கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரன்தான்!
கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரன்தான்!
காந்தி படுகொலைக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை; அவ்வாறு சொல்வது அவதூறு என்று ஒரு பச்சைப் பொய்யை சங் பரிவார இயக்கங்கள் திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றனர். குறிப்பாக பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா என்பவர், தான் பங்கு பெறும் பேட்டிகளில் எல்லாம் இதே பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருப்பார்; இதற்குப் பெயர்தான் கோயபல்ஸ் தத்துவம் என்பது;
அதாவது ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தால் அது உண்மையாகிவிடும் என்பதுதான் கோயபல்ஸ் தத்துவம். இந்த கோயபல்ஸ் தத்துவம்தான் ஆர்.எஸ். எஸ். இயக்கத்தின் மூலமந்திரம்; அந்த வகையில் தான் கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ் க்கும் எந்த சம்பந்தமுமில்லை என்ற ஒரே பொய்யை திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றனர். இது உண்மையா? அதைப்போலத்தான் கோட்சே என்பவன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருந்ததே கிடையாது;
இந்த உண்மையைத்தான் சர்வ சாதாரணமாக இவர்கள் மறுத்து தங்களை தேசத்தியாகிகளைப் போல காட்டிக் கொண்டுள்ளனர். கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர்தான் என்பதை நாம் சொல்லவில்லை; கோட்சேவின் உடன் பிறந்த தம்பி தனது வாயால் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் வழங்கியுள்ளார். மேலும், தற்போது ஆர்.எஸ்.எஸ் இயக்கமானது கோட்சேவை கைகழுவிவிட்டு அவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் இல்லை என்று பொய் சொல்வது கோழைத்தனமானது என்றும் அவர் சாடியுள்ளார்.
கடந்த 1994ஆம் ஆண்டு ஃப்ரண்ட் லைன் பத்திரிக்கை அவரை நேர்காணல் கண்டு அந்த பேட்டியை வெளியிட்டிருந்தது. அதன் தமிழாக்கத்தை இங்கே தருகின்றோம். ஆர்.எஸ்.எஸ். என்பது எவ்வளவு பெரிய ஆபத்தான இயக்கம் என்பதையும்; தற்போது ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் சொல்லும் கருத்துக்கள் எப்படிப்பட்ட தார்ப்பாயில் வடிகட்டிய பொய் என்பதையும் மேற்கண்ட பேட்டியை நீங்கள் சற்று உன்னிப்பாக கவனித்து வாசித்தாலே தெரியும்;
கோட்சே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவன் இல்லை என்று அவனே சொல்லியது ஆதாரமாகுமா? அவன் காந்தியைக் கொலை செய்யும் போதும் கூட ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் செயலாளராக இருந்துள்ளான் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்த உண்மையைத்தான் சங் பரிவாரக் கும்பல்கள் மறைக்க முயல்கின்றன
கோட்சேயை தியாகியாக்கும் சங்பரிவாரம்
கோட்சே என்ற தேசதுரோகி சங்பரிவாரக் கும்பலின் ஹீரோவாகப் பார்க்கப்படுகின்றான். அவனுக்கு நாடு முழுவதும் சிலை வைக்க வேண்டும் என்று இந்து மகாசபா என்ற சங்பரிவாரங்களின் தாய் இயக்கம் பரப்புரைகளை முன்னெடுத்துச் செல்கின்றது; பாஜகவின் கல்யாணி ராமன், இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட சமூக விரோதிகள் கோட்சேவுக்கு சிலை வைத்தால் என்ன தவறு; கோட்சே ஒரு தேச தியாகி; அவர் ஒரு சிறந்த தேச பக்தர் என்று வெளிப்படையாகவே மீடியாக்களில் பேட்டி கொடுக்கின்றனர்.
சேவார்கர் என்ற தேச துரோகியை தேச தியாகியாக சித்தரித்து அந்த தேச துரோகிக்கு நாடாளுமன்றத்தில் புகைப்படத்தை திறக்கும் அளவிற்கு சென்றுவிட்டது இந்த சங்பரிவாரக் கும்பல். சங் பரிவாரக் கும்பல் தேசத்தியாகியாக போற்றும் சேவார்கர் பற்றி கோட்சேவின் தம்பி அளித்த வாக்குமூலத்தைக் கவனித்தீர்களா? அவர்தான் கோட்சேவின் குரு. நாங்கள் அனைவரும் அவரது சீடர்கள், அவரை எங்களுடைய ‘குரு’வாக மதித்து நடந்தோம்.
