மீட்புப் பணியில் மரணித்த முஸ்லிம்
மீட்புப் பணியில் மரணித்த முஸ்லிம்
காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியிலுள்ள லிட்டர் ஆற்றில் படகு பயணம் செய்வதற்கு கடந்த 31-06-2019 வெள்ளிக் கிழமை அன்று ஐந்து சுற்றுலாப் பயணிகள் சென்றிருந்தனர். அப்போது அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக ரூஃப் அகமது தார் எனும் முஸ்லிம் இளைஞர் சென்றுள்ளார். காஷ்மீரின் குல்காம் பகுதியைச் சேர்ந்த இவர், அரசு பதிவு பெற்ற தொழில்முறை வழிகாட்டியாக இருப்பவர்.
ஸ்ரீநகரில் இருந்து 96 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஆற்றுப் பகுதியில் படகு சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கடுமையான வேகத்தில் காற்றி வீசியுள்ளது. அதனால், அந்தப் படகு கவிழ்ந்து சுற்றுலாப் பயணிகள் நீரிருக்குள் விழுந்து உயிருக்குப் போராடும் நிலை ஏற்பட்டு விட்டது. அந்த ஆபத்தான சூழ்நிலையில் அவர்களுடன் வழிகாட்டியாக இருந்த முஸ்லிம் இளைஞர் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஐந்து நபர்களையும் மீட்டு கரையில் சேர்த்துள்ளார்.
தான் பிழைத்துக் கொண்டால் போதும் என்று சுயநலமாக ஒதுங்கிக் கொள்ளாமல், கடமை உணர்வோடும் வீரதீரமாகவும் செயல்பட்டு சுற்றுலாப் பயணிகளை காப்பாற்றி இருக்கிறார். அந்த மீட்புப் பணியின் போது களைத்துப் போன இளைஞர் இறுதியில் தீடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இறந்து போன நிலையில அவரது உடல் மறுநாள் சனிக்கிழமை அன்று ஆற்று நீரில் மிதந்து வந்துள்ளது.
இந்நிலையில் தாரின் தன்னலமற்ற செயலைப் பாராட்டும் வகையில் அவரது குடும்பத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாயை நிதியாகத் தரும்படி ஆளுநர் ஆணை பிறப்பித்த தகவல் அவரின் செய்தி தொடர்பாளர் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகமும் இரண்டு இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறது. சுற்றலாப் பயணிகளின் உயிரைக் காப்பாற்றும் போது உயிர் நீத்த முஸ்லிம் வழிகாட்டி பற்றிய செய்தி மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.
Source:unarvu (21/07/2019)