனர். அப்போது பசு பயங்கரவாத கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்து உங்கள் வாகனத்தில் எப்படி பசுவை ஏற்றி செல்லலாம் என்று கேட்டு தாக்க ஆரம்பித்தனர். நாங்கள் குதிரைகளைதான் ஏற்றிச் செல்கிறோம் என்று இருவரும் சொல்ல அதை செவிசாய்க்காமல் நயீமை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் குண்டுபாய்ந்து நயீம் இரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். உடன் சென்ற யாசிர் உதவிக்கு அழைத்தும் யாரும் முன்வராததால் நயீம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பதர்வா பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளமும் முடக்கப்பட்டுள்ளது. இது சம்பவத்தில் தொடர்புடையதாக ஏழு பேர் மீது சந்தேகிப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Source:unarvu(31/5/2019)