நாங்கள் அவருடைய எழுத்துக்களை படிப்போம். சாவர்க்கரை முழுமையாகப் புரிந்து கொண்டோம், எனவே இதனை செய்ய வேண்டும் என்று அவரிடம் அனுமதி கேட்பது மடத்தனமாகும். காந்தியைக் கொலை செய்யத்தூண்டி வழிகாட்டிய முதல் தேச துரோகி சேவார்கர் என்பவர்தான்; அவரும் கடைந்தெடுத்த ஆர்.எஸ். எஸ். வெறியர்தான் எனும்போது அந்த தேசத் துரோகியைத்தான் இவர்கள் மிகப்பெரிய தேசத் தியாகியாக சித்தரிக்கின்றார்கள். இந்த உண்மையைப் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தியின் மீது தற்போது அவதூறு வழக்குத் தொடுத்து நடத்தி வருகின்றார்கள் என்றால், போகிற போக்கைப் பார்த்தால்,
“இன்னும் சில காலம் போனால் மகாத்மா காந்தி சுட்டுக் கொலை செய்யப்படவில்லை; அவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்” என்று பாடத்திட்டத்தில் புதிய பாடத்தலைப்பு வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. வரலாறு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் தேசத் துரோகிகள் அனைவரும் தேசத்தியாகிகளாகி விடுவார்கள்; கவனம்; வரலாறு முக்கியம்!
காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே,
காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே,ஆர்.எஸ்.எஸ்.காரர்தான் என்று உறுதி செய்து, காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையான கோட்சேயின் சகோதரரான கோபால் கோட்சே அளித்த பேட்டி இது. 1994 இல் ‘பிரன்ட் லைன்’ பத்திரிகையில் வெளி வந்தது இந்த பேட்டி.
நீங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவரா?
நாங்கள் சகோதரர்கள் அனைவரும் ஆர்.எஸ். எஸ்.சில் இருந்தவர்கள்தாம். நாதுராம் (கோட்சே) சத்பத்ரேயா, நான், கோவிந்த் ஆகிய நாங்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்களே. நாங்கள் எங்கள் வீடுகளில் வளர்ந்ததை விட ஆர்.எஸ்.எஸ்.சில்தான் அதிகமாக வளர்ந்தோம்.
நாதுராம் (கோட்சே) ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்தாரா? அவர் ஆர்.எஸ்.எஸ்.சை விட்டு விலகிட வில்லையா?
நாதுராம் ஆர்.எஸ்.எஸ்.ல் (காரியவாஹ்) செயலாளராக இருந்தான். அவன் காந்தி கொலை வழக்கில் கொடுத்த வாக்குமூலத்தில்தான் ஆர்.எஸ். எஸ்.சிலிருந்து விலகி விட்டதாகக் குறிப்பிடுகின்றார். அவர் அப்படி சொன்னதற்கு காரணம் ஆர்.எஸ். எஸ்.சின் அப்போதைய தலைவர் கோல்வால்கரும், ஆர்.எஸ்.எஸ்.சும், காந்திஜியின் கொலைக்குப் பின் பயங்கர கெடுபிடிகளுக்கு உள்ளானதுதான். ஆனால், நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்.சை விட்டு வெளியேறவில்லை.
அண்மையில் அத்வானி, கோட்சேவுக்கும் ஆர்.எஸ். எஸ்.ஸிற்கும் சம்பந்தமில்லை என்று கூறி இருக்கின்றாரே?
நான் அவருக்குப் பதில் சொல்லி இருக்கிறேன், மறுத்திருக்கிறேன். அத்வானி சொல்வது கோழைத்தனம் எனக் கூறி இருக்கிறேன். நீங்கள் ஒன்றை வேண்டுமானால் சொல்லலாம். “நீ போய் காந்திஜியைக் கொலை செய்” என்று ஆர்.எஸ்.எஸ். கூறிடவில்லை. ஆனால், அவரை (கோட்சேயை) கைவிடுவது சரியல்ல. இந்து மகாசபை அவரைக் கைவிடவில்லை. 1944ஆம் ஆண்டு முதல் இந்து மகாசபைக்காகப் பணி செய்யத் தொடங்கினான். அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் பணி செய்யத் தொடங்கினான். ஆர்.எஸ்.எஸ்.இல் காரியவாஹ் என்ற அறிவுத்துறை செயலாளராகவும் இருந்தான்.
