பாதிரியார்களின் துயரம் தரும் துறவறம்
பாதிரியார்களின் துயரம் தரும் துறவறம்
கிறிஸ்தவ பாதிரியார்களின் துறவறக் கொள்கையால் உலகெங்கும் சர்ச்சைக்குரிய துயரத்தில் மாட்டிக் கொண்டே வருகிறார்கள். இயற்கைக்கு மாறாக கத்தோலிக்க ஆண், பெண் இருவரும் சன்னியாசியாகிறார்கள். இவர்களின் ஆண்களை பாதிரியார் என்றும், பெண்களை கன்னியாஸ்திரிகள் என்றும் கிறிஸ்தவர்கள் அழைக்கிறார்கள். இந்த பாதிரிமார்களும், கன்னியாஸ்திரிகளும் உலகெங்கும் அன்றாடம் ஏதாவது ஒரு சர்ச்சையில் மாட்டிக் கொள்கிறார்கள். பாதிரியார்கள் பலாத்கார குற்றவாளிகளாக மாறுவது ஏன்?
கேரளாவில் என்னதான் நடக்கிறது? இந்தக் கேள்வியைக் கேட்டது வேறு யாருமல்ல. ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் என்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள். கேரளா கோட்டியூர் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவியை கிறிஸ்தவ பாதிரியார் ராபின் நீண்ட காலம் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அதில் கர்ப்பமான அந்த மாணவி அண்மையில் ஆண் குழந்தை பெற்றுள்ளார். டி.என்.ஏ. பரிசோதனையில் குழந்தைக்கு தந்தை பாதிரியார் ராபின் என உறுதியானது. இதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோதுதான் பாதிரியார்களே பலாத்கார குற்றவாளிகளாக மாறுவது ஏன்? கேரளாவில் என்னதான் நடக்கிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். நீதிபதிகள் கேரளாவில் என்னதான் நடக்கிறது என்று கேட்டதன் பின்னால் பல சம்பவங்கள் உள்ளன. கடந்த மாதம் ஜூன் 26ஆம் தேதி கேரள கோட்டயம் பகுதியிலுள்ள “மலங்காரா ஆத்தோடக்ஸ் சிரியன் சர்ச்சில்” பாவமன்னிப்பு கேட்ட பெண் ஒருவரை 5 பாதிரியார்கள் நீண்ட காலம் பலாத்காரம் செய்து வந்துள்ளார்கள்.
இந்த உண்மை வெளியே தெரிய வர ஜான்சன் வி. மேத்யூ என்ற 2 பாதிரியார்கள் கைது செய்யப்பட மூவர் தலைமறைவாகியுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி அன்று திருவனந்தபுரம் கந்தன் திட்டாவைச் சேர்ந்த தேவராஜ் என்ற 65 வயது பாதிரியார் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். இவர் சண்டே பைபிள் கிளாசுக்கு வந்த சிறுமியிடம் தவறாக நடந்ததை அவர் தந்தை நேரில் பார்த்தார். அவர் அளித்த புகாரின் பேரில் தேவராஜ் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி கேரளா வயநாடு மாவட்டத்திலுள்ள பீலாங்குடியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 14 வயது சிறுவனிடம் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஜோசப் என்ற பாதிரியார் கைது செய்யப்பட்டார். இதேபோன்றே கோட்டயத்தை சேர்ந்த பசின் குரிய கோஸ் என்ற 65 வயது பாதிரியார் 11 வயது சிறுவனிடம் பாலியல் தொல்லை கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி கேரள வட்டக்சேரியைச் சேர்ந்த ராபின் என்ற பாதிரியார் கைது செய்யப்பட்டார். இவர் தேவாலயத்துக்கு சொந்தமான பள்ளியில் படித்து வந்த 16 வயது மாணவியை பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இந்த சிறுமி பிரசவத்திற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது பாதிரியாரைப் பற்றிய உண்மை உலகிற்கு தெரிய வந்துள்ளது. இந்தியாவில் 60 சத விகித பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் கேரளா மாநிலத்திலேயே உருவாகிறார்கள். இங்கு ஆண்டுக்காண்டு திருச்சபையில் நடக்கும் வன்கொடுமை பெருகிக் கொண்டே இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக பெண்களுக்கும், சிறுவர் சிறுமியருக்கும் எதிராக நடந்து வந்த இந்த வன்கொடுமை முதன்முதலாக ஜெஸ்மி என்ற பெண் மூலம் வெளியுலகிற்கு தெரிய வந்தது.
