புதைக்கப்பட்ட வரலாறு, முளைக்கும் அற்புதம்!
புதைக்கப்பட்ட வரலாறு, முளைக்கும் அற்புதம்!
வெள்ளைக்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த மைசூர் சிங்கம் திப்பு சுல்தானின் வரலாறுகளை அரசாங்கம் திட்டமிட்டு மறைத்தாலும் திப்புவின் அடையாளங்களை அவரது வீர தீரச் செயல்கள் பல நேரங்களில் தானாகவே வெளிப்பட்டு திப்பு சுல்தானின் வரலாற்றை பறைசாற்றாமல் இருப்பதில்லை.
கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் ஜோதி என்ற விவசாயி தன்னுடைய நிலத்தில் வாழை பயிரிடுவதற்கு பள்ளம் தோண்டிய போது 350 கிராம் எடை கொண்ட 134 கல் குண்டுகள் கிடைத்தன. அதை ஆய்வு செய்த போது அது அத்தனையும் திப்பு சுல்தான் படையினர் தங்கள் பீரங்கிகளுக்கு பயன்படுத்திய கல் குண்டுகள் என்று தெரியவந்தது.
இந்த கல் குண்டுகள் அனைத்தும் திருவண்ணாமலை அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டது. அதன்பின் அரசு தொல்லியல்துறை அந்த குண்டுகளை வேலூர் அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைத்தது. இப்படியாக திப்பு சுல்தானின் ஆயுதங்கள் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டாலும் திப்புவின் வரலாறுகளை திட்டமிட்டே மறைக்கும் காரியங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. திப்புவின் வீர வரலாற்றை நினைவுகூர வருடா வருடம் திப்பு ஜெயந்தி என்ற பெயரில் கர்நாடகா அரசு விழாவாக எடுத்து வந்தார்கள்.
ஆனால் திப்பு ஜெயந்தி கொண்டாடக்கூடாது என வலதுசாரிகள் எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்ற கருத்தில் எவ்விதம் மாற்றமும் இல்லை. ஆனால் எதைச் செய்தாவது திப்பு சுல்தானை மக்களிடம் இருந்து மறக்கடித்து விட வேண்டும் என்பதில் வலதுசாரிகள் மிகத்துல்லியமாக நடந்து வருவது தெளிவாகின்றது. திப்பு சுல்தானின் வரலாற்றை எவ்வளவுதான் மறைக்க முயற்சித்தாலும் அது ஏதாவது ஒரு வகையில் தானாகவே வெளியாகி விடுகின்றது.
அதுபோன்ற ஒரு சம்பவம் கடந்த வாரமும் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் சிவகோக்கா மாவட்டத்தில் பிடநூறு கோட்டை உள்ளது. இந்தக் பாழடைந்த கோட்டை திப்பு சுல்தானின் ஆட்சி எல்லையில் இருந்தது ஆகும். அங்கிருந்த ஒரு கிணற்றை தூர்வாரி சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்ட போது அந்த கிணற்றுக்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. துண்டு துண்டுகளாக காட்சியளித்த இந்த ராக்கெட்டுகள் 14 இன்ச் மற்றும் 24 இன்ச் அளவுள்ள மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட்டுகள் ஆகும்.
இந்த ராக்கெட்டுகளில் ஏவும் எரிபொருளாக பொட்டாசியம் நைட்ரேட், மெக்னீசியம் தூள் மற்றும் கார்கோல் ஆகிய கலவைகள் கலந்து இந்த ராக்கெட்டுகள் இயக்கப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. இது அனைத்தும் திப்பு சுல்தான் பயன்படுத்தியவை ஆகும். இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் எல்லா மாகாணங்களையும் தங்களின் கட்டுக்குள் கொண்டு வந்தாலும் கூட திப்புசுல்தான் ஆட்சி செய்த மைசூர் மாகாணத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவே இல்லை.
மற்ற மாகாண மன்னர்கள் வாளையும் வில்லையும் வைத்துப் போரிட்டுக் கொண்டிருந்த போது மாவீரன் திப்பு சுல்தான் மட்டுமே துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் வைத்து வெள்ளையர்களை ஓட ஓட விரட்டிக் கொண்டிருந்தார். பீரங்கி தொழில்நுட்பத்தையே சமாளிக்க முடியாமல் தவித்த வெள்ளையர்களை ராக்கெட் தொழில் நுட்பத்தைக் கொண்டு திக்குமுக்காட வைத்தவர் திப்பு சுல்தான். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களில் பல நவீன கருவிகளைக் கொண்டு களமாடிய ஒரே வீரன் திப்பு சுல்தான் என்பது மறைக்கப்பட்ட வரலாறுகளில் ஒன்று.
