மதவெறியை வென்ற மனிதநேயம்
மதவெறியை வென்ற மனிதநேயம்
இந்தியாவில் மனிதநேயம் மரணித்து விட்டதை கடந்த 5 ஆண்டுகளில் பார்த்திருப்போம். வீட்டில் ஆட்டிறைச்சி வைத்திருந்த ராணுவ வீரரின் தந்தை அஹ்லாக் என்ற அப்பாவி முதியவரை பயங்கரவாதிகள் அடித்தே கொலை செய்தனர். ராஜஸ்தானில் ஒரு அப்பாவி முஸ்லிம் முதியவரை தன் தோட்ட வேலைக்கு அழைத்துச் சென்ற பயங்கரவாதி ஒருவன், அவரை லவ் ஜிகாத் செய்து விட்டார் என்று பொய் கூறி கோடாரியால் வெட்டி பெட்ரோலை ஊற்றிக் கொளுத்திய நிகழ்வு நெஞ்சை பதற வைத்தது.
நாட்டில் பல அப்பாவி மக்களை அடித்தே கொலை செய்த காவி பயங்கரவாதிகளின் ஈவிரக்கமற்ற செயலைக் கண்டு உலக நாடுகளே காரி உமிழ்ந்தன. வாழத் தகுதியில்லாத நாடாக இந்தியா மாறி விட்டதாக சர்வதேச பத்திரிகைகள் பலவும் எழுதித் தள்ளின. ஆனால் இந்தியாவில் மனிதநேயம் மரணிக்கவில்லை என்பதை கடந்த வாரம் நடந்த ஒரு நிகழ்வு எடுத்துக் காட்டியுள்ளது.
மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த டெரிக் என்ற சிறுவன் செய்த செயல், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களின் இதயக் கதவுகளை ஒருகணம் தட்டிப் பார்த்து விட்டது. சிறுவன் டெரிக்., கடந்தவாரம் தன்னுடைய வீட்டின் முன்னாள் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தான். அப்போது அங்கே ஓடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக் கோழிக்குஞ்சின் மீது தெரியாமல் தன் சைக்கிளை ஏற்றி விட்டான் சிறுவன் டெரிக். சைக்கிள் ஏறியதும் கோழிக்குஞ்சு இறந்து விட்டது.
ஆனால் இது தெரியாமல் அந்தக் கோழிக் குஞ்சை தூக்கிக் கொண்டு அவன் சேர்த்து வைத்திருந்த பத்து ரூபாயை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்று கோழிக்குஞ்சைக் காப்பாற்றுங்கள் என்று முறையிட்டுள்ளான் டெரிக். சிறுவனின் மனிதநேய செயலைக் கண்டு நெகிழ்ந்த அங்கிருந்த செவிலியர் இதைப் படமெடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டார். ஒரு கையில் இறந்து போன கோழிக்குஞ் சையும் மறு கையில் பத்து ரூபாய் பணத்தையும் வைத்துக் கொண்டு கவலை தோய்ந்த முகத்துடன் பரிதாபமாக நின்றிருந்த டெரிக்கின்.
மனிதநேய செயலைப் பார்த்து மக்கள் பலரும் கண் கலங்கினார்கள். சிறுவன் டெரிக்கின் படத்தைப் போட்டு பல சமூக ஆர்வலர்களும் சமூக வலைதள எழுத்தாளர்களும் தங்களின் கருத்துகளைப் பகிரத் துவங்கினார்கள். “மாட்டுக்காக அப்பாவிகளை அடித்தே கொலை செய்யும் நாட்டில் கோழிக்குஞ்சுக்காக கண்ணீர் விட்ட சிறுவன் நாளைய இந்தியாவின் மனிதாபிமானத்தை உணர்த்துகின்றான்” என்று ஒருவர் கருத்து சொல்லியிருந்தார். இன்னும் ஒருவர், “ஆகா பாஜக ஆட்சி முடியப் போகின்றது, அதனால்தான் மனிதர்களை இரக்கமில்லாமல் கொலை செய்யப்படும் நாட்டில் கோழிக்குஞ்சுக்கு கலங்குகின்றான் சிறுவன்” என்று மிகவும் சிறப்பாக எழுதியிருந்தார்.
டெரிக்கின் இந்தச் செயல் உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்றுள்ளது. டெரிக்கின் இந்த நிகழ்வைப் பாராட்டி அவன் படிக்கும் பள்ளிக் கூடத்தில் சிறந்த மனிதநேய குணாளர் என்ற விருதை வழங்கியுள்ளார்கள். இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் உள்ள சமூக வலைத்தளவாசிகள் சிறுவனின் இந்தச் செயலுக்கு மனம் திறந்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கருவில் உள்ள சிசுவை கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து வெளியே எடுத்து சூலத்தில் குத்தி பெட்ரோலை ஊற்றிக் கொளுத்திய கொடூர மிருகங்கள் நிறைந்த தேசத்தில்., சிறுவன் டெரிக் செய்த மனிதாபிமான செயல் இந்த நாட்டில் இன்னமும் மனிதநேயம் சாகவில்லை, அது ஒரு ஓரத்தில் துளிர்விட்டு வருகின்றது அதுவும் வளரும் இளைய தலைமுறையினரிடத்தில் வேர் விடுகின்றது என்பதை உணர்த்துகின்றது.
கலவரத்தைத் தூண்டி நாட்டை அழிக்க நினைக்கும் பயங்கரவாதிகள் சிறுவன் டெரிக் மூலம் இனியாவது பாடம் படித்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் சிறுவர் சிறுமியரிடத்தில் மதவெறி மாய்ந்து மனிதநேயம் தழைத்தோங்கி வருகின்றது என்பதை கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்ஃப் எக்ஸெல் விளம்பரம் உணர்த்திக் காட்டியது. அது இந்த சிறுவன் டெரிக் போன்றவர்கள் மூலம் வேர் விடட்டும். மதவெறி (கட்சிகள்) மாய்த்து மனிதநேயம் வளரும் நாளை அவசியம் எதிர்பார்ப்போம்.
Source:unarvu ( 12/08/18 )