சாவர்க்கருக்கும், உங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?
இப்படிய ஒரு கேள்விக்கே இடமில்லை. நாங்கள் அனைவரும் அவரது சீடர்கள், அவரை எங்களுடைய குருவாக மதித்து நடந்தோம். நாங்கள் அவருடைய எழுத்துக்களைப் படிப்போம். சாவர்க்கரை முழுமையாகப் புரிந்து கொண்டோம், எனவே இதனைச் செய்ய வேண்டும் என்று அவரிடம் அனுமதி கேட்பது மடத்தனமாகும். ஆதாரம்: ‘ஃப்ரண்ட்லைன்’, ஜனவரி 28, 1994
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர்தான் கோட்சே:
கோட்சேவை ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று சொல்வது அவதூறு என்று சொல்லி இதற்கு முன்னதாக தொடரப்பட்ட வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளன. 25.05.2007 அன்று மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டது பற்றிய செய்திக் கட்டுரை வெளியிட்டு, ஆர்.எஸ். எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர் கொலைகாரரான நாதுராம் விநாயக் கோட்சே என்று வெளியிட்டமைக்காக இந்தியா டுடே ஏட்டின் அருண்பூரி, பிரபு சாவ்லா, மோகினி, புல்லர் ஆகியோர் மீது தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கைத் தள்ளுபடி செய்து பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா டுடே ஏட்டின் முதன்மை ஆசிரியர், வெளியீட்டாளர் ஆகியோர் மீது அவமதிப்பு வழக்கு ஒன்றினை முகேஷ் கார்க் என்பவர் 2004ல் தொடர்ந்திருந்தார். இதனை ஏற்று, மேற்கண்ட மூன்றுபேர்களுக்கும் அழைப்பாணை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து பத்திரிகையாளர் மூவரும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பத்திரிகையாளர்களுக்காக மூத்த வழக்குரைஞர் ஆர்.எஸ். சீமா வாதாடினார். செய்திக்கட்டுரை அவமதிப்பானது எனக் கருத முடியாது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைக் குறைகூறி எதுவும் எழுதப்படவில்லை என வழக்குரைஞர் கூறியதை நீதிபதி மகேஷ் குரோவர் ஏற்றுக் கொண்டார்.
கட்டுரையைப் படித்துப் பார்த்தால் நாதுராம் கோட்சேயை ஆர்.எஸ்.எஸ்.காரர் என எழுதியிருக்கிறார்கள்; ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்து தேசிய இயக்கம் எனவும் எழுதியிருக்கிறார்கள். வரலாறும் வரலாற்றில் இடம் பெற்றவர்களும் உயர்ந்து நின்றாலும் பிற்காலத்தவர்களால் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருப்பர். அந்த வகையில் கோட்சேயைப் பற்றிய பின்புல ஆய்வு செய்து எதனால் காந்தியைக் கொலை செய்தார் என்பதையும் ஆய்வது வழக்கமானதே.
அப்படி ஆராயும்போது, அவரும் அவர் சார்ந்திருந்த இயக்கத்தினைப் பற்றியும் குறிப்புரைகள் எழுதப்பட்டுள்ளன என நீதிபதி குறிப்பிட்டார். ஆர்.எஸ்.எஸ்.ன் உறுப்பினர் என்னும் முறையில் கோட்சே பற்றி எழுதப்பட்டதை அவமரியாதையானது என்றோ, அவமதிப்பானது என்றோ கருத முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதி வழக்கையும் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படட அழைப்பாணையையும் ரத்து செய்து ஆணையிட்டார். ஒரு கட்டுரையை முழுமையாகப் படித்துப் பார்க்க வேண்டும்.
இந்தக் கட்டுரை சாதாரண வாசகரின் மனதில் எம்மாதிரி எண்ணங்களைத் தோற்றுவிக்கும் என்பதை ஆராயும் கடமை நீதிமன்றத்துக்கு உண்டு. போலித்தனமான ஆள்கள் தம் குருட்டுக் கண்களால் பார்த்தால் மட்டுமே இக்கட்டுரை அவதூறானது எனக் கூறுவார்கள் என்று மிகக் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி தீர்ப்பு எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக கோட்சே என்பவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவரில்லை என்று நீதிமன்றமே சொல்லிவிட்டது என்று சங் பரிவாரக் கும்பல்கள் சொல்வதும் அவர்களது வழக்கமான பொய்களில் ஒன்றுதான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
Source : unarvu ( 17/02/17 )