1) முன்னுரை
கஅபா வரலாறும் சிறப்புகளும்
அகில உலகங்களையும் படைத்த அல்லாஹ், தான் ஒருவன் மட்டும் தான் கடவுள் என்பதற்கு, அவற்றை அத்தாட்சிகளாகவும் ஆக்கினான். இவை இன்றளவும் அல்லாஹ் மட்டும் தான் ஒரே கடவுள் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன.
அப்படிப் பட்ட அத்தாட்சிகளில் உள்ளவை தான் அவனுடைய புனிதமிக்க ஆலயமாகிய கஅபாவும் அது அமைந்துள்ள மக்கமா நகரமும் ஆகும்.
உலக முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டுமிடமாகவும், உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டைப் பறைசாற்றக் கூடியதாகவும் இவ்வத்தாட்சிகள் அமைந்துள்ளன.
“கஅபா’ ஆலயத்திற்கும், மக்கமா நகரத்திற்கும் மற்ற ஆலயங்களை விடவும், நகரங்களை விடவும் தனித்த சிறப்புகளும், சட்டங்களும் உள்ளன. அப்படிப்பட்ட சிறப்புகளில் சிலவற்றைக் காண்போம்.
“கஅபா’ ஆலயம் தான் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் தொழுகையின் போது முன்னோக்கும் திசையாக அமைந்துள்ளது. இது உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. ஒரு முஸ்லிம் எங்கிருந்தாலும் அவன் தொழுகையின் போது கஅபாவை முன்னோக்க வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:
நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர் வழி பெறுவதுமே இதற்குக் காரணம்.
மக்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக முதலில் கட்டப்பட்ட பள்ளிவாசல் மக்காவிலுள்ள “கஅபா’ ஆலயமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
அகிலத்தின் நேர்வழிக்கு உரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.
இத்தகைய கஅபாவின் சிறப்புகளையும் அதற்கென உள்ள சட்டங்களையும் இந்த நூலில் தொகுத்துள்ளேன்.
– எம். அப்துந்நாஸர் எம்.ஐ.எஸ்.சி.