ஹதீஸ்கள் எவ்வாறு பிரித்தறியப்பட்டன?

நூல்கள்: சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்

ஹதீஸ்கள் எவ்வாறு பிரித்தறியப்பட்டன?

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் சரியான செய்திகளும், தவறான செய்திகளும் கலந்து விட்டன.

ஹதீஸ் என்று சொல்லப்பட்டால் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதா? அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்டதா? சந்தேகத்துக்கு இடமானதா? என்று பிரித்தறியும் அவசியம் இதனால் தான் ஏற்பட்டது.

இப்படிப் பிரித்தறியாமல் இருந்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்மந்தப்படாதவைகளை மார்க்கம் என்று கருதும் நிலை ஏற்பட்டு இருக்கும். இஸ்லாம் அதன் தூய வடைவில் மக்களுக்குக் கிடைக்காமல் போயிருக்கும்.

சரியான செய்திகளுடன் தவறான செய்திகள் கலந்து விட்டதால் சரியான செய்திகளை எப்படிக் கண்டறிவது?’

இதற்கு அறிஞர்கள் இரு வழிகளைக் கண்டறிந்தனர்.

ஹதீஸ்களின் கருத்தை ஆய்வுக்கு உட்படுத்துவது முதல் வழியாகும்

அக்கருத்து திருக்குர்ஆனுக்கோ, கண்முன்னே தெரியும் உண்மைக்கோ முரணாக இருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்க முடியாது.

என்பது அவர்கள் கண்டறிந்த முதல் வழியாகும்.

திருக்குர்ஆனுக்கு முரணாக அமைந்த செய்திகளை நம்பும்போது திருக்குர்ஆனை மறுக்கும் நிலை ஏற்படும் என்பதே இதற்குக் காரணம்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்கவே அனுப்பப்பட்டார்கள் என்று 16:44 வசனம் கூறுகிறது.

திருக்குர்ஆனுக்கு விளக்கம் கொடுப்பதற்காக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனுக்கு முரணாகப் பேசவோ, நடக்கவோ மாட்டார்கள். அப்படி அவர்கள் பேசியதாக, அல்லது நடந்ததாக ஒரு செய்தி கிடைத்தால் அது எந்த நூலில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது அல்ல; செய்தது அல்ல என்ற முடிவுக்கு நாம் வரவேண்டும்.

நபிகள் நாயகத்தின் சொற்களும், செயல்களும் திருக்குர்ஆனுக்கு விளக்கமாக இருக்குமே தவிர திருக்குர்ஆனுக்கு எதிராக இருக்காது என்பதே இதற்குக் காரணம்.

இது ஹதீஸ்களை மறுப்பதாக ஆகாது. இதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட விஷயத்தில் திருக்குர்ஆனும் ஹதீஸ்களும் சமமானவை அல்ல. திருக்குர்ஆன் யாராலும் இடைச் செருகல் செய்ய முடியாத அளவுக்குப் பாதுகாக்கப்பட்டிருப்பதால் அதன் நம்பகத் தன்மையுடன் ஹதீஸ்களை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என்பதை முன்னர் சுட்டிக்காட்டியுள்ளோம்.

எனவே தான் கலப்படமான ஹதீஸா? மெய்யான ஹதீஸா என்பதை அறிவதற்கு திருக்குர்ஆனின் கருத்துக்கு முரணில்லாமல் உள்ளதா என்பதை முக்கிய அளவுகோலாக கொண்டனர்.

‘ஒரு ஹதீஸ் எந்த வகையிலும் திருக்குர்ஆனுடன் அறவே ஒத்துப் போகவில்லை; திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதுவது போல் அமைந்துள்ளது; இரண்டையும் எந்த வகையிலும் இணைத்து விளக்கம் கூற முடியாது’ என்றால் அது போன்ற சந்தர்ப்பங்களில் குர்ஆனை ஏற்று அந்த ஹதீஸை நிராகரிப்பதே குர்ஆனை தக்க முறையில் மதிப்பதாகும்.

அறிவிக்கப்படும் ஹதீஸின் கருத்து சரியானதா என்பதைக் கவனத்தில் கொண்டு சரியான ஹதீஸ்கள் பிரித்தறியப்பட்டது போல் இன்னும் பல வழிமுறைகளை ஆய்வு செய்தும் சரியான ஹதீஸ்கள் பிரித்து அறியப்பட்டன.

ஹதீஸ்களை நூல் வடிவில் ஒருவர் திரட்டினால் அவர் தனக்கு அந்தச் செய்தி யார் மூலம் கிடைத்தது என்பதையும் கூற வேண்டும். அத்துடன் அவருக்கு யார் கூறினார் என்று கூற வேண்டும். இப்படி நூலாசிரியரில் இருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை உள்ள அத்தனை அறிவிப்பாளர்களையும் குறிப்பிட வேண்டும். இடையில் யாராவது விடுபட்டால் அது சரியான செய்தி அல்ல.

அந்த அறிவிப்பாளர் சங்கிலித் தொடரில் உள்ள ஒவ்வொருவரின் நாணயம், நேர்மை, நினைவாற்றல் உள்ளிட்ட விபரங்களுக்கும் ஆதாரம் இருக்க வேண்டும். இதில் குறை இருந்தால் அது சரியான ஹதீஸ் அல்ல.

இப்படி பல காரணங்களை அலசி ஆராய்ந்து தவறான ஹதீஸ்கள் களையெடுக்கப்பட்டன.

ஹதீஸ்களின் வகைகளை நாம் பின்னர் குறிப்பிடும் போது இதைப் பற்றி முழுமயாக அறிந்து கொள்வீர்கள்.

ஹதீஸ் துறையில்

ஸஹீஹ் (சரியானது) என்றால் என்ன?

லயீஃப் (பலவீனமானது) என்றால் என்ன?

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் என்றால் என்ன?

என்று தெரிந்து வைத்திருப்பவர்கள் மிகச் சொற்பமே. ஏகத்துவப் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவோர் ஹதீஸ் துறையில் உள்ள இந்தக் கலைச் சொற்களையும், அது குறித்த விளக்கங்களையும் நன்கு தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அங்கீகாரங்கள்

ஆகிய மூன்றும் ஹதீஸ்கள் எனப்படுகின்றன.

ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்களின் தகுதி, எண்ணிக்கை, அறிவிப்பாளர்களிடையே தொடர்பு போன்ற தன்மைகளின் அடிப்படையில் ஹதீஸ்களை அறிஞர்கள் தரம் பிரித்துள்ளனர்.

எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம்.

 صحيح1 ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை)

موضوع 2மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)

 متروك3மத்ரூக் விடப்பட்டவை

ضعيف 4ளயீஃப் பலவீனமானவை

எந்த ஹதீஸாக இருந்தாலும் இந்த நான்கு வகைக்குள் அடங்கிவிடும்.

இவற்றில் ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதை மட்டுமே நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

மற்ற மூன்று வகைகளில் அமைந்த ஹதீஸ்களை நடைமுறைப்படுத்தக் கூடாது.

இந்த நான்கு வகைகளையும் பற்றி விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.