30 வயது ஜெஸ்மி ”காங்கரகேஷன் ஆஃப் மதர் ஆஃகார்மெல்” என்ற மலபார் சர்ச்சில் ஊழியம் செய்து வந்தார். அதன்பின் மலபார் சர்ச்சால் நடத்தப்பட்ட விமலா கல்லூரியில் முதல்வராக பணியாற்றினார். இந்த சர்ச்சின் திருச்சபை வசதி படைத்த 35 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு இயங்கும் திருச்சபையாகும். இந்தியாவின் மிகப்பெரிய திருச்சபையாகும் இது. ஜெஸ்மி தனது 59 வயது 2009ஆம் ஆண்டில் “ஆமென் – ஒரு கன்னியாஸ்திரியன் சுயசரிதை” என்ற நூலை வெளியிட்டார்.
அதில் பாதிரியார்களின் பாலியல் வன் கொடுமைகளையும் , மூத்த கன்னியாஸ்திரிகளின் ஓரினச் சேர்க்கையையும், இளம் கன்னியாஸ்திரிகளுக்கு இழைக்கப்படும் இன்னல்களையும் சொந்த அனுபவத்தின் மூலம் வெளியிட்டார். இந்நூல் வெளிவந்த பின் தான் கேரளாவில் பாதிரியார்களாலும், கன்னியாஸ்திரிகளாலும் பெண்கள், சிறுவர் சிறுமியர்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமை வெளியுலகிற்கு தெரியவந்தது. பல நூற்றாண்டுகளாக இதுநாள் வரை திருச்சபையில் கௌரவத்திற்காக பாலியல் வன்முறைகளை வெளியில் சொல்ல முடியாமல் மறைத்து வந்தவர்கள் மெது மெதுவாக தைரியம் பெற்று திருச்சபைக்கு எதிராக புகார் அளித்தனர்.
ஜெஸ்மி தனது நூலில் கர்த்தரின் பெயரால் திருச்சபையில் நடக்கும் பாலியல் வன்கொடுமையை மட்டுமன்றி திருச்சபையில் மலிந்து கிடந்த ஊழல் முறைகேடான பணக்கையாடல் போன்றவற்றையும் எழுதினார். ஆனால் இதற்கெல்லாம் பேராயர்கள், ஆயர்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் சிறிதும் அசராமல், ஜெஸ்மிக்கு பைத்தியக்கார முத்திரை குத்தினார்கள். இதுபோன்று கேரளாவில் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக சிறுவர் சிறுமியர்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருவதால்தான் நீதிபதிகள் கேரளாவில் என்னதான் நடக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
அவர்கள் ஒரு முறை ஜெஸ்மி எழுதிய ஆமென் நூலை படித்தால் கிறிஸ்தவ பாதிரியார்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளார்கள் என்ற அடிப்படையை புரிந்து கொள்ளலாம். இத்தகைய பாலியல் வன்கொடுமைகள் குறித்து சமூக ஆர்வலர்கள் என்ன கருதுகிறார்கள் என்றால் திருச்சபையின் கட்டுப்பாட்டில் மருத்துவமனைகள் பல இருப்பதால் பாலியல் வன்கொடுமைகள் பல மறைக்கப்பட்டு விடுகின்றன. ஒரு சில சம்பவங்களே உலகிற்கு தெரியவருகிறது. பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் பணபலம் முதலியவை அதிகாரம் கொண்ட பாதிரியார்களிடம் இருப்பதால் குற்றங்களை துணிந்து செய்கிறார்கள் என்கின்றனர்.
உலகெங்கிலுமுள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான தேவாலயங்களில் நடக்கும் ஒழுக்கக் கேட்டை தடுக்கக்கூடிய அதிகாரம் போப்பை சேர்ந்தது. அந்த போப்பின் மத பீடமே உலகெங்கும் இதுபோன்று நடக்கும் பாலியல் வன்முறையை கண்டு கதிகலங்கி போயுள்ளது. உதாரணத்திற்கு அமெரிக்காவிலுள்ள பாஸ்டனைச் சேர்ந்த பாதிரியார் சிறுவனிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதற்காக எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். பாதிரியாரின் பாலியல் முறைகேட்டிற்காக அமெரிக்க திருச்சபை நிவாரணமாக சிறுவனுக்கு பத்தாயிரம் கோடி அபராதம் கொடுத்தது. அமெரிக்க நீதிமன்றத்தில் இன்னும் இதேபோன்ற வழக்குகள் ஆயிரத்துக்கும் மேல் நிலுவையில் உள்ளன.
இதையெல்லாம் கண்டு போப்பின் மதபீடம் செய்வதறியாது கலங்கிப் போய் உள்ளது. உலகெங்கும் இதேபோல் பாலியல் குற்றங்கள் திருச்சபையில் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இந்நிலையில் போப்பின் கத்தோலிக்க கிறிஸ்தவ மதபீடம் ஒன்றை மட்டும் சிந்திக்க மறுக்கிறது. அது துறவறம் என்பது இயற்கைக்கு மாறானது, பிற்போக்குத்தனமானது. என்பதையும் அதனால் தான் இத்தனை துயரம் என்பதையும்.
Source : unarvu ( 03/08/18 )