திப்பு சுல்தானின் ஏவுகணைகள் எதிரிகளின் இலக்குகளை குறிவைத்து தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டவையாக இருந்தன. திப்பு சுல்தான் தன் போர்ப்படைக்கு போர்க்கருவிகளை வெளியேயிருந்து வாங்கவில்லை, மாறாக அவரே போர்க்கருவிகளை தயார் செய்து கொண்டார். திப்புவின் போர்க்கருவிகளைத் தயார் செய்வதற்காக ஸ்ரீரங்கப்பட்டணத்தில் தனியாக ஒரு ஆயுதத் தொழிற்சாலையே இயங்கி வந்துள்ளது. திப்பு சுல்தானின் ஆயுதத் தொழிற்சாலை நீண்ட நாட்கள் கவனிப்பாரற்று சிதலமடைந்து கிடந்த நிலையில் இது குறித்து கர்நாடக பத்திரிகையாளர் ஒருவர், அன்றைய ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாமிற்கு கடிதம் எழுதுகின்றார்.
அந்தக் கடிதத்தைக் கண்ட அப்துல்கலாம் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி தொல்லியல் துறைக்கு உத்தரவிடுகின்றார். மைசூருக்கு வந்து ஆய்வு செய்யும் தொல்லியல் துறை திப்புவின் ராணுவ மையத்தையும் ஆயுதத் தொழிற்சாலையையும் கண்டு வியந்தே போனார்கள். அந்த அளவிற்கு நவீன தொழில்நுட்பங்கள் ப ய ன் ப டு த் த ப் ப ட் ட து கண்டுபிடிக்கப்பட்டது. திப்புவின் ராக்கெட் தொழில்நுட்பம், இரண்டாம் உலக போரில் ஜெர்மனி பயன்படுத்திய வி2 ராக்கெட் தொழில்நுட்பத்திற்கு முன்னோடியாக இருந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
போர்க்களத்தில் ராக்கெட்டுகளைப் பயன்படுத்திய முதல் மாவீரன் திப்புசுல்தான் என்பதை . வரலாறு தெரிவிக்கின்றது. திப்பு சுல்தான் பயன்படுத்திய 700 பெரியவகை ராக்கெட்டுகளும், 900 சிறிய வகை ராக்கெட்டுகளும் லண்டனில் உள்ள ராயல் மியூசியத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டுகள் 2 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. திப்பு சுல்தான் குறித்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தனது அக்னி சிறகுகள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையத்தின் வரவேற்பறையில் திப்பு சுல்தானின் வீரக்குறிப்புகள் இருப்பதை தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் அப்துல் கலாம். வெர்ஜீனியா மாகானத்தில் உள்ள நாசாவிற்குச் சொந்தமான ராக்கெட் ஆராய்ச்சித் தளமான வாலப்ஸ் ஃப்ளைட் ஃபெசிலிட்டி மையத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே போர்க்களத்தில் ராக்கெட்டுகள் பறப்பது போன்ற ஒரு காட்சி ஓவியமாக வரையப்பட்டிருந்தது.
அருகில் சென்று பார்த்தால் அது வெள்ளையர்களுடன் திப்புசுல்தான் போரிடக்கூடிய காட்சி, அதைக் கண்டு வியந்து விட்டேன் என்று எழுதியிருந்தார் அப்துல் கலாம். திப்பு சுல்தானின் வீர வரலாற்றை இந்தியாவில் உள்ள வலதுசாரிகள் மறைக்க முயன்றாலும் அமெரிக்காவில் லண்டனிலும் உள்ள திப்புவின் போர்க்கருவிகள் நினைவு படுத்தி கொண்டுதான் உள்ளது. திப்புசுல்தான் கண்ட ஏவுகணை தொழில்நுட்பம்தான் இன்றைக்கு உலகம் முழுமைக்கும் பயன்படுத்தப் படுகின்றது என்று சொல்லிக் கொள்ளலாம்.
திப்பு சுல்தான் ஒரு இஸ்லாமியர் என்பதற்காக அவரின் வரலாறு திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்படுவது வருந்தத்தக்கது. இந்தியர்கள் மட்டுமல்ல, உலகமே பார்த்து வியக்கக்கூடிய தொழில்நுட்பத்தை தந்த மாவீரன் திப்பு சுல்தானின் வரலாறுகளை இங்குள்ள வலதுசாரிகள் மறைக்கப்பார்த்தாலும் திப்புவால் விதைக்கப்பட்டுள்ள வீர வரலாறுகள் எப்போதும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
Source : unarvu ( 03/08/18 )