உயிரைப் பணயம் வைத்து யாத்ரீகர்களைக் காப்பாற்றிய முஸ்லிம் ஓட்டுநர்
உயிரைப் பணயம் வைத்து யாத்ரீகர்களைக் காப்பாற்றிய முஸ்லிம் ஓட்டுநர்
கடந்த வாரம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான அமர்நாத் யாத்ரீகர்களை தனி ஒரு நபராக இருந்து தனது உயிரைப் பணயம் வைத்து பாதுகாத்துள்ளார் சலீம் என்ற முஸ்லிம் பேருந்து ஓட்டுநர். காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் இமயமலையில் 3,388 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. இந்த குகைக்கோவிலில் உள்ள பனி லிங்கத்தை வணங்குவதற்காக ஆண்டு தோறும் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான நபர்கள் அங்கு யாத்திரை செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கியது. கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வழக்கம்போல் இந்த ஆண்டும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் ஜூலை 10ஆம் தேதி இரவு 8.20 மணி அளவில் அனந்தநாக் மாவட்டத்தில் பதான்கு என்ற இடத்தில் நெடுஞ்சாலையில் போலீசார் வந்து கொண்டிருந்த வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசாரும் திருப்பி சுட்டனர். இதனால் பயங்கரவாதிகள் பின்வாங்கி ஓடினார்கள்.
அப்போது அந்தப் பாதையில், அமர்நாத் பக்தர்களின் பஸ் வந்தது. அவர்கள் அமர்நாத் சென்று பஸ்சில் திரும்பிக்கொண்டு இருந்தனர். அந்த பஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் பஸ்சுக்குள் இருந்தவர்கள் அலறினார்கள். உடனே போலீசார் விரைந்து வந்து பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர். இதனால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 6 பெண்கள் உள்பட 7 பக்தர்கள் குண்டு பாய்ந்து பலி ஆனார்கள். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
பலியான பக்தர்கள் குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. இந்தத் தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு ராணுவ வீரர்களும், போலீசாரும் அனுப்பி வைக்கப்பட்டனர். தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய பயங்கரவாதிகளை அவர்கள் தேடி வருகிறார்கள். பாதுகாப்பு கருதி இரவு 7 மணிக்கு மேல் அந்தப் பாதையில் அமர்நாத் பக்தர்களின் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தீவிரவாதிகள் தாக்குதலில் இருந்து 50 பயணிகளைக் காப்பாற்றிய பஸ் டிரைவர் சலீமுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
சலீம் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இரவு நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்ததால், தாக்குதல் நடத்தியவர்கள் யார் எனத் தெரியவில்லை. இருப்பினும் பஸ்சை ஓட்டி வந்த சலீம் ஷேக் பயப்படாமல் பஸ்சை, சம்பவ இடத்திலிருந்து இரண்டரை கிலோ மீட்டர் தூரம் தள்ளிக் கொண்டு சென்று நிறுத்தினார். தீவிரவாதிகள் பேருந்தை நோக்கி சராமரியாக சுட்ட நேரத்தில் குனிந்து கொண்டே இரண்டரை கிலோ மீட்டர் தூரம் பேருந்தை இயக்கியதால் 50 அமர்நாத் யாத்ரீகர்களின் உயிர் பாதுகாக்கப்பட்டது.
இதற்காகப் பலரும் அவரை பாராட்டினர். இது குறித்து சலீம் கூறும் போது, “இந்த இக்கட்டான நிலையிலும், அல்லாஹ்தான் எனக்கு பேருந்தை இயக்குவதற்கான பலத்தை கொடுத்தான், நான் நிறுத்தவில்லை எனக் கூறினார். பஸ்சில் பயணம் செய்த ஒருவர் கூறுகையில், அனைத்துப் பகுதிகளில் இருந்து குண்டுகள் வரத் துவங்கியதும் நாங்கள் அனைவரும் பஸ்சின் இருக்கைக்கு அடியில் சென்று ஓளிந்து கொண்டோம். ஆனால், டிவைர் பயப்படாமல் குனிந்து கொண்டே பஸ்சை ஓட்டியதாக கூறினர்.
பேருந்து ஓட்டுநர் சலீம் மட்டும் அப்போதே பேருந்தை ஓட்டுவதை நிறுத்தியிருந்தாலோ அல்லது பேருந்தில் இருந்து இறங்கி ஓடியிருந்தாலோ நாங்கள் 50 பேரும் பிணமாகத்தான் மடிந்திருப்போம் என்று அந்தப் பயணிகள் கூறியது நெகிழ்ச்சியாக இருந்தது. குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபனி, சலீமின் செய்ல்கள் குறித்து பாராட்டினார். துணிசலுக்கான விருதுக்கு அவர் பரிந்துரைக்கப்படுவார் எனக் கூறினார்.
ஒரு முஸ்லிம் ஓட்டுநர் 50 நபர்களது உயிர்களைப் பாதுகாத்துள்ளார். தனது உயிரை காத்துக் கொள்ள பேருந்தை அப்படியே போட்டுவிட்டு ஓடியிருந்தால், நிலைமை என்னவாகியிருக்கும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். முஸ்லிம் சகோதரர் ஒருவர் 50 பேரது உயிரைக் காப்பாற்றிய நிலையில் முஸ்லிம் காப்பாற்றினார் என எழுத யோசிக்கும் ஊடக கண்ணியவான்கள் ஏதாவது ஒரு தீவிரவாத செயலை எவனாவது செய்தால் முஸ்லிம் தீவிரவாதி என்று போட்டு இஸ்லாத்தை இழிவுபடுத்துகின்றார்கள்.
சலீம் போன்ற முஸ்லிம்களின் தியாகத்தை பார்த்த பிறகாவது இவர்கள் திருந்த வேண்டும். முஸ்லிம்களை தேச விரோதிகள்; பாகிஸ்தானுக்கு ஓடுங்கள் என்று சொல்லும் காவிப்பாட்டாளங்களும் இதை சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். சலீம் போன்ற முஸ்லிம் களெல்லாம் பாகிஸ்தானுக்கு ஓடிவிட்டால் இங்குள்ள இந்து சகோதரர்களை உயிர் கொடுத்து காப்பாற்ற ஆள் இருக்கமாட்டார்கள். அதேநேரத்தில் ஜுனைத் என்ற 15 வயது இளைஞனை பசு பாதுகாப்பு என்ற பெயரில் அடித்தே கொலை செய்தார்களே அந்த சம்பவத்தை எண்ணி இந்நேரத்தில் மனம் வெதும்புகின்றோம்.
சலீம் என்பவர் தனியருவராக இருந்து 50 நபர்களைக் காப்பாற்றியுள்ளார். ஜுனைத் என்ற இளைஞனை கொலை வெறியோடு காவிப்பட்டாளங்கள் தாக்கும் போது அனைவரும் வேடிக்கைதான் பார்த்தார்கள்; ஜுனைத் உயிர் போகும் நிலையில் துடியாய் துடித்த போதும் கூட உதவிக்கு வர ஒருவருமில்லை. என்ன மாதிரியான உலகில் நாம் வாழ்கின்றோம்?
மனிதநேயத்தை குழிதோண்டி புதைத்த இரண்டு கால் மிருகங்கள் வாழும் இந்தியாவில் தன்னுயிரைப் பணயம் வைத்து பிறர் உயிரை பாதுகாக்கும் சலீம் போன்ற முஸ்லிம்களால்தான் மனிதம் இன்னும் வாழ்ந்து கொண்டுள்ளது.
Source:unarvu ( 21/07/17 )