வீட்டு வேலைகளில் மனைவிக்கு கணவன் உதவலாமா?

கேள்வி-பதில்: இல்லறம்

வீட்டு வேலைகளில் மனைவிக்கு கணவன் உதவலாமா?

உதவ வேண்டும்.

வீட்டு வேலைகள் அனைத்தும் பெண்கள் செய்ய வேண்டியவை என்று இஸ்லாம் கூறவில்லை. சமையல் செய்தல், சமையலுக்குத் துணை செய்தல், துணி துவைத்தல், தண்ணீர் பிடித்துக் கொடுத்தல் போன்ற காரியங்களை ஆண்கள் செய்வது இழிவானது போலவும் ஆண் தன்மைக்கு எதிரானது எனவும் சிலர் கருதுகின்றனர். இது தவறாகும்.

மனைவிக்கும் சேர்த்து பொருளீட்டுவதற்காக ஆண்கள் வெளியே சென்று உழைப்பதால் அவனது உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக பெண்கள் வீட்டு வேலை செய்து பணிகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

இது போல் வெளியே சென்று பொருளீட்டும் நிலையில் இல்லாதவர்களும், பொருளீட்டுவதற்காக குறைந்த நேரம் செலவிட்டு வீட்டில் அதிக நேரம் வேலை இல்லாமல் இருப்பவர்களும் மனைவியின் வேலைகளில் துணை செய்வதுதான் நியாயமாகும்.

“நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?” என்று நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை)ச் செவிமடுத்தால் (தொழுகைக்காகப்) புறப்பட்டு விடுவார்கள்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் ; அஸ்வத் பின் யஸீத் (ரஹ்).

(புகாரி: 5363)

வீட்டில் தமது செருப்பைத் தாமே தைப்பார்கள். தமது ஆடையின் கிழி சலையும் தாமே தைப்பார்கள். வீட்டு வேலைகளையும் செய்வார்கள்.

(அஹ்மத்: 23756, 24176, 25039)

முஸ்லிம்கள் இதையே முன்மாதிரியாக கொள்ள வேண்டும்.